ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Conflict between Europe and America dominates NATO summit

நேட்டோ உச்சிமாநாட்டில் ஐரோப்பா அமெரிக்கா இடையிலான மோதல் ஆதிக்கம் செலுத்துகிறது

Johannes Stern
26 May 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் ஐரோப்பிய சுற்றுப்பயணம் அட்லாண்டிக்கடந்த நேட்டோ கூட்டணியில் ஆழமான பிளவு நிலவுவதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

உத்தியோகபூர்வரீதியாய், அத்தனை அங்கத்தவர்களும் பாதுகாப்பு செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதமாக உயர்த்துவதற்கும் ISக்கு (இஸ்லாமிக் ஸ்டேட்) எதிரான அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் இந்த கூட்டணி இணைவதற்கும் நேற்றைய நேட்டோ உச்சிமாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆயினும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள், அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான மோதல்கள், மறைப்பதற்கு மேலும் மேலும் கடினமாகி வருகின்ற அளவுக்கு மிகவும் கூரியவையாக இருக்கின்றன.

அந்த மாலையின் “வேலை விருந்து”க்கு முன்பாக, வெளிப்பட கவலை தொனிக்க இருந்த ஐரோப்பிய தலைவர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார். “28 உறுப்பு நாடுகளில் இருபத்தி மூன்று இப்போதுவரை அவை என்ன தொகை செலுத்த வேண்டுமோ அதை செலுத்துவதில்லை” என்று பொரிந்தார் அமெரிக்க ஜனாதிபதி. இது “அமெரிக்காவின் மக்களுக்கும் வரிசெலுத்துவோருக்கும்” அநீதி இழைப்பதாகும் என்றார். பின் ட்ரம்ப், உறுப்பு நாடுகளில் பலவும் முந்தைய ஆண்டுகளின் “பாரிய பெரும் தொகையை” கூட்டணிக்கு கடன்பட்டிருக்கிறது என்ற தனது திட்டவட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

நேட்டோ அரசுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்துகிறது என்று அறிவித்த ட்ரம்ப் “நாம் கடுமையாக இருக்க வேண்டும், வலிமையாக இருக்க வேண்டும், விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார். “வருங்காலத்தின் நேட்டோவானது பயங்கரவாதம் மற்றும் புலம்பெயர்வு, அத்துடன் ரஷ்யாவிடம் இருந்தும் நேட்டோவின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளிலுமான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மீதான ஒரு பெரும் கவனக் குவிப்பையும் உள்ளடக்கியதாக இருந்தாக வேண்டும்.”

ட்ரம்ப் எச்சரிப்பதற்கு சற்று முன்பாக, ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் இராணுவ செலவினங்களில் ஜேர்மனி திட்டமிட்டிருக்கும் அதிகரிப்பு போதுமானது என்று விவரித்தார். பாதுகாப்புச் செலவினத்தை உயர்த்துவதற்கு 2014 இல் நேட்டோ உடன்பட்டதை உறுதிசெய்வதை மட்டுமே அது மேற்கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். “உறுதிசெய்யப்பட்டது என்பதன் அர்த்தம் அதற்கு அதிகமாக ஏதுமிருக்கவில்லை குறைவாகவும் ஏதுமிருக்கவில்லை” என்றார் அவர்.

ட்ரம்ப்பின் கூற்றுகள், எல்லாவற்றுக்கும் மேல் ஜேர்மனியைக் குறிவைத்தே சொல்லப்பட்டன என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோன் குளோட் ஜுங்கர் மற்றும் கவுன்சில் தலைவரான டொனால்ட் டுஸ்க் ஆகியோருடனான ஒரு சந்திப்பின் போது ட்ரம்ப் “ஜேர்மனியர்கள் மோசமானவர்கள், படுமோசமானவர்கள்” என்று கூறியதாக ஜேர்மனியின் செய்தி நிறுவனமான Der Spiegel கூறியது. “அவர்கள் அமெரிக்காவில் மில்லியன் கணக்கில் விற்றுக் கொண்டிருக்கும் கார்களை பாருங்கள். மோசமானது. நாங்கள் அதை தடுத்துநிறுத்தப் போகிறோம்.”

மார்ச்சில் மேர்க்கெல் வாஷிங்டன் பயணம் சென்றுவந்த சற்று காலத்திற்குப் பின் ட்ரம்ப் ட்விட்டரில் எழுதினார்: “ஜேர்மனி நேட்டோவுக்கு மிகப்பெரும் தொகைகளை கடன்பட்டிருக்கிறது அத்துடன் அமெரிக்கா ஜேர்மனிக்கு வழங்கியிருக்கக் கூடிய சக்திவாய்ந்த, மிக செலவுமிகுந்த பாதுகாப்புக்காக அமெரிக்காவுக்கு இன்னும் நிறைய செலுத்தப்பட வேண்டும்!.”

அது முதலாகவே, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பொருளாதார மற்றும் புவிமூலோபாய மோதல்கள் தீவிரப்பட்டிருக்கின்றன. சென்ற வார இறுதியில் சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில் ஈரானை “மிக முக்கியமான பயங்கரவாத ஆதரவு” நாடாக விவரித்து ட்ரம்ப் ஆற்றிய உரை, ஐரோப்பாவில் கடுமையான விமர்சனத்திற்கு முகம்கொடுத்தது. ஜேர்மனி ஈரானுடன் போரை எதிர்பார்க்கவில்லை, மாறாக புதிய எரிசக்தி விநியோகத்திற்கும் ஜேர்மன் ஏற்றுமதிகளுக்கான சந்தைகளுக்கும் அந்த நாட்டை திறந்து விடுவதற்கே எதிர்பார்க்கிறது.

சீனாவுடனான அமெரிக்காவின் மோதலையும் -ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டிருந்த இது ட்ரம்ப்பின் கீழ் மூர்க்கத்துடன் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது- ஜேர்மனி எதிர்க்கிறது. சீனா ஜேர்மன் வாகன உற்பத்தித் துறையின் இலாபங்களுக்கான ஒரு முக்கியமான மூலவளமாக இருக்கிறது என்பதோடு, ஐரோப்பாவுடன் வர்த்தக உறவுகளை விருத்தி செய்வதற்கு வளைகுடா பகுதியையும் ரஷ்யாவையும் ஒருங்கிணைக்க நோக்கம் கொண்டிருக்கும் சீனாவின் புதிய “பட்டுப் பாதை” திட்டத்திலும் ஜேர்மனி ஆர்வம் கொண்டிருக்கிறது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் தனது சீன பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தான் நேட்டோ கூட்டத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ட்ரம்ப் பதவியேற்று ஒரு வார காலத்திற்குப் பின்னர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த காப்ரியல் அதன் சற்று காலத்திலேயே ”அமெரிக்காவால் காலிசெய்யப்பட்டிருக்கும் வெற்றிடங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான” ஒரு ஆசிய மூலோபாயம் உருவாக்கப்படுவதை அறிவித்தார்.

புரூசெல்ஸ் கூட்டத்திற்கு முன்பாக, காப்ரியல் SPDயின் (ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி) சான்சலர் வேட்பாளர் மார்டின் ஷூல்ஸ் உடன் சேர்ந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு எதிராய் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடக்கினார். 2024க்குள்ளாக ஜேர்மனியின் பாதுகாப்புச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இருவரும் விமர்சனம் செய்தனர். “ஜேர்மனியில் இராணுவச் செலவினத்தை இரட்டிப்பாக்கி கொள்ள முற்றிலும் எந்த வழியும் இல்லை” என்று ஒரு நேர்காணலில் தெரிவித்த காப்ரியல், “நாங்கள் எதில் பணத்தை செலவிடுவோம் என்பதெல்லாம் தெரியாது” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

“அமைதியில் முதலீடு செய்யுங்கள்-ஆயுதங்களில் அல்ல” என்ற தலைப்பில் Der Spiegel இல் வெளியான ஒரு தலையங்கப் பக்க கட்டுரையில் ஷூல்ஸ், “நேட்டோவின் 2 சதவீத இலக்காக சொல்லப்படுவது குறித்த விவாதமானது” ஒரு ”அபாயகரமான போக்கை” வெளிப்படுத்தியதாக எச்சரித்தார். இது ”ஜேர்மனியின் வருடாந்திர பாதுகாப்புச் செலவினத்தை 70 பில்லியன் யூரோ எனும் பிரம்மாண்டமான அளவிற்கு இரட்டிப்பாக்குவது என்று அர்த்தமளிக்கும்”. அதன்பின் பாசாங்குத்தனத்துடன் அவர் கேட்டார், “1949 இல் ஜேர்மனியின் ஸ்தாபகத் தந்தைகள் இந்த சித்திரத்தையா தங்கள் முன் கொண்டிருந்தனர்? ஐக்கியப்பட்டதாக, ஐரோப்பாவில் முழுமையாக ஒருங்கிணைந்ததாக, நண்பர்களாலும் கூட்டாளிகளாலும் சூழப்பட்டதாக- மாறாக உடல் முழுக்க ஆயுதம் தரித்ததாகவா?”.

உண்மையில், ஷூல்ஸின் கருத்துக்கும் சமாதானவாதத்திற்கும் சம்பந்தம் ஏதுமில்லை. இராணுவச் செலவினத்தைக் குறைப்பதல்ல அவரது கவலை, மாறாக அமெரிக்காவில் இருந்து ஜேர்மனி சுயாதீனமாக இருப்பதை உறுதிப்படுத்துவதே அவரது அக்கறையாகும். இராணுவக் கொள்கை, வெள்ளை மாளிகையால் உத்தரவிடப்படுவதை அவர் விரும்பவில்லை, மாறாக ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய இராணுவங்கள் அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்டும், அதற்கு எதிராகவும் கூட, செயல்படுமளவுக்கு அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரின் எண்ணமாய் இருக்கிறது.

ஷூல்ஸ் தனது Spiegel Online பின்னூட்டத்தில் ஜேர்மன் இராணுவம் பாரிய அளவில் கட்டியெழுப்பப்படுவதற்கும் வெளிநாட்டில் கூடுதலான இராணுவத் தலையீடுகளில் ஈடுபடுவதற்கும் விண்ணப்பம் வைத்தார். அவர் எழுதினார்: “வருங்காலத்தில் சர்வதேச சட்டத்திற்கு இணங்கிய தலையீடுகளில் இராணுவம் பங்கேற்கும். அதற்கு நமது படையினர்களுக்கு ஆகச் சிறந்த சாதனங்கள் தேவை.”

அதேநேரத்தில், ஐரோப்பாவின் பாதுகாப்புக் கொள்கை விரிவாக்கம் செய்யப்படுவதற்கும் ஜேர்மனியின் மேலாதிக்கத்தில் ஒரு ஐரோப்பிய இராணுவம் உருவாக்கப்படுவதற்கும் ஷூல்ஸ் கோரினார்: இறுதியில் ஐரோப்பா “ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கொள்கை விடயத்தில் முன்னேற்றம் காணவேண்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இதே இலக்கைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் நமது கூட்டாளிகளுடன் இணைந்து, ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு ஒன்றியம் விடயத்தில் உடன்பாடு காண நாங்கள் விரும்புகிறோம்.” ”இது விடயத்தில் எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வந்திருக்கும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி” இருப்பது இதற்கு “புதிய சந்தர்ப்பங்களை” வழங்குகிறது.

அமெரிக்காவிடம் இருந்து சுயாதீனப்பட்டும் அதற்கு எதிராகவும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய நலன்களை பின்பற்றிச் செல்கின்ற ஒரு ஜேர்மானிய மற்றும் ஐரோப்பிய வல்லரசுக் கொள்கைக்கு ஷூல்ஸ் அழைப்பு விடுக்கிறார் என்பது ஐயத்திற்கிடமில்லாததாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக “ஒதுங்கியிருப்பதை விட்டுவிட்டு அமைதிக்கான சர்வதேசக் கொள்கையின் அரங்கில் ஒரு செயலூக்கமான பாத்திரத்தை ஏற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இது “அசவுகரியமானது” என்பதுடன் “நிச்சயமாக பல்தரப்பட்ட விவாதங்களுக்கும் வழிவகுக்கும்.” ஆயினும் “ஐரோப்பாவுக்கான ஒரு கூடுதல் செயலூக்கமான பாத்திரம்” என்பதற்கு “எந்த உருப்படியான மாற்றும்” இல்லை. அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “ஏனென்றால் நமது கூட்டாளிகளாக இருப்பவர்களும் உள்ளிட மற்ற உலகளாவிய அரசியல் செயற்பாட்டாளர்களில் பலருக்கும் அமைதிக்கான இத்தகையதொரு புதிய கொள்கையில் சுத்தமாய் ஆர்வமில்லாமல் இருக்கிறது அல்லது மிகக் குறைந்த ஆர்வம் தான் இருக்கிறது.” 

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அமெரிக்க இராணுவவாதத்திற்கான ஒரு சமாதானவாத மாற்றாக முன்வைப்பதற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற முயற்சி ஒரு மோசடியாகும். கடந்த கால்-நூற்றாண்டு காலத்தில், ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டிருந்த சட்டவிரோதமான மூர்க்கத்தன போர்களில் பங்குபெற்றிருக்கின்றன என்பதுடன் ஒட்டுமொத்தமாய் பார்த்தால் அமெரிக்க அரசின் தலைமையில் இருக்கும் மல்டிபில்லியனரால் முன்தள்ளப்படுவனவற்றை ஒத்த கொள்கைகளையே இப்போது பின்பற்றிக் கொண்டிருக்கின்றது. அவை ஐரோப்பா முழுமையிலும் சமூகநல செலவுகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன, இராணுவப் பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன, அரசு எந்திரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்களின் அமெரிக்க ”கூட்டாளி”க்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அவை தயாரிப்பை மேலும் மேலும் அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த அபாயகரமான அபிவிருத்திக்கான காரணம், உற்பத்தியின் சர்வதேசத் தன்மைக்கும் தேசிய அரசு-அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாட்டை வெல்லும் திறனற்றதாக இருக்கும் முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடியிலேயே காணத்தக்கதாகும். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை ஒட்டிய காலத்தில் போலவே, கச்சாப் பொருட்களுக்கும், சந்தைகளுக்கும், செல்வாக்கு வட்டங்களுக்குமாய் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் நிலவுகின்ற போட்டியானது, தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு தலையிடாத பட்சத்தில் தவிர்க்கவியலாமல் பெரியதொரு போரில் சென்று முடியக்கூடியதாக இருக்கின்ற கூர்மையான மோதல்களை தூண்டிக் கொண்டிருக்கிறது.