ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Visiting Mali, French President Macron appeals for army’s support

மாலி விஜயம், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இராணுவ ஆதரவிற்கு வேண்டுகோள் விடுக்கிறார்

By Francis Dubois
22 May 2017

இமானுவல் மக்ரோன் ஐரோப்பாவிற்கு வெளியே அவரது முதல் உத்தியோகபூர்வ பயணமாக, பார்கான் நடவடிக்கை (Operation Barkhane) என்ற பின்னணியில் 1,700 பிரெஞ்சு துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள மாலியின் காவோ (Gao) இராணுவ தளத்திற்கு மே 19 அன்று விஜயம் செய்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி அங்கே பிரெஞ்சு இராணுவத்திற்கு முழுமூச்சுடன் புகழாரம் செலுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் இப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜோன்-ஈவ் லு திரியோன் மற்றும் இராணுவப் படைகளுக்கான புதிய அமைச்சர் சில்வி குலார் ஆகிய இரண்டு அமைச்சர்களும் மற்றும் இராணுவ தலைமை படை தளபதியும் அவர் உடன் சென்றனர்.

அவர் அங்கே கூடியிருந்த துருப்புகளுக்கு வழங்கிய 20 நிமிட நேர உரையில் கூறுகையில், “எனது பதவி காலத்தில், தேசத்தின் ஜீவ நாடிகளிலேயே … நான் பிரெஞ்சு இராணுவத்திற்கே முதலிடம் கொடுக்க விரும்புகிறேன்,” என்றார். பின்னர் அவர், “நமது போற்றத்தக்க இராணுவ பாரம்பரியத்தை" மற்றும் படைகளின் "தவறுக்கிடமற்ற ஒற்றுமையுணர்வை" புகழ்ந்துரைத்த அவர், இராணுவப் படைகள் "அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் ஒரு முன்னுதாராணம்" என்றழைத்தார்.

ஆபிரிக்காவில் பிரான்சின் கடந்த காலனித்துவ காலத்தைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “இக்கண்டத்தில் இராணுவத்தினரின் பல தலைமுறைகள் இருந்துள்ளன, குடியரசின் முன்னணி படையாக இங்கே நீங்கள் இருக்கிறீர்கள்,” என்றார்.

படைத்துறை தலைமை தளபதியாக அவர் வகிக்கவிருக்கும் பாத்திரம் குறித்து வலியுறுத்திய பின்னர், நிறைவாக அவர் கூறுகையில், “நான் முழுமையாக உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எல்லா சூழ்நிலைகளிலும் நான் உங்களை நம்பலாம் என்பது எனக்கு தெரியும், அதை போலவே நீங்களும் என்னை நம்பலாம்,” என்றார்.

மாலியில் பிரெஞ்சு இராணுவ தலையீடானது, ஊடகங்கள் கடமையுணர்வோடு தம்பட்டமடித்த, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" "தாக்குமுகப்பாக" கொண்டுள்ளது என்ற ஓய்ந்து தேய்ந்து போன பொய் வாய்வீச்சுக்களையே மக்ரோன் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் உண்மையில் பிரான்ஸ், அதன் நேட்டோ கூட்டாளிகளைப் போலவே, சாஹெலில் அது சண்டையிட்டு வருவதாக கூறும் அதே பயங்கரவாத சக்திகளையே சிரியாவில் அதன் ஆட்சி மாற்றத்திற்கான போரில் கூட்டாளிகளாக பயன்படுத்துகிறது.

உண்மையில், ஏனைய நோக்கங்கள் எல்லாம் பணயத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதையே இந்த "முன்னுரிமை" விஜயத்தின் அரசியல் உள்ளடக்கம் எடுத்துக்காட்டுகிறது. அல்ஜீரிய போருக்குப் பின்னர் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் மிக ஆழமான நெருக்கடிக்கு இடையே மக்ரோன் மாலி சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சி (PS) வாக்குகள் சிதைந்து போயிருப்பதுடன் கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸை ஆட்சி செய்து வந்துள்ள இருகட்சி ஆட்சிமுறையும் பொறிந்து போயுள்ளது, அதேவேளையில் முதலாளித்துவ வர்க்கமோ தொழிலாளர்கள் மீது முன்னொருபோதும் இல்லாதளவில் சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவ செலவின அதிகரிப்புகளைத் திணிக்க திட்டமிட்டு வருகிறது.

முதல் சுற்று ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 7 அன்று சிரியா மீதான அமெரிக்க ஏவுகணை தாக்குதல்களுக்குப் பின்னர் ஜோன்-லூக் மெலோன்சோனின் வாக்குகள் திடீரென அதிகரித்ததில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டவாறு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்திருந்த நிலையில், அதை ஒடுக்குவதற்காக அவசரகால நெருக்கடி நிலை ஏற்கனவே மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டு நடைமுறையளவில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் L'Obs சஞ்சிகை வெளியிட்ட சம்பவமான, ஜனாதிபதி தேர்தல்களில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென் வென்றிருந்தால் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடத்த சோசலிஸ்ட் கட்சி தயாரிப்பு செய்திருந்தது என்பது வெடிப்பார்ந்த நிலைமைக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. நவ-பாசிசவாத போராட்டங்களை நசுக்குவதற்காக இராணுவச் சட்டத்தை திணிக்கவும் மற்றும் பாரியளவில் பாதுகாப்பு படைகளை அணிதிரட்டவும் சோசலிஸ்ட் கட்சி திட்டமிட்டிருந்தது. லு பென் பதவி ஏற்றிருந்தாலும், சோசலிஸ்ட் கட்சி அமைச்சரவை பதவி விலக மறுத்திருக்கும். இந்த செய்தி உத்தியோகபூர்வமாக மறுக்கப்படவில்லை என்பதோடு இதற்கு எந்த பிரதிபலிப்பும் காட்டப்படவில்லை.

சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை விட இன்னும் அதிகமாக, மக்ரோன் பாதுகாப்பு படைகளுடனான அவரது உறவுகளைச் சார்ந்து வருகிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது Champs-Elysées வீதிக்கு ஓர் இராணுவ வாகனத்தில் வந்திறங்கியும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை இராணுவப் படைகளுக்கான அமைச்சகம் என்று பெயர் மாற்றியும், அவர் படைகளை அவரது கொள்கையின் மையத்தில் நிறுத்துவார் என்பதை தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மக்ரோன் மீண்டும் மீண்டும் சமிக்ஞை செய்துள்ளார்.

நேட்டோ சக்திகளது உலகெங்கிலுமான இராணுவ நடவடிக்கைகளின் பாரிய விரிவாக்கத்திற்கு இடையே, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆபிரிக்காவில் மிகப் பெரியளவில் தீவிரப்பாட்டிற்கு தயாரிப்பு செய்து வருகிறது. அப்பிராந்தியத்தில் நடவடிக்கைகளை அவர் "வேகப்படுத்த" விரும்புவதாக மக்ரோன் காவோவில் அறிவித்தார். இன்னும் அதிக ஆதாரவளங்கள் மற்றும் சாதனங்களுக்கான தளபதிகளின் கோரிக்கைகளுக்கு அவர் அனுகூலமாக விடையிறுப்பார் என்பதை மக்ரோன் ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளார்.

ஆனால் "போரில் உள்ள படையை" நோக்கிய மக்ரோனின் விஜயம், அனைத்திற்கும் மேலாக, அதனுடன் பிணைந்துள்ள அவர் அரசாங்கத்தின் அரசியல் உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

பிரான்சுக்குள் தலையீடு செய்ய கேட்டுக் கொண்டால் படை சாதகமாக விடையிறுக்குமா மற்றும் அவர் அரசாங்கத்தின் நிலைமை மோசமடைந்தால் அதனை பாதுகாக்க படைகளை நம்பகமானரீதியில் கணக்கில் கொள்ளலாமா என்பதை பரிசோதிப்பதே அவர் விஜயத்தின் நோக்கமாக இருந்தது. காவோவில் படைகளைக் குறித்து மக்ரோன் என்ன கூறினாரோ அது ஆபிரிக்க நடவடிக்கைகளைக் காட்டிலும் மிகவும் அப்பட்டமாக உள்ளது: “நீங்கள் எமது காவல்படை, எமது காப்பரண் என்பதையும் விட முக்கியமானவர்கள்,” என்றார்.

இங்கே தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கைப்படுத்துவது அவசியமாகிறது: பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சமூக எதிர்புரட்சி மற்றும் போர் கொள்கை தொழிலாள வர்க்கத்தில் ஆழ்ந்த எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்பதிலும், ஒடுக்குமுறை இல்லாமல் அக்கொள்கைகளை திணிக்க முடியாது என்பதிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் துல்லியமாக நனவுபூர்வமாக உள்ளது. அது பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் புரட்சிகர போராட்டங்களை முகங்கொடுக்க நனவுபூர்வமாக தயாரிப்பு செய்து வருகிறது.

ஓர் ஏகாதிபத்திய நாட்டின் காலனித்துவ படை வெறுமனே வெளிநாட்டை வெற்றிக் கொள்வதற்கும் மற்றும் வெளிநாட்டு மக்களை அடிபணிய செய்வதற்குமான ஒரு கருவி மட்டுமல்ல. அது அதன் சொந்த நாட்டிலேயே கூட அரசியல் சமநிலைக்காக ஒரு மிகப்பெரிய பிற்போக்குத்தனமான பாத்திரம் வகிக்கிறது. வெளிநாடுகளில் அதன் நோக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் என்னவோ அது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கும் பொருத்தமாக ஆகிவிடுகிறது.

மக்ரோன் அதிகாரத்திற்கு வந்து வெறுமனே ஒரு வாரம் தான் ஆகி உள்ளது, அதற்குள் அவர் மக்கள் மதிப்பிழந்துள்ளார். Les Echos க்காக நடத்தப்பட்ட Elabe கருத்துக்கணிப்புகளின்படி, இந்த புதிய ஜனாதிபதியின் செல்வாக்கு விகிதம் வெறும் 45 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த புதிய ஜனாதிபதி "அவருக்கு முன்பிருந்த எவரைக் காட்டிலும் மிகக் குறைந்த ஆதரவுடன் எலிசே மாளிகைக்குள்" நுழைவதாக Les Echos குறிப்பிட்டது, மேலும் அவரது பிரதம மந்திரிக்கு வெறும் 36 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவர் எடுத்த அனைத்து அரசியல் முடிவுகளும் மற்றும் அறிவித்த அறிவிப்புகளும், அவர் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறார் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல் நெருக்கடியின் ஆழத்தைக் குறித்தும், மக்ரோன் அரசாங்கமும் அதன் சர்வதேச கூட்டாளிகளும் முன்னிறுத்தும் ஆபத்தைக் குறித்தும் முழுமையாக நனவுபூர்வமாக இல்லை என்பது தான் மிகப் பெரிய அபாயமாகும்.

நாட்டின் இந்த நிலைக்கு முழு பொறுப்பும், முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மக்ரோனை எதிர்த்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளான, மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (France Insoumise - FI) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றையே சாரும். அவை மக்கள் முகங்கொடுத்துள்ள அதிகரித்து வரும் அபாயங்களைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கவே இல்லை.

FI இன் பத்திரிகை தொடர்பு அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கூறுகையில், சதித்திட்டம் தீட்டிய சோசலிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றனர், மேலும் அந்த இயக்கத்தின் செய்திதொடர்பாளர்கள் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் இருக்கின்ற போதினும் இவ்விடயத்தில் மௌனமாக உள்ளனர். NPA ஐ பொறுத்த வரையில், ஆழமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அளவிற்கோ அல்லது படிக்க வேண்டிய அளவிற்கோ கூட தகுதியற்ற பரபரப்பூட்டும் இதழியல் செய்திகள் என்பதாக அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த செய்திகளை NPA இன் பத்திரிகை தொடர்பு அதிகாரிகள் உதறிவிட்டனர். அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் NPA அங்கத்தவர்கள் ஏற்கனவே போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டுள்ள போதினும் கூட, NPA இச்செய்தியை எந்தவித முக்கியத்துவம் இல்லாததாக கையாள்கிறது.

பிரான்சில் "இடது" என்றும் அல்லது "தீவிர இடது" என்றுமே கூட தசாப்தங்களாக கூறி வந்த இந்த கட்சிகள் எல்லாம், சோசலிஸ்ட் கட்சி நடத்திய அடிப்படை ஜனநாயக சுதந்திரங்கள் மீதான தாக்குதல்களுக்கும், புதிய அரசாங்கத்தின் கீழ் மக்ரோன் தயாரிப்பு செய்து வருகின்ற அதனினும் அதிக கடுமையான தாக்குதல்களுக்கும் முற்றிலும் அலட்சியமாக உள்ளன. இது, பலதசாப்தங்களாக சோசலிஸ்ட் கட்சியைச் சுற்றி வந்து, அதனை தொழிலாள வர்க்க கட்சியாகவும் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடாகவும் முன்னிறுத்திய இந்த குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் திவால்நிலையை நிரூபணம் செய்கின்றன.