ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mélenchon gains in French presidential polls after Trump’s strike on Syria

ட்ரம்பின் சிரியா தாக்குதலுக்குப் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மெலோன்சோன் முன்னேறி உள்ளார்

By Alex Lantier
11 April 2017

முன்னணி வேட்பாளர்களின் கருத்துக்கணிப்பு எண்ணிக்கைகளை மாற்றுவதில் மீண்டும் சர்வதேச சம்பவங்கள் குறுக்கிடுகின்ற நிலையில், சிரியா மீதான கடந்த வார அமெரிக்க ஏவுகணை தாக்குதல் பிரெஞ்சு ஜனாதிபதி பிரச்சாரத்தை அதிர வைத்துள்ளது.

வாஷிங்டனுக்கு எதிராக பாரீஸ்-பேர்லின்-மாஸ்கோ அச்சுக்கு அழைப்பு விடுத்த வலதுசாரி வேட்பாளரும் முன்னர் விருப்பத்திற்குரியவராக இருந்தவருமான பிரான்சுவா ஃபிய்யோன், ஜனவரியில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கில் வைக்கப்பட்டதில் இருந்து பின்தங்கி வருகிறார். ஒரு சமயம், இந்த போட்டியில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னும் மற்றும் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பேர்லினின் ஆதரவு பெற்ற ஒரு முன்னாள் வங்கியாளரும் பொருளாதார அமைச்சருமான இமானுவல் மாக்ரோனும் செல்வாக்கு பெற்றிருந்தனர். மாக்ரோன், ஆழ்ந்த சிக்கன திட்டங்களுக்கும் மற்றும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வரவும் அழைப்புவிடுத்து வருகிறார். சிரியா மீதான தாக்குதல் மற்றும் கடந்த வார ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்திற்குப் பின்னர், இப்போது, லு பென்னும் சரி மாக்ரோனும் சரி பின்தங்கி உள்ளனர்.

கிளர்ச்சிகர பிரான்ஸ் (France insoumise) இயக்கத்திற்கு தற்போது தலைமை கொடுத்து வரும் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முன்னாள் அமைச்சரும் இடது முன்னணியின் தலைவருமான ஜோன்-லூக் மெலோன்சோன், கருத்துக்கணிப்புகளில் ஃபிய்யோனை முந்தி, 12 இல் இருந்து 18 சதவீதத்திற்கு மேலுயர்ந்து உள்ளார். சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பெனுவா அமோனும் இரண்டாவது சுற்றில் அவர் மெலோன்சோனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அமோனின் வாக்காளர்கள் (9-10 சதவீதம்) மெலோன்சோனுக்கு வாக்களித்தால், அவர் சுலபமாக இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்று, ஜனாதிபதி பதவிக்கான இரண்டாம் சுற்று போட்டியில் மாக்ரோன் அல்லது லு பென்னை எதிர்கொள்வார்.

கருத்துக்கணிப்புகளில் மெலோன்சோன் உயர்ந்திருப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பிரான்சின் அவசரகால நிலைமைகளின் கீழ் சோசலிஸ்ட் கட்சியாலும், அத்துடன் லு பென்னின் தேசிய முன்னணியாலும் (FN) தூண்டிவிடப்பட்ட பரவலான முஸ்லீம்-விரோத மனோபாவத்தையும் மற்றும் போரையும் அவர் விமர்சிப்பதற்கு கிடைத்திருக்கும் விடையிறுப்பாக உள்ளது. மெலோன்சோன் மார்சைய்யில் வாரயிறுதி வாக்கில் ஒரு தேர்தல் பேரணி நடத்தினார், அதை ஒழுங்கமைத்தவர்களின் தகவல்படி அதில் 70,000 பேர் கலந்து கொண்டனர். அவரது உரையில் போர் மற்றும் அகதிகள் மீதான துஷ்பிரயோகத்தை விமர்சிப்பதில் அவர் அதிக நேரம் செலவிட்டிருந்தார்.

சிரியா தாக்குதலை ஆதரித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உள்ளடங்கலாக, ஐரோப்பிய தலைவர்களையும் ட்ரம்பையும் மெலோன்சோன் தாக்கினார். “நான் சமாதானத்திற்கான வேட்பாளர்,” என்றார்.

“நீங்கள் வாக்களிக்க செல்லும் போது இந்த நாட்களை நினைவில் கொள்ளுங்கள், இவர்கள், அடிப்படை இல்லாத, சர்வதேச சட்டபூர்வத்தன்மை இல்லாத, தனியொருவரால் நடத்தப்பட்ட மற்றும் ஒரு போருக்குள் இழுக்கக்கூடிய ட்ரம்பின் தலையீட்டை வரவேற்பதற்காக அவர் பின்னால் சென்றவர்களாவர்,” என்று மெலோன்சோன் அறிவித்ததும் கூட்டத்திலிருந்து கைத்தட்டல் பலமாக ஒலித்தது. “அதுகுறித்து நன்கு யோசியுங்கள்: சமாதானம் வேண்டுமானால், வாக்குச்சாவடியில் தவறாக வாக்களிக்காதீர்கள். நீங்கள் போருக்கான ஒருவரை தேர்தெடுத்தால், இறுதியில் அது உங்களை வந்தடையும் போது ஆச்சரியமடையாதீர்கள்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈவிரக்கமற்ற பிற்போக்குத்தனமான புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளினால் சிரியாவில் இருந்து தப்பியோடி வரும் ஆயிரக் கணக்கான அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்ததையும் அவர் குறிப்பிட்டார். “நல்லதொரு கடல், அலைகளுக்கு அடியில் கொல்லப்பட்ட 30,000 பேருக்கு எவ்வாறு அது புதைகுழியாக மாறியது?” என்றவர் கேள்வி எழுப்பினார், உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் தொடர்ந்து கூறுகையில், “எல்லோரும் செவி கொடுத்து கேளுங்கள், இது மரண நேர மௌனம்,” என்றார்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு தூண்டிவிடப்படுவது குறித்து மெலோன்சோன் கூறுகையில், “புலம்பெயர்வு என்பது எப்போதுமே நாட்டை விட்டு நிர்பந்திக்கப்பட்ட வெளியேற்றம் தான், அதுவொரு அவலநிலை என்பதை நாம் நமது விடையிறுப்பில் காட்ட" வேண்டும் என்றவர் தெரிவித்தார்.

மெலோன்சோனுக்கான ஆதரவு அதிகரித்து வருவதானது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினது போர், சிக்கன நடவடிக்கை கொள்கைகள், இனவாத மற்றும் சட்ட ஒழுங்கு உணர்வுக்கான அதன் முறையீடுகளுக்கு மக்களின் பரந்த பிரிவுகளிடையே நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுகள் முன்னுக்கு வருவதானது, தேசிய முன்னணியின் (FN) வளர்ச்சி திரும்ப பெற முடியாத அளவிற்கு இனவாத, பிரெஞ்சு மக்கள் வலதுக்கு திரும்புவதை நோக்கிய ஒரு நிரந்தரமான தீவிரமயப்பட்ட மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது என்ற கதையாடலை மறுத்துரைக்கிறது. உண்மையில், ஹோலாண்டின் ஜனாதிபதி பதவி காலத்தில் பலமான இடதுசாரி, சோசலிச உணர்வுகள் ஒடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை இன்னுமும் உயிர் வாழ்கின்றன, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவுகின்றன.

ஹோலாண்டின் கீழ் ஐந்தாண்டு கால போர் மற்றும் சிக்கன திட்டங்களும் மற்றும் 17 மாத கால அவசரகால நிலையும் ஒரு வெடிப்பார்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை உருவாக்கி உள்ளன. வர்க்க போராட்டத்தை, ஒரு நாளாந்த வாழ்க்கை யதார்த்தமாக பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நம்புவதாக கடந்த ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பு கண்டறிந்தது. 2015 இல் பாரீஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் கொண்டு வரப்பட்ட அவசரகால நிலையின் கீழ், இஸ்லாமிய விரோத வெறுப்புக்கு தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ முறையீடுகள் இருந்தபோதினும் கூட, தேசியவாதத்திற்கு பலமான எதிர்ப்பு நிலவுகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டின் பாரிய போராட்டங்களுக்குப் பின்னர், இந்தாண்டு ஒல்னே-சு-புவா இல் Théo மீதான பொலிஸின் பலாத்காரம் மற்றும் பாரீசில் Liu Shaoyo இன் படுகொலை உட்பட பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போராட்டங்களும் கலகங்களும் நடந்துள்ளன.

அதே நேரத்தில், கூர்மையான எச்சரிக்கைகள் விடுக்க வேண்டியுள்ளது: தொழிலாளர்களின் சமூக அபிலாஷைகளை முன்னெடுக்க மெலோன்சோன் ஒரு வாகனமாக சேவையாற்ற முடியாது. 1991 வளைகுடா போருக்கு எதிரான உணர்வுகள் மற்றும் யூரோ அறிமுகப்படுத்தியது மீதான மக்கள் எதிர்ப்பு உள்ளடங்கலாக இப்போது அவர் சுரண்டுவதற்கு முறையிட்டு வரும் இந்த உணர்வுகளை, அவர் சோசலிஸ்ட் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் இருந்து காட்டிக்கொடுத்ததன் ஒரு நீண்ட வரலாறை கொண்டுள்ளார்.

போர்-எதிர்ப்பு அல்லது புலம்பெயர்வோர்-ஆதரவு வேட்பாளராக அவர் கூறும் வாக்குறுதிகள் பொய்யானவை. அவரது மார்க்சிச-விரோத வெகுஜனவாதம் ஆனது, அரசியல்ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பாத்திரத்தை வலியுறுத்தும் சோசலிசத்தை நிராகரிக்கிறது, இன்னும் சொல்லப் போனால் இடது மற்றும் வலதுக்கு இடையிலான வித்தியாசத்தையே கூட நிராகரிக்கின்ற நிலையில், அது சொத்துடைமை வர்க்கங்களின் ஒரு பிற்போக்குத்தனமான கருவியாக நிரூபணமாகி உள்ளது. அதிகாரத்திற்கு வந்ததும், அவர் தொழிலாள வர்க்கத்தின் எதிரி என்பதை நிரூபிப்பார்.

மெலோன்சோனின் கிரேக்க கூட்டாளியான பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிசா அரசாங்கம் (“தீவிர இடதுக்கான கூட்டணி”), கிரீஸை சிரழித்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் ஜனவரி 2015 தேர்தலை வென்றது. அவர் வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் கட்சி உடனான கூட்டணியோடு தொடங்கி, முழுமையாக அவர் தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்தார். சிப்ராஸ் அவர் பதவியேற்று ஒருசில வாரங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வு திட்டத்தை விரிவாக்கியதோடு, அவரே ஏற்பாடு செய்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் கிரேக்க மக்களில் 60 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள் சிக்கன திட்டங்களுக்கு "வேண்டாம்" என்று வாக்களித்ததற்குப் பணிய மறுத்து, 2015 கோடையில் ஆழ்ந்த சமூக வெட்டுக்களையும் திணித்தார்.

அவரது ஸ்பானிய கூட்டாளிகள், பெடெமோஸ், ஸ்பெயினின் இராணுவ அதிகாரிகளது கணிசமான பிரிவுகளை திரட்டி, உள்ளாட்சி மற்றும் பிராந்திய அரசாங்கத்தில் எண்ணற்ற பதவிகளை நிரப்பி வருகிறது, அங்கே அவர்கள் வங்கிகளின் கருவியாக நிரூபணமாகி வருகிறார்கள் என்பதோடு, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை நசுக்கும் அதேவேளையில், மதரீதியிலான கடன்களை திருப்பிச் செலுத்தி வருகிறார்கள்.

மெலோன்சோன் சமாதானம் மற்றும் சகிப்புத்தன்மையின் ஒரு வேட்பாளராக அறிவித்துக் கொள்கின்ற அதேவேளையில், அவர் கட்டாய இராணுவ சேவையை மீளமர்த்த அழைப்புவிடுப்பதன் அடிப்படையில் போட்டியிட்டு வருகிறார். அனைத்திற்கும் மேலாக, நவம்பர் 2015 இல் தேசிய சட்டமன்றத்தில் அவசரகால நிலைக்கு வாக்களித்த இடது முன்னணி பிரதிநிதிகளது ஆதரவை அவர் சார்ந்துள்ளார். சிரியா மீதான ட்ரம்பின் தாக்குதல் இப்போது நேட்டோவுக்கும் சிரியாவின் அணுஆயுதமேந்திய ஆதரவாளரான ரஷ்யாவுக்கும் இடையே ஒரு மோதல் அபாயத்தை நேரடியாக அதிகரித்துள்ளது என்பதே கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவர் அழைப்பின் முக்கியத்துவம் என்பது தெளிவாக உள்ளது. மாக்ரோன் எதை மிகப்பெரும் போர்களின் ஒரு "சகாப்தம்" என்று அழைத்தாரோ அத்தகைய ஒன்றுக்கு இவர் பிரான்சை தயார் செய்ய முயன்று வருகிறார்.

மத்திய தரைக்கடலில் அகதிகளின் கதியைக் குறித்து அவர் வடிக்கும் கண்ணீர் குறிப்பாக பாசாங்குத்தனமானது, மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு ஐரோப்பாவிற்கு தப்பியோடி வர நிர்பந்தித்த, சிரியா மற்றும் லிபியாவிற்கு எதிராக 2011 இல் நடத்தப்பட்ட நேட்டோ போர் உந்துதலை இவர் தீவிரமாக ஆதரித்தவராவார். முகத்திரை மற்றும் புர்கா அணிவதற்குத் தடைவிதிக்கும் சட்டங்களை இடது முன்னணி ஆதரித்ததுடன், முஸ்லீம்-விரோத இனவாதம் தூண்டுவதில் ஒரு முன்னணி சக்தியாகவும் அது இருந்துள்ளது.

மெலோன்சோன் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை எதிர்கின்ற நிலையில், அவரே ஒரு தேசியவாத அரசியல்வாதியாவார். அவர் வேலைதிட்டத்திற்கும் மற்றும் போர் உந்துதலை தடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, போர் உந்துதல் வழக்கொழிந்த தேசிய-அரசு அமைப்புமுறையின் இயல்பிலும், தேசிய அரசுகளாக உலகம் பிளவுண்டு இருப்பதற்கும் மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளின் இயல்புக்கும் இடையிலான ஆழ்ந்த முரண்பாடுகளிலும் வேரூன்றி உள்ளது.

அவரது மார்சைய் பேரணியில், “அட்லாண்டிக்கில் இருந்து யூரல் பகுதிகள் வரையில் எழுந்துள்ள அல்லது மேலெழுந்து வருகின்ற சகல பிரச்சினைகள் [சம்பந்தமாக] ஐரோப்பாவில் ஒரு பாதுகாப்பு மாநாட்டை" நடத்துவதன் மூலமாக போர் அச்சுறுத்தலைப் போக்க வேண்டுமென முன்மொழிந்தார். அவர் கூறினார், "பார்வைக்கு முன் வந்து கொண்டிருக்கின்ற படுபயங்கர அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு" இது "நம்மை அனுமதிக்கும் … பிரெஞ்சுவாசிகளான நாம், இந்த பண்டைய கண்டத்தில் சிறியதோ, நடுத்தரமானதோ, அல்லது பெரியதோ எந்த போரையும் நாம் விரும்பவில்லை என்பதை கூற வேண்டும்,” என்றார்.

இது கேள்விகளை மட்டுமே எழுப்புகிறது: அதுபோன்றவொரு மாநாட்டில் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் ஐரோப்பிய அரசு தலைவர்கள் ஒன்றாக கூடி அமர்ந்தால் என்ன நடக்கும்? அமெரிக்க ஜனநாயகக் கட்சியும் முன்னணி ஐரோப்பிய அரசாங்கங்களும் ரஷ்யா மற்றும் சிரியா உடன் நல்லுறவுகளை குறித்த அவற்றின் முந்தைய பேச்சுவார்த்தைகளில் இருந்து 180 பாகை திரும்பி சிரிய படைகள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்த நகர்ந்தன. பிரதான முதலாளித்துவ சக்திகளின் முரண்பட்ட சடரீதியிலான மற்றும் மூலோபாய நலன்களில் வேரூன்றிய சமரசப்படுத்த முடியாத எதிர்விரோதங்களின் இயல்பையே அது எடுத்துகாட்டுகிறது.

எவ்வாறிருப்பினும் இன்று தீர்க்கமான அபிவிருத்தியாக இருப்பது, கருத்துக்கணிப்புகளில் மெலோன்சோனின் வளர்ச்சி குறித்ததல்ல, மாறாக போர் மற்றும் முதலாளித்துவத்தின் சமூக சூறையாடல்களுக்கு பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்ததாகும். அவசரமாக அவசியப்படுவது என்னவென்றால் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதாகும். இது, இதனோடு சேர்ந்து, மெலோன்சோனின் மார்க்சிச-விரோத அரசியலின் திவால்நிலைமை குறித்த ஒரு கவனமான பகுப்பாய்வையும் மற்றும் அம்பலப்படுத்தலையும் அவசியப்படுத்துகிறது.