ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US attack on Syria: A prelude to wider war

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்: பரந்த போருக்கான ஒரு வெள்ளோட்டம்

Andre Damon
8 April 2017

சிரிய விமானத்தளத்தின் மீது அமெரிக்கா ஒரு தூண்டுதலற்ற மற்றும் சட்டவிரோத தாக்குதல் நடத்தப்பட்டு வெறும் ஒரு நாள் கழித்து, இந்த சம்பவமானது, அணுஆயுத ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கான சாத்தியக்கூறுடன், இன்னும் பரந்த இராணுவ தீவிரப்பாட்டிற்கு ஒரு வெள்ளோட்டம் மட்டுமே என்பது தெளிவாகி உள்ளது.

வெள்ளியன்று அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், ஒரே குரலில், ட்ரம்பின் நடவடிக்கையை மட்டும் வரவேற்கவில்லை, மாறாக அதை விரிவாக்கவும் அழைப்புவிடுத்தன. முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், “வரவிருக்கும் நாட்களில் அசாத் கொடூர அட்டூழியங்களில் ஈடுபடுவதை தடுக்க, உலகம் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்,” என்று அறிவித்தார். அத்தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, கிளிண்டன், சிரிய விமானப்படை தளங்கள் மீது குண்டுவீசுவதற்கு அழைப்பு விடுத்ததுடன், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதி ஏற்படுத்துவதற்கு அவரது ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார், இது ரஷ்யாவுடன் போருக்கு இட்டுச் செல்லக்கூடுமென உயர்மட்ட அமெரிக்க தளபதிகளே தெரிவித்துள்ளனர்.

பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி தலைவர் நான்சி பிலோசி ட்ரம்பின் நகர்வை பாராட்டிய அதேவேளையில், கூடுதல் நடவடிக்கைக்கு நிறைய சட்டபூர்வதன்மை வழங்குவதற்காக இராணுவப் படை பிரயோகத்திற்கு புதிய அங்கீகாரம் வழங்க காங்கிரஸிற்கு அழைப்புவிடுத்தார். குடியரசு கட்சி செனட்டர்கள் ஜோன் மெக்கெயின் மற்றும் லிண்ட்செ கிரஹாம், சிரியாவில் போரை இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்த ட்ரம்பிற்கு அழைப்புவிடுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “அசாத்தின் விமானப் படையை … சண்டையிலிருந்து முழுமையாக வெளியேற்ற" ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நாட்டில் "பாதுகாப்பு பகுதிகளை" உருவாக்க வேண்டுமென்றும் (இதற்காக கணிசமான அளவிற்கு தரைப்படை துருப்புகளை அனுப்ப வேண்டியிருக்கும்) அவர்கள் எழுதினர்.

ஊடகங்களின் ஏமாற்றுத்தனமும் போர்வெறி நாடும் மனோபாவமும் MSNBC இன் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரைன் வில்லியம்ஸால் தொகுத்தளிக்கப்பட்டது, இவர் அபத்தமாக லியோனார்ட் கொஹெனின், “நமது ஆயுதங்களின் அழகால் நான் வழிநடத்தப்படுகிறேன்,” என்ற வரிகளை மேற்கோளிட்டார். டோமாஹாக் ஏவுகணைகள் என்ற வார்த்தையை மூன்று முறை மீண்டும் மீண்டும் கூறமளவிற்கு அந்த வார்த்தையின் "அழகால்" அவர் மிகவும் பரவசமடைந்திருந்தார். CNN இன் பரீத் ஜகாரியா பேசுகையில், விமானத் தாக்குதல்களைத் தொடங்கியதன் மூலம் "ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி உள்ளார்" என்று அறிவித்தார்.

இந்த கருத்துக்கள் எல்லாம், அத்தாக்குதல் ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய அரசாங்கம் செவ்வாயன்று கான் ஷேக்ஹொன் கிராமத்தில் இரசாயன ஆயுதங்களை பிரயோகித்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுப்பாக இருந்தன என்ற பட்டவர்த்தனமான பொய்களை, அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதை அடியில் கொண்டிருந்தன. அதற்கு பொறுப்பேற்க சிரிய அரசாங்கம் மறுத்திருப்பது உதறிவிடப்பட்டது, மேலும் கடந்த காலத்தில் அதுபோன்ற ஆயுதங்களை அமெரிக்க ஆதரவு படைகள் பயன்படுத்தி விட்டு, அதற்காக சிரிய அரசாங்கத்தின் மீது பழிபோட்டன என்ற உண்மையும் சர்வசாதாரணமாக புறக்கணிக்கப்பட்டன.

சிரியா மீதான அமெரிக்க தாக்குதலின் அப்பட்டமான சட்டவிரோதத்தன்மையை பொறுத்த வரையில், அதுவொரு பிரச்சினையே இல்லை என்பதாக கையாளப்பட்டது. வெள்ளிக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியாவின் தூதர் அந்த தாக்குதல்களை "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அத்துடன் சகல சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை" மீறிய "வெளிப்படையான ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று குறிப்பிட்டார்.

இதற்கு விடையிறுப்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலெ "சர்வதேச சமூகம் கூட்டாக செயல்படுவதற்கான அதன் கடமையில் இருந்து தொடர்ந்து தவறும் போது, அரசுகள் அவற்றின் சொந்த நடவடிக்கையை எடுக்க நிர்பந்திக்கப்படும் காலம் ஏற்படுகிறது,” என்று சர்வசாதாரணமாக அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா ஏதேனும் ஒரு சாக்குபோக்கைக் கொண்டு அது தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் ஆக்ரோஷ போரை நடத்த அதற்கு உரிமை இருப்பதாக கருதுகிறது.

இந்த போக்கு ஊடகங்களில் எதிரொலித்தன, “மனிதாபிமான" போருக்கான என்றென்றுக்குமான பிரச்சாரகரான டைம்ஸ் கட்டுரையாளர் நிக்கோலஸ் க்ரிஸ்டோஃப் அறிவிக்கையில், “சிரியாவிற்கு எதிரான ஜனாதிபதி ட்ரம்பின் விமான தாக்குதலின் சட்டபூர்வத்தன்மையில் சந்தேகம் இருந்தன … என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை, சரியானவையே,” என்றார்.

சிரியா மீதான விமானத் தாக்குதல்களுக்கு பின்னால் இருக்கும் நிஜமான உள்நோக்கங்களை புரிந்து கொள்ள, அவற்றை ஒரு பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்துவது அவசியமாகும்.

அமெரிக்கா ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த போர்கள் ஒவ்வொன்றிலும், அமெரிக்க அரசாங்கம் அது ஏதோவொரு உடனே நிகழவிருந்த பேரழிவைத் தடுப்பதற்காக அல்லது ஏதேனும் ஒரு சர்வாதிகாரியை பதவியிலிருந்து நீக்குவதற்காக தலையீடு செய்து வந்ததாக கூறியது.

1991 இல், ஈராக்கிய இராணுவம் குவைத் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட அட்டூழியங்களை தடுப்பதற்காக என்ற பெயரில் எண்ணெய் வளம் மிகுந்த ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. பின்னர் 1999 இல் யூகோஸ்லேவியாவில் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசிவிக்கின் இன சுத்திகரிப்பை தடுப்பதற்காக என்ற பெயரில் யூகோஸ்லேவியா குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

2001 இல், செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தாலிபான் இடமளித்திருந்தது என்ற பொய் சாக்குபோக்கின் அடிப்படையில் புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. இதையடுத்து இரண்டாவது ஈராக் படையெடுப்பு வந்தது, இது ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைன் "பாரிய பேரழிவு ஆயுதங்களைக்" கொண்டிருப்பதாக கூறிய பொய் வாதங்களை நியாயப்படுத்தியது.

ஒபாமாவின் கீழ், லிபியா மீது குண்டுவீசிய அமெரிக்கா, ஜனாதிபதி மௌம்மர் கடாபியின் துருப்புகள் பெங்காசியில் உடனடியாக ஒரு படுகொலையை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறிய பின்னர் அவரை அதன் இஸ்லாமிய பினாமிகளைக் கொண்டு படுகொலை செய்தது.

இந்த எல்லா போர்களிலும், அமெரிக்காவின் உலகளாவிய புவிசார் மூலோபாய நலன்களை பின்தொடர்வதற்காக, ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மனிதாபிமான பாசாங்குத்தனங்கள் தான் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதிலும் மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களும் அழிக்கப்படுவதிலும் போய் முடிந்துள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியை மாற்றும் முயற்சியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் பிராந்திய மோதல்களில் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டின் மீது படையெடுத்துள்ளது அல்லது குண்டுவீசி உள்ளது, இவை விரைவிலேயே சீனா மற்றும் ரஷ்யா உட்பட அதன் பெரிய போட்டியாளர்களுடன் ஒரு மோதலுக்குள் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன.

டொனால்ட் ட்ரம்பின் வார்த்தைகளில் கூறுவதானால் "அழகிய மழலைகளை" பாதுகாப்பதற்காக அமெரிக்கா மற்றொரு போரை தொடங்கி இருப்பதாக, இப்போது, மீண்டுமொருமுறை, அமெரிக்க மக்கள் நம்ப வைக்கப்பட இருக்கிறார்களென எதிர்பார்க்கலாம்.

சிரியா சம்பந்தமாக கூறுவதானால், ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஒரு கூட்டாளியான பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்கும் நோக்கில் சிஐஏ தூண்டிய ஐந்தாண்டு கால நீண்ட போர் படுபயங்கரமான இரத்த ஆற்றையும் மற்றும் அகதிகள் நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளன. 2013 இல், விமானத் தாக்குதல்கள் நடத்துதவற்காக சிரிய அரசாங்கம் மீது பொய்யாக இரசாயன ஆயுத தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. பாரிய மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டதாலும் மற்றும் இராணுவ தலையீட்டை அங்கீகரிக்கும் ஒரு தீர்மானம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எதிர்பாராமல் தோல்வி அடைந்ததாலும், ஒபாமா நிர்வாகம் முடிவில் பின் வாங்கியது.

ஆனால் பின்வாங்க வேண்டியிருந்ததால் தோல்வி முகத்தை மறைப்பதற்காக செய்யப்பட்ட புட்டின் உடனான ஒபாமாவின் உடன்படிக்கையை இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகள் ஒரு மோசமான பின்னடைவாக கருதின.

ட்ரம்ப் தேர்வாகி பதவியேற்றதற்குப் பிந்தைய மாதங்களில், அவரொரு "சைபீரிய வேட்பாளர்" என்றும் மற்றும் ஒரு "ரஷ்ய செல்ல பிராணி" என்றும் கூறப்பட்ட ஜனநாயகக் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள், சிஐஏ மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் கோரிக்கைகளின் வரிசையில், பிரதானமாக ரஷ்யாவிற்கு எதிராக மற்றும் சிரியாவில் இன்னும் ஆக்ரோஷமான கொள்கையை நிர்பந்திப்பதை நோக்கமாக கொண்டிருந்தன.

வெளியுறவு கொள்கை மீது ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் கடுமையான மோதல், பகுதியாக தீர்க்கப்பட்டிருப்பது, இராணுவ தலையீட்டிற்குரிய ட்ரம்பின் விருப்ப பகுதியான ஆசியாவில் இராணுவ தலையீட்டை தீவிரப்படுத்தாது என்று அர்த்தமல்ல. NBC செய்திகள் வெள்ளியன்று மாலை ஒரு முக்கிய பகுதியை தாங்கி வந்தது, “வட கொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு விடையிறுப்பதற்கான விருப்பத் தெரிவுகளை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஜனாதிபதி ட்ரம்பிடம் முன்வைத்துள்ளது—இதில் தென் கொரியாவில் அமெரிக்க அணுஆயுதங்களை நிலைநிறுத்துவது அல்லது சர்வாதிகாரி கிம் ஜோங்-உன் ஐ கொல்வது ஆகியவையும் உள்ளடங்கும்.” இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் ஆசிய பசிபிக்கை வேகமாக முழு முதலான போருக்குள் இட்டுச் செல்லும்.

பொதுமக்களின் கருத்துக்கள் மீது அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும் அலட்சியமாக இருப்பது தான் சில சமயம் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஏதோ எழுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் செயல்படுவதைப் போல —அவர்கள் அவ்வாறு செயல்படக் கூடியவர்கள் தான்— இந்த பிரச்சாரம் அந்தளவிற்கு மிகவும் அப்பட்டமாகவும், தொடர்ச்சியாகவும் உள்ளது. அரசாங்கம் பொய்களை விற்று வருகிறது என்பதை மக்களின் பரந்த பிரிவுகள் பெரும்பாலும் நடந்தால் நடக்கட்டும் என்று எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் அமைப்புரீதியில் அதனுடன் இணைந்த துணை அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாக, போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பு அரசியல்ரீதியில் கலைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான பரந்த மக்களின் நனவு மட்டத்திற்கும் அதிதீவிர அபாயகரமான உலக நிலைமைக்கும் இடையே ஒரு இடைவெளி நிலவுகிறது. ஏகாதிபத்திய போர் மற்றும் இறுதியில் அதற்கு காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்ப்பதில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தை திட்டமிட்டு அவசரமாக அபிவிருத்தி செய்வதன் மூலமாக, இந்நிலைமை தலைகீழாக மாற்றப்பட வேண்டும்.