ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Internet censorship goes beyond Google
Facebook, Youtube, other tech giants launch joint, state-backed censorship programs

இணைய தணிக்கை கூகுளுக்கு அப்பாற்பட்டு செல்கின்றது

பேஸ்புக், யூடியூப் மற்றும் ஏனைய பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசாங்க ஆதரவிலான கூட்டு தணிக்கை திட்டங்களை தொடங்குகின்றன

By Zac Corrigan
24 August 2017

ஏப்ரலில், கூகுள் “போலி செய்தி” களுக்கு எதிராக போரிடுவது என்ற போர்வையில் அதன் தேடல் வழிமுறைகளில் செய்த மாற்றம் முற்போக்கு, போர் எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்களின் வாசகர்களிடையே ஒரு பாரிய வீழ்ச்சியை விளைவித்த பின்னர், உலக சோசலிச வலைத் தளம் இணையம் தொடர்பான அரசு-பெருநிறுவன தணிக்கைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. கூகுள் தேடல் முடிவுகள் மூலமாக வரும் அதன் வாசகர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்களை இழந்து WSWS தான் மிகக் கடுமையாக பாதிப்பிற்குள்ளானது.

எவ்வாறாயினும், இணைய தணிக்கை கூகுளுக்கும் அப்பாற்பட்டு விரிவடைகின்றது. உலகெங்கிலும், அரசாங்கங்களின் நெருங்கிய ஒத்துழைப்பில் அநேகமாக உலகின் அனைத்து மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைய உரையாடலை கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையே பேஸ்புக் மற்றும் ஏனையோரின் சமீபத்திய அறிவிப்புகள் குறிப்பிடுகின்றன.

ஏப்ரல் 25ல் கூகுளின் துணை தலைவர் பென் கோம்ஸ் விடுத்த அறிக்கையை (“தேடலுக்கான சமீபத்திய எங்களது தர மேம்பாடுகள்” என்று தலைப்பிட்ட) தொடர்ந்து, பேஸ்புக்கின் துணை தலைவர் ஆடம் மொஸ்ஸேரி, பேஸ்புக்கின் சொந்த செய்தி ஊட்ட வழிமுறையை (algorithm) புதுப்பிக்கும் வடிவில் ஜூன் 30 அன்று இதற்கு சமமான திட்டம் ஒன்றை அறிவித்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளின் ஓர்வெலிய மொழியும் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கின்றன. மொஸ்ஸேரியின், “செய்தி ஊட்டத்தில் இன்னும் கூடுதலான தகவல்தொடர்பு இணைப்புக்களை காண்பித்தல்” என்ற குறிப்பு, “பேஸ்புக்கில் மிகச்சிறிய குழுவினர்” மட்டுமே “தரம் குறைந்த உள்ளடக்கம்”, “உணர்ச்சியியல்”, மற்றும் “தவறான தகவல்கள்” ஐ பகிர்ந்து கொள்கின்றனர் என்பதாக தெரிவிக்கின்றது. மேம்படுத்தப்பட்ட இந்த வழிமுறை, சிறந்த உள்ளடக்கத்தை “வெளிப்படுத்த” ஏதுவாக “சிக்கலான”, “தரம் குறைந்த” பதிவுகளை “முன்னுரிமை இழக்க” செய்யும். (ஒப்பீட்டளவில், கோம்ஸும், “ஒரு சிறிய கேள்வி தொகுப்பு” “ஆதாரமற்ற சதி கோட்பாடுகள்” என்பதாக திரும்பியுள்ளன என்றும், “மிக உயர்ந்த தர உள்ளடக்கத்தை வெளிக்கொண்டுவர” ஏதுவாக கூகுளின் புதிய வழிமுறை, “குறைந்த தர உள்ளடக்கம்”, “போலி செய்தி”, மற்றும் “தவறான உள்ளடக்கத்தை” மதிப்பிழக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.)

வேறுவிதமாக கூறுவதானால், மக்களையும், தகவலையும் இணைக்க ஒரு வெளிப்படையான நடுநிலையான தளமாக கூகுள், பேஸ்புக் போன்றவை இனி சேவை செய்யாது, ஆனால் வெளிப்படையாக வாயில்காப்போன் பாத்திரமேற்று, தகவலின் “தரத்தை” நிர்ணயிக்கும், மேலும் அதன் பயனாளர்களுக்கு என்னென்ன கருத்துக்கள் கிடைக்க வேண்டும் மற்றும் கிடைக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் கூட வெளிப்படையாக மிகக் குறைவாகவே உள்ளன. பேஸ்புக், மைக்ரோஸாஃப்ட், ட்விட்டர், யூடியூப் (கூகுளுக்கு சொந்தமானது) மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவை உள்ளடங்கிய, பயங்கரவாதத்தை எதிர்நோக்கும் பூகோள இணைய கருத்துக்களத்தின் (Global Internet Forum to Counter Terrorism - GIFCT) முதல் கூட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடத்தப்பட்டது. இந்த முறை, “போலி செய்தி” என்ற அரக்கனை அழிக்க நிறுவனங்கள் திட்டமிடவில்லை, மாறாக, “பயங்கரவாதிகளையும், வன்கொடுமை தீவிரவாதிகளையும்” அழிக்க திட்டமிட்டது. இங்கிலாந்து உள்துறை செயலர் ஆம்பர் ரூட் மற்றும் அமெரிக்காவின் தற்காலிக உள்நாட்டு பாதுகாப்பு செயலர் எலைன் டூக் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

GIFCT அமைப்பது குறித்து ஜூன் 26 குறிப்பு அறிவித்தமையானது, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து “மற்றும் பிற அரசாங்கங்கள்,” G7, ஐ.நா. பாதுகாப்பு குழு, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளின் மையம் (Center for Strategic and International Studies) (உளவுத்துறை நிறுவனங்களுடன் இணைந்த வாஷிங்டனின் ஒரு சிந்தனை களஞ்சியம்), அவதூறு எதிர்ப்பு குழு (Anti-Defamation League), அத்துடன் பெயர் குறிப்பிடாத “பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள்,” “கல்வியாளர்கள் மற்றும் பிற நிறுவனங்கள்” ஆகியவற்றின் பங்கேற்பை மேற்கோளிட்டு, ஏகாதிபத்திய அரசாங்கங்களுடனான வேலைத்திட்டத்தின் உறவுகளை பற்றிய எந்தவொரு பிடிதரத்தையும் ஏற்படுத்தாது.

GIFCT இன் முக்கிய திட்டம் என்பது அதனது பகிரப்பட்ட தொழில்துறை Hash Database மென்பொருளாகும். இந்த கருவியை பயன்படுத்தி, ஒரு உள்ளடக்கத்தை அது “பயங்கரவாதமானது” அல்லது “வன்கொடுமை தீவிரவாதமானது” என்று ஒரு நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் தானாகவே ஏனையவற்றாலும் தணிக்கை செய்யப்படுகின்றது. யூடியூப் அதன் பங்கிற்கு, குழுவின் சார்பாக “தீவிரவாத” உள்ளடக்கத்தை தானாகவே குறிப்பிடுவதற்கு மனித தலையீடு தேவைப்படாத வகையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளது. “தனியொரு மனித ஒப்புதல் அடையாளத்தை (human flag) பெறுவதற்கு முன்னரே, கடந்த மாதம் முழுவதும் வன்கொடுமை தீவிரவாதம் குறித்த ஒளிப்பதிவுகளில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தை நாங்கள் அகற்றிவிட்டோம்” என்றும், மேலும், “பல சந்தர்ப்பங்களில், அகற்றப்பட வேண்டிய ஒளிப்பதிவுகள் பற்றி மனிதர்கள் குறிப்பிடுவதை விட, எங்களது அமைப்புமுறைகள் மூலம் இன்னும் துல்லியமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளன” என்றும் ஆகஸ்ட் 1 வலைப்பதிவு இடுகையில் யூடியூப் பெருமையடித்தது.

ஏகாதிபத்திய போர் காரணமாகவோ, குறிப்பாக ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மூலம் பின்தங்கிய குழுக்களுக்கு வழங்கப்படும் செயலாற்றல் நிதி மற்றும் ஆயுதங்களாலோ பயங்கரவாதம் பரவுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக மக்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவரும் விதமாக கருத்தில் எடுக்கமுடியாளவிற்கு இணையத்தில் மேற்கொள்ளப்படும் தீவிரவாத பிரச்சாரத்தால் மக்களை மயக்க முடிகின்றது என்பதே இந்த வேலைத்திட்டத்தின் அனுமானம் ஆகும்.

“போலி செய்தி” மீதான கூகுளின் தாக்குதல், போர் எதிர்ப்பு மற்றும் சோசலிச வலைத் தளங்களை தவறாக பட்டியலிடுவதை விளைவித்துள்ள நிலையில், அத்தகைய “தீவிரவாத” தணிக்கைக்கான உண்மையான இலக்கு அவைதானா என்பது பற்றிய குறைந்த சந்தேகமே உள்ளது. உண்மையில், என்ன நிகழும் என்பதற்கான சில அறிகுறிகளை யூடியூப் இன் AI dragnet முடிவுகள் கொடுக்கின்றன.

சர்வதேச வான் தாக்குதல்களின் விளைவுகளை ஆவணப்படுத்திய Airwars நிறுவனத்தின் இயக்குனரான கிறிஸ் வூட்ஸ், இந்த மாத தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட டசின் கணக்கான அதன் வீடியோக்களை யூடியூப் அகற்றியதோடு, அதன் யூடியூப் சேனலையும் முற்றிலும் அகற்றுவதற்கு அச்சுறுத்தியதாகவும் New York Times பத்திரிகையில் கூறினார். Middle East Eye (MEE) செய்தி ஊடகமும் அதன் சொந்த யூடியூப் வீடியோக்களில் பலவற்றை இதேபோல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இதில், இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல்களின் விளைவாக 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் இறப்புக்களை Airwars ஆவணப்படுத்திய இடமான மொசூலில் சண்டையிடும் ட்ரோன் காட்சிகள் அடங்கும்.

இரகசிய தகவலை வெளிப்படுத்திய Chelsea Manning பற்றிய 2013 இராணுவ நீதிமன்ற விசாரணை குறித்த தகவல் சேகரித்த பத்திரிகையாளரான அலெக்ஸா ஓ’பிரைன், அந்த விசாரணையில் ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் அகற்றப்பட்டுவிட்டதாக MEE க்கு தெரிவித்தார். (மேலே பட்டியலிடப்பட்ட வீடியோக்களில் சில மீண்டும் நிரப்பப்பட்டுள்ளன)

தனியார் நிறுவனங்களாக, பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பொது மக்கள் பார்வைக்கு உட்படுத்தப்படாத நிலையில், எந்தவொரு விடயத்திலும் அவர்கள் தகவலுக்கான நடுநிலையான நடுவர்களாக இருப்பதற்கு கோர முடியாது. அவர்கள் ஆளும் செல்வந்தக் குழுவுடனும், இராணுவ-அரசு-உளவுத்துறை எந்திரத்துடனும் ஆயிரம் இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். Opensecrets.org, ஐ பொறுத்தவரை, Facebook Inc. 2014 முதல் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டாலருக்கு மேலாகவும், 2017 இல் இதுவரை 5 மில்லியன் டாலர் வரையிலும் அமெரிக்க மத்திய அரசாங்கத்திற்கு செலவு செய்துள்ளது. இணைய நிறுவனங்கள் மத்தியில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் மற்றும் சில நேரங்களில் அமேசன் ஆகியவையும் அதிகளவு செலவு செய்துள்ளன. 70 பில்லியன் டாலர் நிகர மதிப்புடைய 33 வயதான பேஸ்புக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியுமான மார்க் ஜூக்கர்பேர்க், மைக்ரோஸாப்ட் இன் பில் கேட்ஸ் (84 பில்லியன் டாலர்) மற்றும் அமேசானின் ஜெஃப் பெஸோஸ் (81 பில்லியன் டாலர்) ஆகியோருடன் இணைந்து, கிரகத்தின் மிகப்பெரிய செல்வந்தர்களுள் ஒருவராக தன்னை இடம்பெற செய்துள்ளார்.

பேஸ்புக், கூகுள், மற்றும் மைக்ரோஸாஃப்ட், அத்துடன் ஆப்பிள், யாகூ மற்றும் பிற நிறுவனங்களும் இரகசிய செய்தியாளர் எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்திய பாரிய அரசு உளவு நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளனர் என்பது நினைவுகூரப்பட வேண்டும்.

இன்னும் கூகுள் போன்று, பேஸ்புக் நிறுவனமும் பூகோள பொது பயன்பாட்டின் குணாம்சத்தை எடுத்துக்கொண்டுள்ளது. உலகின் மூன்றாவது அதிக பார்வையாளர்களை கொண்ட இணைய தளமான சமூக ஊடக தளமாக இது உள்ளதோடு (கூகுள் மற்றும் யூடியூப் க்கு அடுத்ததாக), வேறெந்த நிறுவனத்தையும் விட அதிகளவிலான தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜூன் வரை, சீனாவில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இது மாதத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிகமான செயலிலுள்ள பயனாளர்களை கொண்டிருந்தது. மேலும் இது, கிரகத்தின் மிகப்பெரிய விகிதத்திலான செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது.

இந்த உலகளாவிய பெருநிறுவன-அரசு தணிக்கை திட்டங்களின் சுழற்சி, உலகம் முழுவதும் சமூக, புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் நிலைமைகளின் கீழ் இடம்பெறுகின்றது. போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்த கேள்விகளுக்கான பதில்களை மில்லியன் கணக்கான மக்கள் தேடுகின்றனர். எதிர்த்தரப்பு கண்ணோட்டங்களை ஒடுக்குவது என்பது ஒரு இறக்கும் தறுவாயிலுள்ள சமூக ஒழுங்கும் மற்றும் எந்த முற்போக்கான பாதையையும் முன்வைக்காத முதலாளித்துவத்திற்கும் இன்னும் மிக முக்கியமான ஊண்டுகோலாக உள்ளது.

இணைய தள தணிக்கைக்கு எதிரான WSWS இன் போராட்டத்தில் இணையுங்கள்! மனுவில் கையெழுத்திடுங்கள்!