ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Saudi ultimatum to Qatar brings Middle East to brink of wider war

கட்டாருக்கு விடுக்கப்பட்ட சவுதியின் இறுதி எச்சரிக்கை மத்திய கிழக்கை பரந்த போரின் விளிம்பிற்கு இட்டுச்செல்கிறது

Peter Symonds
26 June 2017

கடந்த வாரம் சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவையும் கட்டாருக்கு விடுத்த 10 நாள் இறுதி எச்சரிக்கையானது, சிறிய பாரசீக வளைகுடா நாட்டுடன் அவர்களது மோதலை பாரியளவில் தீவிரமடையச் செய்து இராணுவ மோதலுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.  

இந்த மாத தொடக்கத்தில் திணிக்கப்பட்ட இராஜதந்திர, பயண மற்றும் வர்த்தக முற்றுகைகளுக்கு அப்பால், மேலதிக தண்டனை நடவடிக்கைகளுக்கு சாக்குப்போக்கை உருவாக்கும் விதத்தில், கட்டாரால் நிராகரிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கோரிக்கைகளை சவுதி முடியாட்சி வெளியிட்டது. பயங்கரவாத மற்றும் குற்றவியல் குழுக்களை சிதைப்பதற்கு மட்டும் கட்டார் தேவைப்படுகிறது என்றில்லாமல், அதன் அல் ஜசீரா செய்தி வலையமைப்பை மூடவும், ஈரானுடனான உறவுகளை கடுமையாக குறைக்கவும், துருக்கிய இராணுவபடைகளை வெளியேற்றவும், ரியாத் ஆணையிடும் இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார நிலைப்பாட்டை பின்பற்றவும், மேலும் அதன் கொள்கைகள் விளைவித்ததாகக் கூறப்படும் சேதங்களுக்கு குறிப்பிடப்படாத இழப்பீடுகளை செலுத்தவும் அது தேவைப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஊடுருவல் கண்காணிப்புக்கள் மூலம் இவையனைத்தும் அவதானிக்கப்படவேண்டும்.

ஆச்சரியமற்றவகையில், இந்த இறுதி எச்சரிக்கை, சவுதி அரேபியாவிற்கு ஒரு அடிமை நாடாக தங்களது நாட்டை மாற்றக்கூடும் எனக்கருதி கட்டாரின் அதிகாரிகள் இதை நிராகரித்துள்ளனர். கட்டார் மீது சவுதி அரேபியா தடையாணைகளை சுமத்தியதை தொடர்ந்து கோரிக்கைகளையும் முற்றிலும் நிராகரித்துள்ள நிலையில், துருக்கி ஈரானுடன் சேர்ந்து அந்நாட்டிற்கு உதவிகளை வழங்கியுள்ளது. துருக்கிய படைகளை அகற்றுவதற்கான அழைப்பை “துருக்கி மீதான அவமதிப்பாக” ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கண்டனம் செய்தார்.

சவுதி அரேபியா குறிப்பிட்ட இராணுவ அச்சுறுத்தல்களை வெளியிடாதபோது, அதன் போர்க்குண நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதானது ரியாத்தில் ஒரு அரசியல் நெருக்கடியை தூண்டிவிடக்கூடும். கட்டாரை மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தின் ஆதரவாளராக பாசாங்குத்தனத்துடன்  சவுதி அரேபியா கண்டனம் தெரிவிக்கிறது, ஆனால் வளைகுடா அரசுக்கான அதன் இறுதி எச்சரிக்கை இந்த பிராந்தியத்தில் ஈரானிய செல்வாக்கை நசுக்குவதை இலக்காகக் கொண்ட ஒரு பரந்த மூலோபாயத்துடன் பிணைந்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட சவுதி வாரிசான அரியணைக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மான், ஈரானுடனான ஒரு போர் சவுதி மண்ணில் அல்ல ஈரானில்தான் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். யேமனில் ஹவுத்தி போராளிகளுக்கு எதிரான மிருகத்தனமான சவுதி தலைமையிலான இந்த போரின் வடிவமைப்பாளராக இந்த முடிக்குரிய இளவரசர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்படுகிறார், இதனால் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 7 மில்லியனுக்கு மேற்ப்பட்ட மக்கள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டதுடன், மேலும் பலரின் மரணத்திற்கு அச்சுறுத்தும் ஒரு காலரா தொற்று நோயும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஜூலை 1914 இல், ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆஸ்திரியா-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தால் சேர்பியாவிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை ஒத்ததாகவே கட்டார் மீதான சவுதியின் கோரிக்கைகளும் உள்ளன. ஆஸ்திரிய கோரிக்கைகள் சேர்பிய படையெடுப்புக்கு போலி காரணத்தை வழங்கும் பொருட்டு, இராணுவ நடவடிக்கைக்கான ஜேர்மனியின் வெளிப்படையான ஆதரவுடன் சேர்பியாவால் நிராகரிக்கப்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதிலுமான கடுமையான புவிசார்-அரசியல் பதட்டங்களின் மத்தியில், சேர்பியா மீதான ஆஸ்திரிய தாக்குதல், ஒரு பதினைந்து நாட்களுக்குள் ஐரோப்பாவையும், உலகத்தையும் யுத்தத்திற்குள் ஆழ்த்தியது.

சந்தைகள், மலிவு உழைப்பு மற்றும் புவி மூலோபாய நலன்களுக்காக ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு போட்டியிடுவதில் மற்ற போட்டியாளர்கள் மீது சுமையை சுமத்த முற்படுகின்ற நிலையில், ஏதாவதொரு வெடிப்பு புள்ளிதான் உலக யுத்தத்திற்கு தூண்டுதலளிக்கும் என்பதை கணிக்க முடியாவிட்டாலும், மோசமடைந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடி பெரிய மற்றும் பிராந்திய சக்திகளுக்கு இடையில் பதட்டங்களை பெரிதும் அதிகரித்து வருகின்றது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தது போல்: “முதலாளித்துவ சீர்குலைவினால் அதிகரித்துவரும் பதட்டங்களின் கீழ், ஏகாதிபத்திய விரோதப்போக்குகள் ஒரு முட்டுச்சந்தை அடைகின்றபோது, தனித்தனியான மோதல்களினதும், இரத்தம் தோய்ந்த உள்ளூர் குழப்பங்களினதும் உச்சக் கட்டத்தில் தவிர்க்க முடியாமல் அவை உலக பரிமாணங்களுடனான ஒரு மோதலாக ஒன்றுதிரள்கின்றன. ஒரு புதிய போரினால்  பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் மேலாதிக்கத்திற்கு ஏற்பட்டுள்ள மரண அபாயம் பற்றி நிச்சயமாக முதலாளித்துவ வர்க்கம் அறிந்துள்ளது. ஆனால், அந்த வர்க்கம் 1914 க்கு சற்று முன்பு இருந்ததை விட, இப்போது போரை தவிர்க்க அளவிடமுடியாதளவு திறன் குறைந்ததாக உள்ளது.

மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல், கிழக்கு ஐரோப்பா மற்றும் வட கிழக்கு ஆசியாவிலும் நிலவுகின்ற தற்போதைய வெடிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படவேண்டிய மாற்றங்களை மாற்றுவதற்கு ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை பொருந்தும். இன்றைய உலக அரசியலில் முக்கிய ஸ்திரமின்மை காரணியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கானது, ஜூலை 1914 இல் ஆஸ்திரியாவிற்கான ஜேர்மனியின் ஆதரவுடன் ஒத்துப்போவதாக பாரசீக வளைகுடாவில் சவுதி அரேபியா மீது தூண்டிவிடுகிறது.

சவுதி அரேபியாவின் சில கோரிக்கைகளை கட்டார் எதிர்கொள்வது, “மிக கடினமானதாக” இருக்கலாமென கருதி அமெரிக்க வெளியுறவு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி, ஆலோசனை கூறியுள்ளபோதும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரியாத்தின் ஆக்கிரோஷமான நடவடிக்கைக்கு அவரது முழு ஆதரவுக்கு சமிக்ஞை அளித்துள்ளதுடன், அதன் முற்றுகை “கடினமானதாக இருக்கும் ஆனால் அவசியமானது” என்று அறிவிக்கிறார். கடந்த மாதம் அவரது சவுதி அரேபிய விஜயத்தின்போது, கிட்டத்தட்ட அரை டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பது பயங்கரவாதம் மற்றும் கட்டாருக்கு எதிரான ரியாத்தின் கடுமையான நிலைப்பாட்டிற்கான பிரதிபலிப்பாக இருந்ததென ட்ரம்ப் பெருமை பேசினார்.

கட்டாரில் 11,000 அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்தக்கூடியதும், மேலும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (US intelligence) ஆகியவற்றிற்கான முன்னோடி தளத்தையும் கொண்ட இந்த பிராந்தியத்தில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான விட்டுக்கொடுப்பற்ற நிலை குறித்த தாக்கம் பற்றி, ரில்லர்சனின் மிகத் தெளிவற்ற கருத்துக்கள் வாஷிங்டனிலும், குறிப்பாக பென்டகனிலும் கவலைகளை பிரதிபலித்தன.

எவ்வாறாயினும், முதல் சம்பவமாக சிரியாவில் அமெரிக்க தலைமையிலான மோதலை அதிகரிப்பதன் மூலம் ஈரானை வலுவற்றதாக்கும் அவரது உறுதிப்பாட்டில் எந்தவொரு இரகசியத்தையும் ட்ரம்ப் பேணவில்லை. சவுதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளினால் ஆதரிக்கப்பட்ட சுன்னி தீவிரவாதிகளில் ஆதரவை கொண்டுள்ள ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசை (Islamic State of Iraq and Syria-ISIS) தோற்கடிக்கப்பது என்ற சாக்குப்போக்கில், ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஒரு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றுவதற்கான அதன் போரை நடத்துவதற்கான தளங்களாக பயன்படுத்தும் விதத்தில், அமெரிக்கா இப்பொழுது எவரொருவரும் செல்லக்கூடாத பகுதிகளையும் அல்லது “மோதலற்ற மண்டலங்களையோ” உருவாக்குவதற்கு முற்படுகின்றது.

மத்திய கிழக்கில் உள்ள வெடிப்புத்தன்மையான நிலைமை ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையினால் மட்டும் விளைந்ததல்ல, கால் நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துவிட்ட, மில்லியன் கணக்கில் மக்களைக் கொன்ற, மேலும் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களை வீடுகளற்ற அகதிகளாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டினால் உருவான குற்றவியல் போர்களினாலும் விளைந்ததாகும். மூலோபாய எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியத்தில் அதன் மேலாதிக்கத்தை பாதுகாக்க முனைகின்ற செயல்முறையில், முதலாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட அரசு அமைப்பு முறையை அமெரிக்கா கிட்டத்தட்ட அழித்துவிட்டது. இது ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவிற்கும் இடையே ஒரு முக்கிய மூலோபாய குறுக்கு பாதையையான மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்ய ஒரு புதிய வல்லரசுகளுக்கு இடையிலான போராட்டத்தை உருவாக்க வழிவகுக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில், எகிப்திய இராணுவ சர்வாதிகாரம், அத்துடன் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் சர்வாதிகார முடியாட்சிகள் போன்ற மிகவும் பிற்போக்குத்தனமான ஆட்சிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டது. கட்டார் மீதான முற்றுகையையும், அசாத்தை வெளியேற்றுவதற்காக சிரியாவில் நடக்கும் அமெரிக்கப் போரையும் ஆதரிப்பதாக இஸ்ரேல் சமிக்ஞை செய்துள்ளது. சிரியாவில், அமெரிக்காவுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் இரண்டு அணுஆயுதம் தாங்கிய சக்திகளை நேரடி மோதலுக்கு கொண்டு வரும் விதமாக அச்சுறுத்துகையில், துருக்கியும், ஈரானும் கட்டாரை செயலூக்கத்துடன் ஆதரித்துவருகின்றன.

ஐரோப்பிய சக்திகள், ஈரான் மற்றும் கட்டார் உடனான அவர்களின் வளர்ந்துவரும் உறவுகள் உட்பட, மத்திய கிழக்கில் அவற்றின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அச்சுறுத்தும் பரந்த நெருக்கடியை அலட்சியப்படுத்தவில்லை. Frankfurter Allgemeine Sonntagszeitung உடனான சமீபத்திய நேர்காணலில், கட்டாருக்கும், சவுதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் “மோசமான” கடுமையை ஜேர்மன் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியேல் விமர்சித்தார். “இந்த சர்ச்சை போருக்கு வழிவகுக்குமென” அவர் எச்சரித்தார். பிரான்ஸ் அதன் பங்கிற்கு, பாரசீக வளைகுடாவில் கட்டார் உடனான கூட்டு இராணுவ பயிற்சிகளில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளது.

பிராந்திய மற்றும் முக்கிய சக்திகளையும் மற்றும் மனிதகுலத்தையும் ஒரு பேரழிவிற்குள் விரைவாக மூழ்கடிக்கக்கூடிய ஒரு போருக்கு எழுச்சி தரும் உடையக்கூடிய நிலைமையின் எழுச்சியையே இவை வெளிப்படுத்தியுள்ளன. போருக்கு மூலகாரணமான தேசிய அரசமைப்பு முறைக்கும் காலாவதியாகிப்போன இலாப நோக்கு அமைப்பு முறைக்கும் முடிவைக்கொண்டுவர தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தலையிடாவிட்டால், ஐரோப்பாவிலோ, ஆசியாவிலோ அல்லது மத்திய கிழக்கிலோ தூண்டப்படும் குறிப்பிட்ட எதுவாகினாலும், இத்தகைய ஒரு மோதல் தவிர்க்க முடியாதது.