ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan government deploys army to break oil workers’ strike

இலங்கை அரசாங்கம் எரிபொருள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை அனுப்பியது

By Shree Haran and W. A. Sunil
27 July 2017

செவ்வாய் இரவு, இலங்கை அரசாங்கமானது கொலன்னாவ, முத்துராஜவெல மற்றும் பேராதனையில் உள்ளவை உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் (CPC) முக்கிய விநோயோக மையங்களை கைப்பற்ற இராணுவத்தை அணிதிரட்டியது.

எரிபொருள் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் கடுமையான அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பொலிஸ் படையினர் கொலன்னாவ வளாகத்திற்கு வெளியே தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றனர்

செவ்வாய்க் கிழமை காலை தொடங்கிய இந்த வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை பரந்த சமூக எதிர்ப்பிற்கு ஒரு மைய புள்ளியாக ஆகிவிடும் என்ற அச்சத்தினால் அரசாங்கம் இதை உடனடியாக நசுக்க நடவடிக்கை எடுத்தது.

தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டணியே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலான இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் (SLIEU), மற்றும் ஒரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான லங்கா பெட்ரோலிய பொது தொழிலாளர் சங்கம் ஆகியன இதில் அடங்கும். அரசாங்கத்தின் பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) தேசிய தொழிலாளர் சங்கம், வேலைநிறுத்தத்தில் சேரவில்லை.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறும், சீனாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சி.பி.சி.க்கு எண்ணெய் சேகரிப்பு குதங்களை மீளப் பெறுமாறும் மற்றும் சபுகஸ்பகந்தையில் உள்ள பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் புதுப்பிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கோரியே இந்த வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

தனியார்மயமாக்கத்திற்கு எதிரான விரோதத்தை வெளிப்படுத்தவே தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்தனர். எனினும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், பெயரளவிலான அரச உடைமையை பராமரிப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளையும் நிலைமைகளையும் உத்தரவாதப்படுத்த முடியும் என்ற மோசடிகளை ஊக்குவிப்பதன் பேரிலும், தொழிலாளர்களின் எதிர்ப்பை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எதிரான தேசியவாத கண்டனங்களில் திசை திருப்பிவிடுவதையே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நோக்கமாகக் கொண்டிருந்தன.

தொழிற்துறை நடவடிக்கைகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி சிறிசேன வெளியிட்டார். அரசாங்கத்தின் கொடூரமான வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின் 24 மணிநேரத்துக்குள் வேலைக்குத் திரும்பாத ஊழியர்கள் தங்களது பதவி விலகியதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படுவார்கள், என்று அறிவிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிரான தொடர் இராணுவ நடவடிக்கைகளில் இது சமீபத்தியதாகும். கடந்த டிசம்பரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலையை நிரந்தரமாக்க கோரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தை தகர்க்க நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்களை அரசாங்கம் அனுப்பியது.

செவ்வாய்க்கிழமை இரவு, பொலிசாரால் பிரதான எரிபொருள் விநியோக மையத்திற்குள் நுழைய முடியாமல் போன பின்னர், கனரக ஆயுதம் தரித்த கமாண்டோக்கள் உள்ளே குதித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றினர்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய தொழிலாளர்கள், சிப்பாய்கள் வளாகத்தில் இருந்து தம்மைத் துரத்துவதற்கு முன்னதாக அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறினர். சிலர் மதில் சுவருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்கள். மற்றவர்கள் வெளியே இழுத்துத் தள்ளப்பட்டனர்.


கொலன்னாவ CPC வளாகத்திற்குள் இராணுவப் படைகள்

துருப்புக்கள் போர் காலத்தில் செயற்பட்டது போல் நடந்துகொண்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் செவ்வாயன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் திட்டமிடப்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலர் தெரிவித்தனர்.

2009ல் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூர இனவாத யுத்தத்தை மேற்பார்வையிட்டதில் பொன்சேகா பேர்போனவராவர்.

தொழிலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர், பொலிசும் குண்டர்களும் அவர்களை தாக்கினர். நூற்றுக்கணக்கான இராணுவ சிப்பாய்களும் பெரும் ஆயுதமேந்திய விசேட அதிரடிப் படை (STF) பொலிசும் பிரதான வாயில்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

கொலன்னாவவில் கலகப் பிரிவு பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளுடன் தயாராக இருந்தனர். தொழிலாளர்கள் எண்ணெய் போக்குவரத்து இரயில்கள் மற்றும் பவுசர்களை தடுக்க முயன்றனர், ஆனால் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தலைவர்கள் உட்பட 16 பேரை பொலிசார் கைது செய்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்குகளை நோக்கி அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சிறிசேன, இராணுவ நடவடிக்கை முழு தொழிலாள வர்க்கத்தையும் மிரட்டுவதை இலக்காகக் கொண்டது, என்பதை தெளிவுபடுத்தினார். "ஒரு சிறிய பிரிவினர் பெரும்பான்மை மக்களை மிரட்டுவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது" என்று அவர் எச்சரித்தார்.

"எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவை என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்திருக்கிறோம். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை அதிகாரங்களை பிரகடனப்படுத்திய பின்னர், அதன் செயற்பாடுகளை உறுதிப்படுத்த எல்லா நடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்," என சிறிசேன தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்களின் சமீபத்திய வேலைநிறுத்தத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வைத்தியர்கள் வேலைநிறுத்தங்களை "விளையாட்டாக" நினைக்கின்றார்கள் என்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ், "இன்றும் கத்திக் கொண்டிருப்பவர்களின் அடையாளத்தை கூட காண முடியாமல் இருந்தது" என சிறிசேன மறைமுகமாக நினைவுபடுத்தினார். அரசாங்கத்தை கவிழ்க்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.


அதிரடிப்படையினர் தாக்க தயாராகின்றனர்

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய தொழிலாளர்கள், சிறிசேனவின் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் தாக்குதலுக்கு தங்கள் விரோதத்தை வெளிப்படுத்தினர். புலிகளுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தில் சி.பி.சி. தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தை தியாகம் செய்து, இராணுவத்தை ஆதரிப்பதற்காக இரத்தமும் கொடுத்தனர் என ஒருவர் தெரிவித்தார். "ஆனால் இப்பொழுது எங்களைப் தாக்கிய பாதுகாப்புப் படையினர் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட அதே வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்," என்று அவர் கூறினார்.

பிரதான தொழிற்சங்கங்களும் முதலாளித்துவக் கட்சிகளும், பிற்போக்கு போரை ஆதரிப்பதன் மூலமும் தொழிலாளர்கள் "தாயகத்தை பாதுகாப்பதற்காக தியாகம் செய்ய வேண்டும்" என அழைப்பு விடுத்தும், இந்த இராணுவத் தாக்குதல்களுக்கு வழி வகுத்தனர்.

அந்த தொழிலாளி தொடர்ந்தார்: "இந்த போராட்டத்தில் நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடினோம். ஏப்ரல் மாதம் நடந்த கடைசி வேலைநிறுத்தத்தின்போது, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள எண்ணெய் டாங்கிகளை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒப்படைக்கமாட்டோம் என விக்கிரமசிங்க உறுதியளித்தார், ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார்."

அநேகமான சி.பி.சி. தொழிலாளர்கள் சிறிசேன அரசாங்கத்திற்கு வாக்களித்ததாக இன்னுமொரு வேலைநிறுத்தக்காரர் கூறினார். தனியார்மயமாக்குவதை அது தடுக்கும் என அவர் எதிர்பார்த்துள்ளார். "ஆனால் இப்போது இந்த அரசாங்கம் முந்தைய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு வேறுபட்டதல்ல என்று காட்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு அறைகூவல்கள் விடுப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதை மட்டுப்படுத்தி, ஒழுக்கமான வேலை நிலைமைகளை பாதுகாக்க முடியும் என்ற மாயையை ஊக்குவித்து வரும் தொழிற்சங்கங்களின் வங்குரோத்தை தற்போதைய தனியார்மயமாக்கல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனியார்மயமாக்கல் நிகழ்ச்சிநிரல் இலங்கை முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளால் உந்தப்பட்டு வருகிறது என்பதை அவர்கள் மூடி மறைக்க முயல்கின்றனர்.

இலங்கை சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் ஜயந்த பெரெய்ரா, வேலைநிறுத்தத்திற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் சி.பி.சி.யை ஒரு இலாபகரமான நிறுவனமாக பராமரிப்பது எப்படி என்பது பற்றி அரசாங்கத்திற்கு ஒரு முன்மொழிவு பட்டியலை சமர்ப்பித்ததாகவும் பிரதமர் அதுபற்றி மகிழ்ச்சி அடைந்தார் என்றும் கூறினார்.

செவ்வாயன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபோது, தொழிற்சங்கங்கள் தாம் "ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும்" தொழிற்சங்க நடவடிக்கை காலவரையின்றி நீடிக்கும் எனவும் கூறினர். ஆயினும், இந்த வேலைநிறுத்தம் இராணுவத்தால் ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் புதன் கிழமையன்று சிறிசேனவை சந்தித்து, அரசாங்கம் இராணுவத்தை விலக்கிக்கொண்டால் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்க விருப்பம் தெரிவித்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்துடன் ஒரு "தீர்வை" அடைய இன்னும் கூடுதலான பேச்சுவார்த்தைகளுக்கு வாக்குறுதியளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

ஏப்ரல் மாதம் தொழிற்சங்கங்கள் சி.பி.சி.யில் "காலவரையற்ற வேலைநிறுத்தம்" ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. மறுநாள் பிரதமருடனான ஒரு பேச்சுவார்த்தையின் பின் அதை முடித்துக்கொண்டன. இரண்டு வருடங்களுக்கு "நாட்டை ஒழுக்கப்படுத்துவதற்கு" பொன்சேகா ஆயுதப்படைகளை பொறுப்பேற்க வேண்டும் என்று முன்மொழிந்ததன் மூலம் சிறிசேன பதிலளித்தார் (பார்க்க: “Sri Lankan president calls on former army commander to ‘discipline the country’”).

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களின் மீதான அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்கள் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு பரந்த நகர்வின் ஒரு பாகம் ஆகும்.

தொழிற்சங்க தலைவர்களின் அரசாங்கத்துடனான பின்கதவு சூழ்ச்சிகள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் போராடுவதற்கு -தொழிற்சங்கங்களுக்கு எதிராக– கீழ்மட்ட உறுப்பினர்களின் குழுக்கள் உட்பட புதிய தொழிலாளர் அமைப்புகள் தேவை என்பதைக் காட்டுகிறது.

இந்த அமைப்புக்கள், துறைமுகங்கள் மற்றும் எரிபொருள் சேவைகளை பொது உடமையின் கீழ் மற்றும் தொழிலாளர்களின் கட்டிப்பாட்டின் கீழ் வைத்து, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதை இலக்காகக் கொண்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க, இந்த வேலைத்திட்டத்திற்கு போராடும் ஒரே அரசியல் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும்.