ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Speech at a session of the Petrograd Soviet

பெட்ரோகிராட் கூட்டத்தொடரில் பேச்சு

By Leon Trotsky
May 18, 1917

மே 18 1917 அன்று (மே 5 o.s) பெட்ரோகிராட் சோவியத்தின் முன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு இதுவாகும், இதில் மென்ஷிவிக்குகள் சமூகப் புரட்சியாளர்கள் ஆதரவுடன் புதிய கூட்டரசாங்கம் அமைப்பதை ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். இது முதலில் இஸ்வெஸ்தியாவில் எண் 60, 7 (20) மே 1917 இல் வெளியானது மற்றும் ட்ரொட்ஸ்கியின் Sochineniia (Works இல்) மறு பிரசுரமானது. [1]

ரஷ்ய புரட்சியின் செய்திகள் நியூயோர்க்கில் பெருங்கடலுக்கும் அப்பால் எம்மை வந்து சேர்ந்தன. முதலாளித்துவ ஆட்சி வேறு எங்கும் விட பலமானதாக இருக்கும் பலம்வாய்ந்த நாட்டிலும் கூட, ரஷ்ய புரட்சியானது தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு அபகீர்த்தியை பெற்றிருந்தது. அது புரட்சியை ஆதரிக்கவில்லை என்று மக்கள் கூறினர். நீங்கள் பிப்ரவரியில் அமெரிக்க தொழிலாளர்களை பார்த்திருப்பீர்களேயானால் உங்கள் புரட்சி பற்றி இரட்டிப்பு பெருமை அடைந்திருப்பீர்கள். அது ரஷ்யாவை மட்டும் உலுக்கவில்லை, ஐரோப்பாவை மட்டும் உலுக்கவில்லை, அமெரிக்காவையும்தான் என்று நீங்கள் புரிந்திருப்பீர்கள். அது எனக்கு செய்ததைப்போல, அது ஒரு புதிய சகாப்தத்தை இரத்தமும் இரும்பும் கொண்ட புதிய சகாப்தத்தை திறந்துவிட்டிருக்கிறதென்று உங்களையும் தெளிவுபடுத்தியிருக்கும், ஆனால் தேசத்திற்கு எதிரான தேசத்தின் போராட்டத்திலல்ல, ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மற்றும் துன்பப்பட்ட வர்க்கத்தின் போராட்டத்தில். (பலத்த கரகோஷம்). எங்களின் பேரார்வத்தைக் கொண்டு செல்லுங்கள் என்று எல்லா இடத்திலும் தொழிலாளர்கள் என்னை கேட்டுக் கொண்டார்கள். (மிகபலத்த கரகோஷம்).

ஜேர்மானியர்கள் பற்றியும் கூட சிலவற்றை நான் சொல்லியாக வேண்டும். ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு குழுவிடம் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. “எங்கே?” என்று நீங்கள் கேட்பீர்கள். போர்க்கைதிகளின் முகாமில். பிரிட்டிஷ் முதலாளித்துவ அரசாங்கம் எங்களை கைதுசெய்து, பகைவரைப்போல், போர்க் கைதிகளுக்கான முகாமில் கனடாவில் பாதுகாப்பில் வைத்திருந்தது. (கத்தினர்: வெட்கம்). அங்கு ஆறு அதிகாரிகளும் எண்ணூறு ஜேர்மன் மாலுமிகளும் இருந்தனர். அவர்கள் எங்களிடம் எப்படி ரஷ்ய குடிமக்கள் ஆகிய நாங்கள் பிரிட்டிஷாரிடம் கைதியாக வந்து சேர்ந்தோம் என்று கேட்டனர். நாங்கள் ரஷ்ய குடிமகன்கள் என்ற வகையில் கைதியாக்கப்பட்டவர்கள் அல்லர், மாறாக சோசலிஸ்டுகள் என்றவகையில் கைதியாக ஆக்கப்பட்டவர்கள் என்று நாம் அவர்களிடம் கூறியபொழுது, அவர்கள் தங்களது சொந்த அரசாங்கத்தினது தங்களது சொந்த வில்ஹெமினது அடிமைகளாக இருந்ததாக எங்களிடம் கூற ஆரம்பித்தனர்.

ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தினருடன் நாம் மிக நட்புடையவரானோம். இது சிறைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அவர்கள் பிரிட்டிஷ் தளபதியிடம் புகார் செய்தனர், நாங்கள் தங்களது அரசருக்கு (கெய்சருக்கு) மாலுமிகளிடம் உள்ள விசுவாசத்தை கீழறுப்பதாகக் கூறினர். நான் அவர்களிடம் பேசுவதிலிருந்து என்னைத் தடுத்தனர். இதுதொடர்பாக மாலுமிகள் தளபதியிடம் பிரத்தியேக எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாங்கள் அதனை விட்டு வரும்போது, இசைமுழங்க எங்களுடன் இணைந்து கொண்டு முழங்கினர்: “வில்ஹெல்ம் ஒழிக! முதலாளித்துவ வர்க்கம் ஒழிக! பாட்டாளி வர்க்க சர்வதேச ஐக்கியம் வாழ்க!’ (பலத்த கைதட்டல்).

ஜேர்மன் மாலுமிகளின் எண்ணத்தில் நிகழ்ந்ததே இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கிறது. ரஷ்ய புரட்சியானது உலகப் புரட்சியின் ஒரு முன்னுரை. ஆனால் இப்பொழுது நடப்பதில் நான் உடன்படவில்லை என்பதை நான் மறைக்க முடியாது. அமைச்சரவைக்குள் நுழைவதென்பது பெரும் ஆபத்து என நான் நினைக்கிறேன். ஒரு அமைச்சரவை மேலிருந்து இயங்க முடியும் என்ற அதிசயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. முன்னர் நாம் இரட்டை அதிகாரத்தை கொண்டிருந்தோம், அது இரு வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் தனது மூலத்தோற்றத்தை கொண்டிருந்தது. கூட்டு அமைச்சரவை இரட்டை அதிகாரத்திலிருந்து எம்மை விலக்கப் போவதில்லை, மாறாக அதனை அமைச்சரவைக்கு மாற்ற மட்டுமே செய்யமுடியும். ஆனால் புரட்சி, கூட்டு அமைச்சரவையால் மறைந்து போய்விடாது. நாம் மூன்று கட்டளைகளை மட்டுமே நினைவில் வைத்தாக வேண்டும்: (1) முதலாளித்து வர்க்கத்தின்மேல் நம்பிக்கையின்மை (2) எமது சொந்த தலைவர்களின் மீது கட்டுப்பாடு (3) எமது சொந்த புரட்சிகர சக்தியில் நம்பிக்கை வைத்தல்.

அப்படியானால், நாம் என்ன பரிந்துரைக்கிறோம்? நான் நினைக்கிறேன் உங்களது அடுத்த அடி அனைத்து அதிகாரங்களும் தொழிலாளர் மற்றும் இராணுவத்தினர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதாக இருக்கும். ஒன்றிணைந்த அதிகாரம் (edinovlastie) மட்டுமே ரஷ்யாவை காப்பாற்றும். உலக புரட்சிக்கு முன்னுரை என்ற வகையில் ரஷ்ய புரட்சி நீடூழி வாழ்க! (கைதட்டல்).

[1] ட்ரொட்ஸ்கியின் Sochineniia (Works) இன் ஆசிரியர்களிடம் இருந்து குறிப்பு:

தோழர் ட்ரொட்ஸ்கி ரஷ்யாவுக்கு திரும்பி வந்ததும் சோவியத் அமைப்புக்களில் இந்தப் பேச்சுதான் அவரது முதல் பேச்சாக இருந்தது. உலகுக்கு அப்போதுதான் கொண்டுவரப்பட்டிருந்த, கூட்டரசாங்கத்திற்கான அவரது கடும் எதிர்ப்பானது, “சோவியத்” தலைவர்களை எச்சரிக்கையூட்டியது. ட்ரொட்ஸ்கிக்குப் பின்னர் பேசிய புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அவர்களது பேச்சுக்களை பிரதானமாக அவருடனான அரசியல் சர்ச்சைக்கு அர்ப்பணித்தனர். இன்னும் சொல்லப்போனால் சுக்கானோவ் சாதுரியமான ஒரு சித்திரத்தை தீட்டினார்:

“பெசுக்கோனொவும் செரெட்டெலியும் வெளிறிப்போய் இருந்தார்கள். ஆற்றொணாநிலையில் பகட்டைக் காட்டினார்கள், ஷெர்னோவ் மேடையை தாண்டி நடனமாடி, தான் சிறைக்கைதியாக்கப்டக்கூடாது என்று கெஞ்சினார், கூத்தாடினார். ஸ்கோபிலிவ் பூதாகாரப்படுத்துவதில் ஊக்கங்கொண்டு, ‘ஒரு எரியும் இதயமும் குளிர்மையான காரணமும்’ என்ற அவரது புனித சூத்திரத்தை வாய் மலர்ந்தருளினார்.

அவரது அரசியல் தொனியில், செரெட்டெலி விவாதம் செய்யும் அளவுக்குப் போனார்:

“புரட்சிகர ரஷ்யாவுக்கு நேற்றுதான் வந்திருந்த ட்ரொட்ஸ்கி, நாம் அதிகாரத்தை எடுக்கும்பொழுது ஒவ்வொருவரும் நம்மை ஆதரிப்பர் என்று கூறலாமா? அனைத்திற்கும் மேலாக அதன் பின்னே இராணுவத்தின் மற்றும், விவசாயிகளின் பகுதியினர் நிற்கும்பொழுது, மற்றும் அவர்கள் புரட்சிகர இயக்கத்திலிருந்து பின்னோக்கி அடி வைத்திருக்கையில் முதலாளித்துவ வர்க்கமே தனிமைப்படாத போது இவ்வாறு கூறலாமா. நாட்டிலுள்ள அனைத்து உயிர்வாழும் சக்திகளின் முயற்சியும் நமக்குத் தேவை. இது இல்லாமல் நாம் நாட்டைக் காப்பாற்ற முடியாது.”

ட்ரொட்ஸ்கியின் பேச்சு Izvestiia இல் அறிவிக்கப்பட்டது போல வழங்கப்பட்டது. கைப்பிரதி கிடைக்காததால், உரையும் முழுமையில்லாததால் L.D. ட்ரொட்ஸ்கியிடமே அவரது பேச்சு பற்றிக் கருத்துரைக்குமாறு நாம் கேட்டோம், பின்வரும் பதிலையும் பெற்றோம்:

இந்த பேச்சானது இரண்டாவது பாதியில் பெரிதும் சுருக்கப்பட்டது. கனடாவில் உள்ள கடூழியச் சிறைமுகாம் பற்றிய விளக்குதல் கிட்டத்தட்ட முழுதும் விவரிக்கப்பட்டது, ஆனால் இந்தப் பேச்சின் முக்கிய பகுதியான, கூட்டரசாங்கத்துக்குள் சோசலிஸ்டுகள் நுழைதலுக்கு எதிராக நான் பேசியது, ஒன்றிக்கு ஒன்று பெரிதும் தொடர்புபடுத்தப்படாத சில வாக்கியங்களாக குறைக்கப்பட்டிருந்தது, ‘மூன்று கட்டளைகளைப்’ பொறுத்த மட்டில், நான் நினைவு கூரும் மட்டில், அந்த நேரத்தில் எனது பேச்சின் பலவற்றில் ஒரு முக்கிய குறிப்பாக (leitmotiv) அவை பயன்பட்டன: அனைத்திற்கும் முதலாக, முதலாளித்துவ வர்க்கத்தை நம்பாதே; இரண்டாவதாக, தலைவர்களைப் பாதையில் வைத்திரு; மூன்றாவதாக உனது சொந்த புரட்சிகர பலத்தை நம்பு.”