ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Opposition grows to writing French state of emergency into law

பிரெஞ்சு அவசரகால நிலையை சட்டமாக எழுதுவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

By Francis Dubois
21 July 2017

பிரான்சின் தேசிய நாடாளுமன்றம் நவம்பர் 1 வரை அவசரகால நெருக்கடிநிலைக்கு ஒரு புதிய நீடிப்பை வழங்கி ஜூலை 6 அன்று வாக்களித்ததுடன், அவசரகால நெருக்கடி நிலை வழங்கும் பொலிஸ் அதிகாரங்களை பொதுச்சட்டத்திற்குள் உள்ளடக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து செனட் சபை ஜூலை 18-19 இல் விவாதித்தது.

இந்த சட்டமசோதாக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் ஜனாதிபதி தேர்தல்களில் பெரிதும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு ஆதரவளித்த கல்வித்துறை மற்றும் அரசுசாரா அமைப்புகளுக்கு (NGO) உள்ளேயும் கூட, அவர் பிரான்சில் ஒரு சர்வாதிகார மற்றும் ஜனநாயக-விரோத ஆட்சியைக் கட்டமைக்க வரலாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று பரவலாக அதிகரித்தளவில் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

நிரந்தர அவசரகால நெருக்கடி நிலை நோக்கிய நகர்வுகளை விமர்சித்து, 500 கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கையெழுத்திட்ட ஒரு முறையீட்டை, ஜூலை 12 இல், Libération மற்றும் Médiapart பிரசுரித்தன. “சுதந்திரத்தைக் கடுமையாக அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகள், இந்த சட்டமசோதாவின்படி, உள்துறை அமைச்சர் அல்லது பொலிஸ் அதிகாரிகளால் முடிவெடுக்கப்படும் என்பது, 'உடனடி ஆபத்து' சூழலில் மட்டுமல்ல, மாறாக அதைவிட பரந்தளவில், எந்தவொரு நேரத்திலும் அல்லது இடத்திலும் … சாதாரண சந்தேகத்தின் அடிப்படையிலேயே [அது] முடிவெடுக்கப்படலாம்,” என்று அறிவித்ததுடன், “சட்டத்தின் ஆட்சியில் இதுபோன்ற பின்னடைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அது நிறைவு செய்கிறது.

இதன் பக்கவாட்டில், அரசுசாரா அமைப்புகள், (நீதிபதிகளது தொழிற்சங்கங்கள் உட்பட) தொழிற்சங்கங்கள், மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) உட்பட குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் ஒரு கூட்டணி அழைப்புவிடுத்த போராட்டங்கள், ஜூலை 1 மற்றும் 18 பாரீஸில் நடந்தன. அவை "நிரந்தர அவசரகால நிலை வேண்டாம்" என்ற கோஷத்துடன் அழைப்புவிடுத்திருந்தன. மற்றொரு போராட்டம் செப்டம்பர் 10 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போதைய இந்த போராட்டங்களை ஒழுங்கமைத்து வரும் கட்சிகள் எல்லாம் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தையும், ஜனவரி 2015 இல் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலுக்குப் பின்னர் அதன் "நானே சார்லி" (Je suis Charlie) பிரச்சாரத்தையும் மற்றும் நவம்பர் 13, 2015 இல் நடந்த பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையையும் ஆதரித்தன. அவை அவசரகால நிலையின் கீழ் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதுடன், பிரெஞ்சு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மெலோன்சோனுக்கு இடையிலான இடது முன்னணி கூட்டணியின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் அதற்கு வாக்களித்திருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அதன் பாகத்தில் இருந்து, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போருக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கவே அவசரகால நிலை சேவையாற்றும் என்று வலியுறுத்து, தொடர்ந்து அதை எதிர்த்து வந்துள்ளது. அவசரகால நிலையானது உண்மையில் பாரீஸில் தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளுக்கு எதிரானதல்ல என்றும், உண்மையில் இவற்றை ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவில் தங்களின் போர்களில் பயன்படுத்துகின்றன என்றும் உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியது. அவசரகால நெருக்கடி நிலைக்கான மிகவும் ஆழ்ந்த காரணங்களை, அது, முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியிலும் மற்றும் விகாரமாக அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையுடன் பொருந்தாமல் உள்ள ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவிலும் நிறுத்தியது.

பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் தனிநபர்கள் தான் என்றாலும் உளவுத்துறை சேவைகள் அவர்களை நன்கறிந்திருந்தன, அவர்கள் சுதந்திரமாக சுற்றுவதற்கும், தலைமறைவின்றி செயல்படுவதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். சார்லி ஹெப்டோ தாக்குதலை நடத்திய குவாச்சி சகோதரர்கள் விடயத்திலும் சரி; அதே தினம் வன்சென் என்ற இடத்தில் Hyper Kosher அங்காடியில் தாக்குதல் நடத்திய அமெடி குலிபாலி விடயத்திலும் சரி; நவம்பர் 2015 தாக்குதல்களில் முக்கிய சந்தேகத்திற்குரியவரும், ஐரோப்பாவில் ஒவ்வொரு பொலிஸ் படையினாலும் தேடப்பட்டு வருபவராக கூறப்பட்ட அதேவேளையில் புரூசெல்ஸில் அவர் குடும்பத்திற்கு அருகிலேயே நான்கு மாதங்களாக மறைந்திருந்த சலாஹ் அப்தெஸ்லாம் விடயத்திலும் சரி இவ்வாறு தான் இருந்தது.

மான்செஸ்டரில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவருக்கும் மற்றும் மேற்கத்திய உளவுத்துறைக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மீண்டும் அம்பலப்படுத்தியது. அவர் குடும்பம் லிபியா மற்றும் சிரியாவில் சிஐஏ-தலைமையிலான போர்களில் பங்குபற்றியிருந்தன என்ற நிலையில், அவரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாப்பு சேவைகள் நன்கறிந்திருந்தன.

குறிப்பாக புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) துரிதமாக மற்றும் ஆரவாரத்தோடு இந்த போர்களில் தன்னை அணிசேர்த்துக் கொண்டது. அது லிபியா போரை "மனிதாபிமான" தலையீடு என்ற பொய் சாக்குபோக்கைக் கொண்டு பாதுகாத்ததுடன், அல் கொய்தா இணைப்பு கொண்ட இஸ்லாமியவாத சக்திகள் மேலாதிக்கம் கொண்ட போராளிகள் குழுக்கள் ஒரு "ஜனநாயக புரட்சி" செய்து கொண்டிருப்பதாக பொய் கூற்றுகளைக் கொண்டு லிபியாவில் ஹோலாண்டின் போரை நியாயப்படுத்தியது. ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையை மக்களிடையே "விற்பதை" நோக்கமாக கொண்ட அரசியல் எந்திரத்துடன் ஒருங்கிணைந்த இந்த கட்சி, அதன் ஒடுக்குமுறையான உள்நாட்டு கொள்கைக்கு அடியிலிருந்த அரசியல் பொய்களுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்க சேவையாற்றுகின்றது.

பெருந்திரளான மக்கள், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கம், ஆழமாக ஜனநாயக உரிமைகளோடு இணைந்துள்ளன. எவ்வாறிருப்பினும் அவற்றின் எதிர்ப்பு போராட்டங்களோ, LFI, PCF மற்றும் NPA போன்ற கட்சிகள் அல்லது சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஏகாதிபத்திய அரசு எந்திரத்துடன் நெருக்கமாக உள்ள ஏனைய குழுக்கள் செல்வாக்கு செலுத்தும் அடையாள போராட்டங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அரசியல் போக்குகளில் அபிவிருத்தி அடைந்து செல்லும்.

இப்போதைய போராட்டங்களில் மேலோங்கியுள்ள எச்சரிக்கைகள் , மக்ரோனின் சர்வாதிகார கொள்கையை நோக்கி இருந்தாலும் மற்றும் "சட்டத்தின் ஆட்சியை" பேணுவதற்கு அழைப்புவிடுத்தாலும், அனைத்திற்கும் மேலாக அவசரகால நிலை "நடைமுறையில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயலூக்கமான விளைவை ஏற்படுத்தவில்லை" என்ற வாதத்தை முன்னெடுக்கின்றன. அதாவது, ஆரம்பத்திலிருந்தே ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு ஒரு பொய் சாக்குபோக்காக சேவையாற்றியுள்ள "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" சட்டபூர்வத்தன்மையை அவை ஏற்றுக் கொள்கின்றன. அந்த போராட்டங்களில் உரையாற்றிய ஒருவர் உளவுத்துறை சேவைகளைப் பலப்படுத்தவும் மற்றும் "[சிரியாவில்] இஸ்லாமிக் அரசுக்கு எதிராக அனைத்து நாடுகளது கூட்டணி ஒன்றை அம்மண்ணில்" உருவாக்கவும் கூட முன்மொழிந்தார்.

அப்போராட்டத்தில் உரையாற்றியவர்கள், மக்ரோனுக்கு முன்பிருந்தவரை, ஹோலாண்டை, குறித்து எதுவும் குறிப்பிடாமல், அவர் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் என்ற உண்மையையும் மவுனமாக விட்டுவிட்டு, மக்ரோனுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள், நாடாளுமன்றத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர், நவம்பர் வரை அவசரகால நிலையை இப்போது நீடித்துள்ள செனட்டின் முன்னால், ஜூலை 18 ஆர்ப்பாட்டம் நடந்தது.

மக்ரோன் பிரான்சில் ஒரு நிரந்தர பொலிஸ் அரசைக் கட்டமைக்க முயன்று வருகிறார் என்றால், ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு சோசலிஸ்ட் கட்சியின் பழைய அரசியல் துணை அமைப்புகளின் கீழ் இருந்ததை விட முற்றிலும் வித்தியாசமான விதத்திலும், குணாம்சத்திலும் இருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்பதனால் ஆகும். போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவர் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவில்லை என்பதோடு, இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தல்களில் முன்னொருபோதும் இல்லாதளவில் பெரும்பான்மையினர் வாக்களிப்பை புறக்கணித்ததில் எடுத்துக்காட்டப்பட்டது. பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் 16 சதவீதனரின் ஆதரவுடன் மட்டுமே அவர் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மக்களின் பரந்த பிரிவுகளும் மற்றும் இளைஞர்களும் பகிரங்கமாகவே மக்ரோனின் கொள்கைகளுக்கு விரோதமாக உள்ளனர்; வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பும், தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையிலான ஒரு புரட்சிகர மோதலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நிரந்தர அவசரகால நிலை குறித்து இப்போது கவலைப்படுகின்ற ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபதகத்தின் பிரிவுகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் முதலாளித்துவத்தைப் பேணி காப்பதற்கு முன்மொழிந்து வருகின்றன. ஆனால் நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவம் தான், அதன் போர்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுடன் சேர்ந்து, ஒரு நிரந்தர பொலிஸ் அரசை அமைப்பதன் மூலமாக ஜனநாயக உரிமைகளை அழிக்க முயற்சிக்க ஆளும் வர்க்கத்தை உந்தி வருகின்றது.

முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே, ஜனநாயக உரிமைகளை நீடித்து பாதுகாக்க முடியும். இப்போது ஆழ்ந்த அச்சுறுத்தலில் உள்ள ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவற்றை விரிவாக்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கியெறியக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.