ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Marching toward a wider war in the Middle East

மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரை நோக்கிய அணிவகுப்பு

Bill Van Auken
14 June 2017

டொனால்ட் ட்ரம்ப் உடனான நயவஞ்சக கூட்டுடன் ரஷ்யா அமெரிக்க தேர்தல்களில் குறுக்கிட்டதாக கூறும் விஷமக் கருத்துக்களை விளாசிக் கொண்டிருக்கும் முடிவில்லா ஊடக பிரச்சாரத்திற்கும் மற்றும் வாஷிங்டனில் நடக்கும் கடுமையான அரசியல் மோதல்களுக்கும் அப்பாற்பட்டு, மத்திய கிழக்கில் நடக்கும் மிகவும் நிஜமான போர்களோ அப்பிராந்திய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்குமே அச்சுறுத்தும் விளைவுகளுடன் ஒரு பிராந்திய போராக, இன்னும் சொல்லப் போனால் ஓர் உலகளாவிய போராக உருவெடுக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்விரு போர்க்களங்களும் எவ்விதத்திலும் தொடர்பில்லாதவை அல்ல. அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் அமெரிக்க வெளியுறவு கொள்கையில், மிகவும் தீர்க்கமாக, அதன் போர் மூலோபாயத்தில், கடுமையாக பிளவுபட்டுள்ளது. ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்திற்குப் பின்னால், ஜனநாயகக் கட்சியின் ஒரு பகுதியும் குடியரசுக் கட்சியினரின் குறிப்பிடத்தக்க அடுக்குகளும் ட்ரம்புக்கு காட்டும் எதிர்ப்பானது, மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்ரோஷமான தீவிரப்படலை, அதுவும் குறிப்பாக சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் முனைவை, ட்ரம்ப் எந்த விதத்திலும் பலவீனப்படுத்துவதில் இருந்து அவரை தடுப்பதற்கான ஒரு தீர்மானமான முடிவுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகமும் அதன் வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை நடைமுறையளவில் வழி நடத்தும் சமீபத்தில் ஓய்வுபெற்ற மற்றும் இப்போதும் பணியிலிருக்கும் இராணுவ அதிகாரிகளின் கூட்டமும், சீனா உடனான மோதலுக்கு தயாரிப்பாக ஈரானுடன் போருக்குத் திட்டமிடுவதை நோக்கிய ஒரு கொள்கை குறித்து அதிகரித்தளவில் தெளிவுபடுத்தி உள்ளனர். இது தெஹ்ரானின் இரண்டு பிரதான பிராந்திய எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவிற்கு ட்ரம்ப் கடந்த மாதம் விஜயம் செய்ததில் மூடிமறைக்கப்படாத திட்டநிரலாக இருந்தது. 

வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள சுன்னி எண்ணெய் ஷேக் ஆட்சிகளுடன் சேர்ந்து ஈரானிய-விரோத, நேட்டோ மாதிரியான ஒரு கூட்டணியை உருவாக்குதவற்கான இந்நிர்வாகத்தின் அறிவிக்கப்பட்ட குறிக்கோள், கட்டாருக்கு எதிராக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகியவற்றால் திணிக்கப்பட்ட ஒரு நடைமுறை போர் நிலைமைக்கு மாறியுள்ளது. கட்டார் முற்றும் முழுமையாக பொருளாதார முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்தின் பிரதான சித்தாந்த மற்றும் நிதி வழங்குனராக விளங்கும் சவூதி முடியாட்சி, ட்ரம்ப் ஆசிர்வாதத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சிலுவைப் போர் என்பதாக சித்தரித்து அர்த்தமற்ற விதத்தில் கட்டார் மீது அதன் தாக்குதலை தொடுத்துள்ளது. தெஹ்ரானுடனான கட்டாரின் உறவுகளும் மற்றும் ஈரான்-விரோத போர் முனைவில் இணைய அது தயக்கம் காட்டுவதும் தான் நிஜமான பிரச்சினையாகும்.

இதற்கிடையே துருக்கி கட்டாருக்கு உணவுகள் அனுப்பியும் மற்றும் எரிவாயு வளம் நிரம்பிய சிறிய கட்டார் தீபகற்பத்தில் ஒரு இராணுவ தளம் நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்தும், கட்டார் ஆட்சியின் பக்கம் நகர்ந்துள்ளது. 2013 இல் எகிப்திய ஜனாதிபதி மொஹமத் மொர்சியை கவிழ்த்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மீதான அதன் எதிர்ப்பின் காரணமாக, அங்காரா ஏற்கனவே சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தது. இந்த பதட்டங்கள், ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு எதிராக கருவிலேயே கலைக்கப்பட்ட ஜூலை 2016 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துருக்கிக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியது என்ற குற்றச்சாட்டுக்களால் இன்னும் தீவிரமடைந்துள்ளன.

படிப்படியாக அதிகரித்துவரும் இந்த பிராந்திய மோதலுக்கு இடையே, அங்கே ட்ரம்ப் நிர்வாக கொள்கையில் ஒரு தொடர்பின்மை இருப்பதாக தெரிகிறது. கட்டார் சுமார் 10,000 அமெரிக்க துருப்புகளுடன் மூலோபாயரீதியில் முக்கியமான al-Udeid விமானப் படைத்தளத்தைக் கொண்டுள்ளது. இந்த தளம் ஈராக் மற்றும் சிரியா முதல் ஆப்கானிஸ்தான் வரையில் விமானத்தாக்குதல்களை நடத்த பயன்படுகிறது, இந்த மொத்த நடவடிக்கைகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக, குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசுக்கு (ISIS) எதிரான நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.

மரணகதியிலான அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையின் பின்புலத்துடன் ஈராக்கிய படைகள், ஒரு காலத்தில் தலைசிறந்த நகரமாக இருந்து இன்று இடிபாடுகளாக மாற்றப்பட்ட மொசூலைக் கைப்பற்றுவதற்கு நெருக்கமாக இருக்கின்ற நிலையில், வாஷிங்டனின் குர்திஷ் பினாமிகளும் அதேபோன்ற நாசகரமான விமான தாக்குதல்களின் உதவியின் கீழ் சிரிய நகரமான ரக்காவிற்குள் முன்னேறி வருகின்ற நிலையில், ISIS இன் பலமான பிடியில் இருந்த அந்த கடைசி இரண்டு பிரதான நகரங்களில் இருந்தும் அது விரட்டப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த கண்கூடான வெற்றிகள், மத்திய கிழக்கில் சமீபத்திய அமெரிக்க போர் முடிவுக்கு வருவதை எடுத்துரைக்கவில்லை, மாறாக அது அதிகரித்தளவில் அபாயகரமாக மாறி தீவிரமடைந்து வருவதையே காட்டுகிறது.

“ரக்காவை கடந்து, ISIS ஐ தோற்கடிக்கவும் மற்றும் சிரியாவின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தவும் அதனினும் பெரியதொரு போர்" என்று தலைப்பிட்டு, நியூ யோர்க் டைம்ஸ் வாரயிறுதியில் பிரசுரித்த ஒரு கட்டுரையில், துல்லியமாக “மிகவும் நம்பகமான அதிகாரிகளின் கருத்துக்கள்" என்பதாக ஒரு செய்தியைக் குணாம்சப்படுத்தியது. ஆறாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா முடுக்கிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போர் தொடங்கியதில் இருந்து சிஐஏ மற்றும் பென்டகனின் ஒரு விசுவாசமான ஊதுகுழலாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஆதரவிலான மற்றும் அல் கொய்தா இணைப்பு கொண்ட "கிளிர்ச்சியாளர்களுக்கு" உத்வேகமூட்டும் தலைவராகவும் சேவையாற்றி உள்ள அன்னெ பர்னார்ட் (Anne Barnard) தான் அக்கட்டுரையின் ஆசிரியர் ஆவார்.

ISIS க்கு எதிரான சிலுவைப் போரை சிஐஏ மற்றும் பென்டகன் ஒரு காட்சிப்பொருளாகவும், சிரியாவிலும் அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வதற்கான ஒரு பயனுள்ள சாக்குபோக்காகவும் பார்க்கின்றன என்பதையே பர்னார்ட் இன் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. ISIS, இதுவே கூட ஈராக்கில் இருந்து லிபியா மற்றும் சிரியா வரையில் அமெரிக்க போர்களின் வழிவந்த தயாரிப்பாக உள்ள நிலையில், இந்த இஸ்லாமியவாத போராளிகள் குழுவிற்கு எதிரான சண்டையானது, “மேலதிக புவிசார்அரசியல் பொதிந்த அபாயங்களுடன்" தென்கிழக்கு சிரியா மோதலையே விஞ்சி சென்று கொண்டிருப்பதாக அப்பெண்மணி எழுதுகிறார்.

மத்திய ஆசியாவில் மேலாதிக்கம் பெறுவதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்திற்கு இடையிலான நீடித்த போட்டித்தன்மையை குறிப்பிடும் ஒரு வரலாற்று மேற்கோளைக் குறிப்பிடுவதைப் போல, "மாபெரும் விளையாட்டின் 21 ஆம் நூற்றாண்டு பதிப்பு" என்பதாக, அவர் இந்த கட்டவிழ்ந்து வரும் இராணுவ மோதலைக் குறிப்பிடுகிறார். துல்லியமாக அதுபோன்ற சூறையாடும் நோக்கங்கள் தான் சிரியாவில் சம்பந்தப்பட்டுள்ளன. பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் எண்ணெய் வளம் மிகுந்த மற்றும் மூலோபாயரீதியில் முக்கிய பிராந்தியங்களில், வாஷிங்டன் ஈரானை அதன் மேலாதிக்கத்திற்கான போட்டியாளராக பார்ப்பதால், ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்காகவும் அதை தனிமைப்படுத்துவதற்கும் ஒரு வழிவகையாக, அது சிரியாவில் அசாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து அங்கே ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய விரும்புகிறது.

நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக மாற்றிய சிரிய போரின் இந்த புதிய கட்டத்தின் குவிமையமாக இருப்பது என்னவென்றால், டமாஸ்கஸ் மற்றும் பாக்தாத்திற்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையை கட்டுப்படுத்துகின்றதும் மற்றும் ஈராக்குடன் குறுக்கிடும் சிரியாவின் தென்கிழக்கு எல்லையுமான al-Tanf இல் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சிறப்பு படை கமாண்டோக்கள் கண்காணிப்பில் உள்ள ஒரு பாலைவன இராணுவச்சாவடியாகும்.

பென்டகன் இந்த தளத்தை, ISIS உடன் சண்டையிடுவதற்காக என்ற வெளிவேஷத்தில், ஆனால் யதார்த்தத்தில் சிரிய ஆட்சிக்கு எதிராக திருப்பி விடுவதற்காக, கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களுக்குப் பயிற்சியளிக்க பயன்படுத்தி வருகிறது. அத்தளத்தைச் சுற்றி 34 மைல் சுற்றளவிற்கு அது தன்னிச்சையாக "மோதல் நிறுத்தப்பட்ட பகுதியாக" அறிவித்துள்ளது, ஜூன் 8 அன்று சமீபத்தில் நடந்த தாக்குதல் உள்ளடங்கலாக மூன்று தனித்தனி விமானத்தாக்குதல்களை டமாஸ்கஸ் அரசாங்கத்துடன் அணிசேர்ந்துள்ள போராளிகள் குழுக்களுக்கு எதிராக நடத்துவதற்கு இதை சாக்குபோக்காக பயன்படுத்தியது. ஆட்சிக்கு ஆதரவான படைகளது ஓர் ஆயுதமேந்திய டிரோன் என்று கூறி சமீபத்தில் அது ஓர் ஆயுதமேந்திய டிரோனையும் சுட்டி வீழ்த்தியது.   

இதற்கிடையே, ISIS கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவின் வடக்கே அமெரிக்க ஆதரவிலான முற்றுகையில் வாஷிங்டனின் குர்திஷ் மேலாதிக்க பினாமி தரைப்படைகள், கிழக்கு சிரியாவில் அரைவாசி அரசு கட்டுப்பாட்டில் உள்ள 200,000 பேர் வசிக்கும் நகரமான Deir ez-Zor மீதான தாக்குதலில் அதன் போராளிகள் இணைவதற்கு வசதியாக ISIS தெற்கிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியை வேண்டுமென்றே விட்டு வைத்தன.

கட்டவிழ்ந்து வரும் அமெரிக்க போர் மூலோபாயத்திற்கு ஒரு அடியாக, ஆட்சிக்கு ஆதரவான படைகள் அமெரிக்க தளம் அமைந்துள்ள al-Tanf க்கும் யூப்ரரேடஸ் ஆற்றங்கரையில் ISIS வசமிருக்கும் எல்லை நகரமான al-Bukamal க்கும் இடையே ஈராக்கிய எல்லைக்கு கிழக்கே அவர்கள் வழியைக் கண்டுள்ளனர். ISIS வசமிருந்து அந்நகரை மீட்டெடுக்க, வாஷிங்டன் அது பயிற்சி அளித்து வரும் "கிளிர்ச்சியாளர்களை" தயார் செய்வதே அதன் நோக்கமென கூறியிருந்தது. இது யூப்ரரேடஸ் இல் இருந்து அவர்களை விரட்டுவதற்கு ஒரு பாதையைத் திறந்து விட்டு, எல்லை பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்யவும், இறுதியில் ஆட்சி மாற்றத்திற்கான முற்று முழுமையான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதில் சிரியாவின் பிரிவினைக்கும் சேவையாற்றும்.  

சிரியர்களின் முன்னேற்றம் சிரியா மற்றும் ஈராக்கையும், தொலைதூர கிழக்கு மற்றும் ஈரானையும் இணைக்கும் வினியோக பாதைகளை வெட்டுவதற்கான அமெரிக்க முயற்சிகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்கி உள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்றுள்ள ஈராக்கிய ஷியைட் போராளிகள் குழுக்கள் சிரிய எல்லையை நோக்கி நகர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை தெளிவுபடுத்துவதைப் போல, இது அமெரிக்க ஏகாதிபத்திய நோக்கங்களின் மூலோபாய முக்கியத்துவம் சம்பந்தப்பட்ட விடயமாகும். “... நிஜத்தில் இதை விட பெரிய பிரச்சினைகள் பயணத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிரிய அரசாங்கம் அதன் கிழக்கு எல்லைகள் வழியாக அந்நாட்டிற்கு வரும் எல்லா வழிகள் மீதும் மீண்டும் அதன் கட்டுப்பாட்டை நிறுவுமா? சிரிய-ஈராக்கிய எல்லையை பிரிக்கும் பாலைவனம் இராணுவக் கட்டுப்பாட்டிற்காக யாருடையதும் இல்லாத நிலமாக வைக்கப்படுமா? அவ்வாறில்லை என்றால், யார் அங்கே மேலாதிக்கம் செய்வார்கள் — ஈரான் ரஷ்யாவுடன் அணிசேர்ந்த சக்திகளா அல்லது அமெரிக்காவுடன் அணிசேர்ந்த சக்திகளா?”

ஓர் இறைமை கொண்ட நாடு என்று கூறப்படுவது என்ன என்பது குறித்து ஒருவரால் சந்தேகிக்காமல் இருக்க முடியாது. சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க நடவடிக்கையானது, முன்னாள் காலனி சக்திகளால் உருவாக்கப்பட்ட தேசிய அரசு அமைப்புமுறையை பலவீனமாக்கி, அப்பிராந்தியத்தின் பெரும்பகுதிகளை நாசமாக்கியுள்ள ஒரு கால் நூற்றாண்டு அமெரிக்க போர்களுக்குப் பின்னர், மத்திய கிழக்கில் தெளிவாக ஒரு புதிய ஏகாதிபத்திய துண்டாடல்களுக்கான அச்சாக உருவாகி வருகிறது. முந்தைய காலனித்துவ துண்டாடல்களை போலவே, ஏற்பட்டு வரும் விரோதங்களும் உலக போருக்கு வழி வகுத்து வருகின்றன.

“இந்த சக்திகள் அனைத்தும் மோதல் போக்கில் இருக்கின்ற நிலையில், பல சமீபத்திய தீவிர நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும், அல்லது ரஷ்யாவிற்கும் இடையிலேயே கூட ஒரு நேரடி மோதலுக்கான அச்சங்களாக உயர்ந்துள்ளன,” என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சிரியாவில் அமெரிக்க தலையீட்டின் தர்க்கம், ஈராக்கிய-சிரிய எல்லையில் பென்டகன் அனுபவித்த தந்திரோபாய தோல்விகளை மாற்றுவதற்கான அமெரிக்க இராணுவ படையின் கடுமையான தீவிரப்படலைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இதுபோன்றவொரு அத்துமீறல் "ஈரான், அல்லது ரஷ்யாவுடன் கூட" ஒரு நேரடி இராணுவ மோதலாக தூண்டிவிடப்படலாம் என்பது, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தின் நீடித்த வீழ்ச்சியை தலைகீழாக்குவதற்காக, போரை அத்தியாவசிய கருவியாக பார்க்கும் அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் செல்வாக்கான அடுக்குகளால் வரவேற்கப்படாமல் போகாது.

எவ்வாறிருப்பினும், மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் பூமி எங்கிலும் உள்ள பாரிய பெருந்திரளான உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், இத்தகைய அபிவிருத்திகள் ஓர் மரணகதியிலான அச்சுறுத்தலை முன்னிறுத்துகின்றன. ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்குமான ஒரு போராட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க முடியும்.