ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French election debate: Macron, Le Pen promote militarism, attacks on immigrants

பிரெஞ்சு தேர்தல் விவாதம்: மக்ரோனும் லு பென்னும் இராணுவவாதம், புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கின்றனர்

By Alex Lantier and Johannes Stern
4 May 2017

முன்னாள் வங்கியாளர் இமானுவல் மக்ரோனுக்கும் தேசிய முன்னணி (FN) தலைவர் மரீன் லு பென்னுக்கும் இடையே புதனன்று இரவு நடந்த விவாதம் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் தரங்குறைந்த ஒரு புதிய மட்டத்தைக் குறித்தது. பிரான்சில் மக்கள் மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒரு முன்னாள் அமைச்சரும் ஒரு நவ-பாசிசவாதியும் அந்த கடுமையான விவாதத்தில் கூச்சலிட்டு அவமரியாதையான வார்த்தைகளைப் பரிமாறியதால், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், இதழியலாளர்கள் Nathalie Saint-Cricq மற்றும் Christophe Jakubyszyn உம் மவுனத்தில் உறைந்து இதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்நிகழ்ச்சியின் 150 நிமிடங்களில் அவர்கள் தங்களின் அரசியல் களத்தைக் குறித்து புதிதாக ஒன்றையும் வெளியிடாமல் ஒருவரையொருவரை பொய்யர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று குறைகூறிக் கொண்டு, அவ்விரு வேட்பாளர்களும் மக்களிடையே அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தியால் பாதிக்கப்படாதவர்களாகவும், அவர்கள் அதற்கு விரோதமாக இருப்பதையும் தெளிவுபடுத்தினர்.

பெருநிறுவன போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்காக, பெருந்திரளான மக்கள் போராட்டங்களின் முகத்துக்கு முன்னாலே, ஒப்பந்தங்களை மீறி வேலைவேகத்தை அதிகரிப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் கூடி வேலை செய்து கடந்த ஆண்டு உத்தரவாணை மூலமாக நிறைவேற்றப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் (PS) தொழிலாளர் சட்டத்தை அவர் பயன்படுத்த இருப்பதை மக்ரோன் வலியுறுத்தினார். கட்டாய இராணுவ சேவையைத் திரும்ப கொண்டு வர அழைப்புவிடுத்து வரும் மக்ரோன், அவர் "பிரெஞ்சு வெற்றிக்கான உத்வேகத்துடன்" பேசுவதாகவும், “பிரான்ஸ் எப்போதுமே உலகில் வெற்றி பெற்றுள்ளது, அதன் மொழி ஒவ்வொரு கண்டத்திலும் பேசப்படுகிறது,” என்று பெருமைபீற்றினார்.

சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் ஆளும் உயரடுக்கின் ஒரு பிரதிநிதியாக மக்ரோனை சுருக்கமாக கண்டனம் செய்த பின்னர், லு பென் வெளிநாட்டினர் எதிர்ப்பு மனோபாவம் மற்றும் தேசியவாதத்தை தூண்டிவிட திரும்பினார். அவர் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு தொழிலாளர்களை குறைகூறியதுடன், யூரோ நாணயத்திலிருந்து வெளியேறி பிரெஞ்சு பிராங்க் நாணயத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலமாக, ஜேர்மன் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி சந்தைகளுக்கு பிரான்ஸ் தீவிரமாக பாதிப்பேற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

முற்றிலும் கீழ்தரமாக இருந்த அந்த தொலைக்காட்சி விவாதம், பிரெஞ்சு அரசியல் அமைப்புமுறை ஆழமாக அழுகி போயிருப்பதன் ஓர் அடையாளமாகும். கடந்த அரை-நூற்றாண்டுக்கும் அதிகமாக பிரான்ஸை ஆட்சிசெய்து வந்துள்ள, சோசலிஸ்ட் கட்சி மற்றும் கோலிச குடியரசு கட்சி (LR) ஆகிய இவ்விரு கட்சிகளது வேட்பாளர்களும் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் ஆழமாக பிளவுபட்டுள்ளன என்பதோடு, தசாப்த கால சிக்கன மற்றும் போர் கொள்கைகளால் மக்களிடையே மதிப்பிழந்துள்ளன.

பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste – PES) இரண்டாம் சுற்றில் ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அழைப்புவிடுத்து விவரித்ததைப் போல, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ள மக்ரோனும் லு பென்னும் பிற்போக்குத்தனமானவர்களே என்ற உண்மை, அடுத்த ஜனாதிபதிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தயாராகி வருகிறது என்பதையே காட்டுகிறது. இவ்விரு வேட்பாளர்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையிலான எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதும், ஞாயிற்றுக்கிழமை தேர்தல்களில் யார் வென்றாலும் அவருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதுமே இன்றியமையா பணியாகும்.

போர் மற்றும் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதில் மக்ரோனும் லு பென்னும் கருத்தொருமித்துள்ளனர். பிரான்ஸ், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும் சோசலிஸ்ட் கட்சியால் திணிக்கப்பட்ட அவசரகால நிலை சட்டத்தின் கீழ் உள்ளது என்பதையோ, அல்லது சிரியா, வட கொரியாவிற்கு எதிரான நேட்டோ போர் அச்சுறுத்தல்கள் அணுஆயுதமேந்திய ரஷ்யா அல்லது சீனாவுடனான போர்களாக தீவிரமடையக் கூடியது என்பதையோ அவ்விருவரில் யாரும் குறிப்பிடவில்லை. பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு இத்தகைய கொள்கைகளை ஆதரிப்பதுடன், Saint-Cricq அல்லது Jakubyszyn உம் சரி அவர்களுக்கு எதிராக எதையும் தெரிவிக்க தகுதியுடையவர்களாக தங்களைக் காணவில்லை.

இரண்டு வேட்பாளர்களுமே பாரியளவில் அரசை பலப்படுத்தலுக்கு அழைப்புவிடுத்ததுடன், "பயங்கரவாதத்திற்கு" எதிராக போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக போராடாததற்காக ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். மக்ரோன் "இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக" இருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் "பொறுப்பின்றி" இருப்பதாகவும் லு பென் மக்ரோனைத் தாக்கிய நிலையில், மக்ரோன், “2015 க்குப் பின்னர் இருந்து நாங்கள் நமது எல்லை கட்டுப்பாட்டுகளை மீள்ஸ்தாபிதம் செய்து, 60,000 பேரை தடுத்து நிறுத்தி உள்ளோம்" என்று பெருமைபீற்றி அவரைத் திருப்பி தாக்கினார்.

“ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்கு எல்லைக் கடந்து செல்லும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த" “ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையே அதிக கூட்டுறவு" அவசியமாகும் என்று வலியுறுத்திய மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பலமான பொலிஸ் அதிகாரங்களை லு பென் ஆதரிப்பதில்லை என்று அவரை குற்றஞ்சாட்டினார்.

வெளியுறவு கொள்கை குறித்து கூறுகையில், ஏனைய சக்திகளிடம் பிரான்ஸை அடிபணிய வைப்பதாக இருவரும் ஒருவரையொருவர் குறை கூறி கொண்டதுடன், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான இன்னும் அதிக சுதந்திரமான மூலோபாயத்திற்கு அழைப்புவிடுத்தனர். “பிரான்ஸ் அதன் சுதந்திரத்தன்மையை திரும்ப பெற வேண்டியுள்ளது" என்பதுடன், அது ஜேர்மனிக்கோ அல்லது அமெரிக்காவிற்கோ அடிபணிய வேண்டியதில்லை என்று லு பென் முறையிட்டார். மக்ரோன் அவர் பங்கிற்கு, லு பென் "புட்டினின் கட்டளையை" ஏற்றுக் கொள்வதாக குற்றஞ்சாட்டி, சாஹெல், சிரியா மற்றும் ஈராக்கில் சண்டையிடுவதற்கு தகைமை கொண்ட "ஐரோப்பாவில் ஒரு பலமான நம்பகமான பிரான்ஸிற்காக" அழைப்புவிடுத்தார்.

இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது என்ற உண்மையுமே கூட, கடந்த 15 ஆண்டுகளில் ஆளும் வட்டாரங்கள் பரந்தளவில் வலதிற்கு மாறியிருப்பதைக் காட்டுகிறது. 2002 இல், முதல்முறையாக சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டு, இரண்டாம் சுற்றில் வலதுசாரி ஜனாதிபதி ஜாக் சிராக்கும் மற்றும் அப்போதைய தேசிய முன்னணி தலைவர் ஜோன்-மரி லு பென்னும் போட்டியிட்டனர், அது மில்லியன் கணக்கானவர்களின் பாரிய போராட்டங்களை மட்டும் தூண்டிவிடவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்தினுள் கவலைகளையும் தூண்டிவிட்டது.

மக்களின் பிரதிபலிப்பு குறித்த அச்சத்தினாலும் மற்றும் நாஜி ஆக்கிரமிப்புக்கான பிரெஞ்சு எதிர்ப்பு பற்றிய கோலிச கருத்துக்களில் இருந்து இலாபமடைந்துகொள்ளும் விருப்பத்தினாலும், ஒரு பாசிசவாதி உடனான விவாதத்தை சிராக் நிராகரித்தார் என்ற அடித்தளத்திற்காக, மரபார்ந்து நடக்கும் தொலைக்காட்சி விவாதத்தில் ஜோன்-மரி லு பென் உடன் பங்கெடுக்க சிராக் மறுத்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் மற்றும் அடுத்த அரசாங்கத்திற்கு எதிராக ஓர் அரசியல் போராட்டத்திற்கு அதை தயார்படுத்தவும் 2002 தேர்தல்களைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது. இந்த அழைப்பை நிராகரித்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR), தொழிலாளர்கள் போராட்டம் (LO) மற்றும் தொழிலாளர்கள் கட்சி (PT) போன்ற குட்டி-முதலாளித்துவ அமைப்புகள், தேசிய முன்னணியின் வளர்ச்சியைத் தடுக்க சிராக்கிற்கு வாக்களிக்குமாறு சோசலிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டன.

முதலாளித்துவ கட்சிகளுடனான அவர்களின் அணிசேர்க்கை, சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் இயங்குபவர்களாக அவர்கள் ஒருங்கிணைவதில் போய் முடிந்தது மற்றும் இது பேரழிவுகரமான விளைவுகளுடன் தேசிய முன்னணியே பிரான்சில் ஒரே எதிர்க்கட்சி என்பதாக காட்டிக் கொள்ள அனுமதித்தது.

அப்போதிருந்து அரசியல் ஸ்தாபகம் மிகவும் வலதிற்கு நகர்ந்துள்ளதுடன், மரீன் லு பென் உடனான ஒரு விவாதத்தை மக்ரோன் நிராகரிப்பாரா என்ற ஒரு கேள்வி கூட இங்கே எழவில்லை. பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் ஆளும் வர்க்கத்தின் மேலும் பரந்த அடுக்குகள் மீண்டும் பாசிசத்திற்கு மறு மதிப்பீடு செய்து அதற்கு புத்துயிரூட்ட முனைவதால், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகளுடன் இணைந்த எந்தவொரு சாயலையும் மறுத்தளிக்கிறது.

லு பென்னின் தேசிய முன்னணி மீதான வரலாற்று பிரச்சினை, நாஜி ஆக்கிரமிப்பின் போது பிரான்சை ஆட்சி செய்த ஒத்துழைப்புவாதிகள் வரையில் நேரடியாக வேரூன்றியுள்ள நிலையில், இந்த விவாதத்தின் போது மக்ரோன் அது குறித்து ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கடந்த ஒன்றரை தசாப்தமாக, குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இருந்து, ஐரோப்பாவில் அபிவிருத்தி அடைந்துள்ள ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

அனைத்து வகைப்பட்ட பிரெஞ்சு அரசாங்கங்களும், ஆரம்ப காலங்களில் மரபார்ந்த வகையில் தீவிர வலதுடன் தொடர்புடைய அரசியல் திட்டநிரலை, அதாவது பொலிஸ்-அரசு ஆட்சி, சுதந்திர-சந்தை கட்டுப்பாடுகள் மற்றும் ஏகாதிபத்திய போரை ஏற்றுள்ளன. இப்போது வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலாண்ட் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ள அவரது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு இயங்குமுறையாக, 2012 இல் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் இருந்து, தேசிய முன்னணியின் தீவிர-வலது வெகுஜனவாத வாய்சவடால்களை சார்ந்திருந்தார். அவர் 2015 இல் இரண்டு முறை லு பென்னை எலிசே மாளிகைக்கு அழைத்து பேசியதுடன், நவ-பாசிசவாதிகளை பிரான்சின் பிரதான அரசியல் ஓட்டத்தின் பாகமாக சட்டபூர்வமாக்கும் விதத்தில் தேசிய முன்னணியின் வேலைத்திட்டத்தின் பெரும்பாகங்களை ஏற்றுக் கொண்டார்.

ஆளும் வர்க்கங்களின் எந்தவொரு கன்னைக்கும் ஆதரவு வழங்குவதன் மூலமாக, சர்வாதிகாரம் மற்றும் நவ-பாசிசவாத ஆட்சி வடிவங்களை நோக்கிய அணிவகுப்பை தடுத்து விட முடியாது என்பதையே நேற்றிரவு நடந்த பிற்போக்குத்தனமான விவாதம் உட்பட 2002 நெருக்கடிக்குப் பிந்தைய அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.