ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A political appraisal of the ICFI’s 2017 International May Day Online Rally

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டதைக் குறித்த ஒரு அரசியல் மதிப்பீடு

Joseph Kishore
2 May 2017

ஏப்ரல் 30, ஞாயிறன்று நடத்தப்பட்ட 2017 மே தின இணையவழி கூட்டம், சோசலிச புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய அபிவிருத்தியை குறிக்கிறது.

2014 மே தினம் முதலாக அனைத்துலகக் குழு நடத்தியுள்ள இந்த நான்காவது இணையவழி மே தினக் கூட்டத்தில் 50 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இன்னும் சொல்லப் போனால், இந்நிகழ்வு வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு நேரங்களில் ஒளிப்பரப்பானதால், பல பேர் கூட்டம் முடிந்து இச்சொற்பொழிவுகள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட பின்னரும் அவற்றை கேட்டிருந்தனர். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7,500 பேர் இந்த மே தினக் கூட்ட சொற்பொழிவுகளை பேஸ்புக் அல்லது யூ-டியூப் மூலமாக கேட்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட மிக முக்கியமானது இக்கூட்டத்தின் அரசியல் உள்ளடக்கமாகும், இதில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 சொற்பொழிவாளர்கள் நான்கு மொழிகளில் உரையாற்றினர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முக்கிய வரலாற்று மற்றும் சமகாலத்திய அரசியல் பிரச்சினைகள் மீது ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கை வழங்கினர். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமே மேலோங்கிய பிரச்சினையாக இருந்தது. இந்த உள்ளடக்கத்திற்குள் உரையாற்றிய அவர்கள், உலகளாவிய பொருளாதார நெருக்கடி குறித்தும், தெற்காசியாவின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, பிரிட்டன் வெளியேற்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முறிவு, சர்வதேச அகதிகள் நெருக்கடி, அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக நெருக்கடி, இலத்தீன் அமெரிக்காவில் நிலவும் வெடிப்பார்ந்த நிலைமைகளை பகுப்பாய்வு செய்தனர்.

அனைத்துலகக் குழுவின் ஒரு பகிரங்கக் கூட்டத்தில், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸ் பிரிவான பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Partie de l'égalité socialist) சார்பாக 1970 க்குப் பின்னர் முதல்முறையாக உரை நிகழ்த்தப்பட்டது. பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) தலைவர் அலெக்ஸ் லான்ரியேர், தேசிய முன்னணியின் நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கும் முன்னாள் வங்கியாளரும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வலதுசாரி முன்னாள் அங்கத்தவருமான இமானுவல் மாக்ரோனுக்கும் இடையிலான ஜனாதிபதி பதவி தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான அக்கட்சியின் அழைப்பைக் குறித்து விவரித்தார்.

பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) செய்தி தொடர்பாளர் Sven Wurm இன் ஓர் உரையையும் கூட்டம் செவியுற்றது. பாசிசத்திற்கு புத்துயிரூட்டுவதற்காக ஜேர்மன் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி தலைமையிலான முயற்சிகளுக்கு எதிராக IYSSE மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) போராடி உள்ளது. ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே இந்த வரலாற்று திரித்தல்வாதத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி உள்ளனர். அவர்களின் பிரச்சாரம் ஜேர்மனியில் ஒரு மத்திய அரசியல் பிரச்சினையாக அபிவிருத்தி அடைந்துள்ளதுடன், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் IYSSE இன் செல்வாக்கு குறித்து அனைத்து பிரதான முதலாளித்துவ பத்திரிகைகளும் கோபத்துடன் கருத்துரைக்க நிர்பந்தமாயின.

1917 ரஷ்ய புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில், அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளது அபிவிருத்தி மீதான லெனினின் கவனமான ஆய்வுகளில் அவரது அரசியல் மேதைமையின் முக்கிய கூறுபாடுகள் வெளிப்பாட்டைக் கண்டன, அவற்றை அவர் பரந்த வர்க்க சக்திகளது இயக்கங்கள் மற்றும் மாற்றங்களின் ஒரு பிரதிபலிப்பாக புரிந்து கொண்டார். இந்த மே தினக் கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை ஆராய்வதற்கு அதே அணுகுமுறையை பயன்படுத்தினால், உயர்ந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் மட்டம் மற்றும் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நம்மால் இந்த நிகழ்வின் "வெற்றியை" ஒரு புறநிலை சமூக நிகழ்வுபோக்கின் வெளிப்பாடாக புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு, அரசியல்ரீதியில் மட்டுப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு தீவிரத்தன்மையின் அறிகுறிகள் தென்பட்டன. அமெரிக்காவில் வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸிற்கான ஆதரவு மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள்; பிரான்சில் பிற்போக்குத்தனமான தொழிலாளர் "சீர்திருத்தங்களுக்கு" எதிரான போராட்டங்கள், மாக்ரோன் மற்றும் லு பென்னுக்கு இடையே ஒருவரைத் "தேர்வு செய்வதன்" மீது பரந்த நிராகரிப்பு; இந்தியாவில் நரேந்திர மோடியின் வலதுசாரி திட்டநிரலுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒருநாள் வேலைநிறுத்தம்; மற்றும் சீனாவில் குறிப்பிடத்தக்க அளவில் வர்க்க மோதலின் வளர்ச்சி ஆகியவை அதில் உள்ளடங்கும்.

இந்த தீவிரமயப்படலுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியாகும், இது, 2008 நிதியியல் பொறிவுக்கு சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், ஒரு புதிய மற்றும் மிகவும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தாக்குமுகப்பாக கொண்டு ஒரு கால் நூற்றாண்டு முடிவில்லா போர்கள், மிகப் பெரிய அணுஆயுத சக்திகள் சம்பந்தப்பட்ட முன்பினும் அதிக நேரடியான மோதலாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திற்கு பின்னர் பார்த்திராத அளவிற்கு உலகளவில் சமூக சமத்துவமின்மை உயர்ந்துள்ளது. ஜனநாயக ஆட்சி வடிவங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்பதுடன், ஆளும் வர்க்கம் புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்க அதீத தேசியவாதம் மற்றும் பாசிசவாத இயக்கங்களை முன்நகர்த்தவும் மற்றும் பெருநிறுவன நிதியியல் உயரடுக்கின் கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் பலவந்தமாக ஒடுக்குவதற்கு உரிய கட்டமைப்பை உருவாக்கவும் அழைப்புவிடுத்து வருகின்றன.

இருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடியின் முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நனவு மட்டத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் அவர் உரையில் இந்த பிரச்சினையை இவ்வாறு குறிப்பிட்டார்:

முதலாளித்துவம் படுபாதாளத்தை நோக்கி விரைகையில், அது உலகின் ஒவ்வொரு பாகத்திலும் தொழிலாள வர்க்கத்தின் —பில்லியன் கணக்கான மனித உயிர்களின்— அரசியல் தீவிரமயப்படலுக்கு நிலைமைகளை உருவாக்குகிறது. சமூக நனவு, சமூக இருப்பிற்கு பின்தங்கி இருக்கிறது என்பது உண்மை தான், ஆனால் இது பெருந்திரளான மக்களுக்கு ஒன்றையுமே, குறைந்தபட்சம் ஒரு நல்ல எதிர்காலம் குறித்த எந்தவொரு நம்பிக்கையும் கூட வழங்க முடியாதிருக்கும் இந்த நிலவும் சமூக அமைப்புமுறையின் திவால்நிலைமைக்கு தொழிலாள வர்க்கம் கண்மூடி இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது...

ஆம், தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலைமைக்கான ஒரு நெருக்கடி உள்ளது. ஆனால் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும், ஏனென்றால் சமூகத்தை சோசலிச மறுகட்டுமானம் செய்வதற்காக புறநிலைரீதியில் நிலவும் ஆற்றல்களின் உருவடிவமாக தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக விளங்குகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்கு (ICFI) வெளியே, இங்கே தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்ப முனையும் எந்தவொரு அரசியல் போக்கும் இல்லை என்பதை இன்று நோர்த் விவரித்தார். “தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அல்லது ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தீவிரத்துடன், கூறிக் கொள்ளும் எந்தவொரு அமைப்பும் உலகில் இல்லை.”

உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்து ஒரு ஆழ்ந்த மதிப்பீட்டை செய்து, உலக சோசலிச புரட்சிக்கான ஒரு முன்னோக்கு மற்றும் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்த வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) இந்த கூட்டம் மட்டுமே உலகில் எந்தவொரு இடத்திலும் நடந்த ஒரே மேதினக் கூட்டமாக இருந்தது என்பது ஓர் அரசியல் உண்மையாகும். குட்டி முதலாளித்துவ போலி-இடது அமைப்புகள்—அது பப்லோயிச அமைப்பாக இருக்கட்டும், அல்லது அரசு முதலாளித்துவ, அராஜகவாத (anarchist) அமைப்பாக இருக்கட்டும் அல்லது தேசியவாத, இனவாத, மரபுவாரியான (ethnic) மற்றும் பாலின அரசியல் அமைப்பாக இருக்கட்டும்—வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு என்று வருகையில் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க அவற்றிடம் முற்றிலும் ஒன்றுமே கிடையாது. நான்காம் அகிலத்துடன் மோசடியாக இணைத்து கூறிக்கொள்ளும் பப்லோயிஸ்டுகள், International Viewpoint இல் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு ஆவணத்தில், “நான்காம் அகிலம் [FI] என்ன செய்ய வேண்டியுள்ளது என்ற ஒரு முன்மாதிரியை நம்மால் பொதுமைப்படுத்த முடியாது என்பது தான் முக்கிய சிந்தனையாக உள்ளது…" என்று குறிப்பிட்டு அவர்களது சொந்த அரசியல் திவால்நிலையை குறிப்பிடத்தக்க அளவிற்கு பகிரங்கமாக அவர்களே ஒப்புக் கொண்டனர்.

புரட்சிகர மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறது. மே தினக் கூட்டத்தில் வழங்கப்பட்ட எல்லா உரைகளும் வரவிருக்கும் நாட்களில் உலக சோசலிச வலைத்தளத்தில் (WSWS) பிரசுரிக்கப்படும். சர்வதேச சோசலிச புரட்சியின் அரசியல் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மார்க்சிச தத்துவத்தைப் பயன்படுத்தி இருக்கும், இந்த உரைகள், ஒவ்வொன்றையும் மிக கவனமாக ஆய்வுக்கு உட்படுத்துமாறு நாம் நமது வாசகர்களை வலியுறுத்துகிறோம்.