ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017

The rise of economic nationalism and protectionism

மே தினம் 2017

பொருளாதார தேசியவாததத்தினதும் பாதுகாப்புவாதத்தினதும் வளர்ச்சி

By Nick Beams
2 May 2017

இது ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரும், 1985 இல் இருந்து 2015 வரை அதன் தேசிய செயலராக இருந்த நிக் பீம்ஸ் ஏப்ரல் 30 இல் நடத்தப்பட்ட 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் வழங்கிய உரையாகும்.

2008 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததில் இருந்து ஏறத்தாழ ஒரு தசாப்த காலம் ஆகிவிட்டது.

இதை உருவாக்கிய முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் அனைத்தும் இக்காலப்பகுதியில் ஆழமடைந்து, தீவிரமடைந்துள்ளன.

2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்திற்கு நிக் பீம்ஸின் பங்களிப்பு

இந்நிகழ்வு ஏதோ தற்காலிகமானதோ அல்லது கடந்து சென்று விடக்கூடிய வணிக சுழற்சியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமோ அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு முறிவு என்பதை அக்காலப்பகுதியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) அதன் பகுப்பாய்வில் வழங்கியது.

ஆளும் வர்க்கங்கள் அவற்றின் மத்திய வங்கிகளைக் கொண்டு உலகளாவிய நிதியியல் அமைப்புக்ககுள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி பெரும்பிரயத்தனத்தோடு தலையீடு செய்ததால், 1930களின் பெருமந்தநிலை அளவிலான ஒரு பொறிவை ஆளும் வர்க்கங்களால் தடுக்க முடிந்திருந்தது.

இருப்பினும் இந்த நிதியியல் உருகுதலுக்கு இட்டுச் சென்ற இந்த இலாபகர அமைப்புமுறையின் முரண்பாடுகளை அவர்களால் முற்றுமுழுதாக தீர்க்க முடியவில்லை. உண்மையில், அவர்கள் முன்னெடுத்த அந்த நடவடிக்கைகள், இந்த முரண்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த மட்டுமே செய்தன.

பொருளாதார ஆதாரவளங்களைக் குற்றகரமாக மற்றும் ஒட்டுண்ணித்தனமாக சூறையாடுவதற்கு ஒத்த முறையில், நிதியியல் மூலதனத்தின் வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியும் மற்றும் அதன் இலாப திரட்சி முறையுமே அந்நெருக்கடிக்கு உடனடி காரணமாக இருந்தது.

ஆனால் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியும் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளும் நிதியியல் ஊகவணிகர்களின் கரங்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வாரி வழங்கி வருகின்றன என்ற உண்மையின் காரணமாக, அந்நெருக்கடியைத் தூண்டிய அதே நடைமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்போது அதன் சமூக விளைவுகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னேறிய பொருளாதாரங்களாக இருக்கட்டும் அல்லது "எழுச்சி பெற்று வரும் சந்தைகள்" என்றழைக்கப்படுபவை ஆகட்டும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரேமாதிரியாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மோசமடைந்து வருகிறது.

நிஜமான சம்பளங்கள் தேக்கமடைந்து வரும் அதேவேளையில் உலகளாவிய வருவாயில் தொழிலாளர் பங்கு வீழ்ச்சி அடைந்து வருவதை உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான பொது செலவினங்கள், உலகளாவிய நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்கு இணங்க, வெட்டப்பட்டு வருகின்றன.

மில்லியன் கணக்கான வயதுமுதிர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் முந்தைய வேலைவாய்ப்புகளில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டு, இப்போது ஒரு மோசமான காலவரையறைக்குட்பட்ட வேலைகளில் உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அதேவேளையில், கல்வி பெறும் முயற்சியில் அதிகளவில் கடன்பட்டுள்ள இளைஞர்களால் கண்ணியமான சம்பளத்தில் நிரந்தர வேலைவாய்ப்பைக் காண முடியவில்லை.

உலகின் மக்கள்தொகையில் பாதி பேரின் மொத்த செல்வ வளம் அளவிற்கு எட்டு பில்லியனர்களிடம் குவிந்துள்ளது என்றளவிற்கு, செல்வ வள திரட்சியானது முதலாளித்துவ சமூகத்தின் உயர்மட்டங்களில் குவிந்துள்ளது.

கடந்த வாரயிறுதியில் சர்வதேச நாணய நிதியம் அதன் வசந்தகால கூட்டத்தில் வலியுறுத்துகையில், உலகளாவிய பொருளாதாரம் ஒரு "சுழற்சி முறையிலான மீட்சியை" அனுபவித்து வருவதாக குறிப்பிட்டது.

ஆனால் அது நம்பிக்கை வளர்க்கும் ஒரு சித்திரத்தைச் சித்தரிக்க முயன்ற அதேவேளையில், உற்பத்தி வளர்ச்சியானது தசாப்தங்களாக அதன் மிகக் குறைந்த புள்ளியில் இருப்பதாகவும், உலக வர்த்தக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் குறைவு இருப்பதாகவும், முந்தைய நிலைமைகள் திரும்பவில்லை என்பதையும் அது ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

உண்மையில் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று வீழ்ச்சி, 1930 களின் பொருளாதார முரண்பாடுகளுக்கும் மற்றும் 1939 இல் போர் வெடிப்பதற்கும் இட்டுச் சென்ற அதே நிலைமைகளை இப்போது உருவாக்கி வருகிறது.

பிரதான முதலாளித்துவ சக்திகளின் தலைவர்கள் அனைத்து விதமான வர்த்தக பாதுகாப்புவாதமும் பெருமந்தநிலையில் தோற்றுவித்திருந்த பேரழிவுகரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, நிதியியல் உருகுதலுக்குப் பின்னர் உடனடியாக, அதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க சூளுரைத்தனர்.

கடந்த கால படிப்பினைகளைப் பெற்றுவிட்டதாகவும், வரலாறு மீண்டும் திரும்பாது என்றும் தங்களை தாங்களே பாராட்டிக் கொண்டனர்.

அதற்கடுத்தடுத்த பிரகடனங்கள் மற்றும் அறிக்கைகளில், அவர்கள் பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான அவர்களின் கடமைப்பாட்டைக் கையிலெடுத்தனர். இது கடைபிடிக்கப்பட்டதை விட பெரிதும் அதிகமாக மீறப்பட்டது, பொருளாதார வளர்ச்சி குறைந்திருந்த நிலையில் பிரதான முதலாளித்துவ சக்திகள் அதிக கட்டுப்பாடுகளை விதித்துடன், வர்த்தக வளர்ச்சி மெதுவாகி, சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த ஆண்டு இந்த நிகழ்வுபோக்கு பண்புரீதியில் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது.

முன்னர் வழமையாக கருதப்பட்ட “பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான" எந்தவொரு கடமைப்பாடும், முன்னணி உலகளாவிய பொருளாதார அமைப்புகள் அவற்றின் அறிக்கைகளில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு, இப்போது மிகவும் முரண்பாடாக மாறியுள்ளன. இது, சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டின் லகார்ட் வார்த்தைகளில் கூறுவதானால், “பாதுகாப்புவாதமெனும் போர்வாள்" தெளிவாக நிகழ்கால அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்து, உலக பொருளாதாரத்தின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கிறது என்ற உண்மைக்கு இடையே நடக்கின்றது. 1930 களைப் போலவே, முதலாளித்துவம் இப்போதும் பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான தேசியவாத "அமெரிக்கா முதலில்" திட்டநிரலே, சர்வதேச பொருளாதார உறவுகளின் நெருக்கடிக்கு உடனடி காரணமாகும்.

இந்த ஆட்சியின் நடவடிக்கைகள் —அதாவது பொருளாதார மற்றும் இராணுவ போர்முறையை நோக்கிய அதன் உந்துதல்— ஏதோவொருவித சித்தபிரமையின் விளைவு என்றோ, புத்திசாலித்தனமான தலைவர்களும் கொள்கைகளும் முன்னுக்கு வந்தால் இந்த கேட்டை ஒழித்துவிடலாம் என்றோ தீர்மானிப்பது மிகப் பெரிய பிழையாகவும், குறுகிய பார்வையாகவும் ஆகிவிடும்.

மிக நேரடியான மற்றும் உடனடி அர்த்தத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் வன்முறையானது ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளது மிகவும் பட்டவர்த்தனமான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், உலகம் முதலாம் உலகப் போரில் மூழ்கியது. அது "எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டு வரும் போராக" இருக்கவில்லை மாறாக யார் உலகளாவிய மேலாதிக்கத்தை ஏற்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் விரிவடைந்து, போர்களின் ஒரு தொடக்க காலமாக இருந்தது. ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியதுடன் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்கா ஒப்புயர்வற்ற உலகளாவிய சக்தியாக எழுச்சி பெற்றதை அக்காலக்கட்டம் கண்டது.

அணுசக்தி விளைவுகள் மற்றும் மக்கள் நாகரீக அழிவின் அச்சுறுத்தல் இப்போது எடுத்த எடுப்பிலேயே முன் நிற்பதுடன் சேர்ந்து, உலக எஜமானராக ஆவதற்கான ஒரு புதிய சண்டை எழுந்துள்ளது.

இந்த புதிய போர் காலகட்டமும், முதல் இரண்டு ஏகாதிபத்திய மோதல்களுக்கு இட்டுச் சென்ற உலக முதலாளித்துவத்தின் அதே தீர்க்கவியலாத முரண்பாடுகளால் உந்தப்பட்டு வருகிறது.

பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் கீழ், மேலாதிக்க சக்தியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் இடத்தைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும் இராணுவ வழிவகைகளைப் பேண முயன்று வருகிறது.

ஆனால் இவ்வாறு செய்கையில் அது உலக எஜமானராவதற்கான ஒரு புதிய சண்டையை தொடங்கி இருப்பதுடன், அதில் ஏனைய சகல ஏகாதிபத்திய சக்திகளும் கட்டாயம் —இறுதி பகுப்பாய்வில், இராணுவ வழிவகைகளைக் கொண்டு— அவற்றின் இடத்தை பேணுவதற்காக உள்நுழையும்.

முதலாம் உலக போர் வெடித்த போது, லியோன் ட்ரொட்ஸ்கி அதன் புறநிலை தோற்றுவாய்களை விளங்கப்படுத்தி, தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டிய மூலோபாயத்தை தொகுத்தளித்தார்.

அவர் குறிப்பிடுகையில், “முதலாளித்துவம் அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில், அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் முறையே போர்,” என்று எழுதினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் "உலக சோசலிச பொருளாதார அமைப்புமுறைக்கான அன்றைய தினத்திற்கு உகந்த ஒரு நடைமுறை வேலைத்திட்டத்தை" முன்னெடுத்து, அதன் சொந்த செயல்முறையான சோசலிசப் புரட்சியை கொண்டு அதை எதிர்க்க வேண்டும்,” என்றார்.

இது இன்றைக்கும் நிஜமாக பொருந்துகிறது. இந்த இலாபகர அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் ஒரேயொரு சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினையையோ அல்லது வேறு எந்தவொரு முக்கிய பிரச்சினையையோ தீர்க்க முடியாது.

ஆனால், மார்க்ஸ் வலியுறுத்தியதைப் போல, எந்தவொரு மிகப்பெரிய பிரச்சினையும், அதே நேரத்தில், அதன் தீர்வுக்குரிய சடரீதியிலான நிலைமைகளையும் உண்டாக்குகின்றன.

நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் நிதியியல் மூலதனத்தால் தோற்றுவிக்கப்பட்ட பூகோளமயப்பட்ட உற்பத்தியும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக உழைப்பின் ஒருங்கிணைவு, பரந்த உலகந்தழுவிய பொருளாதார தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புமுறைகள் என இவை ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும், போர், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்குமான அடித்தளங்களை உருவாக்கி உள்ளது. உலக தொழிலாள வர்க்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை அச்சாக கொண்டு, அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கு எதிரான அதன் போராட்டத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்.