ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

வட இலங்கையில் இராணுவம் தமிழ் சிவில் பாதுகாப்பு படையினரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியது

By Subash Somachandran and S. Jayanth 
20 May 2017

இலங்கையின் வடக்கில் அரசின் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏப்பிரல் 24 அன்று வட மாகாண சபைக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். இராணுவமே இந்த பேரணியை ஏற்பாடு செய்தது என்பது வெளிப்படையான இரகசியமாகும்.

போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளின் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுற்றிவளைத்து இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்றது. இந்த நிலங்களை திருப்பிக் கொடுக்குமாறு காணி உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசாங்க அமைச்சர்களையும் இராணுவ உயர்மட்டத்தினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள பண்ணைகளை வட மாகாண சபையின் விவசாய அமைச்சிடமும், அதேபோல் முன்பள்ளிகளை வட மாகாண சபையின் கல்வி அமைச்சிடமும் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட மாகாண சபையிடம் இவற்றை கையளித்தால், தங்களின் ஜீவனோபாயத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்றும், அவற்றினை “வட மாகாண சபையிடம் கையளிக்க வேண்டாம்” எனக் கோரியுமே தமிழ் சிவில் பாதுகாப்பு படையினர் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தம், 2009 மே மாதம் பலபத்தாயிரக் கணக்கானவர்களின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது. இதன்போது இலங்கை இராணுவத்தால் நசுக்கப்பட்ட புலிகளின் ஆயிரக்கணக்கான போராளிகள், இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான சிவில் பாதுகாப்பு படைக்குள் அடக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையை கொழும்பில் அமெரிக்கச்-சார்பு அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளும் அல்லது ஊடகங்களும் இதுவரை மூடி மறைத்து வந்துள்ளன.

இராணுவத்தால் “புனர்வாழ்வு” பயிற்சியளிக்கப்பட்ட சுமார் பதினோராயிரம் முன்னாள் போராளிகள், விவசாயத் திணைக்களத்துக்கு சொந்தமான இராணுவம் பராமரித்து வரும் விவசாயப் பண்ணைகளில் உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் மூவாயிரம் பெண்கள் இராணுவம் பராமரிக்கும் முன்பள்ளிகளில் வேலை செய்வதாக பி.பி.சி.யின் தமிழ் பக்கம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது. இவர்கள் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய், போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை திருப்பி ஒப்படை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் சூழ்நிலையில், அவர்களுக்கு எதிராக, முன்னாள் போராளிகளின் அவநம்பிக்கையான நிலைமையை இராணுவம் சுரண்டிக்கொண்டுள்ளது. பெயர் குறிப்பிடத் தயங்கிய ஒரு தமிழ் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர், இந்தப் பேரணியை இராணுவம் தங்களைக் கேட்காமலேயே ஒழுங்கு செய்தது, என்றார்.

“சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் உள்ள பண்ணை காணிகளையும் முன்பள்ளிகளையும் வட மாகாண சபையிடம் கையளித்தால், 11,000 முன்னாள் போராளிகளும் மூவாயிரம் முன்பள்ளி ஆசிரியைகளும் வேலை இழக்க நேரிடும், அதனால் இவற்றை வட மாகாண சபையிடம் கையளிக்க முடியாது என இராணுவம் அறிவித்தது” என்று மேற் குறிப்பிடப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பி.பி.சி.க்குத் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து கொண்டது, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற அல்லது அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதற்காக அல்ல. வடக்கில் மாதக் கணக்காக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடந்தையுடன் உருவாக்கிய “நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ் அவர்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை என்பதற்கான அடையாளமாகும். இது தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீது வளர்ந்து வரும் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த அதிருப்தியும் நாடு பூராவும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களும் ஒன்றிணைந்து சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக தலை தூக்குவதையிட்டு கூட்டமைப்பு அச்சமடைந்துள்ளது. இதனால் இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் சில சலுகைகளை அல்லது வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு போராட்டக்காரர்களை வீடுகளுக்கு அனுப்ப கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது.

வட மாகாண சபையை வென்றால், தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற மாயையை பரப்பி, 2013 மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தொழில் கோரும் வேலையற்ற பட்டதாரிகள், நிரந்தரமாக்க கோரும் சுகாதாரத் தொண்டர்கள், சுத்தீகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களதும் தொடர் போராட்டங்களை எதிர்கொள்கின்றது. மே 9 அன்று, வேலையற்ற பட்டதாரிகள் வடக்கு மாகாண சபையை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியதோடு வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவசக்தி ஆனந்தனின் கூற்று, பண்ணைகளையும் முன்பள்ளிகளையும் வட மாகாண சபையால் நிர்வகிக்க முடியும் என வாதிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, பின்னர் இராணுவத்தினரின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளதை காட்டுகிறது. வடக்கு கிழக்கு மக்களின் பொது நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் இராணுவம், முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைத்துக்கொள்வதும் முன்பள்ளிகளை நடத்துவதும் சமுதாயத்தை இராணுவமயப்படுத்துவதன் பாகமாகும். இந்த முன்னாள் போராளிகள், அரச இயந்திரத்தின் ஒரு பாகமாக, வடக்கு-கிழக்கில் தமிழ் தொழிலாள வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் எதிராக தூண்டிவிடுவதற்கு பயன்படுத்தப்படுவர். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த எஞ்சியிருந்த புலி போராளிகள் அனைவரும், “புனவர்வாழவு” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சித்திரவதைகள், விசாரணைகள், மூளைச்சலவை உட்பட பல வருட சிறைவாழ்வுக்குப் பின்னரே “விடுதலை” செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பின்னர் புலிகளின் முக்கிய புள்ளிகளாக இருந்தவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். விடுதலையான பின்னரும் கூட இவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்காணித்து வருகின்றது.

“புனர்வாழ்வின்” பின்னர் வேலைவாய்ப்பு தருவதாக இராணுவமும் அரசாங்கமும் அறிவித்திருந்த போதிலும், அவர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை. அவர்களுடைய வறுமையே சுய விருப்பத்துக்கு அப்பால் சிவில் பாதுகாப்பு படைக்குள் அவர்கள் இணைவதற்கு வழிவகுத்தது. கடந்த ஜனவரியில் நூற்றுக்கணக்கான முன்னாள் ஆண், பெண் போராளிகள் தங்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவில் வேலை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இது யுத்தம் முடிந்து வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீண்டும் ஸ்தாபித்துவிட்டதாக பொய் கூறித்திரியும் இலங்கை ஆளும் கும்பலினதும் அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் வஞ்சத்தனத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

இந்த இளைஞர்களின் அவநம்பிக்கையான நிலைமைக்கும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே பொறுப்பாகும். வாழ்வாதாரத்துக்காக, முன்னாள் போராளிகள் தங்களை ஒடுக்குகின்ற தங்களுக்கு எதிராக யுத்தம் செய்த இராணுவத்திடமே சரண்டைந்துள்ளமைக்கு, விடுதலைப் புலிகள் போன்று ஏகாதிபத்தியத்தினதும் இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளதும் ஒத்துழைப்புடன் தனியான தமிழீழ அரசை அமைக்கும் நோக்குடன் போராடிய ஆயுதக் குழுக்களின் பிற்போக்கு தேசியவாத அரசியலின் வங்குரோத்தும் ஒரு காரணமாகும்.

இலங்கையில் தமது ஆதிக்கத்தை ஸ்தாபிப்தற்காக தீவில் தமிழ் பிரிவினைவாதத்தின் வளர்ச்சிக்கு உடந்தையாக இருந்த அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியங்களும் இந்தியாவும், புலிகளின் இருப்பு, பிராந்தியத்தில் தமது மூலோபாய நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாக கருதிய நிலையில், முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இராணுவத் தளபாடங்களும் நிதி உதவியும் கொடுத்து புலிகளை முற்றாக அழிப்பதற்கு ஒத்துழைத்தன.

போரின் கடைசி நாட்களில் 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. போரின் முடிவில் வடக்கில் வாழ்ந்த கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பேர் இராணுவத்தால் நடத்தப்பட்ட, முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட “நலன்புரி” முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். பல ஆண்டுகளின் பின்னர் இந்த குடும்பங்கள் அடிப்படை வசதிகள் அற்ற அவர்களின் கிராமங்களில் அல்லது வேறு இடங்களில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் கொண்டு கொட்டப்பட்டதுடன் இன்னமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றன.  

மன உழைச்சல் காரணமாக பல போராளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மே 6, மட்டக்களப்பு செங்கலடியில் 6 வயதுக் குழந்தையின் தாயாரான முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமை அண்மைய சம்பவமாகும். முன்னாள் போராளியான அவரது கணவரும் இறந்துவிட்டதனால் அவர் விரக்தியுற்றிருந்தார்.

பெருந்தொகையான முன்னாள் போராளிகளின் உடற் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாக வாழ்கின்றனர். பலர் நோய்வாய்ப்பட்டு, குறிப்பாக புற்றுநோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். 2015ல் மட்டும் 107 போராளிகள் இறந்துள்ளார்கள். “புனர்வாழ்வு” முகாமில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தடுப்பு மருந்துகள் என்னும் பெயரில் நச்சு மருந்துகள் ஊசிமூலம் ஏற்றப்பட்டதாகவும், சிலவேளைகளில் உணவில் கலந்து வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் “புனர்வாழ்வு” பெற்ற போராளிகளில் ஒரு பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என முதலில் கோரிய போதிலும், பின்னர் தன்னால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட சிறிசேன-விக்கிரமசிங்கவின் அமெரிக்கச்-சார்பு அரசாங்கத்துக்கு அதனால் ஏற்படக் கூடிய அசௌகரிங்களை பற்றிய கவலையினால், அரசாங்கத்தின் மறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தது.

முன்னர் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, போரின் பின்னர் ஏகாதிபத்தியங்களை நோக்கிய நகர்வை முன்னெடுத்து, அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களின் பேரில் இராஜபக்ஷ ஆட்சியை வெளியேற்றி சிறிசேனவை ஆட்சியில் அமர்த்துவதற்கான ஆட்சி மாற்றம் நடந்தபோது, அதற்கு ஒத்துழைத்தது. அமெரிக்காவின் புவிசார்-அரசியலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதன் பாகமாக கொழும்பு அரசாங்கத்துக்கு சேவையாற்றி, தமிழ் முதலாளித்துவத்துக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் இழிந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

2013ல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் அடக்குமுறைகள் தொடர்வதை அங்கீகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை என்றார். “நாங்கள் முற்றாக இராணுவத்தினை வெளியேற்றக் கோரவில்லை. அவர்கள் எங்கிருந்தார்களோ, அந்த எல்லைக்குள் அவர்கள் இருக்க முடியும். அவர்களின் புலனாய்வுகளையும் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்,” என அவர் பிரகடனம் செய்தார். வடக்கு-கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதன் மூலம் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளரும் சமூக வெடிப்பை நசுக்கி, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாத்துக்கொள்வது அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கணிக்கின்றது.

தமிழ் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களும் இளைஞர்களும் தங்களது உரிமைகளைக் காக்கும் போராட்டுத்துக்காக, இத்தகைய முதலாளித்துவ கட்சிகளில் இருந்து சுயாதீனமடைந்து, தெற்கில் உள்ள தொழிலாள வர்க்கத்துடனும் இந்தியா உட்பட ஆசிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்துடனும் ஐக்கியப்படுவதும் சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதும் அவசியமாகும்.