ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017

May Day 2017
Defend the 13 framed-up Indian Maruti Suzuki workers

மே தினம் 2017: ஜோடிப்புவழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 13 இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கவேண்டும்

By Keith Jones
3 May 2017

இது, ஏப்ரல் 30 இல் நடத்தப்பட்ட 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் கனேடிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான கீத் ஜோன்ஸ் அவர்கள் வழங்கிய உரையாகும்.

2017 மே தினத்தன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதிலும், மேலும் அவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதிலும் வெற்றியடையும் பொருட்டு இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.

அவர்கள், ஈவிரக்கமற்ற வர்க்க நியாயத்தின் பலிகடாக்கள் ஆவர். வட இந்தியாவிலுள்ள மாருதி சுசூகியின் மானேசர் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களான இந்த 13 பேரும், ஆளும் வர்க்கம் செய்த சதியின் விளைவாக, இந்திய சிறைச்சாலை எனும் ஒரு வாழும் நரகத்தில் எஞ்சிய வாழ்நாட்களை கடத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜப்பானியருக்கு சொந்தமான நாடுகடந்த நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளன.

மோசமான ஊதியங்கள், வேலைகளை துரிதப்படுத்தல், ஸ்திரமற்ற ஒப்பந்த-தொழிலாளர் வேலைகள் போன்ற வகையில், நாட்டின் புதிய உலகளவில்-ஒருங்கிணைந்த உற்பத்தித் துறை உட்பட இந்தியா முழுவதும் மேலோங்கி வரும் கொடூரமான மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு சவாலாக இருந்தது மட்டுமே அவர்கள் செய்த ஒரே குற்றமாகும்.

13 பேரில், பன்னிரண்டு பேர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்களாவர். மானேசர் தொழிற்சாலை தொழிலாளர்கள், 2011-12ல் தொடர்ச்சியான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசாங்க-அங்கீகாரம் கொண்ட, நிறுவன சார்புள்ள, சுரண்டலுக்கு ஒத்துழைக்கும் ஒரு தலையாட்டித் தொழிற்சங்கத்திற்கு எதிரான கசப்பான போராட்டத்திற்கு மத்தியில் தான் மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்தனர்.

13 பேர் ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டது, கிட்டத்தட்ட 150 தொழிலாளர்கள் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மற்றும் அரசாங்க உதவியுடன் மானேசர் நிறுவனத்தின் 2,300 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வேறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது இவை அனைத்திற்கும், 2012 ஜூலை 18 அன்று நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு கைகலப்பே சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த கைகலப்பின் மத்தியில், மர்மமான முறையில் பற்றிக்கொண்ட நெருப்பில் தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்டிருந்த நிறுவன மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

2012ல் இருந்து, உலக சோசலிச வலைத் தளம், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் சதிவேட்டையை அம்பலப்படுத்தி பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ளவும் உள்ளது. இந்த தொழிலாளர்கள் மீதான வழக்கு மற்றும் விசாரணைகள், தொடக்கத்திலிருந்து முடிவு வரை வெறும் பாசாங்குத்தனமானது என்பதை கூற வேண்டும். நிறுவனத்தின் வழக்கறிஞர் ஒருவரே வாதி தரப்பின் ஆலோசகராகவும் செயல்பட்டார். 2012 ஜூலை 18 அன்று நடந்தவற்றை பற்றி எந்தவொரு தொழிலாளியும் சாட்சி சொல்ல முன்வருவதை அனுமதிக்க மறுத்த நீதிமன்றம், அவை பக்கச் சார்பாக இருக்கும் என கூறிக்கொண்டது. தலைமை வகித்த நீதிபதி, ஆதாரத்தின் சுமைகளை திட்டமிட்டு அரசிடமிருந்து தொழிலாளர்கள் மீது மாற்றியதுடன், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படையான ஆதரவோடு, வாதி தரப்பின் பிரதான சாட்சிகளை மறு விசாரணை செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இது நியாயமான விசாரணைக்கான தொழிலாளர்களின் உரிமையை மறுதலிப்பதாகும் என ஒரு கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட, இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

பொலிஸார் சட்டவிரோதமான முறையில் நிறுவனத்துடன் உடந்தையாக இருந்து, நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டியல்கள் மற்றும் மீண்டும் மீண்டும் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் இவற்றின் அடிப்படையில் தொழிலாளர்களை கைது செய்தது என்பதை பிரதிவாதிகள் தரப்பு நிரூபித்திருந்தது. பொலிஸாரின் குற்றவியல் செயல் பற்றிய மறுக்கமுடியாத ஆதாரங்களை எதிர்கொண்ட நீதிபதி, கைது செய்யப்பட்டவர்களில் 117 பேரை முற்றிலும் விடுவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஜோடிப்பு நடவடிக்கையை, அதன் பிரதான இலக்கான மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்களின் மீது குவிமையப்படுத்துவதற்காக மட்டுமே அவ்வாறு செய்தார்.

இந்திய ஆளும் உயரடுக்கு, மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது கடும்  தண்டனையை விதிப்பதற்கு உறுதிபூண்டிருந்தது. அதன் மூலம் அது தொழிலாளர் வர்க்கத்தை அச்சுறுத்தியதோடு, மிருகத்தனமான சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் அனைத்து எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குபவர்களாக தம்மை பட்டியலிட்டுக்கொள்ள முடியும் என்பதையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரூபித்துக்காட்டியது.

இது அரசாங்க அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்களாலயேயும் மீண்டும் மீண்டும் அப்பட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 17 அன்று தீர்ப்பு வழங்குவதற்கான விசாரணையின்போது 13 பேரையும் தூக்கிலிடவேண்டுமென்று சிறப்பு வழக்கறிஞரான அனுராக் ஹூடா வலியுறுத்தியதற்கான காரணத்தை அவர் விவரித்தபோது பின்வருமாறு அறிவித்தார்: "நமது தொழிற்துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்து விட்டது, வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment-FDI) வறண்டுவிட்டது, இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவில் உருவாக்குவோம்' திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இத்தகைய சம்பவங்கள் நமது நன்மதிப்பிற்கு ஏற்பட்ட கலங்கமாகும்.”

இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் இந்த வழக்கை பற்றி கேள்விப்படும் இடமெல்லாம் உழைக்கும் மக்கள் மாருதி சுசூகி தொழிலாளர்கள் குறித்து தங்களது பெரும் அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் தொழிற்சங்கங்களும் ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளும், மாருதி சுசூகி தொழிலாளர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்களை துன்புறுத்துகின்ற முதலாளித்துவ கட்சிகள் மற்றும் நீதிமன்றங்களிடம் பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதில் நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. அடிப்படையில் ஒரு ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஆங்கில மொழி பத்திரிகையான People’s Democracy, பல வாரங்களாக மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் விதிக்கப்பட்டுள்ள கொடூரமான தண்டனைகள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதத்தவறிவிட்டது.

தொழிற்சங்கமும், ஸ்ராலினிச தலைவர்களும், மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதை விடாப்பிடியாக எதிர்க்கின்றனர். ஏனெனில், அவர்கள் தொழிலாளர்களது போர்க்குணத்தை பற்றி திகிலடைந்துள்ளதுடன், உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவை உலக மூலதனத்திற்கான ஒரு மலிவு உழைப்பு சொர்க்கமாக உருவாக்குவற்கு முனையும் இந்திய ஆளும் உயரடுக்கின் உந்துதலை செயல்படுத்துவதில் ஸ்ராலினிஸ்டுகள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும், ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு வலியுறுத்துகிறது.

மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான இந்த சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் ICFI சர்வதேச தொழிலாளர்களின் பாதுகாப்பு பாரம்பரியத்தை புதுப்பித்தும், ஊக்குவித்தும் வருகிறது. இவர்களது மூல வேர்கள், மே தினத்தின் தோற்றத்துடனான, 1880 களில் ஒரு நாளுக்கு எட்டு மணி நேர வேலைக்காகப் போராடிய ஹேமார்க்கெட் தியாகிகள் மீதான ஜோடிப்பு வழக்கிற்கு எதிரான பிரச்சாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலையை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க பலத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே வென்றெடுக்க முடியும்.

உலகின் பிரதான மலிவு-உழைப்பு சொர்க்கமான சீனாவை விஞ்சுவதற்கு முனையும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க மூலோபாயத்திற்கு சவால் விடுத்ததன் காரணமாகவே மாருதி சுசூகி தொழிலாளர்கள் திட்டமிட்ட மற்றும் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இலாபங்கள் மற்றும் பங்குதாரர் வருமானங்களை அதிகரிப்பதற்காக மலிவான உழைப்பு செலவைத் தேடி உலகத்தை சுற்றிவரும், சுசூகி போன்ற பூகோள அளவிலான நாடுகடந்த நிறுவனங்களின் மூலோபாயத்தையும் அவர்களது போராட்டம் அச்சுறுத்தியது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் இந்தியா, சீனா மற்றும் ஆசியா முழுமையிலும், ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முதலாளித்துவ பூகோளமயமாக்கத்தால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் அளவிலான புதிய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த தொழிலாளர்கள் வெறும் சுரண்டலுக்கான உபகரணங்கள் அல்ல, மாறாக, அவர்கள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் ஒரு வலிமைமிக்க சமூகசக்தியாகவும், ஒரு சக்திவாய்ந்த கூட்டணியாகவும் உள்ளனர். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள தொழிலாளர்கள், ட்ரம்ப், லூ பென் மற்றும் தொழிற்சங்கங்களால் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் நிராகரிக்கவேண்டும், மேலும் ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தொழிலாளர்களுடன், பாதுகாப்பான வேலைகள், சமூக உரிமைகள் மற்றும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் வெகுஜனங்களை மீண்டும் அடிமைப்படுத்துவதற்கு பிரதான நோக்கம் கொண்டிருப்பதான ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான கண்ணியமான போராட்டத்திலும் ஈடுபடவேண்டும்.

கொத்தடிமை சுரண்டலுக்கு சவாலாக செயல்பட்டதன் மூலம், மாருதி சுசூகி தொழிலாளர்கள் இந்திய தொழிலாளர்களுக்காக மட்டுமின்றி உலகம் முழுவதிலுமான தொழிலாளர்களுக்காக ஒரு அடி எடுத்துவைத்துள்ளனர். சர்வதேச மூலதனத்தை எதிர்த்து போராடுவதற்கு தேவையான, அதாவது சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் புறநிலை ஐக்கியத்தை ஒரு நனவான அரசியல் மூலோபாயமாக்குவதில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவதில் அவர்களைப் பாதுகாப்பது ஒரு முக்கிய முதல் படியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு முன்னெடுக்கும் "மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!" என்ற இணையவழி மனுவில் கையெழுத்திடுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மாருதி சுசூகி வழக்கின் உண்மைகளை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விவரிக்கவும்; இந்த ஜோடிப்பு வழக்கு எப்படி சமகாலத்திய பூகோள வர்க்க உறவுகளுக்கு உதாரணமாக இருக்கின்றது என்பதையும், மற்றும் இந்த தொழிலாளர்களை பாதுகாப்பது எவ்வாறு முதலாளித்துவ சுரண்டலுக்கும் போருக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக விளங்குகிறது என்பதையும் தெளிவுபடுத்தும் வகையில் அதை விநியோகியுங்கள்.