ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The police murder of Iraq War veteran Brian Easley

ஈராக் போரின் முன்னாள் சிப்பாய் பிரையன் ஈஸ்லியின் பொலிஸ் படுகொலை

Eric London
10 July 2017

ஜூலை 7 அன்று காலை, 33 வயதான ஈராக் போரின் முன்னாள் சிப்பாய் பிரையன் ஈஸ்லி அட்லாண்டிக் புறநகர் பகுதியான ஜோர்ஜியாவின் கோப் உள்ளாட்சியின் வெல்ஸ் ஃபார்கோ வங்கிக்குள் சென்று, அங்கிருந்த இரண்டே பேரிடம் —இருவருமே வங்கி பணியாளர்கள்— அவரது முதுகுப்பையில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அவர்களை பிணைக்கைதிகளாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தை அழைத்து, அமைதியான குரலில், அவர் வங்கியைக் கொள்ளையடிக்க வரவில்லை என்று விவரித்தார். படைத்துறை சேவையாற்றி வரும் சிப்பாய்களுக்கான விவகாரத் துறை (VA), ஈராக்கில் அவர் காயமுற்றதற்காக மாதந்தோறும் கொடுக்க வேண்டிய 892 டாலர் தொகையை அநியாயமாக நிறுத்திவிட்டதாகவும், அந்த பணத்தை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்பதே அவரின் ஒரே கோரிக்கை என்றும் தெரிவித்தார்.

“அவர்கள் எனது உடல் ஊனத்தைப் பரிசோதித்தனர், என்னிடம் எதுவுமே இல்லை, நான் வீதியில் நிற்கிறேன், என்னிடம் உணவுக்கோ அல்லது வேறு எதற்குமோ பணம் இல்லை, நான் பட்டினியில் வாழவிருக்கிறேன்,” என்றவர் மன்றாடினார். குறிப்பாக அவரது எட்டு வயது மகளின் கதியைக் குறித்து அவர் கவலை கொண்டிருந்தார்.

இதற்கிடையே பொலிஸ் தாக்கும் பாணியில் வெளியே ஒன்றுதிரண்டது. அப்பகுதி முற்றுகையிடப்பட்டு, அந்த வங்கியை சுற்றி வளைப்பதற்காக ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு FBI பேச்சுவார்த்தையாளர் அந்த வங்கியை அழைத்து பேசியபோது, ஈஸ்லி அவரின் 892 டாலர் கோரிக்கையைத் தொடர்ந்தார்.

ஈஸ்லி யாருக்கும் அச்சுறுத்தல் கிடையாது என்பது பிணைக்கைதிகளாக இருந்தவர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது. ஈஸ்லி, WSB-TV உடனான தொலைபேசி அழைப்பில், அவர் பணியாளர்களில் எவரையும் காயப்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். “இந்த பெண்கள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் மிகவும் ஆதரவாக ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்,” என்றார்.

ஈஸ்லி "மரியாதையுடனும்" “பணிவுடனும்" நடந்து கொண்டதாக அந்த பிணைக்கைதிகளே பத்திரிகைக்கு தெரிவித்தனர். ஓர் உள்ளூர் பத்திரிகை தகவலின்படி, “அந்த வங்கிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எவரும் பாதிக்கப்படும் அபாயத்தில் இல்லை,” என்பதை ஒரு பொலிஸ் செய்தி தொடர்பாளரே வெளியிட்டார்.

ஒரு கவச வாகனத்தைப் பயன்படுத்தி, SWAT குழு, வங்கியின் கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, அந்த இளைஞரின் உடலை தோட்டாக்களால் சல்லடையாக துளைப்பதிலிருந்து இவை எதுவுமே தடுத்துவிடவில்லை. ஈஸ்லியின் முதுகுபையிலும் சரி அவர் ஓட்டல் அறையிலும் சரி அவரிடம் எந்த குண்டும் இல்லை என்று ஏற்கனவே தொலைபேசி உரையாடலில் தெளிவாகி இருந்ததை பொலிஸ் பின்னர் உறுதிப்படுத்தியது.

ஒன்றும் இல்லை. ஈஸ்லியின் மரணம் பொலிஸ் விரும்பிய விளைவாக இருந்தது. இது பொது மக்களுக்கு ஒரு சேதியை வழங்கும் நோக்கில், ஒரு கணக்கிட்ட அரசு படுகொலை நடவடிக்கையாகும்.

ஈஸ்லி மற்றும் WSB-TV இன் உதவியாசிரியர் ஸ்டீபன் ஸ்டீஜர் க்கு இடையே நடந்த பதிவுசெய்யப்பட்ட உரையாடல், உதவி கோரும் ஒரு நிராதரவான மனிதரின் மன்றாடலாக உள்ளது. “அவருடன் யாராவது பேச வேண்டுமென அவர் விரும்புவதாக நான் உணர்ந்தேன்,” என்று ஸ்டீஜர் தெரிவித்தார்.

படைத்துறையின் இரண்டாம் நிலை அலுவலராக இருந்த ஈஸ்லி, 2003 மற்றும் 2005 க்கு இடையே ஈராக் போரில் சண்டையிட்டிருந்தார் —இந்த படையெடுப்பு காலகட்டத்தில் மற்றும் அதற்கு பிந்தைய உடனடி காலகட்டத்திலும், சண்டை அதன் மோசமான நிலையில் இருந்ததுடன், படைத்துறைசார மக்களின் உயிரிழப்பு அதன் அதிகபட்ச மட்டத்தில் இருந்தது. அந்த படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் ஈராக் சமூகத்தை அழித்ததுடன், ஒரு மில்லியன் ஈராக்கியர் வரையில் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது, அதேவேளையில் சுமார் 2,000 அமெரிக்க சிப்பாய்களும் உயிரிழந்தனர். அதிர்ச்சியில் உறைய வைக்கும் தாக்குதல், ஃபல்லூஜா, அபு க்ரஹிப், பிளாக்வாட்டர், திட்டம் நிறைவேற்றப்பட்டது, இரகசிய தளம், ஹடிதா — இவையே ஈஸ்லி ஈடுபட்டிருந்தபோது அந்த படையெடுப்பின் அகராதிகளில் இருந்தவை.

படைத்துறையில் சேவையாற்றி வரும் பெரும்பான்மை இராணுவ சிப்பாய்களை போலவே, ஈஸ்லியும் படைத்துறைசாரா வாழ்வின் புதிய சூழலில் ஒத்திருக்க சிரமப்பட்டார். அவர் ஜோர்ஜியாவின் ஒரு பண்டகசாலையில் குறைந்த-கூலி வேலை ஒன்றை ஏற்றுக் கொண்டு, அவர் பெற்றோர்களுடன் அங்கே சென்றார். திரைப்பட கல்லூரி படிப்பில் இருந்த ஆர்வத்தால் மீண்டும் அதை தொடர முயன்றார், ஆனால் அவரால் தனது நிலைமையை ஒழுங்கமைக்க முடியவில்லை. அவரும் அவர் மனைவியும் விகாகரத்து செய்து கொண்டதுடன், அவர் அவரது தேவையைப் பூர்த்தி செய்யவே போராட வேண்டியிருந்தது.

அவரது உடல் ஊன தொகைகளை VA நிறுத்தியதும், பணப்பற்றாக்குறையில் சிக்க தொடங்கியதாக ஈஸ்லி தெரிவித்தார். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு சாலையோர உணவுவிடுதியில் வாழ்ந்து வந்தாலும், அதற்கடுத்து இன்னும் ஒரேயொரு நாள் இரவு மட்டுமே அங்கே தங்கியிருக்க அவரிடம் பணம் இருந்தது. சனியன்று, அவர் வீடற்றவராக இருந்திருப்பார்.

அவர் மகளை அவர் நேசித்ததுடன், அவரை கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்று மிகவும் கவலை கொண்டிருந்தார். பல நாட்களுக்கு முன்னதாக அவர் உதவிக்காக VA மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்தார், ஆனால் அவருக்கு உளவியல்ரீதியிலான உதவிகள் வழங்குவதற்கு பதிலாக, VA பொலிஸை அழைத்து, அவரை வெளியேற்றியது.

ஈஸ்லியின் உறவினர்கள் அவர் மரணத்தைக் கேட்டு பீதியடைந்தனர். “எனக்கு தெரிந்த வரையில் பிரைன் அவ்வாறானவர் கிடையாது,” என்று ஜாஸ்ஸிமா டேமன்ஸ் தெரிவித்தார். “அவர் யாரையும், யாரையுமே துன்புறுத்த மாட்டார்,” என்றார்.

சியாரா டேமன் கூறுகையில், “எங்கள் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது, ஏனென்றால் இந்த வங்கியில் நுழைந்ததாக அவர்கள் கூறும் பிரையன் அவர் கிடையாது, அவர் மிகவும் அன்பானவர்,” என்றார்.

ஈஸ்லி கொல்லப்பட்ட சரியான சூழல் தெளிவின்றி உள்ளது. பொலிஸால் அவர் கொல்லப்படுவதற்கு முன்னதாக பிணைக்கைதிகள் இருவரையும் ஈஸ்லி விடுவித்திருந்ததாக ஒருவர் கூறுகிறார். மற்றொருவரின் கருத்துப்படி, பொலிஸ் உடைத்துக் கொண்டு சென்று தேவையின்றி ஈஸ்லியை சுட்டுக் கொன்றது, அது வங்கி பணியாளர்களை விடுவிப்பதில் பொறுப்பற்ற முயற்சியாக இருந்தது என்றார்.

ஈஸ்லி இன் மரணம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் கோப அலையைத் தூண்டியது, செல்வந்தர்களுக்காக அவரை போரில் சண்டையிட அனுப்பிய பின்னர் அவரை அரசாங்கம் கைவிட்டதற்காக அட்லாண்டா புறநகர் பகுதிகளில் வாழ்பவர்கள் அரசாங்கத்தை கண்டித்தனர்: “அவர்களை மூளைச்சலவை செய்கிறார்கள், பின்னர் கொள்ளையடிப்பதற்கும், கொல்வதற்கும், அழிப்பதற்கும் அவர்களை அனுப்புகிறார்கள், அவர்களது பொய் திரட்டநிரல் நிறைவேறியதும், அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஓநாய்களுக்கு இரையாக்கிவிடுகிறார்கள். மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று ஒரு கருத்துரையாளர் பேஸ்புக்கில் எழுதினார்.

மற்றொரு கருத்துரையாளர் குறிப்பிடுகையில், “ஈராக் போரே கூட பொய்களின் அடிப்படையில் இருந்தது. அங்கே எந்த WMD களும் கிடையாது. பொய், எல்லாம் பொய். அமெரிக்க அரசிடம் இருக்கும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் கையிருப்பைப் பாருங்கள்,” என்றார்.

“இது மிகவும் சோகத்திற்குரியது, இது சரி செய்யப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் 'நமது துருப்புகளுக்கு உதவுங்கள்' என்ற ஒரே நேசமான வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், பின்னர் இராணுவ உபகரண ஒப்பந்ததாரர்களுக்காக நிதி சேகரிக்கிறார்கள். கடமையிலிருந்து திரும்பும் படைத்துறை சேவையிலிருந்த சிப்பாய்களின் மனரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நல்வாழ்வு குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை,” என்று மூன்றாவது ஒரு கருத்துரை குறிப்பிடுகிறது.

நிரந்தர போர் நிலைமை, ஒட்டுமொத்தமாக பொலிஸ் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கல் ஆகியவற்றின் பேரழிவுகரமான சமூக தாக்கம், வறுமை அதிகரிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையை ஈஸ்லி இன் மரணம் அம்பலப்படுத்துவதால், அது நாடிநரம்புகளைத் தொட்டுள்ளது. வெளிநாட்டின் மீதான போர் குற்றங்கள், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக குற்றங்களாக பின்தொடர்கின்றன.

இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஏதேச்சதிகார அரசு படுகொலையானது, செல்வந்தர்களை செல்வசெழிப்பாக்க ஏழைகளைக் கொண்டு போரிடப்படும் போர்களுக்கு ஆதரவை சேர்க்கும் நோக்கில், முன்னாள் சிப்பாய்களைக் குறித்த அரசியல் ஸ்தாபகத்தின் சம்பிரதாய புகழ்பாடல்கள் எல்லாம், வெற்று பிரச்சாரங்களே என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

2001 இல் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கியதற்குப் பின்னர், “கடவுள் நம் துருப்புகளை ஆசிர்வதிப்பாராக" என்ற வார்த்தை ஒரு தேசிய துதிபாடலாக மாறியுள்ளது, இது இரு கட்சிகளது அரசியல்வாதிகளாலும் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களின் எண்ணற்ற பிரபலங்களாலும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. தேசிய கொடியை பிரமாண்டமாக பறக்கவிடுவதற்காக, தேசபக்தி பாடல்களைப் பாடுவதற்காக, "நமது முன்னாள் சிப்பாய்களை கௌரவிக்க" மைதானங்களுக்கு மேலே குண்டுவீசிகள் மற்றும் போர்விமானங்களைப் பறக்க விடுவதற்காக, இராணுவம் மில்லியன் கணக்கான டாலர்களை விளையாட்டு கழகங்களுக்கு வழங்குகிறது. இராணுவத்தையும் மற்றும் "தேசத்தைப் பாதுகாக்க தங்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களையும்" பெருமைப்படுத்த, நிறைய மத்திய அரசு விடுமுறைகள் அர்பணிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சிப்பாய்களுக்கான உத்தியோகபூர்வ புகழ்பாடல்களானது, பாசாங்குத்தனம் மற்றும் எரிச்சலூட்டலில் ஊறி உள்ளன. ஆளும் வர்க்கம் அது போருக்கு அனுப்பும் ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களை நிஜத்தில் எவ்வாறு பார்க்கிறது என்பதை ஈஸ்லி இன் மரணம் எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் பெருநிறுவனங்களின் போர்க்கள பலிப்படையாக கையாளப்படுகின்றனர். அவர்கள் சண்டையிட்ட பின்னர், அவர்களது உடல்களும் மனமும் அந்த நிகழ்முறையிலேயே நாசமாகிவிடுகின்றன, பின்னர் அரசாங்கம் அவர்களைக் குப்பைகளைப் போல ஒதுக்கி வீசியெறிந்து விடுகிறது. அவர்கள் யாருக்காக சேவையாற்றினார்களோ அந்த அரசு மற்றும் செல்வந்த தன்னலக்குழுக்களைப் பொறுத்த வரையில், அவர்களின் வாழ்க்கை ஈஸ்லி கோரிய 892 டாலரை விட குறைந்த மதிப்புடையதாக உள்ளது.

ஒவ்வொரு இரவும், முன்னாள் சிப்பாய்களில் 50,000 பேராவது அமெரிக்காவில் வீடின்றி உள்ளனர். படைகளில் சேவையாற்றி உடல் ஊனமுற்று வரும் 35 மற்றும் 54 வயதிற்கு இடைப்பட்ட முன்னாள் சிப்பாய்கள் வறுமையில் வாழ்கின்றனர். இருபது முன்னாள் சிப்பாய்களாவது ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2001 இல் இருந்து மட்டும், 128,000 க்கும் அதிகமான முன்னாள் சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் —இது கன்சாஸின் டொபிகா; மிச்சிகனின் லான்சிங்; அல்லது கலிபோர்னியாவின் சான்டா கிளாரா மக்கள் தொகையை விட அதிகமாகும்.

போர் பாதிப்புகளுடன் போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் சிப்பாய்களை குறித்த ஆளும் வர்க்கத்தின் பார்வை, அமெரிக்க இராணுவ மேஜர் ஜெனரல் தனா பிட்டார்ட் ஆல் வெளியிடப்பட்டது, அவர் 2012 இல் கூறுகையில், “தற்கொலை என்பது முற்றிலும் சுயநலமான நடவடிக்கை… அவர்களின் குழப்பத்தை ஏனையவர்கள் சுத்தம் செய்யட்டும் என்பதற்காக, தங்களின் சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் சிப்பாய்களால் நான் தனிப்பட்டரீதியில் வெறுத்து போயுள்ளேன். பருவ வயதடைந்த ஒருவர், பருவ வயதடைந்த ஒருவரைப் போலவே நடந்து கொள்வார், உங்கள் நிஜ-வாழ்வின் பிரச்சினைகளை நீங்கள் நம்மில் ஏனையவர்களைப் போல கையாளுங்கள்!” என்றார்.

முன்னாள் சிப்பாய்கள் முகங்கொடுக்கும் நெருக்கடியானது, ஏகாதிபத்திய போர் தவிர்க்கவியலாததாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்காக அமெரிக்க அரசாங்கம், 2001 இல் இருந்து, ஏறத்தாழ 5 ட்ரில்லியன் டாலர் செலவிட்டுள்ளது, மேலும் அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கில் பாதிக்கும் அதிகமான தொகை அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்திற்குச் செல்கிறது. கொலை மற்றும் அழிப்பிற்காக அமெரிக்க அரசால் சீரழிக்கப்படும் பரந்த ஆதாரவளங்கள், அனைவருக்கும் மருத்துவ கவனிப்பு, வீட்டு வசதி, போக்குவரத்து, வேலைகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகளுக்கான உடனடி சமூக தேவையைப் பூர்த்தி செய்ய திருப்பிவிடப்பட வேண்டும்.