ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US tests missile in Pacific as it escalates threats to North Korea

வட கொரியாவின் மீதான அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகையில் பசிபிக்கில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை நடத்துகின்றது

By Mike Head
26 April 2017

வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளையும், அச்சுறுத்தும் இராணுவ தாக்குதல்களையும் நிறுத்தவேண்டுமென கோரப்படுகின்ற நிலையில் அது அவ்வாறு செய்யவில்லையானால், இன்று ட்ரம்ப் நிர்வாகம் கலிஃபோர்னியாவிலிருந்து பசிபிக் ஊடாக தனது பலத்தை காட்டுவதற்காக அச்சுறுத்தலுடன் கூடிய ஒரு அணுஆயுத திறன்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையை நடத்தும்.

உலகளாவிய விமானப் படை தாக்குதல் கட்டளையகத்தின்படி, இந்த நடவடிக்கை ஆயுதங்களின் “செயல்திறன், துல்லிய நுட்பம் மற்றும் தயார்நிலை” போன்றவற்றை சோதனை செய்யும். வட கொரியா மற்றும் அதன் அண்டை நாடான சீனாவின் மீதும் அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவ அழுத்தத்தின் பின்னணியில், அணுஆயுதமேந்திய ICBM களை பிரயோகிப்பதற்கான அமெரிக்க தயாரிப்புகளின் ஒரு தெளிவான அச்சுறுத்தலும் உள்ளது.

“நமது தேசிய அணுஆயுத படையின் நிலையை பரிசோதித்துக்கொள்ளவும் மற்றும் நமது தேசிய அணுஆயுத திறன்களை நிரூபிக்கவும்” ஏவுகணை சோதனைகள் அத்தியாவசியமானவையாக இருந்தன என்று வான்டென்பெர்க் விமானப்படை தளத்தின் 30வது வான்வெளி பிரிவின் தளபதியான கேர்னல் கிறிஸ் மோஸ் கூறினார்.

வட கொரியாவின் சிறிய மற்றும் பழமையான அணுஆயுத மற்றும் ஏவுகணை திறன்களால் உருவாக்கப்பட்ட அபாயம் பற்றி அனைத்து அரசியல் மற்றும் ஊடக வெறித்தனங்களுக்கும் மத்தியில், ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்கா நடத்திய சோதனைதான் மீண்டும் வாஷிங்டனின் அணுஆயுத போர் மற்றும் பென்டகனின் ஈடிணையற்ற ஆயிரக்கணக்கான அணுஆயுத வெடிக்கும் சாதனங்களை கொண்ட ஏவுகணை படைக்கலங்களால் முன்வைக்கப்படும் உண்மையான ஆபத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இன்றைய பயிற்சிக்கென எந்தவொரு இலக்கும் குறிப்பிடப்படவில்லை, ஆனால், பிப்ரவரியில் வடக்கு டக்கோட்டா தளத்திலிருந்து தொடங்கப்பட்டதான அமெரிக்காவின் ஒரு முந்தைய சோதனையின்போது ஏவுகணை, வடமேற்கு பசிபிக் பகுதியில் மார்ஷல் தீவுகளின் ஒரு பகுதியான Kwajalein Atoll எனும் இலக்கு எல்லையை நோக்கி 6,760 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்தது.

பசிபிக், ஜப்பான் மற்றும் தென் கொரியா முழுவதிலுமான அமெரிக்க இராணுவ தளங்களில் ஒன்றான மார்ஷல் தீவுகளில் உள்ள ரொனால்ட் ரீகன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தளத்தினையும், அத்துடன் போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் கடற்படைகளையும் கொண்டு வட கொரியா மீதான பேரழிவுகரமான தாக்குதல்களை அதிகரிக்க முடியும்.

ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க செனட்டின் அனைத்து 100 உறுப்பினர்களுடன் வட கொரிய நிலைமை பற்றி அறிவித்த ஒரு அரிதான மற்றும் திடீரென்ற வெள்ளை மாளிகையின் சிறு விளக்கத்தை வழங்குவார். அச்சுறுத்தும் சூழ்நிலைக்கு கூடுதலாக, போர் தொடர்புள்ள நான்கு உயர்மட்ட அதிகாரிகளின் மூலமாக இந்த சிறு விளக்கம் வெளியிடப்படும். அவர்கள் வெளியுறவு செயலரான றெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்பு செயலரான ஜிம் மாட்டிஸ், தேசிய புலனாய்வு இயக்குநரான டான் கோட்ஸ், கூட்டு தலைவர்களின் தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் போன்றவர்களாவர். (பார்க்க: ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு செனட்டை வரவழைக்கிறார்)

போர் ஏற்பாடுகளின் மற்றொரு அறிகுறியாக, திங்களன்று இரவு இரண்டு முக்கிய வெளியுறவு கொள்கை “பருந்துகளான” ஜோன் மெக்கெய்ன் மற்றும் லிண்ட்ஸே கிரஹாம் ஆகிய செனட்டர்களுடன் ட்ரம்ப் ஒரு பொது இரவு விருந்தில் கலந்துகொண்டார். அவர்கள் விவாதித்தது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை, ஆனால் அடுத்த நாளே கிரஹாம் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “அமெரிக்காவை தாக்கும் திறன்கொண்ட வகையில் கூடுதலான அணுஆயுதங்களுடனான ஒரு ஏவுகணை அபிவிருத்தியெனும் முட்டாள்தனமான நடவடிக்கையை வட கொரியாவில் தொடங்க டொனால்ட் ட்ரம்ப் அனுமதிக்கப்போவதில்லை”. இதை “முட்டாள்தனமான வேலை” என்று குறிப்பிட்டது வட கொரிய தலைவரான கிம் ஜோங்-உன்னை அவமதிப்பதாக இருந்தது.   

இந்த அபிவிருத்திகள் விரிவடைந்த நிலையில், ஜப்பானிய மற்றும் தென் கொரிய கடற்படை கப்பல்களுடன் போர் பயிற்சிகளை நடத்துகின்ற அணுஆயுத திறன்பெற்ற போர்கப்பல்களுடன் வாஷிங்டன் கொரிய தீபகற்பத்தை சுற்றிவளைத்து கொண்டுள்ளது.

ஒரு அமெரிக்க அழிப்பு கப்பலான USS Wayne E. Meyer, கொரிய மேற்கு பகுதி சார்ந்த மஞ்சள் கடலில் ஒரு தென் கொரிய அழிப்பு கப்பலுடன் நேற்று பயிற்சிகளை தொடங்கியது. மற்றொரு அமெரிக்க அழிப்பு கப்பலான USS Fitzgerald கொரிய கிழக்கு பகுதி சார்ந்த கிழக்கு கடல் பகுதியாக அறியபடுகின்ற ஜப்பான் கடலில் ஒரு ஜப்பானிய அழிப்பு கப்பலுடன் பயிற்சிகளை நடத்தியது.

பரந்த அளவிலான சூழ்நிலைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் உள்ளார்ந்த நெகிழ்வு தன்மை நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து செயல்படுவதாகவே இரண்டு பயிற்சிகளும் நிரூபிக்கின்றன என்று அமெரிக்க ஏழாவது கடற்படை பிரிவு கூறியது.

மேலும் அச்சுறுத்தும் காட்சிகளாக, ஒரு வழிகாட்டுதல் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான USS Michigan தென் கொரிய துறைமுகமான புசானில் நின்றிருந்ததுடன், மேலும், தென் கொரிய கடற்படையுடன் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு கொரிய தீபகற்பத்தின் கடல்பகுதியை சென்றடைவதற்காக ஜப்பானிய கப்பல்களுடன் சேர்ந்து USS Carl Vinson விமானந்தாங்கி கப்பல் படையும் அங்கு நின்றிருந்தது.     

அரசியல் உயர்மட்டத்தினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் தொடர்ந்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், நேற்று வட கொரிய அதன் ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்துவதற்கு தயாராக இருந்ததுடன், அந்நாட்டு இராணுவத்தின் 85வது ஆண்டுதினத்தை முன்னிட்டு, பியோங்யாங் கிழக்கு கடற்கரை பகுதியில் வொன்ஸன் அருகே நேரடி துப்பாக்கி சண்டை பயிற்சிகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

வட கொரியாவில் வியாபாரம் செய்வதாக கூறப்படும் சீன வங்கிகளுக்கு எதிராக எண்ணெய் தடை, போக்குவரத்து தடை மற்றும் தண்டனைக்குரிய நடவடிக்கைகளை இடம்பெற செய்த வட கொரியா மீது அவர்கள் இன்னும் நெருக்கடியான பொருளாதார தடைகளை விதிக்க கோருவதற்காக, திங்களன்று சீனா மற்றும் ரஷ்யா உட்பட ஐ.நா. பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 15 பேரிலிருந்து தூதுவர்களை ட்ரம்ப் அழைத்தார். இந்த ஆதாரம் இருந்தபோதிலும், வட கொரியாவில் எண்ணெய் விலை உயரும் வகையில் சீனா ஏற்கனவே விநியோகங்களை கடுமையாக சுருக்கிவிட்டது.    

ஒரு உச்சபட்ச இறுதி எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்து, வட கொரியா “உலகத்திற்கு ஒரு உண்மையான அச்சுறுத்தலாக” இருந்ததுடன், ஒரு “பெரிய உலக பிரச்சனையாகவும்” இருப்பதை “இறுதியாக நாங்கள் தான் தீர்க்கவேண்டும்” என்று அறிவிக்கிறார்.

வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டங்களை கைவிடுமாறு அதனை வலியுறுத்த சீனாவின் மீது போதுமானளவு அழுத்தத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக பிடித்துக்கொண்டுள்ளது. ஆனால் பியோங்யாங் ஆட்சியின் மீது “மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதான செல்வாக்கையே” பெய்ஜிங் கொண்டிருப்பதாக அதிகளவில் எச்சரிக்கையூட்டும் சமிக்ஞைகளை அனுப்பிவருகிறது. 

பியோங்யாங் அதன் அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்துவது “அப்ரகடப்ராவை போல அவ்வளவு சுலபமானது” அல்ல என்று நேற்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள Global Times பத்திரிகையின் ஒரு தலையங்கம் எச்சரித்தது. வாஷிங்டனுக்கும், பியோங்யாங்கிற்கும் இடையேயான இந்த “கோழிச்சண்டை” “எந்த பக்கத்திலிருந்தும் நிறுத்த முடியாத” அளவிற்கு கொடூரமான விளைவுகளுடன் “விரைவில் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும்”. இந்த சூழ்நிலை “குண்டுகளால் நிரப்பப்பட்ட புதிர்” போன்றது என இது விவரித்ததுடன், “பியோங்யாங் ஒரு தீப்பெட்டியை கூட பற்றவைக்கவும் வெடிக்கவைக்கவும் கூடாது” எனவும் அறிவித்தது.

சீனாவின் பூகோள மூலோபாய நலன்களுக்கு கடுமையான சேதம் விளைவிக்கக்கூடிய இராணுவ மோதல்கள் குறித்த ஆபத்தின் காரணமாகத்தான் தனது குழப்பத்தை பெய்ஜிங் வெளிப்படுத்தியுள்ளமை முதல் முறையாக அல்ல.

இரண்டு நாட்களுக்கு முன்பு, Global Times பத்திரிகையின் ஒரு தலையங்கம் வெளிப்படையாக வட கொரியாவை விமர்சித்ததுடன், பெய்ஜிங் பியோங்யாங் இனை “சீனாவின் ஒரு காவலாளியாக பாதுகாக்கும் கடமையில்” இருக்கிறது என்று கருதுவதாக அது நினைத்ததால், பியோங்யாங் ஒரு “தவறு” செய்விட்டதாகவே தெரிவித்தது. வட கொரியாவின் அணுஆயுத திட்டம் “சீனாவின் முக்கிய தேசிய நலன்களை பாதிப்படைய செய்வதாக” இருந்ததாகவும், பியோங்யாங் அணுஆயுத அபிவிருத்தி செய்வதை தடுப்பது தான் வடகிழக்கு ஆசியாவில் “பெய்ஜிங்கின் முன்னுரிமைகொண்ட” நடவடிக்கையாக ஏற்கனவே இருந்ததாகவும் தலையங்கம் அறிவித்தது.

அவர்களது நாட்டை அதன் முன்னாள் நட்பு நாடான வட கொரியா மட்டுமல்ல, வாஷிங்டனும் இலக்காக வைத்துள்ளது என்பதை சீனாவின் தலைவர்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள். கொரிய தீபகற்பத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதல், சீனாவின் முக்கிய தொழில்துறை பிராந்தியங்களில் ஒன்றான வட கொரியாவை மட்டும் ஒரு ஸ்திரமற்ற முறிவுக்கு இட்டுசெல்வதோடல்லாமல், அமெரிக்கா 1950-53 ஆண்டு காலத்தில் நடந்த கொரிய போரின்போது முயன்றது போல, சீனாவின் எல்லையில் ஒரு அமெரிக்க ஆதரவிலான ஆட்சியை நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்க செனட் ஆயுதப்படைகளின் குழு விசாரணையில் சாட்சியமளித்ததன் மூலம் உண்மையில் சீனா குண்டுவீச்சு தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாகவே முன்னிலைப்படுத்தி காட்டப்பட்டது. வட கொரியா ஒரு “அண்மை கால” சவாலாக உள்ளது, அதேசமயத்தில், “சீனாவிலிருந்து வரும் சவால்கள் நீண்ட காலமாக நிரந்தரமாக இருந்துவருவதுடன், அதன் ஆசிய பங்காளிகளிடமிருந்து அமெரிக்காவை திசைதிருப்புவதில் தான் அடிப்படையாக நோக்கம் கொண்டுள்ளதாக சர்வதேச சமாதானத்திற்கான கார்னிஜி நன்கொடை ஸ்தாபகத்தின் மூத்த உறுப்பினரான ஆஷ்லி டெல்லிஸ் விவரித்தார்.

கொரிய நெருக்கடியின் பின்னணியில் இருக்கின்ற உந்து சக்தியை இந்த கருத்துக்கள் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன. வடகிழக்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும், ஆளும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் அதன் பொருளாதார சரிவை ஈடுசெய்யவும், இரண்டாம் உலக போரில் ஜேர்மனி மற்றும் ஜப்பானை வெற்றி கொண்டதன் மூலமாக அது ஸ்தாபித்திருந்த அதன் பூகோள அளவிலான மேலாதிக்கத்திற்கு சவாலாக இருக்கும் சீனா அல்லது எந்தவொரு மற்ற சாத்தியமான போட்டியாளரையும் தடுக்கவும், அமெரிக்க இராணுவ வலிமையை பயன்படுத்த விரும்புகிறது.