ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US naval “armada” menaces North Korea

அமெரிக்க போர்க்கப்பல் "அர்மடா" வட கொரியாவை அச்சுறுத்துகிறது

By Peter Symonds
25 April 2017

கொரிய தீபகற்பத்தில் ஏற்கனவே பதட்டங்கள் கூர்முனையில் இருக்கையில், அமெரிக்கா அப்பிராந்தியத்திற்கு அணுஆயுதமேந்திய நீர்மூழ்கிக் கப்பல் USS மிச்சிகனை அனுப்பி உள்ளது. 1,500 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்து 150 டோமாஹாக் போர்கப்பல் ஏவுகணைகளை செலுத்தும் தகைமை கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், இன்று தென் கொரியாவின் புஷன் (Busan) துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

USS மிச்சிகன் வந்தடைந்திருப்பதானது, வட கொரியா அதன் இராணுவ ஸ்தாபக தினத்தைக் குறிப்பதற்காக ஓர் அணுகுண்டு சோதனையை அல்லது தொலைதூர ஏவுகணை சோதனையை நடத்தும் என்ற தீவிர ஊடக அனுமானங்களுடன் பொருந்தி உள்ளது. அமெரிக்க பெருநிலத்தைத் தாக்க தகைமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஒரு அணுஆயுதமேந்திய தொலைதூர ஏவுகணையை பியொங்யாங் அபிவிருத்தி செய்வதைத் தடுக்க, அமெரிக்கா "சகல வாய்ப்புகளையும்" பயன்படுத்தும் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், அணுஆயுத விமானந்தாங்கி போர்க்கப்பல் USS கார்ல் வின்சன், குறி வைத்து தாக்கும் ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் சிறுபோர்க்கப்பல்களைக் கொண்ட அதன் முழு தாக்கும் குழுவுடன், கொரிய தீபகற்பத்தின் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கார்ல் வின்சன் கடைசியாக பிலிப்பைன்ஸ் கடலில் இரண்டு ஜப்பானிய சிறுபோர்க்கப்பல்களுடன் முன்நகர்ந்து கொண்டிருந்ததாகவும், அது வடக்கு நோக்கி நகர்ந்ததும் தென் கொரிய போர்கப்பல்களுடன் இணையும் என்றும் செய்திகள் தெரிவித்தன. அமெரிக்க மற்றும் தென் கொரிய விமானப் படைகளும் கூட்டு போர் ஒத்திகைகளில் தற்போது இணைந்தியங்கி வருகின்றன.

USS ரோனால்டு ரீகன் மற்றும் அதன் விமானந்தாங்கி தாக்கும் குழுவும் ஜப்பானின் யொகொசுகா (Yokosuka) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இம்மாத தொடக்கத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் வட கொரியாவை எச்சரிக்கையில் அமெரிக்கா வடகிழக்கு ஆசியாவிற்கு "ஒரு அர்மடாவை அனுப்புவதாக" எச்சரித்தார். “நம்மிடம் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்தவை. விமானந்தாங்கி போர்க்கப்பல்களை விட மிகவும் சக்தி வாய்ந்தவை. இதை என்னால் உங்களுக்கு கூற முடியும்,” என்றவர் Fox Business Network க்கு தெரிவித்தார்.

ட்ரம்ப் நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கத்தவர்களின் தூதர்களைச் சந்தித்த போது அதே அச்சுறுத்தலை மீண்டும் பலமாக வலியுறுத்தினார், உள்ளது உள்ளவாறே வட கொரியாவில் விட்டு வைப்பதை "ஏற்க முடியாது" என்றார். ஐக்கிய நாடுகள் சபை இன்னும் கூடுதலாக கடுமையான தடையாணைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென அழைப்புவிடுத்த அவர், அடிப்படை மட்டத்திலும் ஆற்றல் குறைந்த பியொங்யாங்கின் அணுஆயுத தளவாடங்களை "உலகிற்கான ஒரு நிஜமான அச்சுறுத்தல்" என்றும், “இறுதியில் நாம் தீர்க்க வேண்டிய" “ஒரு மிகப்பெரிய உலக பிரச்சினை" என்றும் முத்திரை குத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே கூறுகையில், வாஷிங்டன் வட கொரியாவின் ஆயுத சோதனைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாது என்று கூறி எச்சரித்தார்: “அமெரிக்கா ஒரு சண்டையை எதிர்நோக்கி இருக்கவில்லை ஆகவே அதுபோன்ற ஒன்றுக்காக எங்களிடம் காரணத்தை உருவாக்கி கொடுக்காதீர்கள்,” என்றார். வட கொரியா அதன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஒரு அணுஆயுத தொலைதூர ஏவுகணை திட்டங்களை நிறுத்துவதற்கு சீனா அழுத்தமளிக்க வேண்டுமென அப்பெண்மணி மீண்டும் சீனாவுக்கு அழைப்புவிடுத்தார்.

ட்ரம்ப் கடந்த வாரயிறுதி ட்வீட் சேதி ஒன்றில், பியொங்யாங்கிற்கு எதிராக பெய்ஜிங் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார். “வட கொரியாவிற்கு சீனா தான் பொருளாதார வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஆகவே எதுவும் சுலபமானதில்லை என்றாலும், வட கொரிய பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் விரும்பினால் அவர்களால் முடியும்,” என்றார்.

ஞாயிறன்று ட்ரம்ப் உடனான ஒரு தொலைபேசி அழைப்பில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். வட கொரியாவால் ஐ.நா. தீர்மானங்கள் எதுவும் மீறப்பட்டிருப்பதை "விடாப்பிடியாக மறுத்த" அதேவேளையில், ஜி, “எல்லா தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமென நம்புவதாகவும், தீபகற்பத்தில் பதட்டங்களைத் தூண்டிவிடும் விடயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமென நம்புவதாகவும்" செய்திகள் குறிப்பிட்டன.

சீன அரசாங்கம் அதன் வாசற்படியில் அமெரிக்கா ஒரு போரைத் தூண்டிவிடுமென ஆழமாக கவலை கொண்டுள்ளதால், அமெரிக்கா மற்றும் வட கொரியா இரண்டும் விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அழுத்தமளித்து கொண்டிருக்கிறது. “எல்லா தரப்பும் அவற்றின் பொறுப்புகளைப் புரிந்து கொண்டு, எல்லா திசையிலிருந்தும் ஒருங்கிணைந்து வந்தால் மட்டுமே, தீபகற்பம் மீதான அணுசக்தி பிரச்சினையை எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு விரைவாக தீர்க்க முடியும்,” என்று ஜி தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

ட்ரம்ப் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே உடனும் தொலைபேசியில் பேசினார், அபே நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வட கொரியாவுக்கு விடையிறுப்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதால், உயர்மட்ட கண்காணிப்பு மற்றும் உளவு தகவல் பரிமாற்றங்களுடன் நாங்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவோம்,” என்றார். “வட கொரியா" கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென "பலமாக கோருவதில்" ட்ரம்ப் உடன் அவர் அரசாங்கம் உடன்பட்டிருப்பதாக தெரிவித்த அபே, “மீண்டும் மீண்டும் அபாயகரமாக மற்றும் ஆத்திரமூட்டும் வகையில்" இருப்பதற்காக பியொங்யாங்கைக் கண்டித்தார்.

ஒரு தொலைதூர ஏவுகணை தாக்குதல் சம்பவத்தின் போது எவ்வாறு விடையிறுப்பது என்பதன் மீது அபே அரசாங்கம் படைத்துறைசாரா பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி, ஜப்பானில் எதிர்ப்பு மனோநிலைகளைத் தூண்டிவிட்டுள்ளது: பதுங்குகுழிகளில் பதுங்கி கொள்ள வேண்டும் அல்லது அருகாமையில் உள்ள பலமான கட்டிடங்களில் ஒதுங்கி கொள்ள வேண்டுமென அது ஆலோசனை வழங்கி உள்ளது. ஒரு மோதல் சம்பவத்தின் போது தென் கொரியாவில் இருந்து ஆயிரக் கணக்கான ஜப்பானிய பிரஜைகளை வெளியேற்றுவதற்கான திட்டங்களையும் அது முன்னதாக அறிவித்திருந்தது.

கீழ்படிந்திருக்கும் ஊடகங்களின் ஆதரவுடன், அமெரிக்கா அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பியொங்யாங் ஆட்சியை தொடர்ந்து பூதாகரமாக சித்தரித்து வருவதுடன், அதை அப்பிராந்தியத்திற்கும் உலகிற்கும் ஒரு அச்சுறுத்தலாக முத்திரை குத்தி வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு அழுத்தமளித்து வருகின்ற அதேவேளையில், அதுவே வட கொரியாவை "தீர்த்துக் கட்ட" தயாராக இருப்பதாகவும் அது மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறைகளின் அறிக்கைகளோடு இந்த இடைவிடாத போர் முரசுகொட்டல் கடந்த வாரமும் தொடர்ந்தது. பென்டகன் செய்தி தொடர்பாளர் கேரி ரோஸ் கூறுகையில், “வட கொரியாவின் சட்டவிரோதமான ஆயுத திட்டங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு தெளிவான மரணகதியிலான ஓர் அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன,” என்று கூறி, “ஆத்திரமூட்டும், ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் வாய்சவடால்களுக்காக" பியொங்யாங்கிற்குக் கண்டனம் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை சற்றே ஒளிவுமறைவாக ஓர் எச்சரிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, அதுவும் அதேபோன்ற வார்த்தைகளில் வட கொரியாவைக் கண்டித்தது. “நாங்கள் இராணுவ மோதலை விரும்பவில்லை அல்லது வட கொரியாவை அச்சுறுத்தவும் விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கோ அல்லது எங்கள் கூட்டாளிகளுக்கோ வரும் அச்சுறுத்தல்களுக்கு அதற்கேற்ற விதத்தில் நாங்கள் விடையிறுப்போம்,” என்று ஒரு செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

வட கொரியா இரத்தம் கொதிப்பேற்றும் அச்சுறுத்தல்களுடன் அமெரிக்காவிற்கு விடையிறுத்துள்ளது, இது வாஷிங்டனின் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கான ஒரு சாக்குபோக்கை அதற்கு வழங்குகிறது. "வடக்கின் மீது படையெடுப்பதற்காக ஒரு அணுஆயுத போரைத் திட்டமிடுபவர்களின் அதிதீவிரமான அபாயகரமான நடவடிக்கை" என்று USS கார்ல் வின்சனின் நிலைநிறுத்தலை குறிப்பிட்டுள்ள வட கொரியா, அந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை "ஒன்றுக்கும் உதவாத உலோக குப்பையாக" மாற்றவும், “கடலிலேயே அதை எரித்து சாம்பலாக்கவும்" அது தயாராக இருப்பதாக அறிவித்தது.

கொரிய தீபகற்பத்தில் வேண்டுமென்றே பதட்டங்களை அதிகரித்து வரும் ட்ரம்ப் நிர்வாகம், பியொங்யாங் ஆறாவது அணுசக்தி சோதனையை நடத்துவதற்கோ அல்லது மேற்கொண்டு தொலைதூர ஏவுகணைகளைத் தொடுப்பதற்கோ நகர்ந்தால் அதன் முன்கூட்டிய இராணுவ தாக்குதல்களைக் கொண்டு அச்சுறுத்தி உள்ளது. இதுபோன்றவொரு நிலைமைகளில், ஒரு தவறான கணக்கீடோ அல்லது ஒரு பிழையோ கூட ஒரு மோதலைத் தூண்டிவிட்டு, வேகமாக கட்டுப்பாட்டை இழந்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற அணுஆயுதமேந்திய சக்திகளை மோதலுக்குள் இழுத்துவிடக்கூடும்.