ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Understanding the geopolitics of terrorism

பயங்கரவாதத்தின் புவிசார் அரசியல் குறித்த புரிதல்

Bill Van Auken
8 June 2017

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு (ISIS) மீது சாட்டப்பட்ட ஒரு நீண்ட தொடர்ச்சியான இரத்தந்தோய்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் சமீபத்தியது, ஈரானிய நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) மீதும் மற்றும் இஸ்லாமிக் குடியரசின் மறைந்த பெருந்தலைவர் இமாம் கொமேனியின் (Imam Khomeini) கல்லறை மாடம் மீதும் நடந்த ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதல்களுடன், புதனன்று அதிகாலை ஈரானில் கட்டவிழ்ந்தது. அதில் குறைந்தபட்சம் 12 பேர் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர்.

தெஹ்ரானில் நடந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் பிரதிபலிப்புகள், மான்செஸ்டர் அரங்கில் 22 பேர் கொல்லப்பட்ட மே 22 குண்டுவெடிப்பு மற்றும் கடந்த சனியன்று ஒன்பது பேரை பலி கொண்ட இலண்டன் பால தாக்குதல்கள் ஆகியவை மீதான அவர்களின் விடையிறுப்பிலிருந்து தெளிவாக முரண்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை, முற்றிலுமாக ஈரான் படுகொலைகளை நியாயப்படுத்தி ஒரு வக்கிரமான அறிக்கை வெளியிட்டது. அது அறிவித்தது, “பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அவர்கள் ஊக்குவித்த அரக்கனுக்கே அவர்களே பலியாகும் அபாயத்தை எதிர்கொள்கிறார்கள் என்றே நாங்கள் கூறுவோம்.” இதே மனோபாவம் ஈரானியர்களின் உயிரிழப்புக்கு ஒப்பீட்டளவில் ஊடகங்களது அலட்சியத்திலும் பிரதிபலிப்பைக் கண்டது. ஈரானுக்கு எதிரான பயங்கரவாதமானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு ஒத்திசைவாக தீர்க்கமான அரசியல் நோக்கங்களுக்கு சேவையாற்றுகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

தெஹ்ரானின் தரப்பிலிருந்து, அத்தாக்குதல்களுக்கு விடையிறுப்பு நேரடியாக இருந்தது. அது தாக்குதலுக்கான பொறுப்பை அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பிராந்திய கூட்டாளியான சவூதி அரேபியாவின் முன்னால் நிறுத்தியது. “இந்த பயங்கரவாத தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதியும் (டொனால்ட் ட்ரம்ப்) பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பிற்போக்கு (சவூதி) தலைவர்களும் சந்தித்து வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் நடந்துள்ளது,” என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை (IRGC) வெளியிட்ட ஓர் அறிக்கையை ஈரானிய ஊடகங்கள் பிரசுரித்தன. இத்தாக்குதல், அடையாளம் காணத்தக்க அரசு நடவடிக்கையாளர்களுடன் கருத்தொருமித்து, தீர்க்கமான புவிசார் மூலோபாய நோக்கங்களை முன்னெடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கையாக தெஹ்ரானில் புரிந்து கொள்ளப்பட்டது.

மான்செஸ்டர் மற்றும் இலண்டனிலும், அத்துடன் பாரீஸ், புரூசெல்ஸ் மற்றும் அதற்கு முன்னர் பல இடங்களிலும் நடத்தப்பட்ட முந்தைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இதேயே கூறலாம்.

மேற்கத்திய ஊடகங்கள் வழமையாக இத்தகைய அட்டூழியங்கள் ஒவ்வொன்றையும், "தீயவர்கள்" அல்லது மதரீதியில் வெறுப்புடையவர்களின் தனித்தனியாக நடவடிக்கைகளாக, முட்டாள்களால் நடத்தப்பட்ட பகுத்தறிவற்ற நடவடிக்கைகளாக கையாள்கின்றன. யதார்த்தத்தில், இவை தீர்க்கமான அரசியல் நோக்கங்களை பின்பற்றுவதற்காக சர்வதேசரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையின் பாகமாக உள்ளன.

அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், மத்திய கிழக்கில் வலதுசாரி முதலாளித்துவ ஆட்சிகளுடனும் மற்றும் அவை நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி ஊக்குவித்த இஸ்லாமியவாத சக்திகளுடனும் கருத்தொருமித்து வேலை செய்து நடத்திய மிகப்பெரும் வன்முறையே, ஐரோப்பா வீதிகளில் நடக்கும் வன்முறைக்கு கீழமைந்துள்ளது.

ISIS, அதுவே கூட, தொடர்ச்சியான பல ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும். ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக சிஐஏ முடுக்கிவிட்ட இஸ்லாமியவாத அடிப்படைவாதிகளது போரில் உருவான அல் கொய்தாவிலிருந்து உடைந்து வந்த ஒரு அமைப்பு தான் ISIS. அது மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்ட அமெரிக்காவின் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இணைத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் லிபிய தலைவர் மௌம்மர் கடாபியை கவிழ்க்க 2011 போரில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் சிஐஏ உதவியுடன் அதற்குள் போராளிகளும் ஆயுதங்களும் வெள்ளமென பாய்ச்சப்பட்டன.

பயங்கரவாதத்தின் இந்த சமீபத்திய சுற்றானது, சிரியாவில் மெதுவான அமெரிக்க தலையீடு மீதும் மற்றும் ஆறாண்டு கால ஆட்சி மாற்றத்திற்கான இந்த போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் வாஷிங்டன் தோல்வி அடைந்திருப்பதன் மீதும் வாஷிங்டனின் மத்திய கிழக்கு கூட்டாளிகள் மற்றும் அதன் இஸ்லாமியவாத பினாமி சக்திகளிடையே அதிகரித்து வரும் அதிருப்தியில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது.

இத்தாக்குதல்களுக்கு உத்தரவு கொடுப்பவர்கள், இலண்டன், பாரீஸ் மற்றும் ஏனைய இடங்களில் உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை அனுபவித்துக் கொண்டு, உயர்-வர்க்க அண்டை அயலார் இடையே வாழ்கின்றனர். இவர்கள் அறியப்படாதவர்கள் இல்லை, அமெரிக்க ஆதரவிலான சிரியா போர் அதன் நோக்கங்களை எட்டுமானால் டமாஸ்கஸின் உயர்மட்ட மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே இவர்களைக் காண முடியும்.

பயங்கரவாத அட்டூழியங்களை மேற்கொள்பவர்கள் செலவு செய்யப்பட்ட உடைமைகளாவர், அடிவருடி சிப்பாய்களான இவர்கள் மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியம் நடத்தும் படுகொலையால் சீற்றமடையும் பரந்த அடுக்குகளிடையே எளிதாக பிரதியீடு செய்யப்படுகிறார்கள்.

பாரிய ஊடகங்கள் எப்போதுமே, இத்தகைய தாக்குதல்களை தடுக்க தவறியதை, பாதுகாப்பு படைகள் “புள்ளிகளை இணைக்க" (connect the dots) தவறிய ஒரு விடயமாக சித்தரிக்கின்றன. இந்த சொற்றொடர் இப்போது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டியது. ஏனெனில் நடைமுறையளவில் ஒவ்வொரு விடயத்திலும், சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு நன்கறியப்பட்டவர்களாக உள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்த சமீபத்திய தாக்குதல்களில் தொடர்புகள் மலைப்பூட்டுகின்றன, அதற்கு முந்தைய பயங்கரவாத நடவடிக்கைகளில் அதேபோன்ற உண்மைகள் வெளியாகி உள்ள போதும் கூட இவ்வாறு நடத்தப்படுகிறது. இலண்டன் பால படுகொலை தாக்குதல்தாரிகளில் ஒருவரான Yousseff Zaghba, சிரியாவிற்கு பயணிக்க முயல்கையில் இத்தாலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட போது, அவர் "பயங்கரவாதியாக விரும்புவதாக" சுதந்திரமாக ஒப்புக் கொண்டதுடன், ISIS சம்பந்தமான ஒரு புத்தகமும் வைத்திருந்தார். மற்றொருவர் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆவணப் படமொன்றில் காட்டப்பட்டவர், Regent பூங்காவில் ISIS கொடி ஒன்றை அவர் பறக்கவிட்டதும் அவர் பொலிஸ் உடன் மோதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதை அந்த ஆவணப்படம் காலவரிசை கிரமமாக காட்டியது.

அதேபோல, மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி சல்மான் அபேடியை பிரிட்டிஷ் அதிகாரிகள் நன்கறிந்திருந்தனர். லிபிய இஸ்லாமிய போராளிகள் குழு (LIFG) இன் அங்கத்தவர்களாக இருந்த அவர் பெற்றோர்கள், 2011 இல் மௌம்மர் கடாபிக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ ஆட்சி மாற்ற நடவடிக்கையில் பங்குபற்ற லிபியாவிற்கு திரும்பி செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அபேடியே கூட லிபியாவில் லிபிய இஸ்லாமிக் அரசு நடவடிக்கையாளர்களையும், சிரிய உள்நாட்டு போர் அனுபவஸ்தர்களையும் சந்தித்திருந்ததோடு, மான்செஸ்டரில் இருந்த போது அவர்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படும் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன தெளிவாகிறது என்றால் —9/11 விமானக் கடத்தல்காரர்கள் வரை பின்னோக்கி சென்று பார்த்தால்— இந்த கூறுபாடுகள் ஒளிவு மறைவின்றி மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் கூட உள்ளேயும் வெளியேயும் நகர்ந்துள்ளன என்பது மட்டுமல்ல, மாறாக அரசு பாதுகாப்புக்கு நிகரான ஒன்றின் கீழ் இருந்துள்ளன.

அவர்கள் கடவுச்சீட்டு பரிசோதனை இடத்தை எட்டும் போது, அவர்களது பெயர்களோடு அவர்கள் தடுக்கப்படக் கூடாது என்ற தீர்க்கமான குறிப்புகளுடன் வந்து விடுகின்றன. “ஐயா உங்கள் புகலிடத்திற்கு வாருங்கள், லிபியாவில் உங்கள் விடுமுறையை சிறப்பாக கழித்தீர்களா?” “சிரியாவிலும் சிறிது சுற்றுலா காலத்தை கழித்தீர்களா?”

இந்த வரம்பில்லா அதிகாரத்தை அவர்கள் ஏன் அனுபவிக்க முடிந்தது? ஏனென்றால் அவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறையின் கைக்கூலிகளாக இருந்ததுடன், லிபியாவில் இருந்து சிரியா வரையில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களிலும் மற்றும் அதற்கு அங்காலும் ஏகாதிபத்திய நலன்களை கூடுதலாக முன்னெடுக்க தொடுக்கப்பட்டு வருகின்ற போர்களிலும் அவசியமான பினாமிகளாக இருந்துள்ளனர்.

அப்பாவி மக்கள் அவர்களின் உயிர்களை பலி கொடுக்கும் வகையில், சந்தர்ப்பத்திற்கேற்ப இந்த கூறுபாடுகள் அவர்களுக்கு உதவியர்களுக்கு எதிராகவே திரும்புகின்றன என்றால், அது வியாபாரம் செய்வதற்குரிய விலையின் பாகமாக நடக்கிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பின்னர், அரசாங்கங்கள் ஒடுக்குமுறை மற்றும் கண்காணிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுக்கின்றன. துருப்புகள் வீதிகளில் இறக்கிவிடப்படுகின்றன, ஜனநாயக உரிமைகள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது, பிரான்சில் செய்ததைப் போல, அவசரகால நெருக்கடி நிலை அம்மண்ணில் சட்டமாக முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் அர்த்தத்தில் பார்த்தால் ஒன்றுக்கும் பிரயோசனமற்றவை, ஆனால் உள்நாட்டு மக்களைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சமூக அமைதியின்மையை ஒடுக்கவும் சிறப்பாக சேவையாற்றுகின்றன.

இத்தகைய சம்பவங்களின் ஒன்றரை தசாப்தத்திற்கும் அதிக காலத்திற்குப் பின்னர் என்ன வெளிப்படையாக இருக்கிறதோ அதைக் கூட ஊடகங்கள் குறிப்பிட மறுக்கின்றன என்றால், அது பயங்கரவாதம், மேற்கத்திய உளவுத்துறை முகமைகள் மற்றும் மத்திய கிழக்கில் முடிவில்லா போர்களுக்கு இடையே முழுமையான தொடர்பு எந்தளவிற்கு முழுமையாக அமைப்புமயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு அளவீடாக உள்ளது.

எல்லா இடங்களிலும் இரத்தமும் அழிவையும் முகப்பில் விட்டுச் செல்லும் இத்தகைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், அவர்கள் இலண்டனில் இருந்தாலும் சரி அல்லது மான்செஸ்டர், பாரீஸ், தெஹ்ரான், பாக்தாத் அல்லது காபூலில் இருந்தாலும் சரி, கொடூரமாக விலை கொடுக்க செய்யப்பட்டு வருகிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதென்பது, சூறையாடும் போர்களுக்கு ஒரு மோசடி சாக்குபோக்காக உள்ள "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதை முடிவுக்கு வருவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து தொடங்குகிறது, இத்தகைய போர்களில் ஏகாதிபத்திய உளவுச்சேவைகள் மற்றும் இராணுவ கட்டளையகங்களுடன் இரகசிய ஒத்துழைப்பில் செயல்படும் அல் கொய்தா மற்றும் அதன் துணை அமைப்புகள் பினாமி தரைப்படைகளாக பயன்படுத்தப்படுகின்றன.