ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

DreamHost ordered to hand over data on anti-Trump website: The criminalization of political dissent

ட்ரம்ப்-விரோத வலைத் தளம் குறித்த தரவுகளை ஒப்படைக்குமாறு ட்ரீம்ஹோஸ்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது: அரசியல் அதிருப்தியை குற்றகரமாக்குதல்

Joseph Kishore
26 August 2017

பேச்சு சுதந்திரம் மீதான ஒரு சில்லிடவைக்கும் தாக்குதலாக, ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்புக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்த disruptj20.org வலைத் தளம் சம்பந்தமான பாரிய தரவுகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு வலைத் தள இணைய சேவை வழங்கும் நிறுவனமான ட்ரீம்ஹோஸ்ட் நிறுவனத்திற்கு கொலம்பியா மாவட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி வியாழனன்று உத்தரவிட்டார்.

அத்தளத்தை பார்வையிட்ட நபர்களை அடையாளம் காண பயன்படுத்துவதற்காக, disruptj20.org தளத்தைப் பார்வையிட்ட 1.3 மில்லியன் பேரின் விபரங்கள் மற்றும் ஐபி முகவரிகள் உட்பட அந்நிறுவனம் வைத்திருக்கும் எல்லா தரவுகளையும் தரக் கோரி ஜூலையில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவாணையை ட்ரீம்ஹோஸ்ட் நிறுவனம் ஆகஸ்ட் 14 இல் அம்பலப்படுத்திய போதுதான், அரசாங்கத்தின் கோரிக்கை முதன்முதலில் வெளியில் தெரியவந்தது. அத்தளத்தை உருவாக்குவதில் மற்றும் அதில் பங்களிப்பதில் சம்பந்தப்பட்டவர்களின் மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் இதர தரவுகள் மீதான அணுகுதலையும் அந்த உத்தரவாணைக் கோரி இருந்தது.

நீதித்துறை உத்தரவாணையை அந்நிறுவனம் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, அரசு அதன் கோரிக்கையை "தெளிவுபடுத்தியது", அதற்கு ஐபி முகவரிகள் தேவையில்லை என்றும், ஆனால் "பயனர் கணக்கு சம்பந்தமாக ட்ரீம்ஹோஸ்ட் சேமித்து வைத்துள்ள சகல கோப்புகள், தரவுகள், மற்றும் தரவு விபரங்கள் உட்பட பயனர் கணக்கு சம்பந்தமான எல்லா விபரங்களை அல்லது பிற தகவல்களை" இப்போதும் கோருவதாக அது குறிப்பிட்டது.

கிளிண்டனால் நியமிக்கப்பட்டவரான அந்த நீதிபதி, ரோபர்ட் மொரின், தரவுகளை அலசும் அரசின் அணுகுமுறைகளை நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்ற வெற்று அவசியத்தைக் காரணங்காட்டி உத்தரவாணை பிறப்பித்திருந்தார்.

1.5 மில்லியனுக்கும் அதிகமான வலைத் தள இணைய சேவை வழங்கல்களை ஒழுங்கமைத்து கொடுத்துள்ள ஒரு தனியார் நிறுவனமான ட்ரீம்ஹோஸ்ட், உத்தரவாணைக்கு கீழ்படிய உடன்பட்டுள்ளதுடன், நீதிபதியின் முடிவு "தனிநபர் அந்தரங்க விடயங்கள் மீதான வெற்றி" என்று கூறி, தரவுகளை வழங்க தொடங்கியுள்ளது. இது நேர்மையில்லை. அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் Raymond Aghaian அவரே வியாழனன்று நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில், அரசாங்கம் கோருகின்ற மற்றும் இப்போது பெறவிருக்கின்ற தகவல்கள் "ஒரு ஆலோசனை குழுவின் அங்கத்தவர்களின் பட்டியலை அப்படியே பெறுவதற்கு ஒப்பானதாகும்,” என்றார்.

அரசின் கோரிக்கை ஒரு "பொதுவான உத்தரவாணைக்கு" இணையானது, அதாவது எந்தவொரு குறிப்பிட்ட குற்றத்துடனோ அல்லது தனிநபர்களுடனோ சம்பந்தப்படாதவரின் பெரும்பாலான தகவல்களைக் கோருவதற்கு இணையானது என்று Aghaian குறிப்பிட்டார். இதுபோன்ற உத்தரவாணைகள் 18 ஆம் நூற்றாண்டிலேயே பிரிட்டன் சட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவை அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் சட்டத்திருத்தத்தில் தடை செய்யப்பட்டுள்ளன, அச்சட்ட திருத்தம் "காரணமற்ற தேடல்கள் மற்றும் கைப்பற்றல்களை" தடுப்பதுடன் மற்றும் அனைத்து உத்தரவாணைகளும் "உரிய காரணத்தின்...” அடிப்படையில் இருக்க வேண்டும், "குறிப்பாக தேடவிருக்கும் இடம், நபர்கள் அல்லது கைப்பற்றப்பட உள்ள பொருட்களை விவரிப்பதை" அது அவசியப்படுத்துகிறது.

பெரும்பாலும் பொலிஸின் ஆத்திரமூட்டல்களாலேயே விளைகின்ற வன்முறை நடவடிக்கைகள் என்று குற்றஞ்சாட்டப்படுவதை சாக்குபோக்காக பயன்படுத்தி, அரசு மீதான அதிருப்தியை நடைமுறையளவில் குற்றகரமாக்குவதற்காக, எந்தவொரு வலைத் தளம் மூலமாக போராட்டங்கள் மற்றும் பிற எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்படுகிறதோ அல்லது ஆதரிக்கப்படுகிறதோ அவற்றின் தகவல்களைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு இப்போது ஒரு சட்ட முன்னுதாரணம் கிடைத்துள்ளது.

அரசியல் எதிர்ப்பை ஒடுக்கவும் மற்றும் அதற்கான சட்ட வழிவகைகளை இல்லாது செய்யவும் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்களால் ஒருங்கிணைந்த முயற்சிகள் நடத்தப்படுகின்ற சூழலில் தான், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வந்துள்ளது. ஜூலையில் ஜேர்மனியின் ஹம்பேர்க் இல் நடந்த ஜி20 போராட்டங்களின் போது வன்முறை போராட்டங்களை ஒழுங்கமைக்க German Indymedia வலைத் தளம் உதவியதாக குறிப்பிட்டு, அத்தளத்தை மூடுவதற்கு வெள்ளியன்று ஜேர்மன் அரசாங்கம் அசாதாரண நடவடிக்கை எடுத்தது.

ஜி20 உச்சிமாநாட்டிற்கு பிந்தைய வாரங்களில், “வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள்" என்ற அரசின் கூற்றுக்கள் முற்றிலுமாக அம்பலப்பட்டுள்ளன. உண்மையில் அந்த போராட்டங்கள் பொலிஸ் கலகத்திற்கான சந்தர்ப்பமாக இருந்தன, இது “இடது தீவிர கொள்கையாளர்களை" ஒடுக்குவதற்காக, "இடதுசாரி வன்முறை" என்பதை பயன்படுத்தி வருகின்ற ஜேர்மனி அரசியல் ஸ்தாபகத்தின் சகல கன்னைகளாலும் ஆதரிக்கப்பட்டிருந்தது.

எதேச்சதிகார ஆட்சிக்குரிய ஓர் அறிக்கையாக, ஜேர்மன் உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் அறிவிக்கையில் "மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் நாட்டின் பிரதிநிதிகளுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதால்"—அதாவது அரசாங்கம் மீது அரசியல் எதிர்ப்பை அறிவுறுத்துவதற்காக—அந்த வலைத் தளம் மூடப்படுவதாக அறிவித்தார்.

அமெரிக்காவில் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஏறத்தாழ முழுமையாக செய்திகளே வெளியிடப்படவில்லை என்பதோடு, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து கருத்துரைகளே வரவில்லை என்பது அதன் நீண்டகால தாக்கங்களுடன் கூர்மையாக முரண்படுகிறது. இந்த முடிவை எதிர்த்து எந்த முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் அறிக்கை வெளியிடவில்லை.

அத்தீர்ப்பு குறித்து வந்த வெகுசில கருத்துரைகளில் ஒன்றாக, “இந்த மிகைப்படுத்தலை நம்பாதீர்: ட்ரம்ப்-விரோத எதிர்ப்பு மீது நீதித்துறையின் ஒடுக்குமுறை இல்லை,” என்று தலைப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட் வெள்ளியன்று ஒரு தலையங்கம் வெளியிட்டது. நிஜமான உத்தரவின் பரந்த விளைவை மிருதுவாக மட்டுமே விமர்சித்து இந்த தேடலை நியாயப்படுத்தும் போஸ்ட், வழக்காளிகள் "ஆழ்ந்த பொது ஒழுங்கு மீறல்களை விசாரித்து வருகிறார்கள்" என்ற அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறது. “அரசு வழக்கின் விளக்கம்" அதை "கணிசமானளவிற்கு பலமாக" மாற்றியுள்ளது என்று போஸ்ட் வாதிடுகிறது.

அரசாங்கத்தால் கோரப்பட்டவாறு அலசி ஆராயும் முறையை அமைப்புமயப்படுத்துவதற்கான ஓர் அழைப்புடன் அத்தலையங்கம் நிறைவுறுகிறது. “[நீதிமன்றம் அங்கீகரித்த நடைமுறைகளுக்கு] ஒரு தெளிவான விதிமுறை பாதையை எவ்வாறு வகுப்பது என்பதை நீதிமன்றங்களும் காங்கிரஸூம் சிந்திக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

ட்ரம்ப் நிர்வாகம், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்கின்ற அதேவேளையில், தெளிவான மற்றும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மோசமான அரசியலமைப்பு மீறல்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க, கருத்துரைகள் கூட வரவில்லை என்றளவிற்கு, அமெரிக்க ஜனநாயக ஆட்சி வடிவங்களது ஒரு நீடித்த பொறிவின் விளைபொருளாக ட்ரம்ப் நிர்வாகம் விளங்குகிறது.

நான்காண்டுகளுக்கு முன்னர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பை மீறிய உள்நாட்டு உளவுவேலை உட்பட, உளவுத்துறை எந்திரத்தின் பாரிய அதிகரிப்பு மீது, ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் இருந்து உத்தியோகபூர்வ அரசியல் "விவாதத்தில்", அங்கே எந்த விவாதமும் கிடையாது. ட்ரீம்ஹோஸ்ட் வழக்கில் நீதித்துறையின் கோரிக்கைகள், ஒபாமா நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட உளவு எந்திரத்தினது மத்திய நோக்கமான, உள்நாட்டு அதிருப்தி மீதான ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடாகும்.

வெளிநாட்டின் மீது பரந்தளவில் போரையும் அமெரிக்காவிற்குள் சமூக எதிர்புரட்சியையும் விரிவாக்க தீர்மானமாக உள்ள பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழுக்களின் ஓர் அரசாங்கமாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் நிஜமான குணாம்சம் மற்றும் சமூக அடித்தளங்களை, ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும், ட்ரம்ப் பதவியேற்றத்திற்குப் பிந்தைய இந்த ஏழு மாதங்கள் நெடுகிலும் மூடிமறைக்கவே முனைந்துள்ளன. இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிரிவுகளுடன் ட்ரம்ப் மோதலுக்கு வருவதன் மீதான குற்றச்சாட்டுக்களுடன் சேர்ந்து, ட்ரம்ப் மீதான அவர்களின் விமர்சனமானது, வெளியுறவு கொள்கை மீதான கருத்துவேறுபாடுகளையே மையத்தில் கொண்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சார்லட்வில்லில் நடந்த நவ-நாஜி வன்முறைக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தை முன்பினும் அதிகமாக இராணுவ மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வைப்பதற்கேற்ப அதை மறுசீரமைப்பதை ஆதரித்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக அரசியல் போராட்டக்காரர்களுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கைகள், “போலி செய்திகளை" எதிர்க்கிறோம் என்ற வேஷத்தின் கீழ் நீண்ட பாதிப்புகளைக் கொண்ட இணைய தணிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனநாயகக் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த ஊடகங்களால் ஆதரிக்கப்பட்டு, இணைய நிறுவனங்களது நடவடிக்கையின் அதே வரிசையில் உள்ளன. இடதுசாரி வலைத் தளங்களை, அனைத்திற்கும் மேலாக உலக சோசலிச வலைத் தளத்தை முடக்குவதற்கும் இருட்டடிப்பு செய்வதற்கும் அதன் தேடல் முடிவுகளில் மோசடி செய்த கூகுளின் நடவடிக்கைகள் அவற்றில் மிக முக்கியமானதாகும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு மேலோங்கி வரும் அச்சுறுத்தலானது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியான மற்றும் அரசியல்ரீதியில் சுயாதீனமாக ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியில் தங்கியுள்ளது. அதுபோன்றவொரு இயக்கம் உருவாவதை முன்கூட்டியே தடுப்பதற்காகவே அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

கட்டுரையாளரின் பரிந்துரை:

An open letter to Google: Stop the censorship of the Internet! Stop the political blacklisting of the World Socialist Web Site!
[25 August 2017]