ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government prepared coup if Le Pen won presidential election

ஜனாதிபதி தேர்தலில் லு பென் வென்றிருந்தால் ஆட்சிகவிழ்ப்பு சதி நடத்த பிரெஞ்சு அரசாங்கம் தயாரிப்பு செய்திருந்தது

By Alex Lantier
19 May 2017

நேற்று L’Obs சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஓர் அசாதாரணமான செய்தியின்படி, மே 7 இல் நடந்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் (FN) மரீன் லு பென் வென்றிருந்தால், பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்க உயர்மட்ட அங்கத்தவர்கள் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தயாரிப்பு செய்திருந்தனர்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நோக்கம் லு பென் பதவியேற்பதைத் தடுப்பதல்ல. மாறாக, லு பென் வெற்றிக்கு எதிரான இடதுசாரி போராட்டங்களை நசுக்குவதற்காக, இராணுவ சட்டத்தைத் திணிப்பதற்காக, மற்றும் லு பென்னை சோசலிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்துடன் பலவந்தமான கூட்டணியுடன் பதவியில் அமர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.

“இரண்டாம் சுற்றுக்குப் பின்னர் மரீன் லு பென் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாரும் ஊகிக்கத் துணிந்திருக்க மாட்டார்கள். ஒரு சமூக வெடிப்பை எதிர்பார்த்திருக்கலாம்,” என்று L’Obs எழுதியது. அது விவரித்தது, “தேசிய முன்னணி வெற்றிக்குப் பின்னர் நாடு குழப்பங்களின் விளிம்பில், அதாவது அதிர்ச்சி நிலை, குடியரசுக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள், மேலும் அனைத்திற்கும் மேலாக குறிப்பாக அதிதீவிர இடதிடம் இருந்து வரும் அதீத வன்முறையுடன் இருந்திருக்குமென இந்த மாற்று திட்டத்தைக் (Plan B) கருதிய மூலோபாயவாதிகள் கருதினர்.”

“அத்திட்டம் ஒருபோதும் எழுத்தில் வரையறுக்கப்படவில்லை என்றாலும், நடைமுறையில் அனைத்தும் தயாராக இருந்தது,” என்று L’Obs எழுதியது. “விரல்விட்டு எண்ணக்கூடிய அரசாங்க அங்கத்தவர்களாலும், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளாலும் அதை இப்போதும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு கட்டமாக விவரிக்க முடியும் என்றளவிற்கு அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டிருந்தன. … விபரங்களின் உறுதித்தன்மையை பொறுத்த வரையில், L’Obs அதன் செய்தியை பதவியிறங்க உள்ள அரசாங்கத்திலும் மற்றும் அரசு அமைப்புகளிலும் உள்ள மூன்று வெவ்வேறு ஆதாரங்களிடம் ஊர்ஜிதப்படுத்தியது.”

பிரான்ஸைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு பாரிய பொலிஸ் நடவடிக்கைகளை தொடங்குவதையும் மற்றும் பிரதம மந்திரி பேர்னார்ட் கசெனேவ் பதவியிலிருந்து விலக மறுத்தால் சோசலிஸ்ட் கட்சியே அதிகாரத்தைப் பறிப்பதற்கான நடைமுறைகளையும் அத்திட்டம் உள்ளடக்கி இருந்ததாக அச்செய்தி குறிப்பிட்டது. அத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரி ஒருவர் L’Obs க்கு கூறுகையில், “நாடு முழுவதுமாக செயல்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும். அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஒன்று மட்டுமே அரசாங்கத்தின் ஒரே முன்னுரிமையாக இருந்திருக்கும்,” என்றார்.

தெளிவாக கூறுவதானால், இது பிரான்சில் ஒரு பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தைத் திணிப்பதைக் குறிக்கிறது. நவம்பர் 13, 2015 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் முதலில் அமுலாக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் அவசரகால நெருக்கடி நிலை சட்ட விதிமுறைகளின் கீழ் ஏற்கனவே அடிப்படை ஜனநாயக உரிமைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதன்கீழ் எதேச்சதிகாரமான முறையில் தனிநபர்களைக் காவலில் வைக்க, போராட்டங்களுக்குத் தடைவிதிக்க மற்றும் தனிநபர்களை வீட்டுக்காவலில் வைக்க பொலிஸிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவ சட்டத்தை திணிக்கவும் மற்றும் அரசின் வழமையான செயல்பாடுகளை நிரந்தரமாக இடைநிறுத்தம் செய்யவும் இத்தகைய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதை இத்திட்டம் தெளிவாக உள்ளடக்கி உள்ளது.

பிரான்சின் பொதுமக்கள் பாதுகாப்பு இலாகா இயக்குநரகங்கள் (Les Directions départementales de la sécurité publique - DDSP) அனைத்திலும் உள்ள பொலிஸ் அதிகாரிகள் விதிவிலக்கு இல்லாமல், ஒரு சாத்தியமான தேர்தலுக்குப் பிந்தைய நெருக்கடிக்கு தயாரிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். லு பென் வெற்றிக்குப் பிந்தைய சூழல் குறித்து பொலிஸ் "அச்சமடைந்திருந்தது" என்பதை ஒவ்வொரு விவாதங்களும் எடுத்துக்காட்டியது, ஏற்கனவே Le Parisien இல் வெளியான ஒரு உள்நாட்டு உளவுத்துறை குறிப்பை மேற்கோளிட்டு L’Obs எழுதுகிறது: “மக்கள் மத்தியில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேரூன்றியுள்ள அதிதீவிர இடது இயக்கங்கள் ஐயத்திற்கிடமின்றி போராட்டங்களை ஒழுங்கமைக்க முயலும், அவற்றில் சில ஆழ்ந்த தொந்தரவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.”

L’Obs குறிப்பிடுகையில், இத்தகைய விவாதங்கள் கட்டவிழ்ந்து வந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகளும் மற்றும் பொலிஸ் சங்கங்களும் உணர்விழக்க செய்யும் கையெறி குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்கள் உட்பட, போராட்டக்காரர்களுக்கு எதிராக சாத்தியமானளவிற்கு அபாயகரமான ஆயுதங்களை பிரயோகிப்பதற்கான முழு சுதந்திரத்தை வெளிப்படையாக கோரியதாக குறிப்பிடுகிறது. “ஏதோவொரு ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடாதென்ற கட்டளைகள் சகித்துக்கொள்ள முடியாதவையாக ஆகிவிட்டது,” என்று பொலிஸ் சங்க நிர்வாகி ஒருவர் எழுதினார்.

அரசு எந்திரத்திற்குள்ளேயே கூட, கசெனேவ் பதவி இறங்க மறுப்பதானது "அரசியல் சூழலை உறைய" செய்யவும் மற்றும் பிரெஞ்சு அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக ஓர் அரசியலமைப்பு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது என்று L’Obs இன் ஆதாரங்களில் ஒருவர் தெரிவித்தார்.

“முதலில், அரசாங்க தலைவர் அவர் இராஜினாமாவை சமர்பிக்காமல் இருக்க திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையில் ஒரு பிரதம மந்திரி அவர் பதவி விலகாமல் விடாபிடியாக இருப்பது குடியரசு மரபிற்கே முரண்பட்டதாகும். மேலும் அரசியலமைப்பு மூலமாகவும் அவரை பதவியை விட்டு பலவந்தமாக நீக்க முடியாது. அடுத்த படியாக, அசாதாரண அமர்வாக நாடாளுமன்றம் ஒன்றுகூட்டப்படும். மே 11 என்று தேதியும் கூட முடிவு செய்யப்பட்டிருந்தது. தேர்தல்களை தொடர்ந்து வன்முறையால் தூண்டிவிடப்பட்ட தேசிய நெருக்கடி, திட்டநிரலில் வைக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு நம்பிக்கை வாக்கு வழங்குமாறு பிரதிநிதிகள் கோரப்பட இருந்தார்கள்,” என்று L’Obs எழுதுகிறது.

சுருக்கமாக கூறுவதானால், பிரெஞ்சு மக்களின் முதுகுக்குப் பின்னால் பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளது அரவணைப்போடு நடக்கும் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு, போலியான ஒரு சட்ட ஒப்புதல் முத்திரை வழங்குமாறு தேசிய நாடாளுமன்றத்திற்கு கூறப்பட்டிருக்கும். இந்த இடைக்கால அரசாங்கம் குறைந்தபட்சம் ஜூன் 11 மற்றும் 18 சட்டமன்ற தேர்தல்கள் வரையில், அதாவது புதிய நிர்வாகிகள் அதை நடத்த அனுமதிப்பார்கள் என்ற அனுமானத்துடன், அதுவரையில் நீடித்து இருந்திருக்கும்.

L’Obs விவரிப்பது என்னவென்றால் அல்ஜீரிய போருக்குப் பின்னர் பிரான்சில் வழமையான ஜனநாயக நடைமுறைகள் பாதுகாப்பு படைகளால் மிகவும் ஆழமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும். அப்போது மே 1958 இல் அல்ஜீரிய காலனித்துவ ஆதரவு வட்டத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் அல்ஜீரியர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் பாரீசில் இருந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க ஆபரேஷன் மறுமலர்ச்சி (Operation Resurrection) என்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடங்கினர். தளபதி சார்லஸ் டு கோல் உள்நுழைந்து, அவசரகால அதிகாரங்களைக் கைப்பற்றி, பிரான்சின் இப்போதைய ஐந்தாம் குடியரசுக்கான அடித்தளங்களை அமைப்பதற்காக பிரெஞ்சு அரசியமைப்பை அவசர அவசரமாக மறுதிருத்தம் செய்ய அவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.

நேற்று மாலை வெளியான L’Obs இன் இந்த செய்தி மீது, அதுவும் இந்த சஞ்சிகை பெரிதும் மதிக்கப்படும் ஒரு பிரசுரம் என்கின்ற போதும், ஊடகங்கள் பெரிதும் மௌனமாக இருந்தன, மேலும் இந்த செய்தி குறித்து சந்தேகப்படுவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. எவ்வாறிருப்பினும் இந்த செய்தி மிகவும் நீண்ட அரசியல் தாக்கங்களைக் கொண்டிருப்பதுடன், வரவிருக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நிர்வாகம் குறித்து உடனடியாக ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது.

லு பென் தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர, அரசியலமைப்பு ஆட்சியை இடைநிறுத்தம் செய்து இராணுவ சட்டத்தைத் திணிப்பதற்கு சமாந்தரமாக அங்கே வேறு ஏதேனும் மாற்றுவழிவகைகளை பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள் திட்டமிட்டிருந்ததா?

ஆர்ப்பாட்டக்காரர்களினால் நடந்தாலும் சரி அல்லது பொலிஸ் ஆத்திரமூட்டல்களால் நடந்தாலும் சரி, வன்முறை ஏற்படக்கூடிய சகல இடதுசாரி போராட்டங்களையும் உள்துறை அமைச்சகம் இப்போது உயிர்வாழ்விற்கான அச்சுறுத்தல்களாக கருதினால், போர் அல்லது சமூக சிக்கன திட்டங்களுக்கான மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிராக வெடிக்கவிருக்கும் போராட்டங்களை ஒடுக்கவும் இதேபோன்ற திட்டங்கள் வகுக்கப்படுமா? அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமைகள் மற்றும் போராடுவதற்கான உரிமைகளுக்கு எதிராக பொலிஸ், அரசியலமைப்பு ஆட்சியை இடைநிறுத்தும் மற்றும் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சிகளைக் கொண்டு எதிர்வினையாற்றுமா?

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் இருந்து பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் நடத்தப்பட்டுள்ள ஒரு கால் நூற்றாண்டு தொடர்ச்சியான சிக்கன திட்டங்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதார சமத்துவமின்மை மற்றும் சமூக கோபம் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களை எட்டியுள்ள நிலையில், பழைய அரசியல் மற்றும் சமூக உறவுகள் உடைந்து வருகின்றன. ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பின்றி பிரான்ஸ் வரலாற்றில் நீண்ட காலமாக அவசரகால நெருக்கடி நிலை நடைமுறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு இடையே, மக்கள் மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கியமை, பிரெஞ்சு ஜனநாயகம் பொறிவின் முன்னேறிய கட்டத்தில் உள்ளது என்பதற்கு ஓர் அறிகுறியாகும்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அந்த சஞ்சிகை தொடர்பு கொண்ட சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், அத்துடன் L’Obs அதுவுமே கூட, இந்த செய்தியின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்ட முயல்வது மெத்தனமானபோக்கும் பிழையானதுமாகும். திட்டமிட்ட நடவடிக்கை அரசியலமைப்பு ரீதியிலானது மற்றும் அது விரைவிலேயே ஐந்தாம் குடியரசின் வழமையான செயல்பாடுகளை மீட்டமைக்கும் என்ற அவர்களின் உத்தரவாதங்கள் அவர்கள் அச்சிட்டுள்ள காகிதத்திற்குரிய மதிப்பைக் கூட பெறாது.

"மரீன் லு பென் ஜனாதிபதி தேர்தலில் வென்றிருந்தால், மத்தினியோனில் [பிரதம மந்திரி வசிக்கும் மாளிகை] இருந்து வெளியேற" அவர் "விருப்பம் கொண்டிருக்கவில்லை" என்று வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி பேர்னார்ட் கசெனேவ் கூறிய நிலையில், சோசலிஸ்ட் கட்சியின் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த L’Obs அறிக்கைக்கு அவராலேயே நம்பகத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து L’Obs தொடர்பு கொண்டபோது, அவர்களுக்கு "அதுபோன்றவொரு திட்டம் குறித்து" அவர் "ஒருபோதும் குறிப்பிட்டதில்லை" என்று அவரது பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

L’Obs ஐ பொறுத்த வரையில், ஆட்சிக்கவிழ்ப்பு திட்டம் என்பது அரசியலமைப்புரீதியிலானது என்று அது வலியுறுத்தியது. ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் கிடைக்கும் உத்தரவாதங்களை நற்சான்றுகளாக ஏற்றுக் கொண்டு, அந்த சஞ்சிகை நிறைவு செய்கையில், அது "குடியரசு வரலாறில் முன்னொருபோதும் இல்லாத ஒரு சிறிய இடைக்காலத்திற்கு" இட்டுச் செல்லும் என்று முடிக்கிறது.

உண்மையில், பொலிஸ்-உளவுத்துறை எந்திரம் அதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றால், அவை பகிரங்கமாக அரசியலமைப்பு ஒழுங்கமைப்பிலிருந்து உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதோடு, இது ஜனநாயக ஆட்சி வடிவத்திலிருந்து ஆளும் வர்க்கம் இன்னும் அதிகளவில் விரிவாக உடைத்துக் கொள்வதற்கே வழி வகுக்கும். அது இன்னமும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆழமாக பொறுப்புகளைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வன்முறையான மோதலுக்கு வெள்ளோட்டமாக அமைந்துவிடக்கூடும்.