ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French President-elect Macron’s legislative slate: Social reaction bares its teeth

பிரெஞ்சு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரோனின் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்: சமூக பிற்போக்குத்தனம் அதன் கோரப்பற்களை காட்டுகிறது

By Alex Lantier
12 May 2017

பிரெஞ்சு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவல் மக்ரோனின் குடியரசு அணிவகுப்பு இயக்கம் (La République en Marche - REM), ஜூன் 11 மற்றும் 18 இல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கு பெரும்பாலான அதன் வேட்பாளர்களின் ஒரு பட்டியலை வெளியிட்டது. தேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கான 577 மாவட்ட தொகுதிகளில் 428 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை REM வெளியிட்டது, மீதமுள்ள 149 தொகுதிகளுக்கான பட்டியல் ஏனைய அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பின்னர் தீர்மானிக்கப்படும்.

போர்கள், பொலிஸ்-அரசு நடவடிக்கைகள், மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) சிக்கன நடவடிக்கை கொள்கைகளால் மதிப்பிழந்துள்ள பிரான்சின் அரசியல் ஸ்தாபகத்திற்கு புத்துயிரூட்ட வந்திருப்பவராக மக்ரோனை சித்தரிக்கும் ஒரு பாரிய ஊடக பிரச்சாரமும், REM இயக்கத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுடன் உடன் வந்தது. REM வேட்பாளர் பட்டியலில் ஆண், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை துல்லியமாக சம அளவில் (214) இருந்தன அல்லது 52 சதவீதத்தினர் இதற்கு முன்னர் பதவியில் இல்லாதவர்கள் போன்ற விடயங்கள் ஊடகங்களில் புகழ்ந்து தள்ளப்பட்டது.

தேசிய நாடாளுமன்றத்தில் மக்ரோனுக்கு முழு பெரும்பான்மை கிடைக்க செய்வதும் மற்றும் மக்ரோன் அமைப்பின் மீது பரந்த பெருந்திரளான தொழிலாளர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு மற்றும் ஆழ்ந்த மனக்கசப்புகளுக்காக அவர்களை பீதியூட்டுவதே இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். மக்ரோனின் போர் நாட்டம் மீதும் மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைகள் மீதும் உள்ள பரந்த அதிருப்தி காரணமாக, 10 வாக்காளர்களில் ஆறுக்கும் அதிகமானவர்கள் தேசிய நாடாளுமன்றத்தில் மக்ரோன் பெரும்பான்மை பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் ஒரு சமூக எதிர்புரட்சியை தொடுப்பதே மக்ரோனின் நோக்கமாகும். ஒரு முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சருமான இவர், இரண்டாம் உலக போர் மற்றும் நாஜி ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய பிரான்சின் மிகவும் வலதுசாரி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு திட்டமிடுகிறார். இவர் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வர; பாரியளவில் இராணுவ செலவுகளை அதிகரிக்க; அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி உள்ள சோசலிஸ்ட் கட்சியின் அவசரகால நெருக்கடி நிலையைப் பேண; நாடெங்கிலும் தொழிலிடங்களில் உள்ள ஒப்பந்தங்களை திருத்தி எழுதவும், இரத்து செய்யவும் சோசலிஸ்ட் கட்சியின் மக்கள்விரோத தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்த அழைப்புவிடுத்துள்ளார்.

La République en Marche (குடியரசு அணிவகுப்பு) இயக்கத்தின் வேட்பாளர் பட்டியல் குறித்து நேற்று வெளியான ஆரம்ப விபரங்கள், அது தொழிலாள வர்க்கத்திலிருந்து முற்றிலுமாக விலகி, ஏறத்தாழ சுத்தமான இரசாயன கலவை போல வங்கிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கலவையாக இருப்பதை உறுதிப்படுத்தியது. REM வேட்பாளராக இதுவரையில் பெயரிடப்பட்டவர்களில் மிகவும் முக்கிய பிரமுகர், RAID பொலிஸ் சிறப்புப்படை பிரிவின் முன்னாள் தலைவர் Jean-Michel Fauvergue ஆவார்.

La République en Marche இயக்க செய்திக்குறிப்பில் விரிவான விபரங்களின் விடயமாக உள்ள 16 வேட்பாளர்களில், நான்கு வணிக அதிபர்கள் அல்லது தலைமை செயல் நிர்வாகிகள், மூன்று ஆலோசனை நிறுவன செயலதிகாரிகள், இரண்டு பொருளாதார நிபுணர்கள், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு கல்வித்துறையாளர்கள், அரசு அல்லது அரசுத்துறைசாரா அமைப்புகளின் இரண்டு அதிகாரிகள், மற்றும் ஒரு போர்விமான விமானி ஆகியோர் உள்ளடங்குவர்.

La République en Marche இயக்கத்தின் பிரபுத்துவ வர்க்க குணாம்சமானது, உயரடுக்கிற்கான தேசிய நிர்வாக பள்ளி மற்றும் கிறிஸ்துவ இருத்தலியல்வாத (existentialist) மெய்யியலாளர் Paul Ricœur இன் ஒரு மாணவராக மக்ரோன் பெற்றுள்ள, ஜனநாயகம் மீதான அவரது சொந்த ஆழ்ந்த மனக்கசப்புகளைப் பிரதிபலிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி அமைச்சராக Le un சஞ்சிகைக்கு அவர் அளித்த 2015 நேர்காணலில், மக்ரோன் இந்த கண்ணோட்டங்களின் சில விபரங்களை வழங்கி இருந்தார். பிரெஞ்சு புரட்சியைக் குறித்து புலம்பிய அவர், பதினாறாம் லூயி மன்னனை 1793 பயங்கரத்தின் போது வரம்பிலா அதிகாரத்திற்கான நபர் என்பதிலிருந்து நீக்கி (இவ்வாறான ஒரு நபரை பிரெஞ்சு மக்கள் விரும்புவதாகவும், அவர்களுக்கு அவசியப்படுவதாகவும் மக்ரோன் நம்புகிறார்) தேசத்துரோக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, கியோட்டின் தலைவெட்டு கருவி மூலம் கொல்லப்பட்டார் என்ற உண்மைக்காக வருத்தப்பட்டார்.

ஜனநாயகம் "நடைமுறையளவில் ஏமாற்றுத்தனமாக" ஆகிவிட்டால் என்று Le un கேள்வி எழுப்பிய போது அவர் பின்வருமாறு பதிலளிக்கிறார்: “ஜனநாயக வழிமுறை மற்றும் அதன் செயல்பாடுகளில் ஒரு குறைபாடு உள்ளது. பிரெஞ்சு அரசியலில் அரசர் இல்லை, அடிப்படையில் அவர் இறப்பை பிரெஞ்சு மக்கள் விரும்பவில்லை என்றே நான் நம்புகிறேன். இந்தப் பயங்கரம், கூட்டு உணர்வில் மற்றும் புத்திஜீவிதத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது: இப்போது அரசர் இல்லை! இந்த வெற்றிடத்தை மற்றவர்களைக் கொண்டு நிரப்புவதற்கான முயற்சிகள் இருந்தன: இவை தான் நெப்போலியன் மற்றும் டு கோலின் தருணங்கள்,” என்றார்.

எவ்வாறிருப்பினும் இதுபோன்ற கண்ணோட்டங்களும் மற்றும் ஞாயிறன்று மக்ரோன் தனது வெற்றி உரையில் எடுத்த எடுப்பிலேயே லு பென்னுக்கு முழு மூச்சில் வழங்கிய "குடியரசு வணக்கமும்", நவ-பாசிசவாத ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் ஐ ஆதரித்த, முடியாட்சி கோட்பாட்டு அரசியல்வாதி பிலிப் டு வில்லியே உடனான அவரின் நட்பான உறவுகளை அடிக்கோடிடுகிறது.

மக்ரோன் மற்றும் REM இயக்கம் மீதான ஊடக முகஸ்துதியானது, அனைத்திற்கும் மேலாக, France insoumise (அடிபணியா பிரான்ஸ்-FI) மற்றும் புதிய-முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சக்திகளது திவால்நிலைமையை சார்ந்துள்ளது. முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோன் 7 மில்லியன் வாக்குகளும், NPA அண்மித்து 1 மில்லியன் வாக்குகளும் வென்ற போதினும், அவற்றின் வாக்காளர்களுக்கு மக்ரோனை எதிர்ப்பதற்கான ஓர் அரசியல் முன்னோக்கை வழங்க வேண்டிய அவை, அவற்றின் பொறுப்பைத் தட்டிக்கழித்தன. அவை இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மரீன்-லு பென் மீது எந்த தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை, மாறாக மக்ரோனுக்கான அவற்றின் ஆதரவை தெளிவுபடுத்தின; மெலென்சோன் அவர் பிரதம மந்திரியாக ஆவதற்கும் கூட விருப்பம் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) மட்டுமே எந்த பிற்போக்குத்தன வேட்பாளர் வென்றாலும் அவருக்கு எதிராக போராட தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதற்காக, முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியில் ஒரு சுயாதீனமான முன்னோக்கை வழங்கி, ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அழைப்புவிடுத்தது. ஹோலாண்ட் இன் கீழ் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் தாக்குதல்களைக் குறைத்துக் காட்டும், மற்றும் தேசிய முன்னணிக்கு எதிராக மக்ரோனை ஜனநாயகத்திற்கான ஒரு நம்பகமான பாதுகாவலராக சித்தரித்தவர்களின் வாதங்களை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) நிராகரித்தது.

ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்டு, சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் தசாப்தங்களாக வேலை செய்திருந்த மெலோன்சோன் மற்றும் NPA போன்ற குட்டி-முதலாளித்துவ சக்திகளின் வழிதோன்றல்களுக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தசாப்த-கால போராட்டத்தின் மீது சோசலிச சமத்துவக் கட்சி அதன் எதிர்ப்பை அமைத்திருந்தது. குடியரசு அணிவகுப்பு இயக்கத்தின் (REM) சமூக அடித்தளத்துடன் கணிசமானளவிற்கு பொருந்தி உள்ள செல்வாக்கான நடுத்தர வர்க்க அடுக்குகளை இத்தகைய போலி-இடது கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன, மேலும் REM பிரான்ஸை நவீனப்படுத்தி, பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் என்பதால் அதை ஆதரிக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான வாதங்களுக்கு இவை பெரிதும் இயைந்து கொடுக்கின்றன.

சரமாரியான மக்ரோன்-ஆதரவு ஊடக பிரச்சாரம் உத்தியோகபூர்வ அரசியலுக்குள் இருந்து நடைமுறையளவில் எந்த எதிர்ப்பையும் முகங்கொடுக்கவில்லை என்றால், அது பெரிதும் போலி-இடதுகளின் சுயதிருப்தியினாலும், சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசு அணிவகுப்பு இயக்கத்துடன் அவை அரசியல்ரீதியில் உடந்தையாய் இருப்பதனாலும் ஆகும். சோசலிஸ்ட் கட்சி இப்போது ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் இருப்பதுடன், அதனை REM க்குள் கலைத்துக் கொள்ள ஆலோசித்து வருகிறது.

முதல் சுற்று ஜனாதிபதி தேர்தல்களில் அதன் வேட்பாளர் பெனுவா அமோன் வெறும் 6 சதவீதத்திற்கு சற்று அதிகமான வாக்கு பெற்றதற்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சி இப்போது சட்டமன்ற தேர்தல்களின் முதல் சுற்றில் 9 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை கூட வெல்லாது என்று காட்டும் கருத்துக்கணிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இது, 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் இருந்து பிரான்சின் பிரதான முதலாளித்துவ "இடது" கட்சி அரசாங்கமாக விளங்கிய சோசலிஸ்ட் கட்சி தேசிய நாடாளுமன்றத்திற்கு ஒரேயொரு பிரதிநிதியைக் கூட அனுப்பாமல் முற்றிலுமாக துடைத்தழிக்கப்படும் ஒரு நிலைமையை உருவாக்கும்.

இது சோசலிஸ்ட் கட்சிக்குள் கொந்தளிப்பான விவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளதுடன், கட்சி எந்திரத்தின் பெரும் பிரிவுகள் சோசலிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு, முற்றிலும் வெற்றுத்தனமாக மற்றும் மோசடியான இயல்பில் கூட சோசலிசம் என்பதை எவ்விதத்திலும் குறிப்பிடாத பெயரைக் கொண்ட ஒரு அமைப்பை மறுகட்டுமானம் செய்ய அழைப்புவிடுகின்றன. சோசலிஸ்ட் கட்சியின் கணிசமான பிரிவுகள் இப்போது மூழ்கிக் கொண்டிருக்கும் அக்கப்பலில் இருந்து தப்பியோடி, REM வழியாக தம்மை மறுசுழற்சி செய்து கொள்ள முயன்று வருகின்றன.

சோசலிஸ்ட் கட்சி "உயிரிழந்துவிட்டது, நிஜமாகவே மரணித்துவிட்டது" என்று சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலர் ஜோன்-கிறிஸ்டோப் கம்படெலிஸ் இன் மே 2 அறிக்கைக்குப் பின்னர், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் இவ்வாரம் RTL வானொலிக்கு கூறுகையில், சோசலிஸ்ட் கட்சி "எங்களுக்குப் பின்னால் உயிரிழந்துவிட்டது" என்றும், REM சட்டமன்ற வேட்பாளராக அவர் நிற்க விரும்புவதாகவும் அறிவித்தார்.

வால்ஸ் இன் தந்திரம் இப்போது அவரை திருப்பி தாக்கியுள்ள நிலையில் —ஹோலாண்ட் அரசாங்கத்திற்குள் மக்ரோன் வால்ஸ்க்கு போட்டியாளராக இருந்தார், REM, அதன் வேட்பாளராக அவரை ஏற்க மறுத்துள்ளதுடன், அதேவேளையில் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து அவரை வெளியேற்ற அவருக்கு எதிராக அக்கட்சி வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது— சோசலிஸ்ட் கட்சியின் பெரும்பாலான பிரிவுகள் அவர் பாதையையே பின்தொடர யோசித்து வருவது இப்போது தெளிவாகி உள்ளது. இப்போதைக்கு, REM இன் மொத்தம் 24 சட்டமன்ற வேட்பாளர்களும் சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே பதவி வகித்தவர்களாவர்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் இருப்பவை வெளிப்படையாக மற்றும் வன்முறையானரீதியில் சோசலிசத்திற்கு எதிராக திரும்புவதானது, பிரான்சிலும் ஐரோப்பாவெங்கிலும் தயாராகி வருகின்ற ஒரு பரந்த வெடிப்பார்ந்த சமூக வெடிப்புகளை அர்த்தப்படுத்துகின்றது. சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்தை மக்களில் 70 சதவீதத்தினர் எதிர்க்கின்ற நிலையில், மக்ரோன் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்காக அதை பயன்படுத்துவார், மேலும் கட்டாய இராணுவ சேவையை மீட்டமைப்பதற்கான மக்ரோனின் திட்டங்களுக்கு இளைஞர்களில் 64 சதவீதத்தினர் ஏற்கனவே விரோதமாக உள்ளனர் என்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிசத்திற்கான ஒரு பலமான ஆதரவாளர் இருக்கின்றனர். சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள குட்டி-முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிராக, இந்த சக்திகளை நோக்கித்தான் சோசலிச சமத்துவக் கட்சி (PES) அதன் வேலைகளை மற்றும் அதன் போராட்டத்தை நோக்குநிலைப்படுத்தி உள்ளது.