ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French NPA candidate Philippe Poutou defends Trump’s bombing of Syria

சிரியா மீதான ட்ரம்ப்பின் குண்டுவீச்சை பிரான்சின் NPA வேட்பாளரான பிலிப் புட்டு பாதுகாக்கிறார்

By Alex Lantier
11 April 2017

சிரியாவுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி காட்டியிருக்கும் எதிர்வினையானது, இந்த ஏகாதிபத்திய-ஆதரவு நடுத்தர வர்க்கக் கட்சியின் பரிணாம வளர்ச்சியில் வலது நோக்கிய ஒரு புதிய மற்றும் ஆழமான நகர்வைக் குறித்து நிற்கிறது. சிரியாவிலான ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய பினாமிப் போரை 2011 இல் அது தொடங்கிய நாளில் இருந்து ஆதரித்து வந்திருக்கும் இக்கட்சி இப்போது தன்னை ஒரு நேரடி ஏகாதிபத்திய தலையீட்டின் பின்னால் நிறுத்திக் கொண்டிருப்பதோடு இப்போது நடைபெற்று வருகின்ற இராணுவ அதிகரிப்பின் அபாயகரமான சுற்றுக்கு எதிராக எழுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கான தனது குரோதத்தையும் அறிவிக்கிறது.

சிஐஏ இன் பரப்புரையில் இருந்து கிட்டத்தட்ட பிரித்து இனம்காணமுடியாத அளவுக்கு இருக்கின்ற ஒரு பிரச்சார அறிக்கையில், NPA இன் ஜனாதிபதி வேட்பாளரான பிலிப் புட்டு  சிரியாவுக்கு எதிரான அமெரிக்க மூர்க்கத்தனத்தின் மீது எந்த விமர்சனமும் செய்யவில்லை, மாறாக, வெட்கக்கேடான வகையில், போருக்கு எதிரான எதிர்ப்பை, சிரிய ஜனாதிபதியான பஷார் அல்-அசாத்திற்கும் பாரிய படுகொலைகளுக்கும் ஆதரவளிப்பதுடன் சமானப்படுத்துகிறார். (புட்டு இன் அத்தனை மேற்கோள்களுமே NPA இணைந்திருக்கும் பப்லோவாத அகிலத்தின் வலைப் பிரசுரமான International Viewpoint இல் வெளியாகியிருக்கும் மிகப்பரிதாபகரமான ஆங்கில மொழிபெயர்ப்பில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.)

Khan Sheikhoun இல் நடந்ததாகச் சொல்லப்படும் இரசாயன தாக்குதலுக்கான பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப்பின் நிர்வாகம் கூறுவதை பாராட்டுவதுடன் புட்டு  தொடங்குகிறார்: “ஆறு வருடங்களில் முதல்முறையாக, போர்க்குற்றவாளியான எல் ஆசாத்தின் இராணுவம் வான் தாக்குதல்களின் இலக்காகியிருக்கிறது. செவ்வாயன்று Khan Sheikhoun இல் அப்பாவி மக்களின் மீது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி 27 குழந்தைகள் உள்ளிட குறைந்தபட்சம் 86 பேரை பலிகொண்ட விமானம் எந்தத் தளத்தில் இருந்து இயக்கப்பட்டிருந்ததோ, அந்த ஷய்ரத் வான் தளத்தை 59 அமெரிக்க ஏவுகணைகள் அழித்தன.

"கொலைகாரரான எல் ஆசாத், ஈரானிய மற்றும் ரஷ்ய இராணுவங்களுடன் சேர்ந்து, தனது இரத்தவெறி பிடித்த ஆட்சியின் மூலமாய் அப்பாவி மக்களின் மீதும் எதிர்ப்புப் படைகளின் மீதும் தொடர்ந்து குண்டுகளை வீசி நூறாயிரக்கணக்கான சிரியர்களை கொன்று குவித்திருக்கிறார்” என்று தொடர்ந்து கூறும் புட்டு, பின்வருமாறு நிறைவுசெய்கிறார்: “ஆகவே, அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் எந்த ஆதரவோ அல்லது அவற்றின் மீது நம்பிக்கையோ இல்லாமல், நாங்கள், எல் ஆசாத் மற்றும் அவரது விசுவாசிகளுடன் ஒரு ‘உருப்படியான’ அமைதிக்கு ஆலோசனையளிப்பதற்காக அந்த சர்வாதிகாரியால் கொல்லப்பட்ட்ட நூறாயிரக்கணக்கான மரணங்களுக்கும் மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கும் தமது கண்களை மூடிக் கொள்கின்ற பிரெஞ்சு அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களில் நாங்கள் சேருவதாய் இல்லை.”

ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கடுமையாக எதிர்ப்போம் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியாலும் ஆதரிக்கப்படுகின்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் முனைப்பை பாதுகாப்போம் என்றும் NPA அறிவித்ததைப் போன்றே இது இருக்கிறது. அமெரிக்காவின் குண்டுவீச்சு நேட்டோ சக்திகளுக்கும், ஈரான் மற்றும் அணு ஆயுத ரஷ்யா ஆகிய சிரியாவின் ஆதரவு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நேரடியான போராக அதிகரிக்க அச்சுறுத்துகிறது. அப்படியான ஒரு போர் ஒட்டுமொத்த பூகோளத்தையும் சாம்பலாக்க வழிவகுத்து விடும் என்ற நிலையிலும், NPA அந்த போர் முனைப்பை பாதுகாக்கிறது.

புட்டு வின் போர்-ஆதரவு வாதம் பொய்கள் மற்றும் ஊர்ஜிதப்படாத திட்டவட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. Khan Sheikhoun இல் அசாத்தின் படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தின என்ற எந்த புலன்விசாரணையாலும் நிரூபிக்கப்படாத ஒரு கூற்றை அவர் உண்மையாக எடுத்துக் கொள்கிறார். உண்மையில், இந்த தாக்குதல் சிஐஏ-ஆதரவு சக்திகளால் நடத்தப்பட்டது என்பதற்கே அதிக ஐயம் தோன்றாதிருக்கிறது. சிரியாவில் கடைசியாய் நடைபெற்றிருந்த பெரிய இரசாயனத் தாக்குதலான 2013 இல் Ghouta இல் நடந்த தாக்குதல், இஸ்லாமிய எதிர்ப்புப் படைகளால் நடத்தப்பட்டு, அவை அச்சமயத்தில் பழியை அசாத்தின் மீது தூக்கிப் போட்டிருந்தன என்பதையும், அதே படைகள் தான் இப்போது Khan Sheikhoun அமைந்திருக்கும் இட்லிப் மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன என்பதையும் புட்டு கூறவில்லை.

அசாத் ஆட்சியை அழிப்பதற்கான ஒரு ஏகாதிபத்தியப் போரை எதிர்த்தால், அதன் அர்த்தம் பாரியப் படுகொலைக்கு அங்கீகாரம் வழங்குவதாகும் என்ற புட்டு வின் அவதூறான கூற்று அரசியல் பொய்களின் அடிப்படையில் அமைந்ததாகும். முதலாவதாய், சிரியாவிலான பாரியப் படுகொலைகளுக்கும் அழிவுக்குமான பிரதான பொறுப்பு அசாத் மீதோ அல்லது அவரது ஆதரவு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரான் மீதோ இருக்கவில்லை, மாறாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் NPA உள்ளிட அவற்றின் அரசியல் ஆதரவாளர்கள் ஆகியவற்றின் மீதே உள்ளன. அசாத்தை கவிழ்க்கும் முயற்சியில் சிஐஏ உம், ஐரோப்பிய உளவுத் துறையும், மற்றும் பேர்சிய வளைகுடா எண்ணெய் ஷேக் ஆட்சிகளும் பில்லியன் கணக்கான டாலர்களை எதிர்ப்பு போராளிப் படைகளுக்கு கொட்டின.

எல்லாவற்றுக்கும் மேலாய், “அசாத் மற்றும் அவரது விசுவாசிகளை” ஆதரிப்பதால்தான், பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான மக்கள் ஒரு படுபயங்கரமான புதிய போருக்கான முனைப்பை எதிர்க்கிறார்கள் என்று கூறுவது ஒரு அரசியல் அவதூறு ஆகும். சிரியா முதல் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜேமன் வரையிலும் கால் நூற்றாண்டு கால மத்திய கிழக்கு போர்களில் தொழிலாளர்கள் கசப்பான அனுபவத்தை பெற்றுள்ளனர், இது மில்லியன் கணக்கில் உயிர்களையும் ட்ரில்லியன் கணக்கில் டாலர்களையும் விலையாக்கியிருக்கிறது. ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் எதிரான முழுவீச்சிலான அணுஆயுதப் போராக தீவிரஉச்சம் காணக் கூடிய ஒரு போர் கூட வேண்டாம், ஒரு புதிய ஏகாதிபத்திய போரே கூட ஒரு பேரழிவுக்கே கொண்டுசெல்லும் என்பதை அவர்கள் உணர்கின்றனர்.

அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் நம்பிக்கை வைக்கவில்லை என்று கூறுவதன் மூலமாக, வெகுஜன போர் எதிர்ப்பு மனோநிலைக்கு எதிராக NPA தலையசைப்பது என்பது ஏமாற்றும் மோசடியுமாகும். உண்மையில் இது ட்ரம்ப்பை இடதின் பக்கமிருந்து தாக்கவில்லை, மாறாக சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவை மிரட்டுவதில் போதுமான சீர்மையைக் கடைப்பிடிக்காததற்காக வலதின் பக்கம் இருந்தே தாக்குகிறது. Khan Sheikhoun தாக்குதலுக்கு அசாத் தான் உத்தரவிட்டார் என்ற பொய்யை அடிப்படையாய் கொண்டு, புட்டு அதற்காக ட்ரம்ப்பை தாக்குகிறார், ட்ரம்ப் உடனடியாக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அசாத் இத்தாக்குதலை முன்னெடுத்திருக்க மாட்டார் என்று மறைமுகமாய் கூறுகிறார்.

புட்டு எழுதுகிறார்: “ஒரு வாரத்திற்கு முன்பாகத் தான், பஷார் அல் அசாத்துடனான ஒரு உடன்பாடு ‘பயங்கரவாதத்தின் மீதான போரின்’ கட்டமைப்புக்குள்ளாக சிந்திக்கப்பட்டதாகும், புட்டின், சிஸி அல்லது நெதன்யாஹூ போன்ற மற்ற ஒடுக்குமுறை சக்திகளுடனான உடன்பாடும் இதுபோன்றதே என்று சுட்டிக்காடி தனது முந்தைய நிலைப்பாட்டை அவரது அணி தீவிரப்படுத்தியிருந்தது. இந்த சமிக்கைகள், தனது பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஊக்கமூட்டலாக சிரிய ஆட்சியால் தெளிவான முறையில் பொருள் கொள்ளப்பட்டன, ஆகவே ஒபாமாவிற்குப் பின்னர், ட்ரம்ப்பும் Khan Cheikhoun இல் நடந்த அட்டூழியமான இரசாயனத் தாக்குதலுக்கும் கொலைகளுக்கும் தனக்குரிய பங்கைக் கொண்டிருக்கிறார்.”

இதில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் மிக மூர்க்கமான கன்னைகளை ஆதரிக்கின்ற வசதியான நடுத்தர வர்க்க அடுக்குகளுக்காக NPA பேசுகிறது. சிஐஏ உம், ஜனநாயகக் கட்சியும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், ட்ரம்ப் ரஷ்யா மற்றும் சிரியாவுடன் உறவு கொண்டிருந்ததாக சொல்லப்பட்டதற்காகவும் இராணுவ நடவடிக்கையை கொண்டு அந்நாடுகளை அச்சுறுத்த மறுத்ததற்காகவும் அவரை கண்டனம் செய்து வந்த நிலையில், சிரியா மீதான ட்ரம்ப்பின் குண்டுவீச்சானது வாஷிங்டனில் பல மாத காலமாய் நடந்து வந்த கடுமையான கன்னை மோதலில் இருந்து விளைந்ததே ஆகும்.

இந்த சக்திகள் இறுதியில் இந்த கன்னை மோதலில் வெற்றி கண்டிருந்தன, ட்ரம்ப் சென்ற வாரத்தில் குண்டுவீச்சை உத்தரவிட்டு சர்வதேச அளவில் மிகப் பரந்த அரசியல் மற்றும் இராணுவ மோதல்களை இயக்கி விட்டிருக்கிறார். இது குறிப்பாக, 2011 இல் எகிப்திய புரட்சிக்கான பதிலிறுப்பாக லிபியா, சிரியா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்தியப் போர் முனைப்பின் மிக வெறிகொண்ட ஆதரவாளர்களில் ஒன்றான NPA போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்து “இடது” கட்சிகளின் பாத்திரத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பெங்காசியில் இஸ்லாமிய வட்டாரங்களுக்கு நெருக்கமான தொடர்புகளுடன் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய போது, NPA உம் அதன் சர்வதேச சக-சிந்தனையாளர்களும் -பிரதானமாக பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார்- ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்தியப் போர்களை ஜனநாயகப் புரட்சிகளாக ஊக்குவிப்பதற்காய் தலையீடு செய்தனர்.

அஷ்கார் எழுதினார், “கடாபி தனது இராணுவத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி பெங்காசியை கைப்பற்ற அனுமதிக்கப்படுவாரானால், அங்கே ஒரு மிகப்பெரும் படுகொலை நடைபெறும். இங்கே நிலைமைப்படி, மக்கள் உண்மையான அபாயத்தில் உள்ளனர், அவர்களை பாதுகாக்க கூடிய ஒரு புரிந்துகொள்ளத்தக்க மாற்று அங்கே இல்லை. கடாபியின் படைகளது தாக்குதல் சில மணி நேர அல்லது அதிகப்பட்சம் சில நாட்கள் தொலைவிலேயே உள்ளது. ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோட்பாடுகளின் பேரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கக் கூடிய ஒரு நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.”

அதற்குப் பின் அஷ்கார் அந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே சிரிய மோதலை தீவிரப்படுத்துவதற்கு திட்டமிடும் வரை சென்று, 2011 அக்டோபரில் சிஐஏ உடன் தொடர்புடைய சிரிய தேசிய கவுன்சிலை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பு குறித்து அதற்கடுத்த மாதத்தில் அல் அக்பரில் வெளியான ஒரு கட்டுரையில் அவர் பெருமையடித்துக் கொண்டார்.

நூறாயிரக்கணக்கான உயிர்களை காவுவாங்கி, ஒட்டுமொத்த நாடுகளையும் சீர்குலைத்து, இப்போது உலகப் போரையும் தூண்டுவதற்கு அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்திய போர்களை திட்டமிடுவதிலும் ஊக்குவிப்பதிலும் NPA வகிக்கின்ற பாத்திரத்தை விடவும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அதனை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரிக்கின்ற வர்க்கப் பிளவை வேறெதுவும் தெள்ளத்தெளிவாய் எடுத்துக்காட்டி விட முடியாது. சிரிய ஆட்சியையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து சண்டையிடுகின்ற எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுதமளிப்பதை ஏகாதிபத்திய சக்திகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று, ஆறாண்டு காலப் போரின் சமயத்தில் NPA தொடர்ந்து சொல்லி வந்திருக்கின்ற ஆத்திரமூட்டும் கோரிக்கைகளையே புட்டு வின் அறிக்கை மீண்டும் கூறுகிறது.

அவர் அறிவிக்கிறார், “மதசார்பற்ற எதிர்ப்பு போராளிகளுக்கான ஆயுத விற்பனையின் மீதான தடை அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கோரி வந்திருக்கிறோம், இத்தடை அவர்களுக்கு உண்மையான தற்காப்பை இல்லாது செய்து விடுகிறது, அடிப்படைவாத ஜிகாதிகள் மட்டுமே ஆயுதங்களை -விமானஎதிர்ப்பு ஆயுதங்களை அல்ல- வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கியிடம் இருந்து வாங்க முடிந்திருக்கிறது.”

இங்கே ஆட்சி-மாற்றத்திற்கான போரை முற்போக்காக சித்தரிப்பதன் மூலம் புட்டு மீண்டும் தனது வாசகர்களை ஏமாற்றுகிறார். அது அஹ்ரால் அல் ஷாம் போன்ற இஸ்லாமிய போராளிகளாய் இருந்தாலும் சரி அல்லது அல்கெய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியாக இருந்தாலும் சரி அல்லது ஓரளவுக்கு மதசார்பற்றதான சுதந்திர சிரிய இராணுவம் போன்றவையாக இருந்தாலும் சரி அல்லது குர்து-பெரும்பான்மையான சிரிய ஜனநாயகப் படைகளாய் இருந்தாலும் சரி எதிர்ப்புப் போராளிகள் எவருக்குமே ஆயுதங்கள் மீது எந்தத் “தடை”யும் இருந்திருக்கவில்லை. புட்டு  கூறுவதைப் போல ஏகாதிபத்திய சக்திகள் ஆயுதமளிக்காத காரணத்தால் அவை தோற்கடிக்கப்படவில்லை, மாறாக அவற்றுக்கு மக்கள் ஆதரவு கொஞ்சமும் இருக்கவில்லை என்பதாலேயே தோற்கடிக்கப்பட்டன, அத்துடன் ஒரு ஜனநாயகப் புரட்சியை ஆதரிப்பதாக NPA கூறிக் கொண்டது ஒரு மோசடியாகும்.

NPAவுக்கு எதிரான ஒரு தாட்சண்யமற்ற போராட்டத்தில் மட்டுமே தொழிலாளர்களும் இளைஞர்களும் போரை எதிர்க்கவும் தங்களது மிக அடிப்படையான நலன்களை பாதுகாக்கவும் இயலும் என்பதற்கான எச்சரிக்கையே புட்டு வின் அறிக்கையாகும்.