ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Dropping the mask: A war of plunder in Afghanistan

முகமூடி நீக்கப்படுகிறது: ஆப்கானிஸ்தானில் ஒரு சூறையாடல் போர்

Bill Van Auken
27 July 2017

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட போரை தொடங்கி வைத்த ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் 16 வது ஆண்டுதினத்தை, மூன்று மாதங்களுக்கும் குறைந்த காலத்தில், வாஷிங்டன் எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த வறிய மற்றும் போரால் நாசமாக்கப்பட்ட தெற்காசிய நாடு மீதான தாக்குதல், ஒரேயொரு மனிதரை, ஒசாமா பின் லேடனை, வேட்டையாடும் அர்த்தமற்ற சாக்குபோக்கை மையப்படுத்தி, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பழிதீர்த்து நீதி பெறுவதற்குரிய ஒரு சிலுவை போர், அதாவது "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளவிய போரின்" முதல் தாக்குதலாக சித்தரிக்கப்பட்டது.

இப்படையெடுப்புக்கு விடையிறுப்பாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS), அந்த உத்தியோகபூர்வ வாதங்களை நிராகரித்ததுடன், அமெரிக்க நடவடிக்கையை ஓர் ஏகாதிபத்திய போராக கண்டித்தது. “ஆப்கானிஸ்தான் போரை நாம் ஏன் எதிர்க்கிறோம்,” என்று தலைப்பிட்ட அக்டோபர் 9, 2001 அறிக்கையில் நாம் எழுதினோம்:

அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் தொலைதூர சர்வதேச நலன்களின் பேரில் இந்த யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. இந்த யுத்தத்தின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் யூனியனின் கலைப்பானது, உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வளங்கள் மற்றும் இயற்கை வாயு நிறைந்த பிரதேசமான மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது...

இந்த முக்கிய ஆதாரவளங்கள், உலகின் மிகவும் அரசியல் ஸ்திரமற்ற பிராந்தியத்தில் அமைந்துள்ளன. ஆப்கானிஸ்தானை தாக்கி, ஒரு வாடிக்கையாளர் ஆட்சியை (client regime) அமைத்து, அப்பிராந்தியத்திற்குள் பரந்த இராணுவப் படைகளை நகர்த்துவதன் மூலமாக, அமெரிக்கா ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி, அதற்குள் அது அதன் மேலாதிக்க கட்டுப்பாட்டை பெறும் முயற்சியில் உள்ளது.

அண்மித்து 16 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆப்கானிஸ்தானில் அண்மித்து 9,000 அமெரிக்க துருப்புகள் உள்ளன. இந்த துருப்புகளும் மற்றும் அமெரிக்க விமானப்படைக்கு வேண்டிய பெரும் வெடிமருந்துகளும் இல்லாமல், ஜனாதிபதி அஷ்ரஃப் கானியின் கைப்பாவை ஆட்சி ஒரு வாரம் கூட நீடிக்காது.

மிதமான மதிப்பீடுகளின்படி, 2001 க்குப் பின்னர் இருந்து ஆப்கான் உயிரிழப்பு எண்ணிக்கை 175,000 ஐ எட்டியுள்ளது. நூறாயிரக் கணக்கானவர்களுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆறு மாதங்களில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை சாதனை மட்டத்திற்கு உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக, ஜனநாயகத்தைக் கட்டமைப்பதற்காக, பெண்களை சுதந்திரப்படுத்துவதற்காக, மனித உரிமைகளுக்காக சண்டையிடுகிறோம் என்ற பெயரிலும் மற்றும் இன்னும் வேறு பல பொய் சாக்குபோக்குகளுடனும் இந்த படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் முடிவில், காட்டுமிராண்டித்தனமான, ஊழல் நிறைந்த, இரத்தக்களரியான இந்நடவடிக்கையானது, உலக சோசலிச வலைத் தளம் அதன் 2001 அறிக்கையில் குறிப்பிட்டவாறு ஏகாதிபத்திய நலன்களால் உந்தப்பட்டுள்ளது. இது பெரிதும் தெளிவாகவே புலப்படுகின்ற நிலையில், அமெரிக்க தளபதிகள் எதை நேர்த்தியாக "முடக்கப்பட்ட நிலை" என்று வர்ணிக்கிறார்களோ, அதன் கீழ் தாலிபானும் ஏனைய கிளர்ச்சியாளர்களும் முன்பில்லாதளவிற்கு ஆப்கான் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளனர் என்பதோடு, அந்நாட்டு பாதுகாப்பு படைகள் காயங்களுடனும் மற்றும் பொறுப்புகளை விட்டோடியும் உறுதி செய்யவியலா இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்கொள்வதற்காக ட்ரம்ப் நிர்வாகம் எரிச்சலூட்டும் விதமான ஓர் உள்விவாதத்தை நடத்துகின்றது.

ஆப்கானிஸ்தானுக்கு 4,000 இல் இருந்து 5,000 கூடுதல் துருப்புகளை அனுப்பி போரைத் தீவிரப்படுத்துவதற்கு, ட்ரம்ப் அவர் பாதுகாப்புத்துறை செயலளரான சமீபத்தில் ஓய்வூபெற்ற கடற்படை தளபதி "போர் வெறியர்" ஜேம்ஸ் மாட்டீஸ் க்கு அதிகாரம் அளித்துள்ள நிலையில், இந்த ஆயத்தப்பாடு இனி முன்னெடுக்கப்பட உள்ளது.

முதலில் கடந்த மாத நேட்டோ உச்சிமாநாட்டுக்கு முன்னரும் பின்னர் ஜூலை மத்தியிலும் உறுதியளிக்கப்பட்ட புதிய போர் மூலோபாயம் வெளியிடப்பட உள்ளது, ட்ரம்ப் கடந்த வாரம் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில் "17 ஆண்டுகளாக எதற்காக நாம் அங்கே இருக்கிறோம்” என்பதை அவர் கண்டறிய முயன்று வருவதாக தெவித்தார். இதுவரையில் வாஷிங்டன் அப்போரில் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் செலவிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழனன்று ஒரு பென்டகன் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்திருந்த நிலையில் கூடுதல் துருப்புகள் அனுப்பப்படுமா என்று கேட்கப்பட்ட போது, “பார்ப்போம்,” என்று பதிலளித்தார்.

எவ்வாறிருப்பினும், நிர்வாகம் இப்போது, போரின் அடிப்படை நிலைப்பாடான சூறையாடல் மற்றும் இலாபத்தில் ஒருங்குவிந்து, தீவிரப்படுத்துவதற்கான யோசனையை தயார்படுத்தி வருவதாக தெரிகிறது.

புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் இல் வெளியான ஒரு செய்தியின்படி, ட்ரம்ப் "முந்தைய நிர்வாகங்கள் தயங்கி கொண்டிருந்த ஒரு சாத்தியக்கூறை இறுக்கி உள்ளார்: ஆப்கானிஸ்தானின் பரந்த கனிம வளங்கள், இவற்றை மேற்கத்திய நிறுனங்களால் இலாபகரமாக கையாள முடியுமென அவர் ஆலோசகர்களும் மற்றும் ஆப்கான் அதிகாரிகளும் அவருக்கு கூறியுள்ளனர்.”

பென்டகனுடன் ஒப்பந்தங்களைக் கொண்டிருப்பதும் மற்றும் ஆப்கானிஸ்தானில் மிக வெளிப்படையாகவே மிகுந்து காணப்படும் அரிய நில கனிமங்களில் நிபுணத்துவம் கொண்ட நிறுவனமுமான American Elements இன் தலைமை செயலதிகாரியும், தனியார் நிதி முதலீடு மற்றும் பங்கு விலை-நிர்ணய நிறுவனத்தின் பில்லியனர் Stephen Feinberg உம், இவர்கள் இருவரும் தான் ட்ரம்புக்கு அந்த யோசனையை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ட்ரம்பின் ஒரு பிரபல வோல் ஸ்ட்ரீட் ஆதரவாளரான Feinberg க்கு DynCorp International என்ற மிகப்பெரிய இராணுவ ஒப்பந்த நிறுவனம் சொந்தமாக உள்ளது, மேலும் அமெரிக்கா செயல்படுத்தி வரும் சுரங்கங்களை தாலிபான் மற்றும் ஏனைய கிளர்ச்சியாளர்களது தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக அவர் கூலிப்படை சேவைகளையும் அளித்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

டைம்ஸ் தகவல்களின்படி, வாஷிங்டனில் உள்ள அவரது புதிய எஜமானரின் இலாப சிந்தனையை உணர்ந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி, அமெரிக்க ஜனாதிபதி உடனான அவர் முதல் உரையாடலுக்குப் பின்னர் "சுரங்க தொழிலை ஒரு பொருளாதார வாய்ப்புவளமாக ஊக்குவித்தார்.”

ஆப்கானிஸ்தானின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க அமெரிக்க முதலாளித்துவம் அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க வேண்டுமென்ற யோசனை, டொனால்ட் ட்ரம்பின் கண்டுபிடிப்பல்ல. 2001 இல் அந்த மண்ணில் முதலில் அமெரிக்க சிறப்புப்படை துருப்புகள் காலடி வைப்பதற்கு முன்னரே அந்த வளங்களைக் கைப்பற்ற முடியுமென சிஐஏ நன்கறிந்திருந்தது. “2006 இல், ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம் அதன் கனிம வளங்களை அளவிட அந்நாட்டின் மீது வான்வழி ஆய்வுகளை மேற்கொண்டதாக,” டைம்ஸ் குறிப்பிடுகிறது.

மேலும் 2010 இல் அந்த "சாதனை பத்திரிகை", துருப்புகளை ஒபாமா நிர்வாகம் 100,000 ஆக "அதிகரிப்பதை" ஆதரித்து கொண்டிருந்த போது, “ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கனிம வளங்களைக் கண்டறிகிறது" என்ற தலைப்பில் அதன் சொந்த பெருமைமிகு அறிக்கையை பிரசுரித்தது. அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு பெருநிறுவனங்களின் "உதவி" உடன், ஆப்கானிஸ்தானை "உலகிலேயே மிக முக்கிய சுரங்க மையங்களில் ஒன்றாக மாற்றலாம்" என்று அக்கட்டுரை அறிவித்தது.

ஆனால் ட்ரம்ப் இன் கீழ், இந்த முகமூடி இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்களை மூடிமறைக்க பயன்படுத்தப்பட்ட “மனிதாபிமான” மற்றும் “ஜனநாயக” பாசாங்குத்தனங்கள் கைவிடப்பட்டு வருகின்றன என்பதோடு, ட்ரம்பின் ஆளுருவில், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஈவிரக்கமற்ற, ஒட்டுண்ணித்தனமான மற்றும் குற்றகரமான குணாம்சம், அமெரிக்க வெளியுறவு கொள்கையை பகிரங்கமாக முன்னெடுக்கிறது. ஆப்கானிஸ்தான் போரை ட்ரம்ப் அடுத்த கட்டத்திற்கு பரிசீலிக்கையில், அமெரிக்க துருப்புகளைக் கொண்டு அவர் மகன் டொனால்ட் ஜூனியர் அல்லது அவர் மருமகன் ஜரீத் குஷ்னருக்காக என்ன உடன்படிக்கைகளைப் பெற முடியுமென வேலை செய்வதற்கும் அதில் ஒட்டுமொத்தமாக சாத்தியமுள்ளது.

ட்ரம்ப், அவர் பதவியேற்றதற்குப் பின்னர் வேர்ஜினியா லாங்லேயில் சிஐஏ இன் தலைமையகத்தில் கூடியிருந்த முகவர்கள் மற்றும் முகமை செயல்பாட்டாளர்களுக்கு அவர் வழங்கிய முதல் உரைகளில் ஒன்றில், “தோற்றவரின் உடைமை வெற்றியாளருக்கு சொந்தம்" என்ற கொள்கையை மெச்சியதுடன், அவர் அணுகுமுறையை விவரித்திருந்தார். ஈராக் போரைத் தொடர்புபடுத்தி அவர் கூறுகையில், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் ஆதாயத்துடன் சேர்ந்து, "நாம் எண்ணெயை வைத்திருந்திருக்க வேண்டும்,” “ஆனால், சரி போகட்டும், உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

ஆப்கானிஸ்தானின் மூலோபாய கனிம வளங்களை, இன்னும் பரந்த விதத்தில் கூறுவதானால், மத்திய ஆசியாவின் பரந்த எரிசக்தி ஆதாரவளங்களையும், அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி கைப்பற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வெறுமனே தாலிபான் கிளர்ச்சி பிரச்சினையை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக ஆப்கானிஸ்தானிலும் மற்றும் பரந்த அப்பிராந்தியத்திலும் தங்களின் சொந்த நலன்களை பின்தொடரும் பிரதான போட்டியாளர்களின் எதிர்ப்பையும் அது எதிர்கொள்கிறது.

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய தாமிர இருப்புகளைப் பெறுவதற்காக சீனா, அதன் அரசுக்கு சொந்தமான சுரங்க பெருநிறுவனத்திற்கும் அந்நாட்டிற்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 3 பில்லியன் டாலர் உடன்படிக்கை ஒன்றை முன்னெடுக்க முனைந்து வருகிறது. காபூல் அரசாங்கத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே சமாதான மத்தியஸ்தம் செய்ய ரஷ்யா அதன் சொந்த முயற்சியை தொடங்கியுள்ளது, மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஏப்ரல்-மத்தியில் நடந்த கடைசி சுற்றுக்கு முன்னதாக, அமெரிக்கா, கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு இலக்கை தாக்குவதற்காக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி, அதன்மூலம் தெளிவாக மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு ஒரு சேதியை அனுப்பியது.

கடந்த கால் நூற்றாண்டாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ச்சியான போர்முறைகளில் ஈடுபட்டுள்ளது, முதல் எடுத்துக்காட்டிலேயே உலகளாவிய முதலாளித்துவ விவகாரத்தில் அதன் செல்வாக்கு சரிவை ஈடுகட்டுவதற்காக அதன் இராணுவ வல்லாதிக்கத்தைப் பயன்படுத்துவதை நோக்கி திரும்பிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம், எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் மற்றும் சோவியத் ஒன்றிய கலைப்பால் முதலாளித்துவ ஊடுருவலுக்கு திறந்துவிடப்பட்ட அப்பிராந்தியங்களுக்குள் அதன் செல்வாக்கை விரிவாக்கவும் முனைந்துள்ளது.

இப்போது அது, “அமெரிக்கா முதலில்" எனும் பதாகையின் கீழ், அதன் எதிரிகள் என்று கருதப்படும் நாடுகளை மட்டுமல்ல, மாறாக தங்களின் சொந்த வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை பின்தொடர உந்தப்பட்டுள்ள பிரதான சக்திகள், குறிப்பாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் முன்னாள் கூட்டாளிகளை விலையாக கொடுத்து, சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் அது சார்ந்த மூலோபாய நலன்களுக்கான ஒரு அப்பட்டமான சண்டையை நடத்திக் கொண்டிருக்கிறது.

முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்பிருந்த இதுபோன்ற பதட்டங்களும் மோதல்களும், ஒரு மூன்றாம் உலக போர் அச்சுறுத்தலையும், அத்துடன் சேர்த்து அணுஆயுத நிர்மூலமாக்கலுக்கான சாத்தியக்கூறையும் உயர்த்துகின்றன.

வாஷிங்டனில் என்னதான் கடுமையான உட்கட்சி சண்டைகள் இருந்தாலும், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும் அதிகரித்தளவில் இராணுவவாதத்திற்குத் திரும்புவதை ஆதரிக்கின்றனர், அதேவேளையில் போருக்கு அதிகளவில் விரோதமாக உள்ள மக்களிடம் இருந்து அவர்கள் தங்களின் கொள்கைகளது பாதிப்புகளைத் திட்டமிட்டு மூடிமறைத்தும் வருகின்றனர்.