ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The perspective for the working class in the French presidential election

மே தினம் 2017

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கு

By Alex Lantier
2 May 2017

இந்த உரையை, ஏப்ரல் 30 அன்று நடந்த 2017 சர்வதேச இனையவழி மே தின கூட்டத்தில் [Parti de l'égalité socialiste (France)] சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரான்ஸ்) ஸ்தாபக உறுப்பினரான அலெக்ஸ் லான்ரியேர் வழங்கினார்.

இந்த மே தினத்தில், சோசலிச சமத்துவக் கட்சியானது பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் இறுதி சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. நவ பாசிச மரின் லு பென்னின் (Marine Le Pen) வெற்றியை தடுக்க, வங்கியாளர் இமானுவல் மக்ரோனுக்கு (Emmanuel Macron) தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கூற்றை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது.

ஏற்கனவே, உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் பிரான்சில் மக்ரோன் - லு பென் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானதில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையை எதிர்த்து அணிதிரண்டு வருகின்றனர். நாளை, தொழிலாளர்கள் ஊர்வலம் செய்வர். பிரெஞ்சு மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள், வேட்பாளர்கள் தேர்வு சம்பந்தமாக கோபமடைந்துள்ளனர்.

தேர்தலை பகிஷ்கரிப்பதோடு இரண்டாம் சுற்றுக்கு எதிராகவும் அதையடுத்து தெரிவாகும் எந்த பிற்போக்குத்தனமான வேட்பாளருக்கும் எதிராகவும் ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரளுமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது.

பிரெஞ்சு மக்களை மக்ரோனுக்கு வாக்களிக்கும்படி நிர்பந்திக்கும் ஊடகங்கள், சோசலிஸ்ட் கட்சி (PS), குடியரசுக் கட்சி (LR) ஆகியவற்றின் அரசியல் அச்சுறுத்தல்கள் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை.

மக்ரோன், நவ-பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாப்பவரா? இல்லை, அவர் அவசரகால நிலையை திணித்த தற்போதைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.

மக்ரோன், அதி வலதுசாரிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை பாதுகாப்பவரா? சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்கு தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தம் செய்ய தங்களுக்கு உள்ள உரிமைகளை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கடந்த ஆண்டு அவரது அரசாங்கம் பொலிஸாரை அனுப்பியது.

நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் தொழிலாள வர்க்கத்தை விச்சி ஆட்சி நசுக்கியதன் பின்னர், 1946ல் அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட இந்த உரிமைகளை, அவர், தொழிலாளர் சட்டங்களை தகர்க்கும் நோக்கிலான ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் பேரில் நசுக்கியுள்ளார்.

மக்ரோன், தேசியவாதம் மற்றும் போர் பற்றிய அறிவொளிகால எதிர்ப்பாளரா? அவர் பேர்லினின், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிரியாவில் இருந்து வட கொரியா வரை அல்லது ரஷ்யாவில் இருந்து சீனா வரை உலகம் முழுவதிலும் நாடுகளைத் தாக்க அச்சுறுத்தும் வாஷிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியினது கூட்டாளியாக உள்ளார்.

அவர் பாதுகாப்பு செலவினங்களில் பெரும் அதிகரிப்பைச் செய்ய திட்டமிடுவதோடு இராணுவத்துக்கு கட்டாய ஆட் சேர்ப்பை மீண்டும் கொண்டுவரவும் விரும்புகிறார்.

லு பென் ஒரு பிற்போக்கு ஜனரஞ்சகவாதி, இனவாதத்துக்கும் இனவெறிக்கும் அழைப்பு விடுப்பவர், அவரது கட்சி நாஜி ஆக்கிரமிப்புடனான விச்சியின் கூட்டுழைப்பின் வழி வந்தது என்பதை நாம் அறிவோம். அவரது கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு உயிராபத்தானதாகும்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தினதும், சர்வதேச முதலாளித்துவத்தினதும் போர், சிக்கனம் மற்றும் சர்வாதிகாரத்திற்கான சர்வதேச உந்துதலும் தொழிலாளர்களுக்கு உயிராபத்தானதாகும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே முதலாளித்துவத்தின் பேரழிவை நோக்கிய உந்துதலை தடுக்க முடியும்.

சோ.ச.க.யின் மூலோபாயமானது தேசிய அரங்கிலான பாராளுமன்ற கணக்கீடுகளை அடிப்படையாக கொண்டது அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச இயக்கவியலை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அமெரிக்காவில், மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்பிற்கு எதிராகவும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து கால் நூற்றாண்டு கால ஏகாதிபத்திய போர்களுக்கும் எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். 2015ல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிரிசாவின் சிக்கனக் கொள்கைகளுக்கு கிரேக்க தொழிலாளர்கள் பாரியளவில் ''வேண்டாம்'' என வாக்களித்தது போல், இதுவும் சர்வதேச அளவில் தொழிலாள வெகுஜனங்கள் போராட்டங்களுக்குள் நுழைவதற்கான ஒரு அடையாளமாகும்.

பிரான்சில், சோசலிஸ்ட் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் வேட்பாளர்கள் அகற்றப்பட்டமை, மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திலிருந்து பிரான்சை ஆண்டு வந்த இருகட்சி ஆட்சி முறையின் பொறிவைக் குறிக்கிறது. லு பென் மற்றும் மக்ரோன் போட்டியிடும் இறுதிச் சுற்றினால் ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலையின் தோற்றுவாயான இந்த அவப்பேறு பெற்ற அரசியல் அமைப்புமுறை, உழைக்கும் மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை.

அடுத்த ஜனாதிபதிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு ஈவிரக்கமற்ற மோதல்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, வெளிப்படையாக திவாலாகியுள்ள சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான ஒரு புதிய புரட்சிகர தலைமை அவசியம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும், தொழிலாள வர்க்கத்தின் ட்ரொட்ஸ்கிச தலைமைத்துவம் ஆகும். ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மற்றும் பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து பிளவுபட்ட குட்டி முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக, அனைத்துலகக் குழுவானது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துக்காக பல தசாப்தங்களாக போராடி வந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் இருந்தே சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகள், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), மற்றும் ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் இயக்கத்தையும் எதிர்க்கின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பொருளாதாரத்தின் மீது பொருளாதார மற்றும் நிதியியல் பிரபுத்துவம் கொண்டுள்ள கட்டுப்பாட்டை அகற்றும், ஒரு போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தை கட்டியெழுப்புவதாக கோலிச வலதுசாரியுடன் சேர்ந்து உறுதியளித்தது. 1968க்குப் பின்னர், அது அதன் கௌரவத்தை சோசலிஸ்ட் கட்சிக்கு கொண்டுவந்து, 1971ல் சோசலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் அதனுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தில் கையெழுத்திட்டது. உச்சகட்டமாக, அது 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கும் முதலாளித்துவ மீட்சிக்கும் ஆதரவு கொடுத்தது. அதிகாரத்தில் இருந்த ஒவ்வொரு முறையும் வங்கியின் இரும்புச் சர்வாதிகாரத்தை அமுல்படுத்திய ஒரு முதலாளித்துவக் கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் தோல்வியானது பிரான்ஸ் ஸ்ராலினிசத்தினதும் தோல்வியாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட முன்னோடிகளைக் கொண்ட NPA போன்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகளை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. 1971ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அப்போதைய பிரெஞ்சு பிரிவான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), அனைத்துலகக் குழுவிடம் இருந்து பிளவுபட்டதோடு சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரு இடதுகளின் ஐக்கியம் என்ற கூட்டை உருவாக்குவதன் பேரில் புரட்சிகர மார்க்சிசத்தின் அடிப்படைகளை கைவிட்டது. பல தசாப்தங்களாக, இந்த கட்சிகள் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக சோசலிஸ்ட் கட்சியை கட்டியெழுப்பி, பாதுகாக்க செயற்பட்டன.

இந்த அடிப்படையிலேயே, அடிபணியாத பிரான்ஸ் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் OCI உறுப்பினரும், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அமைச்சருமான ஜோன் லூக் மெலோன்சோனின் கொள்கைகள் மீதான தனது ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது. அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு வந்த அழுத்தத்தின் கீழ் இருக்கும் அதேவேளை, இரு வேட்பாளர்களுக்கும் எதிரான வெகுஜன கோபத்தையிட்டு அஞ்சி, இரண்டாம் சுற்றில் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் முன்னெடுக்க அவர் மறுத்துவிட்டார். அவர் தனது அரசியல் பொறுப்புகளை முற்றிலும் துறக்கிறார்.

"நான் வாக்களிப்பேன், ஆனால் நான் யாருக்கு வாக்களிப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நான் என்ன செய்வேன் என்று ஊகிக்க நீங்கள் ஒரு பெரிய மேதையாக இருக்க வேண்டியதில்லை. அதனால்தான் நான் அதை சொல்லவில்லை? எனவே நீங்கள் ஐக்கியமாக இருக்க முடியும்," என்று அவர் அறிவித்தார்.

பின்னர், ஜூன் மாத சட்டமன்ற தேர்தலில் அடிபணியா பிரான்ஸ் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்ப்பதாக மெலன்சோன் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் புறக்கணிப்பு பிரச்சாரமானது, மெலோன்சோன் முன்மொழியும் பயனற்ற பாராளுமன்ற சூழ்ச்சிகளுக்கு ஒரு புரட்சிகர மாற்றீடு ஆகும். பிரெஞ்சு "இடது" கடந்து செல்லும் வங்குரோத்து என்னவெனில், முதலாளித்துவத்தின் வரலாற்று மற்றும் சர்வதேச நெருக்கடியின் விளைவாகும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது. தயாராகி வரும் சக்திவாய்ந்த வர்க்கப் போராட்டங்கள், பிரான்சின் எல்லைகளுக்குள் தீர்க்கப்படமாட்டாது.

இரண்டாவது சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறும் அடுத்த ஜனாதிபதிக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுமாறும் ஒரு அழைப்பை விடுப்பதன் மூலம் போருக்கு எதிராகவும் ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சிக்காகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தில் பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இணைந்துகொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி கடந்த ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தனது முதல் பொது கூட்டத்தை பாரிசில் ஏற்பாடு செய்து வருகிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தப் போராட்டத்திற்கான முன்னணி பாதையை பற்றி கலந்துரையாடுமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும், கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியினதும் அனைத்துலகக் குழுவினதும் கொள்கைகளை படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.