ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017
The class issues in the British election

2017மே தின உரை: பிரிட்டிஷ் தேர்தலில் உள்ள வர்க்க பிரச்சினைகள்

By Chris Marsden
5 May 2017

இந்த உரை ஏப்ரல் 30, 2017 அன்று நடத்தப்பட்ட சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கியதாகும்.

ஒவ்வொரு பொது தேர்தலிலும் ஒவ்வொரு பொய் மூட்டைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

இது ஏனென்றால் ஆளும் வர்க்கத்திற்காக பேசும் கட்சிகள் தங்களை தேசிய நலன்களின் பாதுகாவலர்களாக, இன்னும் கூறப்போனால் உழைக்கும் மக்களின் நண்பர்களாக காட்டிக் கொள்ள வேண்டியிருப்பதனால் ஆகும்.

இதே தான், பழமைவாத பிரதம மந்திரி தெரேசா மே ஜூன் 8 திடீர் பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததற்குப் பின்னர் இருந்து நடந்து வரும் பிரச்சாரத்தின் இயல்பாகவும் உள்ளது.

2017 மே தின உரை கிறிஸ் மார்ஸ்டன்

பிரிட்டன் வெளியேற்றத்திற்குப் பின்னரும் "நெருக்கமாக வந்துள்ளது" என்றும், "பொருளாதார வளர்ச்சி எல்லா எதிர்பார்ப்புகளையும் விட அதிகமாக இருப்பதாகவும்" கூறிக் கொள்வதற்கு இடையிலும், பிரிட்டனுக்கு "பலமான தலைமை" அவசியப்படுவதாக அப்பெண்மணி வலியுறுத்தினார். 

நாடாளுமன்றத்தில் "சதிகாரர்களை” கலைத்து வென்றெடுத்த பெரும் பெரும்பான்மையினருடன் சேர்ந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான வரையறைகள் குறித்து அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேரம்பேச விரும்புவதாக மே தெரிவித்தார். ஆனால் சிக்கன திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கான இன்னும் பரந்த திட்டநிரலுக்கு அழுத்தமளிக்க, நடைமுறையளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்தையே மே விரும்புகிறார் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வலியுறுத்தல் சரியானதே என்பதை சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

பிரிட்டன் வெளியேறுவதென்பது பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் விரோதங்களின் விளைவாகும். இது, அமெரிக்காவுடனான உறவுகளைச் சாதகமாக்கிக் கொள்வதிலும், சீனா மற்றும் இந்தியாவின் மிகவும் துடிப்பான சந்தைகளுள் நுழையவும் நகர ஊகவணிகர்களுக்குச் சுதந்திரமளிப்பதற்காக, இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தை முறித்துக் கொள்ள வேண்டுமென டோரிக்களிடமிருந்து வந்த விடாப்பிடியான முறையீடுகளின் விளைவாகும்.

சக்தி வாய்ந்ததாக தோன்றுவதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் இன்றியமையா அம்சங்கள் எந்தளவிற்கு அழுகி போயிருக்கின்றன என்பதையே மே நிரூபித்துள்ளார்.

“கட்டுப்பாட்டை திரும்ப எடுக்கும்" பெயரில், அவர் அரசாங்கம், தேசிய நலன்களை மூர்க்கமாக வலியுறுத்துவதற்கு பொறுப்பேற்று அதிகாரத்திற்கு வந்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்துடனான ஒரு கூட்டணியை இன்னும் அதிகமாக சார்ந்திருக்குமாறு செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு தெளிவுபடுத்த விரும்புவதாக அவரின் முகத்தில் அடித்தாற்போல், பிரிட்டன் உடனான ஒரு வர்த்தக உடன்படிக்கையை விட ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கையே மிகவும் முக்கியம் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதேநேரத்தில், எதிர்த்தரப்பு "நப்பாசைகள்", ஒரு “நேர விரயம்" என்று குறிப்பிட்டு இங்கிலாந்தும் வேறெந்த மூன்றாவது நாட்டையும் போலவே கையாளப்படும் என்று வலியுறுத்தி, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தலைமை கொடுத்தார்.

இங்கிலாந்தின் செய்திகளில் வரும் அப்பட்டமான இந்த பிரச்சாரத்தால் கண்கட்டப்பட்டு இல்லாத எவரொருவரும் இந்தளவிலானதை எதிர்நோக்கி இருந்திருக்கலாம். ஜூன் 8 தேர்தல், எந்தளவிற்கு நடைமுறையளவில் ஒரு "போருக்கான தேர்தலாக" மாற்றப்பட்டிருக்கிறதோ அது தான் பலரை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் இப்போதெல்லாம் பிரிட்டன் வெளியேறுவதை நாசப்படுத்தும் ஒரு நாசக்காரராக கண்டிக்கப்படுவதில்லை, மாறாக தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக கண்டிக்கப்படுகிறார்!

ரஷ்ய எல்லைகளில் நேட்டோ துருப்புகளை ஆயத்தப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, கடந்த இரண்டு வாரங்களாக பாதுகாப்பு செயலர் மைக்கல் ஃபலோன் அவரை ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கைப்பாவை என்றழைத்தார்.

முப்படைக்கு புத்துயிரூட்டுவதையும் மற்றும் ஓர் அணுஆயுத தாக்குதல் சூளுரையையும் கோர்பின் பகிரங்கமாக ஆமோதிக்க மறுத்த பின்னர், இந்த வாரம் ஃபலோன் முன்னொருபோதும் இல்லாத அறிவிப்பாக, பிரிட்டன் அணு ஆயுதங்களை "முதலில்" பயன்படுத்துமென அறிவித்தார்.

அமெரிக்கா கேட்டுக் கொண்டால், “மத்திய பகுதிகளில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து கப்பல்படை ஏவுக்கணைகளை" பயன்படுத்துவது உள்ளடங்கலாக சிரியா மீதான போருக்கு பிரிட்டன் "சரி" என்றுரைக்குமென வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், அனேகமாக அதற்காக நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படாது, மேலும் போருக்குள் இறங்குவதை "பிரதம மந்திரியே முடிவெடுப்பதாக" இருக்கும் என்றார்.

இப்போது அதிகரித்து வரும் அச்சுறுத்தலின் மையவிசையை அடிக்கோடிடும் வகையில், இந்த வாரம் ராயல் கடற்படையின் புதிய மற்றும் பிரமாண்டமான 7,400 டன் எடை கொண்ட 1.5 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் HMS Audocious பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இது 200 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான முப்படை/கப்பல்படை ஏவுகணை மீளமைப்பு திட்டத்தின் பாகமாக செயல்படுத்தப்பட உள்ள இதுபோன்ற ஏழு நீர்மூழ்கிக்கப்பல்களில் மூன்றாவதாகும்.  

இவை எல்லாவற்றிற்கும் ரஷ்யாவின் விடையிறுப்பு சிலிர்ப்பூட்டுகிறது. ஃபலோனின் முதலில் தாக்கும் அச்சுறுத்தல் குறித்து இராணுவ வல்லுனர் கொன்ஸ்ரன்ரீன் ஷிவ்நோவ் கூறுகையில், “இவ்வாறென்றால், உலகம் ஓர் அணுஆயுத போர் விளிம்பில் நிற்கிறது என்பதே அர்த்தம்,” என்றார். 

ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ குழுவின் துணை தலைவர் ஃபிரண்ட்ஸ் கிளின்ஷேவிட்ச் கூறுகையில், “பரந்த பிராந்தியங்களைக் கொண்டில்லாத ஐக்கிய இராஜ்ஜியம் உள்ளபடியே ஒரு எதிர்தாக்குதலின் போது உலகிலேயே இல்லாமல் துடைத்தழிக்கப்பட்டுவிடும்,” என்றார்.

இங்கிலாந்தை விட ரஷ்யா 33 மடங்கு அதிகமாக குண்டுகளை (warheads) கொண்டுள்ளது —4,500 குண்டுகள் பயன்பாட்டிற்கென வைக்கப்பட்டுள்ளன அல்லது கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன, இவற்றுடன் சேர்த்து மொத்தம் 7,000 குண்டுகள் உள்ளன. இவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, 40 மெகா டன் Satan 2 ரக ஏவுகணையாகும், இது ஒரு டஜன் குண்டுகளை ஏந்திச் சென்று, ஒரே தாக்குதலில் இங்கிலாந்து அளவிலான பகுதியை மட்டமாக்கிவிடும். இந்த நிகழ்வில் 65 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்.  

அமெரிக்கா, அதன் பங்கிற்கு, 4,000 குண்டுகளை பயன்பாட்டிற்கென வைத்துள்ளது அல்லது கிடங்கில் வைத்துள்ளது, இத்துடன் சேர்த்து மொத்தம் 6,800 குண்டுகளைக் கொண்டுள்ளது.

இதன் அர்த்தம் என்னவென்றால், குழம்பிய ஆளும் உயரடுக்கு வெற்றிக் கொள்ளத்தக்க ஒரு சாத்தியமான அணுஆயுத போரைப்பற்றி கருத்தில் கொள்ள தொடங்குவதற்கு முன்னதாக, பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய அழிப்பு (Mutually Assured Destruction) என்று ஒருசமயம் விவரிக்கப்பட்ட ஒன்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

வணிகப் போர் மற்றும் இராணுவப் போருடன் சேர்ந்து, இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு தொழிலாளர்களை விலை கொடுக்க செய்வதற்காக சம்பளங்கள், வேலையிட நிலைமைகள் மீதான தாக்குதலுக்கும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதற்குமான அவசியம் உண்டாகிறது.

மே இன் பிரிட்டன் வெளியேற்றத்திற்குப் பிந்தைய "வளமான பிரதேசம்", மில்லியன் கணக்கானவர்களைப் பொறுத்த வரையில் மிகப்பெரும் சமூக கவலையாக உள்ளது. அதில் மிகப் பணக்கார ஒரு சதவீதத்தினரின்—அதாவது 634,000 பேரின்—செல்வவளம், மிக வறிய 20 சதவீதத்தினரின்—அதாவது 13 மில்லியன் மக்களின் செல்வவளத்தை விட 20 மடங்கிற்கும் அதிகமாக இருக்கும்.  

மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இப்போது வறுமை கோட்டிற்கும் கீழே இருக்கும் வகையில், 2007 க்குப் பின்னர் இருந்து நிஜமான வரையறைகளில் சம்பளங்கள், ஒரு வரலாற்று வீழ்ச்சியாக, 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. இது மட்டுமின்றி தனிநபர் கடன் கடலளவிற்கு அதிகரித்துள்ளது, அடமானக் கடன்கள் நீங்கலாக ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இப்போது சராசரியாக 13,000 பவுண்டு கடனும் மற்றும் எல்லா காலத்தையும் விட அதிகமாக உத்தரவாதமில்லா மொத்த கடன் (total unsecured debt) 349 பில்லியன் பவுண்டாகவும் உள்ளன.

இதுபோன்ற சூழ்நிலைகளின் கீழ்—முக்கியமாக தசாப்தங்களிலேயே முதல் முறையாக வேலைநிறுத்த நடவடிக்கைகள் அதிகரித்திருக்கும் நிலைமைகளின் கீழ்—200 ஆசன பெரும்பான்மை பெறுவதற்கான மே இன் திட்டம் அவர் முகத்திற்கு முன்னாலேயே நொருங்கி போகக்கூடும்.

டோரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கோர்பின் தலைமையிலான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காக சோசலிச சமத்துவக் கட்சி அனுதாபப்படுகிறது. ஆனால் வரலாற்றில் இந்த அபாயகரமான புள்ளியில் நமது பொறுப்பு, இப்போதும் உண்மையை எடுத்துரைப்பதாகும்.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தை கோர்பின், குறைந்தபட்சம் வார்த்தையளவிலாவது, எதிர்த்ததாலேயே அவர் ஆதரவை வென்றுள்ளார். ஆனால் வெற்றுத்தனமான இடது மற்றும் முற்போக்கு கருத்துக்களைக் கொண்டுள்ள ஒருவரிடமே அத்தகைய கருத்துக்களுக்கான பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம், தொழிற்கட்சியின் இயல்பை உங்களால் மாற்றிவிட முடியாது என்பதையே கோர்பினின் சொந்த நடவடிக்கைகள் நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

கோர்பின் வெட்டுக்களை எதிர்க்கிறார், ஆனால் தொழிற்கட்சி கவுன்சில்கள் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன. அவர் முப்படையை எதிர்க்கிறார், ஆனால் தொழிற்கட்சி அதை ஆதரிக்கிறது. அணுசக்தி பயன்பாட்டை தடுப்பது குறித்து அவர் கூற மறுக்கிறார், அவரது நிழலமைச்சரவையின் இராணுவச் செயலாளர் Nia Griffiths தொழிற்கட்சி "அதை பயன்படுத்த தயாராக இருப்பதாக" வலியுறுத்துகிறார்.

அதே நேர்காணலில் Griffiths வலியுறுத்துகையில், “இதுவொரு ஜனாதிபதி தேர்தல் கிடையாது, இது யார் அரசாங்கத்தில் இருப்பது என்பதைக் குறித்ததாகும்,” என்றார்.

இதில், அப்பெண்மணி சரியாகவே உள்ளார்.

தொழிற் கட்சியின் ஒட்டுமொத்த வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தின் தனிச்சிறப்பியல்புகளை பொறுத்த வரையில், தொழிற் கட்சியானது டோரிக்களைப் போலவே அதேயளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான ஒரு கட்சியாகும்.

ஜூன் 8 தேர்தலில் கோர்பின் வென்றாலுமே கூட, கட்சி எந்திரம் அவர் மீது நிறுத்தியுள்ள கோரிக்கைகளுக்கு அவர் அடிபணிவார் அல்லது பதவியிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்படுவார் என்பதையே அதன் அரசியல் முன்வரலாறு ஊர்ஜிதப்படுத்துகிறது.

மே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்விற்கான போராட்டத்தை முகம் கொடுப்பார்கள். அவர்கள் அரசாங்கத்தை மட்டுமல்ல, மாறாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களையும் எதிர்க்க வேண்டியிருக்கும். தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு விசுவாசமாக உள்ள கோர்பினால் ஒருபோதும் அதுபோன்றவொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.

இது அரைகுறை நடவடிக்கைகள் மற்றும் மழுப்பல்களுக்குரிய நேரமல்ல, தீர்க்கமான அரசியல் முடிவெடுப்பதற்குரிய தருணமாகும்.

தொழிலாளர்கள் ஓர் அறிவிக்கப்படாத வர்க்க போரின் மத்தியில் உள்ளனர். சிரியா, வட கொரியாவுக்கு எதிராக மட்டுமல்ல ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் கூட, தொழிலாளர்கள் அவர்கள் கண்முன்னே ஒரு நிஜமான போருக்குள் இழுக்கப்பட்டு வரும் அதேவேளையில், அவர்களைப் பாதுகாக்கும் ஒரு நபரின் தார்மீக மனசாட்சியைச் சார்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலைமையைத் தொடர அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் சொந்த நிஜமான சர்வதேச சோசலிச கட்சியை, அதாவது சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைக்க பொறுப்பேற்க வேண்டும். இதுவே இந்த மே தினத்தில் நான் உங்களுக்கு வழங்கும் சேதியாகும்.