ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017

Oppose the persecution of immigrants and refugees

மே தினம் 2017: புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை துன்புறுத்துவதை எதிர்ப்போம்

By Julie Hyland
3 May 2017

இது, ஏப்ரல் 30, 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் ஜூலி ஹைலன்ட் வழங்கிய உரையாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுடன் ஐக்கியப்பட்டு நிற்கிறது. தொழிலாளர்கள் எங்கே விரும்புகிறார்களோ, அங்கே அவர்கள் முழு குடியுரிமையுடன் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், அனைத்து தொழிலாளர்களுக்கும் உள்ள உரிமையை நாம் பாதுகாக்கிறோம்.

தொழிலாளர் அமைப்பு என்ற பெயருக்கு மதிப்புடைய எந்தவொரு தொழிலாளர் அமைப்புக்கும் உயிர்நாடியான இந்த அசைக்க முடியா கடமைப்பாடு, இன்று பெரும்பாலான இடதுகளைப் பொறுத்த வரையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

மே தினம் 2017 ஜூலி ஹைலன்ட்

அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ், பிரான்சில் மெலோன்சோன், ஜேர்மனியில் லாஃபொன்டைன் மற்றும் பிரிட்டனில் கோர்பின் என அனைவரும் சுதந்திர நகர்வு கோட்பாட்டை நிராகரிக்கின்றனர் என்பதோடு, பல சந்தர்ப்பங்களில், சொந்த நாட்டு தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக என்று கூறி எல்லைகளை பலப்படுத்தவும் கூட அழைப்புவிடுக்கின்றனர்.

இவ்விதத்தில் அவர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் இன்னல்களுக்கு நிஜ மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறையில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், இந்த வழியில் புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்பை தூண்டும் அவர்களது அரசாங்கங்களின் முயற்சிகளையும் எளிதாக்குகின்றனர்.

இதன் விளைவாக, பாலியல் வேட்கையாளர்கள், போதை விற்பனர்கள் அல்லது பயங்கரவாதிகளைக் குறிப்பிடும் அந்த நேரத்தில் மட்டும் ஊடகங்கள் புலம்பெயர்ந்தவர்களை குறிப்பிடப்படுகின்றன. அமெரிக்காவில் மெக்சிக்கர்கள், ஐரோப்பாவில் சிரியர்கள், அல்லது எல்லாவற்றிற்கும் பொதுவான தேர்வாக உள்ள "முஸ்லீம்கள்" என்று இலக்கில் வைக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வேண்டுமானால் மாறலாம், ஆனால் வாய்சவடால்களோ "குற்றகரமான யூதர்கள்" என்று கூறி பூதாகரமாக காட்டுவதற்கு நாஜிக்கள் பயன்படுத்திய கை-ஏடுகளில் இருந்து கடன் வாங்கப்படுகின்றன.

யதார்த்தத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்னர் போலவே, இந்த வறிய மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் குழந்தைகளும் ஏகாதிபத்திய சக்திகளது கொடூரமான குற்றங்களுக்கு இரையானவர்கள்.

மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் காலனித்துவ போர் மற்றும் சூறையாடலை புதுப்பிப்பதற்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்பட்டதன் இந்த பதினைந்து ஆண்டுகள், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து மிகப்பெரிய புலம்பெயர்வு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்த 14 மில்லியனுக்கும் அதிகமானவர்களை கணக்கில் கொள்ளாமல், 65.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கருத்துக்களை நான் வழங்கி கொண்டிருக்கும் இந்நேரத்தில், சுமார் 300 பேராவது உலகின் ஏதாவதொரு இடத்தில் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அதாவது இக்கூட்டம் முடியும் போது ஏறத்தாழ 3,000 பேரும், இன்றைக்குள் 35,000 பேருக்கும் அதிகமானவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். அகதிகள் எல்லோரும் ஒரு நாட்டினுள் உள்ளடங்குவார்களாக இருந்தால், அது இங்கிலாந்து, இத்தாலி அல்லது தென் ஆபிரிக்காவை விட உலகின் மிகப்பெரிய 22 ஆவது நாடாக ஆகியிருக்கும்.

ஏற்கனவே, உலகில் பாதிக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறு இருப்பினும் கடந்த வாரங்களில், ட்ரம்ப் நிர்வாகம் —ஐரோப்பிய அரசாங்கங்களின் ஆதரவுடன்— சிரியா மீது குண்டுவீச்சு நடத்தியது மற்றும் ஆப்கானிஸ்தான் மீது முன்பில்லாத வகையில் மிகப் பெரிய அணுசக்தி-அல்லாத MOAB குண்டை வீசியது, அதேவேளையில் சோமாலியாவில் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளது பாகமாக அமெரிக்க படைகளை அந்நாட்டிற்குள் இறக்கி உள்ளது.

இவையெல்லாம் வட கொரியா மற்றும் சீனா மீதான அச்சுறுத்தலாகவோ, மாஸ்கோவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களாகவோ இல்லாது ஒரு மூன்றாம் உலக போருக்கான அச்சுறுத்தலாகின்றன.

சிரியா மீது வீசப்பட்ட ஒவ்வொரு டோமாஹாக் ஏவுகணையின் விலை 1.5 மில்லியன் டாலராகும். ஒரேயொரு MOAB இன் விலை 16 மில்லியன் டாலராகும். தென் கொரியாவில் நிறுவப்பட்டு வருகின்ற அமெரிக்க பாதுகாப்பு கவசத்தின் (THAAD) மதிப்பு 1 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது, அதேவேளையில் அணுஆயுத நாடுகளால் அணுஆயுதங்களுக்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது, அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 12 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.

இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகள் ஒட்டுமொத்த நாடுகளையும் அழிக்க இந்த மிகப்பெரும் அளவிலான தொகைகளை வாரியிறைத்து வருகின்ற நிலையில், அவற்றின் ஆக்ரோஷத்திற்கு பலியாகி குறைந்தபட்சம் உயிருடன் இருப்பவர்களோ தரந்தாழ்ந்த இழிநிலையில் விடப்பட்டுள்ளனர்.

மொத்த அகதிகளில் 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள் ஒருபோதும் மேற்கிற்கு வர விரும்பியதில்லை, ஆனால் வறுமை மற்றும் மோதல்களால் ஏற்கனவே அலைக்கழிக்கப்பட்டு அந்நாடுகளுக்குள் வர நிர்பந்திக்கப்படுகின்றனர்.

லிபியாவில், நவீன கால அடிமைச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன —ஆபிரிக்க அகதிகள் பலவந்த உழைப்பாளர்களாகவோ அல்லது பாலியல் சுரண்டலுக்காகவோ வியாபாரம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கான இன்றைய விலை 200 இல் இருந்து 500 டாலர் வரை செல்கிறது. அங்கே கொண்டு வரப்படாதவர்கள், பாதுகாப்பான ஒரு இடத்தை அடைய முடியாதவர்கள், பெரும்பாலும் பட்டினியில் இறந்து இடம் தெரியாத இடங்களில் புதைக்கப்படுகிறார்கள், இவையெல்லாம் லிபியாவிற்கு "கண்ணீர் பள்ளத்தாக்கு" என்ற அடைமொழியை தந்துள்ளது.

உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான உகாண்டா, முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெரும்பாலும் தெற்கு சூடானைச் சேர்ந்த ஒரு கால் மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு புகலிடமான Bidi எனும் அக்கண்டத்தின் மிகப்பெரிய அகதிகள் முகாமைக் கொண்டுள்ளது.

மேற்கினால் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டுப் போரின் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், சிரியர்களே மிகப் பெரும் எண்ணிக்கையில் அகதிகள் கணக்கில் வருகின்றனர். பலர் துருக்கி, ஜோர்டான் மற்றும் லெபனானில் சிக்கி உள்ளனர். வேலை செய்வதற்கான உரிமை இல்லாமல், பெரும்பாலானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இதனால், குழந்தைகள் உட்பட நிராதரவான அகதிகள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக அவர்களின் உடல் அங்கங்களை விற்க நிர்பந்திக்கப்படுவதால், லெபனானில், உடல் அங்கங்களின் சட்டவிரோத வியாபாரம் அதிகரித்து வருகிறது.

அவர்களது நாடுகளில் நடந்த மக்கள் படுகொலைகள் மற்றும் அழிவுகளினால் சுற்று பிரதேசங்களுக்கு தப்பி சென்றவர்களும் நல்லதொரு வாழ்வை வாழக்கூடியவர்களாக இல்லை.

ஐரோப்பாவை அடையும் அவர்களின் பெரும்பிரயத்தன முயற்சியில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 1,000 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளதுடன் சேர்ந்து, மீண்டுமொருமுறை இந்த ஆண்டு மத்திய தரைக்கடலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சாதனை அளவை எட்டியுள்ளது. ஒருவேளை அவர்கள் அதிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் முள்ளுக் கம்பிகளையும், நெரிசலான முகாம்களையும் மற்றும் இனவாத கலவரத்தையும் சந்திக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஐரோப்பிய கோட்டை" கொள்கையின் விளைவாக பலர் கிரீஸ் மற்றும் இத்தாலியில் சிக்கியுள்ள நிலையில், இங்கே உள்ள தரங்குறைந்த அகதிகள் முகாம்களில் சுகாதாரமான கழிவறைகளோ, குடிநீர் மற்றும் உணவு விநியோகங்களோ கிடையாது. இந்த நாடுகளின் முகாம்களில் மட்டும் குறைந்தபட்சம் 23,000 ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர், இவர்களில் பலர் அனாதைகளாவர்.

பிரான்சில் கலே என்னுமிடத்தில் கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 97 சதவீத குழந்தைகள், கண்ணீர் புகைகுண்டுகள் உட்பட பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி அவையங்களை இழந்துள்ள நிலையில், அங்கே பொலிஸ் மற்றும் வலதுசாரி குழுக்களால் "ஆண்டு முழுவதும்" காட்டுமிராண்டித்தனத்திற்கு உள்ளாவதாக அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து வந்தடைய முடிந்த சிரிய அகதிகளில் 93 சதவீதத்தினர் "வெடிப்பார்ந்த வன்முறை" என்று வர்ணிக்கப்படுவதைக் கண்டுள்ளதாக அவர்களைக் குறித்த ஓர் ஆய்வு கண்டறிந்தது. அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டுவீசுவதில் இணைவதற்காக இங்கிலாந்து போட்டிபோட்டு கொண்டிருக்கின்ற நிலையிலும் கூட, ஒருசில நூறு ஆதரவற்ற சிரிய குழந்தைகளுக்கு இடம் வழங்க அனுமதிப்பதற்கு இங்கிலாந்து அரசாங்கம் கூச்சலிடுகிறது.

இதுபோன்ற குரூரங்கள் தற்செயலானவை அல்ல. இவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அதிகரித்து வரும் தேசிய பேரினவாத நச்சுப் பேரலை, முதலாளித்துவம் அதனுடன் பிணைத்து வைத்துள்ள தேசிய அரசு அமைப்புமுறையின் திவால்நிலைக்கு ஒரு வெளிப்படையான வெளிப்பாடாகும். ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவம் அதன் போட்டியாளர்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தையும் விலையாக கொடுத்து அதன் நெருக்கடியைத் தீர்க்க முயல்கையில், இது, வணிக கட்டுப்பாடுகளை எழுப்புவது, வர்த்தக மற்றும் நாணய செலாவணி போர்களின் ஒரு புதிய எழுச்சி ஆகியவற்றுடன் கைகோர்த்து செல்கிறது.

அதேநேரத்தில், அகதிகளுக்கு எதிரான பயங்கரவாத நடைமுறைகள், ஒவ்வொரு நாட்டிலும் பொலிஸ்-அரசு எந்திரத்தை கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் அவர்களின் வேலைகள், வாழ்க்கை தரங்களை பாதுகாக்கவும் இராணுவவாதம் மற்றும் போருக்குள் இறங்குவதை எதிர்க்கவும் முனையும்போது, இதே பொலிஸ்-அரசு எந்திரம் அனைத்து தொழிலாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

தேசியவாத போராதரவு இடதுகளுக்கு எதிராக, அனைத்துலகக் குழுவானது மார்க்சிசம் மற்றும் அதன் வலியுறுத்தலான உழைக்கும் மக்களுக்கு நாடு கிடையாது என்ற பெருமைமிகு பாரம்பரியத்தில் நிற்கிறது. நாம் வெல்வதற்கு ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது.

நாம் உலக சோசலிசப் புரட்சிக்காக போராடுவதில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக நிற்கிறோம். இது, சொந்த நாட்டு தொழிலாளர்கள் என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் பிளவுபடுத்தும் முயற்சிகளை நிராகரிப்பதில் இருந்து தொடங்குகிறது. எல்லா தேசிய எல்லைகளையும் கடந்து ஏகாதிபத்தியம் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தங்களின் வர்க்க பலத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே உலகப் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் தங்களின் சுயாதீனமான தீர்வை முன்னெடுக்க முடியும்: அதாவது உலகப் பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவைகளை பூர்த்தி செய்ய மீள்ஒழுங்கமைக்க முடியும்.