ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In meeting with Putin, Macron distances France from Washington’s anti-Russia policy

அமெரிக்காவின் ரஷ்ய-விரோதக் கொள்கைகளில் இருந்து தூரநிற்கும் மக்ரோனின் நடவடிக்கைகளை பிரெஞ்சு ஊடகங்கள் பாராட்டுகின்றன

By Alex Lantier
31 May 2017

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி மக்ரோன் திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நடத்திய மாநாட்டை பிரெஞ்சு ஊடகங்கள் பாராட்டின. ரஷ்யாவை நோக்கி அமெரிக்கா பகிரங்க குரோதம் காட்டுகின்ற நிலையிலும் மக்ரோன் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மையை மறைப்பதற்கு செய்தித்தாள்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்ற விதத்தில் இந்த பாராட்டு கூடுதல் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.

Le Monde நேற்றைய தனது தலையங்கத்தில் எழுதியது, “வேர்சைய் கோட்டையின் கலைவண்ணத்தில், பிரான்ஸ் மே 29 திங்களன்று ரஷ்யாவுடனான தனது உறவுகளில் ஒரு புதிய மேம்பட்ட பாதையை தொடங்க விரும்பியது. அது நல்லதொரு விடயம்”. “வேர்சையில் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பில் போல, நேட்டோவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரீசெப் தையீப் எர்டோகன் உடனான சந்திப்பின் போதும், திரு.மக்ரோன் தான் அங்கு தொனியை உருவாக்கியளித்தவராய் இருந்தார்” என்பதில் அது குதூகலித்தது.

ரஷ்யாவை நோக்கி மக்ரோனின் சமிக்கைகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் எல்லாவற்றுக்கும் முதலில் ஜேர்மனிக்கும் இடையிலான பதட்டங்கள் பெருகி வருவதற்கும், இடையிலான நெருக்கமான தொடர்புகளை இந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியது. ’ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னரும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியிருப்பதன் பின்னரும், கண்ட ஐரோப்பாவானது (continental Europe) அமெரிக்காவையோ இங்கிலாந்தையோ இனியும் நம்பியிருக்க முடியாது, தன் வருங்காலத்திற்கு அது தானே போராடியாக வேண்டும்’ என்று வாரஇறுதியில் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் விடுத்த அறிக்கையில் இந்த பதட்டங்கள் ஒரு உக்கிரமான வடிவத்தை எடுத்திருந்தன.

“ஒரு ‘ஐரோப்பிய தருணத்தை’ பற்றிக் கொள்ளும்” மக்ரோனின் விருப்பத்தை Le Monde புகழ்ந்தது. அது மேலும் சேர்த்துக் கொண்டது, “பிரெக்ஸிட் மற்றும் அங்கேலா மேர்கெல் இந்த வாரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியவாறாக டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக தனிமைப்படுத்தல்வாதம் ஆகியவற்றின் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் தனது நெருக்கத்தை அதிகரிப்பதோடு, உக்ரேன், சிரியா, உலக வெப்பமாதல் ஆகிய இந்நாளின் மாபெரும் பிரச்சினைகளில் தனது சொந்த அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

அத்தனை அரசியல் வண்ணங்களையும் கொண்ட செய்தித்தாள்களும் சிற்சிறு வித்தியாசங்களுடன் இதே பகுப்பாய்வையே பகிர்ந்து கொண்டன. வலது-சாரி Le Figaro, இரண்டு ஜனாதிபதிகளும் “தமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளுக்கு புத்துயிரளிக்க” நோக்கம் கொண்டிருந்ததாக விளக்கியது, அத்துடன் மக்ரோனின் காலப்பொருத்தத்தையும் பாராட்டியது: “பிரான்சுக்கு சாதகமான ஒரு சர்வதேச சூழ்நிலையையும் மக்ரோன் அனுகூலமாக்கிக் கொண்டார். புட்டினுடன் பேசுகையில் அவருக்கு செயல்பட சுதந்திரம் இருந்தது: பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியம் காட்சியில் இருந்து வெளியில் போய் விட்டது, டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் அமெரிக்கா கணிக்கமுடியாததாகி விட்டது, ஜேர்மனி வரவிருக்கும் தனது தேர்தல்களுக்கு தயாரிப்பு செய்வதில் மும்முரமாக இருக்கிறது.”

எனினும், Libération பத்திரிகை, ஜேர்மனிக்கும் அதன் விருப்பத்திற்குகந்த ஜனாதிபதி வேட்பாளராய் இருந்த மக்ரோனுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை நினைவுகூர்ந்ததோடு, புட்டின் உடனான மக்ரோனின் நெருக்கத்தை பாராட்டியது. “அங்கேலா மேர்க்கெல் உடன் [மக்ரோன்] உருவாக்கியிருக்கும் இராஜதந்திர நெருக்கம் மறுக்கவியலாத சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறது” என்று அது எழுதியது. “தாட்சண்யமற்றவரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான ஜார் மகா பீட்டரது காலடிகளைப் பின்பற்றி நடக்க -புட்டினே கூட அவரது வம்சாவளி போன்ற பாணியையே தனக்கு அமைத்துக் கொள்கிறார்- ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், மக்ரோன் புட்டினுக்கு உறுதிப்பாடுகள் அளித்துக் கொண்டிருக்கிறார்.”

பிரெஞ்சு ஊடகங்களில் இத்தகையதொரு கருத்தொற்றுமை எழுவதானது பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியலில் ஒரு ஆழமான மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதையே பிரதிபலிக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகள் இடையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியானது பொறிவின் முன்னேறியதொரு கட்டத்தில் இருக்கிறது.

கடந்த தசாப்தத்தில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒன்றுசேர்ந்து உருவாக்கியிருந்த முன்முயற்சிகள் பலவற்றையும் மறுதலிக்கக் கூடியதான கொள்கைகளை வேர்சையில் மக்ரோன் முன்வைத்தார். வலது-சாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி 2007 இல் தேர்வான போது, அவர் 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத அமெரிக்க படையெடுப்புக்கு ஜேர்மனியும் பிரான்சும் எதிர்ப்பு காட்டியதால் அமெரிக்காவுடன் உறவுகளில் நேர்ந்திருந்த சேதத்தை சரிசெய்யும் பொருட்டு பிரான்சை மறுபடியும் நேட்டோவின் இராணுவத் தலைமைக்குள் கொண்டுவந்தார்.

அப்போது முதலாகவே, பிரான்சும் மற்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவெங்குலும் ஒரு போர் அட்டூழியத்தை நடத்தி வந்திருக்கின்றன, பெரும்பாலும் ரஷ்ய-ஆதரவு ஆட்சிகள் தான் அவற்றின் குறியாக இருந்து வந்திருக்கின்றன. ஆயினும் இப்போது மக்ரோன், அமெரிக்காவில் இருந்து விலகி ரஷ்யாவை நோக்கியதாக பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையின் ஒரு பரந்த மறுநோக்குநிலைக்கு பரிசீலனை செய்து வருவதை சமிக்கையளித்துக் கொண்டிருக்கிறார்.

சிரியா விடயத்தில் -இங்கே ரஷ்ய-ஆதரவு ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேட்டோவின் போரை, போர் தொடங்கிய 2011 முதலாக பிரான்ஸ் ஆதரித்து வந்திருக்கிறது, அமெரிக்க-ஆதரவு எதிர்ப்புப் போராளிகளை சிரியாவின் அரசாங்கமாகவும் கூட அங்கீகரித்திருக்கிறது—மக்ரோன் டமாஸ்கஸில் பிரான்சின் தூதரகத்தை மீண்டும் திறக்கும் சாத்தியத்தை முன்வைத்தார். ரஷ்யாவுடன் நெருக்கமான பயங்கரவாத-எதிர்ப்பு ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும் அவர் ஆலோசனையளித்தார்.

அமெரிக்க நிர்ப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது திணித்த பொருளாதாரத் தடைகளை புட்டின் கண்டனம் செய்தபோது மக்ரோன் அமைதியாக பக்கத்தில் நின்றிருந்தார். 2014 இல் கியேவில் ஒரு ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராய் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஆதரவுடன் பாசிச-தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததன் பின்னர் உக்ரேனுக்குள் வெடித்திருக்கும் மோதலை கையாளுவதற்கு, ஜேர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் உக்ரேன் இடையிலான நான்கு-வழி பேச்சுவார்த்தைகளது “நோர்மண்டி வடிவ”த்தை மக்ரோனும் வழிமொழிந்தார். இந்த பேச்சுவார்த்தை வடிவம் குறிப்பாக அமெரிக்காவை தள்ளிநிறுத்தி விடுகிறது.

முக்கியமாக, மக்ரோனின் முக்கிய கூட்டாளியான ஜேர்மனி தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குகின்ற நிலையில் வருகின்றதான இந்த கொள்கை மாற்றத்தின் பரந்த தாக்கங்களை சர்வதேச ஊடகங்களின் பிரிவுகள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில், மக்ரோன்-புட்டின் மாநாட்டிற்கும் நேட்டோவிற்குள் பெருகிக் கொண்டிருக்கும் கடுமையான புவி-மூலோபாய போட்டிகளுக்கும் இடையிலான தொடர்பை ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை சுட்டிக்காட்டியது. அமெரிக்க ஊடக செய்திகள் அனைத்தும் “ஒன்றையே வாசிக்கின்றன: மக்ரோன் புட்டினிடம் பொய்யான செய்திகளை கொடுத்தார், சிரியா மற்றும் ஓர்பால்விருப்பினர் உரிமைகள் ஆகிய விவகாரங்களை கொண்டு சென்றார். அதைத் தவிர்த்து வேறொன்று காண இருக்கவில்லை. முற்போக்கான நல்ல மனிதர் மக்ரோன் சர்வாதிகாரிகளது தீய ஆதரவாளாரான புட்டினின் பக்கம் துரிதமாய் நகர்ந்திருந்தார்.”

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கான் ட்ரம்ப்பின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் —இந்த சுற்றுப்பயணத்தின் போது ட்ரம்ப் மூர்க்கமான சவுதி-ஆதரவு மற்றும் ஈரான்-விரோத நிலைப்பாட்டை முன்வைத்தார்— வந்திருக்கின்ற இந்த சஞ்சிகை அமெரிக்காவுக்கும் அதன் ஓரளவுக்கான ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையிலான கடுமையான மூலோபாய மற்றும் எரிசக்தி போட்டிகளை சுட்டிக்காட்டியது.

போர்ப்ஸ் எச்சரித்தது: “மக்ரோனுக்கு டொனால்ட் ட்ரம்ப்பை விடவும் புட்டின் அதிகமாய் தேவையாகி இருக்கிறார். இவர்கள் இருவரும், குறைந்தபட்சம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்றாலும், அநேகமாக நன்கு இசைவுடன் செல்வார்கள், அதன் காரணம் இதுதான். முதலாவதாய், பிரான்சில் இருக்கும் பலருக்கு [ரஷ்யாவுக்கு எதிரான] தடைகள் பிடிக்கவில்லை...இரண்டாவது, இன்னும் முக்கியமானது, இந்த சிறு உடன்பாடு: ஈரானில் பிரம்மாண்டமான தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை விருத்தி செய்வதற்கு Total SA'இன் ஒப்பந்தம். பிரெஞ்சு எண்ணெய் பெருநிறுவனமான Total SA ஈரானிய ஹைட்ரோகார்பன் துறையின் மிகப்பெரும் ஐரோப்பிய நிறுவனங்களில் ஒன்றாய் இருக்கிறது. ரஷ்யா ஈரானின் சிறந்த நட்பு நாடு... ஈரான் விடயத்தில் பிரான்சும் Totalம் அமெரிக்காவை நம்ப முடியாது, ஆனால் அவை ரஷ்யாவை நம்ப முடியும்.”

சாத்தியமாகக் கூடிய பிரான்ஸ்-ரஷ்ய கூட்டணி அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஃபோர்ப்ஸ் குழப்பத்திற்கிடமின்றி கண்டிருக்கிறது என்றால், ஜேர்மனியின்  Die Zeit, இதற்கு நேர்மாறாய், ஆச்சரியத்தை வெளியிட்டது.”

“பெரும் அண்டைநாடுகளான பிரான்சும் ரஷ்யாவும் சந்திக்கும்போது, ஜேர்மனியின் கோணத்தில் இருந்து பார்க்கும் ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்வார், அவை ஜேர்மனிக்கு எதிராக ஏதேனும் திட்டத்தை மறைக்கின்றனவா என்று” அது எழுதியது. “பிரான்சும் ரஷ்யாவும் பெரும்பாலும் இதுபோன்ற விடயங்களில் விளையாடுவதை மகிழ்ச்சியாகக் கருதுகின்றன. ஆகவே மக்ரோனின் முதல் சர்வதேசத் தோற்றங்களை ஒரு புதுப்பிக்கப்பட்ட ஜேர்மன்-பிரெஞ்சு கூட்டணியின் உள்ளடக்கத்தில் பிரான்சின் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட ஒருமனதாக பொருள்புரியும் போது அது திகைப்பூட்டுவதாக இருக்கிறது.”

பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் வெளியுறவுக் கொள்கையில் திடீரென, துரிதமான மற்றும் கணிக்க முடியாத மாற்றங்கள் தோன்றுவது கடந்து செல்லும் நிகழ்வுகளோ அல்லது தற்செயல்களோ அல்ல, மாறாக ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆழமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு மிக விரிந்த நெருக்கடியின் அறிகுறிகளே ஆகும்.

1991 இல், சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதானது நேட்டோ கூட்டணிக்கு ஒரு பொது எதிரியை இல்லாமல் செய்தது. அதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், நேட்டோவின் உள்முக உருக்குலைவானது மிகவும் முன்னேறியதொரு கட்டத்தில் இருக்கிறது. 1990களில் அமெரிக்காவாலும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளாலும் ஈராக்கிலும் யூகோஸ்லாவியாலும் தொடங்கப்பட்ட போர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பகுதியெங்குமான போர்களாகவும், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பெரும் நேட்டோ இராணுவப் பெருக்கத்துடன் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க தலைமையிலான விரிந்த மோதல்களாகவும், மற்றும் சீனாவைக் குறிவைத்து அமெரிக்க தலைமையிலான “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யாகவும் தீவிரமடைந்திருக்கின்றன.

மக்ரோன் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாற்றமானது, அமெரிக்கப் போர்கள் தங்களது மூலோபாய நலன்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஐரோப்பிய தலைநகரங்களில் எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில், கொஞ்சகாலமாகவே தயாரிப்பில் இருந்து வருகின்றதான ஒன்று என்பதற்கான ஒவ்வொரு அறிகுறியும் இருக்கிறது. சென்ற ஆண்டில் பொருளாதார அமைச்சராக மக்ரோனே ரஷ்யா சென்றிருந்தார், அங்கு ரஷ்ய பொருளாதார அமைச்சர் அலெக்ஸி உலியுகயேவ் உடன் சந்தித்த அவர், ரஷ்யா மீது ஐரோப்பாவின் தடைகள் இருக்கின்ற போதிலும் கூட ரஷ்யாவுடனான பிரான்சின் பொருளாதார உறவுகள் ஆழமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டார். தடைகளின் பாதிப்பினால், ரஷ்யாவுடனான பிரான்சின் வணிக அளவு பாதியாகி வருடத்திற்கு 11.6 பில்லியன் டாலர்களாய் சரிவு கண்டிருந்தது.

மக்ரோனின் பிரதமரான எடுவார்ட் பிலிப், செல்வாக்குமிக்க சீன-ஐரோப்பா வணிக உச்சிமாநாட்டை தொடர்ந்து நடத்தி வந்திருக்கும் பிரான்சின் பரபரப்பான கண்டெயினர் ஷிப்பிங் துறைமுகமான லு ஆவ்ர் (Le Havre) நகரின் மேயராக இருந்தவராவார்.

நேட்டோ சக்திகளுக்கு இடையில் ஆழமடையும் மூலோபாய மற்றும் பொருளாதாரப் போட்டிகள், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையையும் கொண்டிருக்கின்றன. கால்நூற்றாண்டு காலம் தீவிரமடைந்து சென்றிருக்கும் போருக்குப் பின்னர், ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை மீண்டும் இராணுவமயமாதல் மற்றும் பிரான்சில் கட்டாய இராணுவ சேவைக்கு மீண்டும் திரும்ப மக்ரோனது அழைப்பு என, ஐரோப்பிய ஆளும் உயரடுக்கினர் வங்கிகள், பங்குதாரர்கள் மற்றும் பெருவணிகங்களது நலன்களின் பேரில் போரிடுகின்ற ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் ஒரு வெடிப்புக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

அட்லாண்டிக்கின் இருபக்கத்திலும் இருக்கின்ற போட்டி ஏகாதிபத்திய சக்திகளின் எதுவொன்றையும் தொழிலாளர்கள் ஆதரிக்க முடியாது; அத்தனையுமே தொழிலாள வர்க்கத்திற்குக் கடுமையான குரோதம் கொண்டிருக்கின்ற படுபயங்கரமான போர்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிற ஆளும் வர்க்கங்களால் தலைமை கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலெழுந்து கொண்டிருப்பது ஏதோவொரு ஏகாதிபத்திய சக்தியின் திவால்நிலை அல்ல, மாறாக உலக ஏகாதிபத்தியத்தின் திவால்நிலையும் அத்துடன் சென்ற நூற்றாண்டில் இரண்டுமுறை உலகப் போருக்கு இட்டுச் சென்ற மோதல்களின் வகைக்குள் சர்வதேச முதலாளித்துவம் மறுபடியும் இறங்கும் நிலையும் ஆகும்.

பிராங்கோ-ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களது பிற்போக்கான தன்மையானது, உண்மையில் மிக அப்பட்டமாக மக்ரோன் அரசாங்கத்தின் தன்மையால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்த பிரான்சின் கிட்டத்தட்ட இரண்டாண்டு கால அவசரகால நிலையை அது நீட்டித்திருப்பதோடு, வேலைகள் மற்றும் சமூக நல உதவிகளிலான ஆழமான வெட்டுகளை எதேச்சாதிகார பாணியில், உத்தரவுகளின் மூலமாக திணிப்பதற்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் போர் நடத்துவதற்கு அது தயாரிப்பு செய்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் எழுவதை எதிர்பார்த்து போலிஸ் படையின் எண்ணிக்கை மட்டங்களை அதிகரிப்பதற்கும், சிறை அறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் ஆதார வளங்களை அள்ளியிறைத்துக் கொண்டிருக்கிறது.