ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Five years since company-provoked incident used to frame up Maruti Suzuki workers

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது வழக்கு ஜோடிக்க  பயன்படுத்தப்பட்ட நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள்!

By Shannon Jones
21 July 2017

இந்தியாவில், தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி மானேசர் வாகனத் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் மீதான பரந்தளவில்  வழக்கு மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்ட நிர்வாகத் தூண்டுதலால் நடந்த சம்பவத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை குறித்தது.

ஜூலை 18, 2012 அன்று மாருதி சுசூகி நிர்வாகம் ஜெயலால் என்றொரு தொழிலாளியை பணிநீக்கம் செய்தது, அவர் தேநீர் இடைவேளையின் போதும் கூட தொழிலாளர்களை வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதை எதிர்த்தார் மற்றும் அவரது வறுமை நிலைக்காகவும், அவரது தலித் பின்னணிக்காகவும் அதாவது “தீண்டத்தகாத” சாதி என்றழைக்கப்படும் ஒரு சந்ததியினராக இருப்பதையும், அவதூறாக பேசிய ஒரு மேலாளரின் துஷ்பிரயோகத்தையும் எதிர்த்தார்.

தங்களது சக பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஆதரவாக வந்த தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனம் அடியாட்களை (குண்டர்கள்) கட்டவிழ்த்துவிட்டது. பின்னர், எங்கிருந்து பற்றியதென தெரியாத வகையில் திடீரென ஆலையில் தீப்பற்றியதுடன், தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்ட ஒரே மேலாளரான அவினேஷ் தேவ் கூட மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார்.

கைகலப்பினைத் தொடர்ந்து, 148 பேர் கைது செய்யப்பட்டு, இறுதியாக 31 பேர் மார்ச் 10, 2017 அன்று குற்றவாளிகள் என்று தண்டனை வழங்கப்பட்டது, அதில் 13 பேருக்கு நரகத்தை ஒத்த இந்திய சிறை அமைப்புக்குள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்திய வாகனத் தொழிலாளர்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதல், மாருதி சுசூகி நிறுவன நிர்வாகிகள், பொலிஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரங்கேறியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International –ICFI), உலக சோசலிச வலைத் தளமும் இணைந்து இந்த வீரம் மிக்க தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு உலகளாவிய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கக் கோருகின்ற இந்த மனுவில் கையெழுத்திடுமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க விரும்பும் அனைவரையும் நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

மாருதி சுசூகி, ஹோண்டா மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்துடன் ஆண்டு நிறைவை ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்ட அனைத்து இந்திய தொழிற் சங்க மாநாடு (All India Trades Union Congress) நினைவுகூரியது. தொழிலாளர்கள் ராஜீவ் சௌக் தில்லி மெட்ரோ நிலையத்தில் ஒன்று திரண்டனர். தொழிலாளர்கள் அந்த நிலையத்திலிருந்து அருகிலுள்ள அரசாங்க அலுவலகங்களுக்கு அணிவகுத்துச் சென்று, அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் துரோகத்தனமான பாத்திரத்தை  பெயரளவிலான தன்மையுடைய இந்த ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசு துன்புறுத்தலின் தொடக்கத்திலிருந்து, ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும், தாக்குதலுக்கான அவர்களது எதிர்ப்பை நசுக்கவும்  அல்லது, அது சாத்தியமற்ற இடங்களில் தொழிலாளர்களின் கோபத்தை ஊழல் நிறைந்த இந்திய நீதிமன்றங்களுக்கு பயனற்ற முறையீடுகள் செய்யும்படி திசை திருப்புகின்றனர்.

இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் முதுகெலும்பற்றத்தன்மை மேலும் கூடுதலான அரசுத் தாக்குதல்களுக்கு ஊக்கமளித்துள்ளது. கடந்த மாதம், ஹரியானாவில் உள்ள ஐசின் வாகன பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை பொலிஸ் குற்றம்சாட்டி அவர்களை தாக்கிய பின்னர் 400 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த தொழிலாளர்களும், அருகிலுள்ள மாருதி சுசூகி ஆலையில் வேலை செய்யும் அவர்களது சமதரப்பினர்களைப் போலவே குறைந்த ஊதியங்கள் மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

ஜப்பானை தளமாகக் கொண்ட சுசூகி மோட்டார் போன்ற பிரமாண்டமான நாடுகடந்த பெருநிறுவனங்களின் இருப்பிடமாக இருக்கும் இந்திய தொழிற்துறை பகுதிக்குள் காணப்படும் மலிவுகூலி மற்றும் கடுமையான உழைப்பு நிலைமைகள் குறித்த அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்குவதே மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தாக்குதலின் குறிக்கோளாக உள்ளது.

பாதுகாப்பு அடியாட்களினால் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற கதையைத் தான் அவர்கள் கூறுவார்கள் என்று கூறி, நிகழ்வுகள் பற்றிய தொழிலாளர்களின் கருத்துக்களை நீதிபதி இந்த வழக்கில் அடியோடு நிராகரித்தார். ஜூலை 18, 2012 நிகழ்வுகளின் போது நேரடியாக கண்ட தொழிலாளர்களின் அனைத்து சாட்சியங்களையும் நீதிபதி தவிர்த்துவிட்டார், ஆனால் அவர்கள் மீது எந்தவொரு தவறான குற்றச்சாட்டின் பேரிலும் வழக்கு தொடரப்படவில்லை. மாறாக, கண்ணால் பார்த்த தொழிலாளர் சாட்சியங்களின் எந்தவிதமான சவால்களுக்கும் இடமின்றி, நீதிபதி நிர்வாக அதிகாரிகளுக்கு அவர்கள் கண்ணோட்டத்தில் கதையை கூற கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளித்தார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் பன்னிரண்டு பேர் மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) தலைவர்களாக இருந்தனர். ஆலையில் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான போர்குணமிக்க வேலை நிறுத்தங்கள் தான் நிர்வாகத்தை மார்ச் 2012 இல் MSWU ஐ அங்கீகரிக்கும் நிலைக்கு தள்ளியது. நிர்வாக மேலாதிக்கத்திற்கு உடந்தையான தொழிற்சங்கத்திற்கு எதிராக கட்டப்பட்ட இந்த தொழிற்சங்கம், வெறுக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை மீதான அதன் எதிர்ப்புக்கு பரவலான ஆதரவை வென்றது. நிறுவனத்தால் அரங்கேற்றப்பட்ட ஆத்திரமூட்டலுக்கு பின்னர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவருமே பணிநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் பலர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு பிணை அனுமதியின்றி சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் முக்கியமாக MSWU நொருக்கப்பட்டது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் இடையேயான போர்க்குணமிக்க வளர்ச்சி இந்திய தொழிலாளர்களின் தீவிரமயமாக்கலின் அறிகுறியாகவுள்ளது, அவர்கள் வறிய இந்திய கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்டனர், அது மலிவான மற்றும் மிகுந்தளவு சுரண்டலுடன் கூடிய உழைப்பு போன்றவற்றுக்கான  தணியாத பசியைக் கொண்ட பூகோள பெரும் வணிகத்திற்கு தீனி போடுவதற்காகும். குர்கான் மானேசர் தொழிற்துறை பகுதியில் உள்ள இந்த மானேசர் ஆலை அடுத்தடுத்த அலை போன்று தொடரப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஆலை உள்ளிருப்பு போராட்டங்கள் மற்றும் பிற போர்க்குணமிக்க நடவடிக்கைகள் உடனான ஒரு எதிர்ப்புகர மையமாக இருந்துவந்தது. அது 2011 இல் முன்னிலைக்கு வந்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஜோடிக்கப்பட்ட வழக்கின் மிருகத்தனமான குணாம்சத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள் மற்றும் குறைந்த வளங்களைக் கொண்ட ஏழை விவசாய குடும்பங்களில் இருந்து வருபவர்கள். பல குடும்பங்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரதான வருமானம் ஈட்டும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களது குழந்தைகளுக்கும், அவர்களைச் சார்ந்த ஏனைய உறவினர்களுக்கும் கடுமையான கஷ்டங்களை உருவாக்கியுள்ளது.

உதாரணமாக, MSWU இன் தலைவர் ராம் மஹர் சிங், தனது 30 வயதின் முற்பகுதியில் உள்ளார் மற்றும் கைத்தன் மாவட்டத்திலுள்ள குலியானா கிராமத்திலிருந்து வருகிறார். அவருக்கு 30 வயதான மனைவியும், 7 மற்றும் 9 வயதுகளில் இரு மகன்களும் உள்ளனர். அவர்கள் விவசாயம் செய்யும் வெறும் நான்கு ஏக்கர் நிலப்பரப்பை ஆதாரமாகக் கொண்டு கஷ்டத்துடன் வாழ்கிறார்கள்.

அஜ்மீர் சிங் MSWU இன் சட்ட ஆலோசகராக இருந்தார். அவர் ரோஹ்தக் மாவட்டத்திலுள்ள சமன்புட்டி கிராமத்திலிருந்து வருபவர். அவருக்கு 27 வயதான மனைவியும், 6 மற்றும் 8 வயதுகளில் இரு குழந்தைகளும் உள்ளனர். அவரது தந்தை 55 வயதும், தாயார் 50 வயதும் ஆனவர்கள்.

சிங்கிற்கு இரண்டு திருமணமாகாத சகோதரர்களும், இரண்டு திருமணமான சகோதரிகளும் உள்ளனர். அஜ்மீர் சிறையிலிடப்பட்டதனால் அவரது சகோதரர்கள் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, தற்போது மண்பாண்டங்கள் செய்யும் தொழில் செய்து அவர்களது குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர் ஜெய லாலுக்கு நிலமும் கிடையாது, அவர் ஜெயாந்த் மாவட்டத்தின் பைக்கால் கிராமத்தில் இருந்து ஒரு மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருகிறார். அவரது மனைவிக்கு 28 வயதாகிறது, மேலும் அவர்களுக்கு 5-1/2 வயதாகும் ஒரு மகன் இருக்கிறான். அவரது தந்தையும், தாயும் இன்னும் இருக்கின்றனர், மேலும் அவருக்கு 35 வயதான ஒரு சகோதரனும் இருக்கிறார். அவருடைய குடும்பம் ஜெய லால் வருமானத்தையே முற்றிலும் சார்ந்து இருந்தது.

மற்றுமொரு சிறையிலிடப்பட்ட தொழிலாளரான ராம் விலாஸூக்கு 25 வயதான மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அத்துடன் 66 வயதான தந்தையும், 48 வயதான தாயும் அவருடன் உள்ளனர். அவரது ஒரே சகோதரர் 20 வயதான ஒரு மாணவர் ஆவார். அவர் சோனிபட் மாவட்டத்திலுள்ள கம்தி கிராமத்தில் இருந்து வருபவர், மேலும் அவரது குடும்பத்திற்கு நிலம் எதுவும் கிடையாது என்பதுடன் அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

MSWU இன் தலைமை ஆதரவாளரான 31 வயதான சந்தீப் பில்லோ திருமணம் ஆகாதவர். அவர் ஜெயின் மாவட்டத்திலுள்ள டிஹோலா கிராமத்தில் இருந்து வருபவர். சிறையில் இருந்தபோது, அவரது சகோதரிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை சுபே சிங் 55 வயதானவர், மற்றும் அவரது தாயார் 50 வயதானவர்.

மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை எதிர்த்து போராடுவதில், ஜப்பானுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலகிற்கான மலிவு உழைப்பு மையமாக நாட்டை உருவாக்கும் இந்திய அதிகாரத்தின் முயற்சிகளுக்கும் எதிராக மட்டுமல்ல மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஒரு பலமான அடியை கொடுத்துள்ளனர், ஆனால் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்காகவும் கூட, அவர்களும் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும் பரப்பிக் கொண்டிருக்கும் தேசிய விஷத்தை எதிர்த்து, மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான பிரச்சாரமானது பூகோள ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பெருநிறுவனங்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும், மேலும் அவர்கள் தரப்பு நியாயத்தை பரவலாக தெரியப்படுத்தவும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.