ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US warship intrudes into Chinese-claimed waters in South China Sea

சீனா உரிமை கோரும் தென் சீனக் கடற்பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பல் ஊடுருவுகிறது.

By Peter Symonds
3 July 2017

ஞாயிறன்று, சீனா உரிமை கோரும் தென் சீனக் கடற்பகுதியில் இன்னுமொரு கடற் போக்குவரத்து சுதந்திர நடவடிக்கைக்கு (FONOP) அனுமதிப்பதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக மிக அதிக மோதல்போக்குடனான நிலைப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கையை எடுத்தது.

1974 ல் இருந்து சீனக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவரும் பாராசெல் தீவுக் குழுவிலுள்ள டிரைடன் தீவைச் சுற்றிலும் 12 கடல்வழி மைல் பிராந்திய வரம்பிற்குள் செயல்படும் வகையில், வழிகாட்டி ஏவுகணையுடன் கூடிய அழிப்புக்கப்பலான USS Stethem ஐ அமெரிக்க கடற்படை அனுப்பியது. இந்த சமீபத்திய நடவடிக்கை, ஸ்ப்ராட்லி தீவுக் குழுவில் சீனா வசமுள்ள மிஸ்சீஃப் ரீஃப் தீவுக்கு நெருக்கமாக அமெரிக்க அழிப்புக்கப்பலான USS Dewey இன் ஒரு ஊடுருவல் நடத்தப்பட்டு குறைந்த பட்சம் ஆறு வாரங்களுக்கு பின்னர் எடுக்கப்படுகிறது.

தாய்வானுக்கு கணிசமாக 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்திற்கு கடந்த வாரம் அமெரிக்கா ஒப்புதல் அளித்தது மற்றும் வட கொரியாவுடன் சீன நிறுவனங்களும், தனிநபர்களும் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து அவர்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இவற்றைத் தொடர்ந்து ஞாயிறன்று கடற்படை ஆத்திரமூட்டலும் நடத்தப்பட்டது.

நாட்டின் இறையாண்மையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றதும் மற்றும் தாய்வான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கான ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அமெரிக்கா அங்கீகரிக்க வகைசெய்யும் “ஒரே சீன கொள்கை மீதான வாஷிங்டனின் உறுதிப்பாட்டுக்கு மாறாகவுள்ள” ஆயுத விற்பனையை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கண்டனம் செய்தார்.

தாய்வானுக்கு வழமையான துறைமுக விஜயங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுமதிக்க, ஒரு அமெரிக்க செனட் குழுவின் மூலம் ஒப்புதல் செய்யப்பட்ட சட்டம் குறித்து பெய்ஜிங் கூட கடந்த வாரம் கவலைகளை வெளிப்படுத்தியது.

ஞாயிறன்று நடத்தப்பட்ட அமெரிக்க கடற்படை ஊடுருவலுக்கு விடையிறுப்பாக, லூ, “சீன இறையாண்மையை மீறுவதுடன், சீனாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த” வாஷிங்டனுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், “தேசிய இறையாண்மையையும், பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து வழிமுறைகளையும் சீனா தொடரும்” எனவும் அவர் எச்சரித்தார்:

அமெரிக்க அழிப்புக் கப்பல்களை எச்சரிப்பதற்காக இராணுவக் கப்பல்களையும், போர் விமானங்களையும் சீனா அனுப்பியுள்ளதாக லூ கூறுவதோடு, “அமெரிக்க பக்கத்தின் நடத்தை சம்பந்தமாக சீனா அதிருப்தியடைந்து உள்ளதுடன் அதனை எதிர்ப்பதாகவும்” சேர்த்துக் கூறுகிறார். “தென் சீனக் கடலில் கிளர்ந்தெழுந்திருக்கும் பிரச்சனைகளைத் தூண்டிவிடுவது,” குறித்தும் மேலும், இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஏனைய நாடுகளின் விருப்பத்தை தொடர்ந்து எதிர்ப்பது குறித்தும் வாஷிங்டனை அவர் குற்றம்சாட்டினார்.

சீனப் போர் விமானங்களும், கடற்படை கப்பல்களும் அனுப்பப்படுவது ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலுள்ள பொறுப்பற்ற தன்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அணுஆயுதம் ஏந்திய இரண்டு வல்லரசுகளுக்கு இடையே தற்செயலானதாகவோ அல்லது வேண்டுமென்றோ ஒரு பரந்த மோதலைத் தூண்டுகின்ற வகையில், ஒரு இராணுவ மோதலுக்கு இவைகள் வழிவகுக்கலாம்.

தென் சீனக் கடலில் சீன பிராந்திய உரிமை கோரல்களை மிக அதிகமானவை என்று அமெரிக்கா நிராகரித்துள்ளது, மேலும் அவற்றிற்கு கட்டுப்பட்டதில்லை என மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. அத்துடன், சீனத் தீவுகளுக்கு நெருக்கமாக அடிக்கடி ஊடுருவல்களை நடத்தி, அமெரிக்க கடற்படை அதன் பிரசன்னத்தை அதிகரித்துள்ளதோடு, மூலோபாய கடலில் அடிக்கடி பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவுடன் போரை நடத்துவதற்கு, பென்டகன் அதன் வான்வழி-கடல்வழி போர் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக தென் சீனக் கடலை கருதுகிறது. அமெரிக்க போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இராணுவ தளங்கள் ஆகியவற்றிலிருந்து சீனாவின் முக்கிய நிலப்பரப்பில் பாரிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த இந்த திட்டம் எதிர்நோக்குகின்றது. சீனாவின் ஹைனன் தீவுக்கு சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாராசெல் தீவுக் குழுவிற்கு மிகவும் தெற்கே நோக்கியுள்ள டிரைடன் தீவில் முக்கிய மூலோபாய கடற்படை தளங்கள் உள்ளன.

வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடுமாறு நிர்பந்திப்பதில் ஏற்பட்ட சீனாவின் தோல்வியினால் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விரக்தி அடைந்துள்ளது என்பதற்கான மற்றொரு சமிக்ஞையாக நேற்றைய கடற்படை ஊடுருவல் உள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, சீன-எதிர்ப்பு கிளர்ச்சித்தலைவராக ட்ரம்ப் பலமுறை தன்னை வகைபடுத்தியதோடு, சீனாவை ஒரு நாணய சூழ்ச்சித்திறனாளுகையாளராக முத்திரை குத்துவது உட்பட, அதற்கு எதிரான வர்த்தக போர் நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதிபூண்டார். அவரது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முடுக்கிவிட்டதுடன், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளமாக இருந்துவரும், ஒரே சீனக் கொள்கையை துஷ்பிரயோகம் செய்வது பற்றி கூட பேசினார்.

ஏப்ரல் மாதத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ட்ரம்ப் சந்தித்தபோது, சீனா வட கொரியா மீது அதன் அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்று சுட்டிக்காட்டியவுடன் தனது பகட்டாரவாரப் சொல்லாட்சியிலிருந்து பின்வாங்கினார். வட கொரிய நிலக்கரி இறக்குமதிக்கு பெய்ஜிங் தடை விதித்துள்ளது, மேலும், சமீபத்திய வாரங்களில், வட கொரியாவிற்கான அதன் எண்ணெய் ஏற்றுமதியிலிருந்தும் பின்வாங்கி விட்டதாக கூறியுள்ளது. வட கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இதுவரை சீனா இருப்பதோடு, அதன் பெரும்பங்கு ஆற்றல் வளமாகவும் உள்ளது.

இருப்பினும், காலவரையின்றி காத்திருக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதுடன், அதன் பொறுமையையும் இழந்துவிட்டதாக ட்ரம்ப் அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த மாத இறுதியில், நேரம் கடந்து விட்டதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் முயற்சிகளை அவர் பாராட்டியபோதும், “அது செய்து முடிக்கப்படவில்லை” என ஒரு ட்வீட்டில் அறிவித்தார்.

கடந்த வெள்ளியன்று, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடனான வாஷிங்டனின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வந்த செய்தியை ட்ரம்ப் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதாரத் தடைகள் பற்றிய கொள்கைகளை குறிப்பிட்டுக்காட்டி, “வட கொரிய ஆட்சி உடனான சகாப்தகால மூலோபாய பொறுமை தோல்வியுற்றது. வெளிப்படையாகவே அந்த பொறுமை முடிவடைந்துவிட்டது” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்கா என்ன மாதிரியான வழிமுறைகளை நோக்கி திரும்பும் என்பது பற்றி ட்ரம்ப் எதையும் முன்வைக்கவில்லை, ஆனால், “சரியான சூழ்நிலையில்” மட்டுமே அமெரிக்கா பியோங்யாங்குடன் பேசும், அதாவது, அமெரிக்க கோரிக்கைகளுக்கு வட கொரியா அடிபணிந்தால் மட்டுமே என்பதாகும் என்று அவரது அதிகாரிகள் அறிவித்தனர். இராணுவ தாக்குதல்கள் உட்பட, “அனைத்து தேர்வுகளும்” மேசை மீது தயார் நிலையில் உள்ளன என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களுடன் இணைந்து மூன்று விமானம் தாங்கி தாக்குதல் குழுக்கள், கொரிய தீபகற்ப பிராந்தியத்தில் தற்போது நிலைகொண்டுள்ளன.

வட கொரியா மீது மட்டுமல்ல, தாய்வான் மற்றும் வர்த்தக விடயங்கள் உட்பட அனைத்திலும் சீனாவை எதிர்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் நோக்கம் கொண்டுள்ளது என்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய “கடற் போக்குவரத்து சுதந்திர” நடவடிக்கை ஒரு தெளிவான சமிக்ஞையாக உள்ளது. மூன் உடனான ட்ரம்பின் சந்திப்பின்போது, New York Times இன் கருத்துப்படி, ஜனாதிபதியின் தலைமை பொருளாதார ஆலோசகரான காரி கோன், “சீனாவின் பல கொள்ளையடிக்கும் நடைமுறைகளில் எங்களுடன் அவர்கள் எப்படி பேரம் பேசுகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

ஜேர்மனியில் இந்த வார G20 உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஆகியோருடனான திட்டமிட்ட கூட்டங்களுக்கு முன்னால், நேற்று மாலை (அமெரிக்க நேரப்படி) இருவருடனும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க செயற்பட்டியலில் வட கொரியா முதன்மையானதாக இருந்தது. வட கொரியா மீதான அவர்களது அழுத்தத்தை இரு நாடுகளும் அதிகரிக்கும் என்பதை, அபே உடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடலின் முதல் அறிக்கைகள் குறிப்பிடுகின்ற காரணத்தினால் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட வேண்டியதாகவுள்ளது.