ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mélenchon denies France’s responsibility for the Nazi-era deportation of the Jews

நாஜி-காலகட்ட யூதர்களின் நாடுகடத்தலில் பிரான்சின் பொறுப்பை மெலோன்சோன் மறுக்கிறார்

By Alex Lantier
31 July 2017

நாஜி ஆக்கிரமிப்பின் போது யூதர்களை பிரான்சிலிருந்து கிழக்கு ஐரோப்பாவின் படுகொலை முகாம்களுக்கு நாடுகடத்தியதில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை மறுப்பதென்ற அடிபணியா பிரான்ஸ் கட்சி (La France insoumise - LFI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனின் வெறுப்பூட்டும் முடிவு, ஓர் அரசியல் எச்சரிக்கையாகும். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பல்வேறு அரசு-சாரா அமைப்புகளுடன் LFI ஐ கூட்டு சேர்த்து, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக வெட்டுக்களுக்கு எதிராக அவர் கட்டமைக்க விரும்பும் எதிர்ப்பானது, வரலாற்று உண்மைக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் விரோதமான ஒரு தேசியவாத, குட்டி-முதலாளித்துவ இயக்கமாக இருக்கும்.

மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டமை, தெளிவாக, வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய வரலாற்று கட்டத்தை குறிக்கிறது. கிரீஸில் செய்யப்பட்டதைப் போலவே, 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்க, முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. ஐரோப்பாவை இராணுவமயப்படுத்துவது, பிரெஞ்சு அவசரகால நிலையை நிரந்தரமாக்குவது, உத்தரவாணைகளைக் கொண்டு தொழிற்சட்டங்களை ஒருதலைபட்சமாக திருத்தி எழுதுவது என இவற்றின் மூலமாக மக்ரோன் பகிரங்கமாக ஒரு சர்வாதிகார மற்றும் தொழிலாளர்-விரோத ஆட்சியை அமைக்க உத்தேசித்துள்ளார். 1936 மற்றும் 1968 பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் நாஜிக்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் ஆகியவற்றின் பலாபலன்களை மக்ரோன் கைத்துறக்க நோக்கம் கொண்டுள்ளதாக மெலோன்சோனே கூட தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள், ஐயத்திற்கிடமின்றி, பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களிடையே மிகவும் பலமான எதிர்ப்பைத் தூண்டும். ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராகவும் ஒரு புரட்சிகர போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் மெலோன்சோனின் நோக்குநிலையை நனவுபூர்வமாக நிராகரிப்பது அவசியமாகும். கிரீஸில் "தீவிர இடதின் கூட்டணி" சிரிசாவிற்கும் மற்றும் அதிவலது சுதந்திர கிரேக்கர்கர்கள் கட்சிக்கும் இடையே சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்த மெலோன்சோனின் கிரேக்க கூட்டாளி பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸை முன்பினும் அதிக நெருக்கமாக இவர் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். மெலோன்சோனும், சிப்ராஸைப் போலவே, தேசியவாத வலதுக்கு பொருத்தமான வெகுஜனவாத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு நிலைப்பாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கிறார்.

“இதை நீங்கள் செய்ய முடியாது" என்று தலைப்பிட்ட அவரது ஒரு வலைப்பதிவு பக்கத்தில், ஜூலை 16 அன்று மக்ரோன் பாரீசில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு உடனான ஒரு சந்திப்பில், Vél d'Hiv பொலிஸ் சுற்றிவளைப்பில் பிரான்ஸ் பொறுப்பேற்றிருந்ததாக குறிப்பிட்டதற்காக மெலோன்சோன் மக்ரோனை தாக்குகிறார். மெலோன்சோனின் கருத்துப்படி, “இக்குற்றத்திற்கு, பிரெஞ்சு மக்களும், பிரான்சும் பொறுப்பாகிறது என்று கூறுவது, நம் நாட்டைக் குறித்து ஒரு அடிப்படை வரையறையை வழங்குவதாக இருக்கும், இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவியலாது,” என்றார்.

1940 இல் நாஜி படையெடுப்புக்குப் பின்னர், Vél d'Hiv சுற்றிவளைப்பு உட்பட பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அமைத்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் வரலாறு, நன்கறியப்பட்டதாகும். உண்மையில், ஜூலை 16-17, 1942 இல், பிரெஞ்சு அதிகாரிகளும் பொலிஸூம் மற்றும் ஜாக் டோரியோ (Jacques Doriot) இன் பிரெஞ்சு மக்கள் கட்சியின் (Parti populaire français – PPF) அங்கத்தவர்களும் தான், 13,000 யூத ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்து, குளிர்காலத்தில் சைக்கிள் ஓட்டும் மைதானமான Vélodrome d'Hiver (Vél d'Hiv) இல் அல்லது பிரான்ஸ் எங்கிலும் இருந்த முகாம்களின் வலையமைப்பில் அடைத்து வைத்தனர். இறுதியில் அவர்கள் போலாந்தின் படுகொலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அந்த நாடுகடத்தலின் போது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட 75,000 க்கும் அதிகமான யூதர்களில், வெறும் 3,000 பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர்.

1995 இல் பழமைவாத ஜாக் சிராக் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹோலாண்ட் இருவருமே அந்த சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை அங்கீகரித்திருந்த நிலையில், மெலோன்சோன் முன்வைக்கும் இந்த வாதம், அவ்விருவரது ஜனாதிபதி பிரகடனங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில், நவ-பாசிசவாதிகளால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Vél d'Hiv சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய முன்னணி (FN) வேட்பாளர் மரீன் லு பென் மறுத்த போது, இது பத்திரிகைகளில் பெரும் தாக்குதல்களைக் கொண்டு வந்தது. ஏப்ரல் 9 அன்று அப்பெண்மணி கூறுகையில், “Vél d'Hiv சம்பவத்திற்கு பிரான்ஸ் பொறுப்பாகாது,” என்றார். “அந்நேரத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான் அதற்கு பொறுப்பானவர்கள், பிரான்ஸ் பொறுப்பாகாது. சமீபத்திய ஆண்டுகளில் பிரான்ஸ் வெளிப்படையாகவே அதை கண்டித்துள்ளது.” லு பென் "சிவப்பு கோட்டை" தாண்டிவிட்டதாக கண்டித்து Le Monde எதிர்வினை காட்டிய அதேவேளையில், மெலோன்சோனே லு பென்னின் கருத்தை "முட்டாள்தனமானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போதோ மெலோன்சோன் சிவப்பு கோட்டைத் தாண்டுகிறார், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் எதை முட்டாள்தனமானது என்று தாக்கினாரோ அதையே அவரின் சொந்த வாதமாக இப்போது முன்வைக்கிறார். மக்ரோனின் பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு ஒரு விமர்சகராக மெலோன்சோன் தனது நிலைப்பாட்டை முன்வைக்க முயல்கிறார், நெத்தெனியாகு உடனான சந்திப்பின்போது, “யூத-எதிர்ப்புவாதத்தின் (anti-Semitism) ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவம் தான்" யூத-பாதுகாப்புவாதத்திற்கான (Zionism) எதிர்ப்பு" என்று மக்ரோன் அறிவித்தார்.

மெலோன்சோன் எழுதுகிறார், “யூத-பாதுகாப்புவாத எதிர்ப்பை (anti-Zionism) மற்றும் யூத-எதிர்ப்புவாதத்துடன் (anti-Semitism) இணைப்பது தேசிய-புறநீங்கல்வாத (national-exclusivist) வட்டாரங்களின் மிகப் பழைய கூற்றுகளாகும். ஆனால் இம்முறை தான் முதன்முதலாக நமது குடியரசு தலைவர் இந்த கருத்துருவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரான்சின் சட்டப்படி தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்துடன் ஓர் அரசியல் கருத்தை இணைப்பதொன்றும் சிறிய விடயமல்ல… அதற்குப் பின்னர், Vél d'Hiv இல் பிரான்சின் பொறுப்பிருந்ததாக அறிவிப்பது, அனுமதிக்கத்தக்க மிக முக்கிய கருத்துக்களின் எல்லையை மீண்டும் மீறுவதாக உள்ளது,” என்கிறார்.

யூத-எதிர்ப்புவாதத்தை (anti-Semitism) யூத-பாதுகாப்புவாத எதிர்ப்புடன் (anti-Zionism) இணைக்கும் மக்ரோனின் கருத்து உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தல் தான். அண்டை நாடுகளுக்கு எதிராகவும் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்காக பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் இஸ்ரேலிய அரசின் ஆக்ரோஷமான கொள்கைகள் மீதான விமர்சனங்கள் ஒன்றோடொன்றை ஒன்று கலப்பதன் மூலமாக, மத்திய கிழக்கு போர்கள் மீதான விமர்சனங்களை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக தண்டிப்பதற்கான சாத்தியக்கூறை மக்ரோன் திறந்து விடுகிறார். அவசரகால நிலையை, சட்டமாக எழுதுவதன் மூலமாக, அரசின் பரந்த ஒடுக்குமுறை அதிகாரங்களை மக்ரோன் கையில் கொண்டிருக்கிறார் என்பதால், இந்த அச்சுறுத்தல் அனைத்தினும் மேலாக தீவிரமானதாகும்.

ஆனால் போர் மற்றும் அவசரகால நிலை முன்னிறுத்தும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தல்களை குறித்து மெலோன்சோன் தொழிலாளர்களை எச்சரிக்கைப்படுத்தவில்லை. உண்மையில், அவர் இக்கொள்கைகளை பல சமயங்களில் ஆதரித்துள்ளார். நவம்பர் 2015 இல் முதலில் தேசிய நாடாளுமன்றத்தில் அவசரகால நிலை வருவதற்கு, இவர் ஒரு முன்னணி தலைவராக இருந்த இடது முன்னணிதான் வாக்களித்தது. மேலும், ஆயுதப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே இம்மாதம் இராஜினாமா செய்கையில் அவர் கோரியதைப் போல, ஹோலாண்ட் மற்றும் பழமைவாதிகள் தொடங்கிய போர்களுக்கு நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றும், பிரான்ஸ் "அதன் தீர்மானங்களுக்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும்" என்றும் மெலோன்சோன் அவர் வலைப் பதிவு பக்கத்தில் வலியுறுத்துகிறார்.

மக்ரோனின் ஜனநாயக-விரோத கொள்கையை தாக்குவதற்குப் பதிலாக, ஒரு பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் வாதத்தை முன்வைத்து, மக்ரோன் பிரான்சின் பெயரில் அந்த சுற்றிவளைப்புக்கு பெறுப்பேற்று கொண்டார் என்பதற்காக, மெலோன்சோன் மக்ரோனுக்கு எதிராக தேசியவாத வெறுப்புக்களைத் தூண்டிவிட முயன்று வருகிறார். அந்த சுற்றிவளைப்புக்கு பிரான்ஸ் பெறுப்பேற்றிருப்பதாக பேசுவது ஒவ்வொரு பிரெஞ்சு பிரஜையையும், எல்லா காலத்திற்கும், ஒரு யூத-எதிர்ப்பு குற்றவாளியாக குற்றஞ்சுமத்துவதாகும் என்று, லு பென்னைப் போலவே, இவரும் கூறுகிறார். “கொலைகாரர்கள் என்று பிரெஞ்சு மக்களுக்கு சொந்தமில்லாத ஒரு அடையாளத்தை அவர்கள் மீது சாட்டுவதற்கு திருவாளர் மக்ரோனுக்கு அதிகாரமில்லை,” என்றவர் வசைபாடினார்.

இது, சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்புள்ளது என்ற கருத்தை குறித்த ஒரு பொய்யான மற்றும் அபத்தமான பொருள்விளக்கமாகும். அந்த ஆக்கிரமிப்பின் போது பல பிரெஞ்சு மக்கள், “கொலைகாரர்களாக" இருக்கவில்லை, யூதர்களுக்கு ஒளிய இடமளித்தார்கள் என்பது தான் உண்மை. பின்னர், 1943-1944 இல், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் ஒரு பாரிய இயக்கமாக வெடித்த எதிர்ப்பானது, நாஜிக்கள், விச்சி ஆட்சி மற்றும் அந்த நாடுகடத்தல்களால் தூண்டப்பட்ட எதிர்ப்புக்கு சாட்சியமாகும்.

ஆனால் சொல்லப்போனால், அந்நேரத்தில் பிரெஞ்சு அரசு அதிகார நிர்வாகம் வகித்த பாத்திரத்தினால் மட்டுமின்றி, Vél d'Hiv சுற்றிவளைப்பில் பிரான்சும் பொறுப்பைக் கொண்டுள்ளது. வெகுஜனங்களின் குறிப்பிடத்தக்க அடுக்குகளிடம் இருந்தும், அத்துடன் இரண்டாம் உலக போர் முடிவுக்குப் பின்னர் தொடர்ந்து பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைவர்களிடம் இருந்தும் ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி ஆதரவு பெற்றிருந்தது என்பது இன்னமும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் பிரச்சினையாகும்.

விச்சி ஆட்சியால் பிரான்ஸை ஆள முடிந்தது என்றால், அது வெறுமனே நாஜி ஆக்கிரமிப்பு படைகளிடம் இருந்து பெற்ற உதவிகளினால் மட்டுமல்ல. அனைத்திற்கும் மேலாக அதற்கு காரணம், பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் சமூகத்தில் பரந்த செல்வாக்கு கொண்டிருந்த Charles Maurras தலைமையிலான குட்டி-முதலாளித்துவ, யூத-எதிர்ப்பு இயக்கமான Action française உட்பட, அரசியல் இயக்கங்களை அது சார்ந்திருந்தது என்பதாலும் ஆகும். யூத பிரச்சினைகள் மீதான விச்சியின் பொது ஆணையகத்தில் (General Commissariat for Jewish Questions – CGQJ) அடுத்தடுத்து வந்த இரண்டு தலைவர்கள், Xavier Vallat மற்றும் Louis Darquier de Pellepoix, இருவருமே இதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், ஒரு அரை நூற்றாண்டாக பிரெஞ்சு "இடது" என்று கூறப்பட்டு செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்ட் கட்சியை (PS) நிறுவிய மனிதரும், மெலோன்சோனின் அரசியல் ஆசானுமாக இருந்த பிரான்சுவா மித்திரோன், விச்சியில் இருந்துதான் அரசியலைத் தொடங்கினார். Vél d'Hiv சுற்றிவளைப்புக்கு தலைமை வகித்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் பொலிஸ் தலைவர் றெனே புஸ்க்கே (René Bousquet) ஐ அவருக்கு நன்கு தெரியும். மித்திரோன் அவரது கடந்த காலத்தை மூடிமறைக்க, சந்தர்ப்பவாதம் மற்றும் வெறித்தனமான கம்யூனிச-விரோதத்திலிருந்து வெளியில் வந்து, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் சமூக ஜனநாயகவாதத்தை நோக்கி தன்னை மாற்றி புதுப்பித்துக் கொண்டார். ஆனால் அவரது ஜனாதிபதி பதவிகாலத்தின் போது, இந்த கடந்தகாலம் மீதான மோசடிகள் வெடித்தெழுந்தன, இறுதியில் 1980 களிலும் மித்திரோனும் புஸ்க்கேயும் இரகசிய நட்பில் இருந்தனர் என்பது அம்பலமாகியது.

அந்த சுற்றிவளைப்புகளில் பிரான்சின் பொறுப்பை மறுப்பதற்காகவும், மற்றும் அந்த சுற்றிவளைப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் மற்றும் தனது சொந்த தொழில்வாழ்வுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை மூடிமறைப்பதற்காகவும் மெலோன்சோன், வரலாற்று பொய்மைப்படுத்தல்களுடன் வெறுப்புணர்வை கலந்து, ஒத்துழைப்புவாதத்தின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டுகிறார். அந்த சுற்றிவளைப்பில் விச்சியின் அரசியல் தலைமை மற்றும் பாதுகாப்பு படைகள் வகித்த பாத்திரத்தை மறுக்க அவர் துணியவில்லை. ஆனால் அதற்கும் பிரான்ஸ் வகித்த பொறுப்பிற்கும், அல்லது உண்மையில் இப்போதைய அரசியலுக்கும், எந்த தொடர்பும் இல்லை என்பது போல அவர் அதை மேலோட்டமாக பேசுகிறார்.

அவர் எழுதுகிறார், “உண்மையில் அந்த குற்றத்திற்கு தனிப்பட்ட பிரெஞ்சுகாரர்கள் பொறுப்பாகி இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சான்றாக, எந்தவித போராட்டங்களோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளோ இல்லாமல் அந்த சுற்றிவளைப்பை நடத்திய பொலிஸார், அவர்களைத் தவிர அவர்களுடன் செயலூக்கத்துடனோ, அல்லது மவுனமாகவோ, அல்லது எந்தவிதத்திலும் எதிர்க்க எந்தவொரு முயற்சியும் செய்யாது இருந்து தங்களை உடந்தையாய் ஆக்கிக் கொண்டதற்காக எல்லா மட்டத்தில் இருந்த அதிகாரிகளும் தான்.”

விச்சி பிரான்ஸ், பிரான்ஸ் கிடையாது என்று வாதிடுவதற்காக, எதிர்ப்பின் பிரதான முதலாளித்துவ கன்னை தலைவர் சார்லஸ் டு கோல் மற்றும் மித்திரோன் முன்வைத்த அதே வார்த்தைஜாலங்களை மெலோன்சோன் சின்ன சின்ன மாற்றங்களோடு திரும்ப கூறுகிறார். சான்றாக டு கோல் மூர்க்கமாக, “பிரான்ஸ் எதிர்த்தது,” என்று வாதிட்டார்.

“குடியரசு தான் பிரான்ஸ், வேறெதுவும் பிரான்ஸ் கிடையாது,” என்று மெலோன்சோன் இன்று அறிவிக்கிறார். “அதேநேரத்தில், மார்ஷல் பெத்தானின் தேசிய புரட்சியால் குடியரசு அழிக்கப்பட்டிருந்தது. இந்த வரலாற்று பார்வையில், பிரான்ஸ், அந்நேரத்தில், தளபதி டு கோல் உடன் இலண்டனில் இருந்தது, ஒவ்வொரு இடத்திலும் பிரெஞ்சு மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தனர் …  உங்களை நான் எச்சரிக்கிறேன்: நமது தேச அடையாளத்தின் குடியரசு அஸ்திவாரத்தை அங்கீகரிக்க மறுப்பதென்பது, பிரெஞ்சு மக்களின் ஆழ்ந்த பொதுவுணர்வுகளில் இருந்து வரும் சக்திவாய்ந்த மற்றும் திரும்பப் பெறவியலாத பழிவாங்கும் குணத்தை கெடுப்பவர்களை அல்லது அதை தவிர்ப்பவர்களை அம்பலப்படுத்துகிறது,” என்கிறார்.

இது வரலாற்று பொய்மைப்படுத்தலாகும். 1940 இல் குடியரசை தேசிய புரட்சி அகற்றவில்லை. 3 மே 1936 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு விச்சியில் 10 ஜூலை 1940 இல் ஒன்றுகூடிய தேசிய நாடாளுமன்றத்தில் வாக்களித்ததன் மூலமாக, மார்ஷல் பிலிப் பெத்தானுக்கு அவசரகால  நிலை அதிகாரங்கள் வழங்குவதற்காகவே குடியரசு கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்த சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தீவிர நிர்வாகிகளில் பெரும்பான்மையினர் —அதாவது பிரெஞ்சு மக்கள் முன்னணியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அங்கத்தவர்கள்— பெத்தனுக்கு வாக்களித்தனர்.

உத்தியோகபூர்வ அரசு ஆவணங்களில் கூட தென்படாத வகையில் "குடியரசு" என்ற சொல்லே இருட்டடிப்பு செய்யப்பட்டது, நாஜி ஆக்கிரமிப்பு படைகள் அதன் “தேசிய புரட்சி" கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அவற்றுடன் சேர்ந்து பெத்தனின் கீழ் அரசு ஒழுங்கமைக்கப்பட்டது. தொல்லைக்கு உட்படுத்தியமை, இறுதியில், CGQJ, பொலிஸ், பின்னர் பாசிசவாத குடிப்படை (Milice) ஆல் நிர்வகிக்கப்பட்ட படுகொலை முகாம்களுக்கு யூதர்களை அனுப்பியமை ஆகியவை தேசிய புரட்சியின் ஒரு முக்கிய கூறுபாடாக இருந்தது.

இத்தகைய மிகப்பெரும் குற்றங்களுக்கு பின்னர், விடுதலை (Liberation) போராட்டத்தின் போது பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களை தடுத்ததன் மூலமாக, ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத மற்றும் எதிர்புரட்சிகர கொள்கைகளால் தான் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சி காப்பாற்றப்பட்டது. அவர்கள் பிரான்சில் இனப்படுகொலையை நடத்த உதவிய பரந்த பெரும்பான்மை ஒத்துழைப்புவாதிகள் மீது வழக்கு தொடுப்பதையோ, தண்டனை விதிப்பதையோ தடுத்தனர். புஸ்க்கே மற்றும் மித்திரோன் போன்ற விச்சி அதிகாரிகள், முக்கிய வணிக தொழில்களிலும் அரசியலிலும் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்கள், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவரும், ஸ்ராலினிசம் மற்றும் மக்கள் முன்னணிக்கு புரட்சிகரமான மார்க்சிச எதிர்ப்பாளருமான லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் சரியான வரலாற்று நிரூபணங்களை வழங்கியுள்ளன. நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் போராட்டம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்ததுடன், முதலாளித்துவ வர்க்கம், சோவியத் அதிகாரத்துவம், மற்றும் குட்டி-முதலாளித்துவ மற்றும் தேசியவாத மேலாளுமைகளிடம் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை அடித்தளத்தில் கொண்டிருந்தது. அவர் படைப்புகள், 20 ஆம் நூற்றாண்டின் ஸ்ராலினிச குற்றங்களுக்கு புரட்சிகர மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்தது.

மெலோன்சோன் கருத்துப்படி, யூத-இனப்படுகொலையில் அரசு மற்றும் அரசியல் யூத-எதிர்ப்புவாதம் வகித்த பாத்திரம் குறித்த உண்மையால், தங்கள் ஜீவனின் அடி ஆழத்தில் பாதிப்பை உணரும் பிரெஞ்சுவாசிகள் யாரென்று ஒருவர் கேட்கக்கூடும்? உண்மையில், ஒத்துழைப்புவாதிகளின் அரசியல் மரபியத்தைப் பாதுகாக்கும் அதிவலது தலைவர்கள் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் மெலோன்சோன் போன்று, சோசலிஸ்ட் கட்சி மற்றும் மித்திரோனுக்கு அடிபணிவதற்கு முன்னதாக, ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்தில் ஆர்வம் கொண்டு, பின்னர் அல்ஜீரிய போர் மற்றும் மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்தில் PCF இன் எதிர்-புரட்சிகர பாத்திரத்தை கண்டு ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள்.

மெலோன்சோன் ஆரம்பத்தில் பியர் லாம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் (Organisation communiste internationaliste - OCI) இணைந்தார், அப்போது 1971 இல் OCI ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து உடைந்து சென்று கொண்டிருந்தது. திருத்தல்வாதமானது ட்ரொட்ஸ்கிசத்தை மற்றும் ICFI ஐ அழித்துவிட்டதாகவும், குட்டி-முதலாளித்துவ சக்திகளை பரந்தளவில் மறுகுழுவாக்கம் செய்து அது மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டுமென்றும் OCI பொய்யான மற்றும் நெறியற்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்திருந்தது. அதன் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு, வாக்குப்பெட்டிகள் மூலமாக பிரான்ஸ் எல்லைகளுக்குள் அதிகாரத்தை பெற சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) இடது ஐக்கியம் என்ற ஒன்றை உருவாக்குவதற்காக இருந்தது.

இப்போதோ, பிரான்சில் அண்மித்து அரை நூற்றாண்டு கால முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திவாரம் திவாலாகி உள்ளது என்ற முன்னோக்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிலாளர்-விரோத சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களுடனான அதன் ஒத்துழைப்பாலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியாலும் மதிப்பிழந்து, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) பொறிந்து போயுள்ளது. ஹோலாண்டின் பிற்போக்குத்தனமான மற்றும் மக்கள்விரோத ஜனாதிபதி பதவி காலத்திற்குப் பின்னர், ஆனால் அதன் முன்னாள் பொருளாதார அமைச்சர் மக்ரோன் தலைமையில் ஒரு எதிர்-புரட்சிகர தாக்குதலை அமைத்த பின்னர் மட்டுமே, இப்போது சோசலிஸ்ட் கட்சியும் (PS) உடைந்து வருகிறது.

மறுபுறம், தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச தீவிரமயப்படலின் முதல் கட்டங்களினூடாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில், “சோசலிஸ்ட்" என்று கூறிக்கொண்ட பேர்ணி சாண்டர்ஸ் க்கு வாக்களித்தனர். அதேபோல, சிரியாவில் ட்ரம்பின் தாக்குதல்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன திட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்த பிரான்சில் 20 சதவீதத்தினர் மெலோன்சோனுக்கு வாக்காளித்தனர். ஆனால் மெலோன்சோனோ, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர முன்னோக்கை ஐரோப்பாவில் அபிவிருத்தி செய்ய முயல்வதன் மூலமாக எதிர்வினையாற்றவில்லை.

சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்த பழைய அரசு-சாரா அமைப்புகள், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அணிதிரட்ட முயன்று வரும் அதேவேளையில், மெலோன்சோன் அதிவலதுக்கு நேரடியாகவே முறையிட்டு வருவதுடன், பகுதியாக அதன் கருத்துருக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார். சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியைக் கைவிட்டு, விரக்தி மற்றும் ஏமாற்றத்தில் தேசிய முன்னணிக்கு வாக்களித்து வருகின்ற தொழிலாளர்களை, சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்காக வென்றெடுப்பது அவர் குறிக்கோள் இல்லை. இந்த முன்னோக்கு, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியால் (Parti de l'égalité socialiste) மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக அவர், சமூக எதிர்ப்பை ஒரு தேசியவாத மற்றும் பிற்போக்குத்தனமான முன்னோக்கின் பின்னால் திருப்பி விட முயன்று வருகிறார்.

மெலோன்சோனினதும் LFI இன் மத்திய தலைமையினதும் பரிணாமம் குறித்து மிக ஆழமான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே, 2014 இல், மெலோன்சோன், மக்களின் சகாப்தம் (The Era of the People) என்ற அவரது நூலில், சோசலிச புரட்சியை மற்றும் தொழிலாள வர்க்கத்தை மக்கள் "கடந்து வரவேண்டுமென" கோரி, வெகுஜனவாத நிலைப்பாடுகளை ஏற்றிருந்தார். அந்நேரத்தில் அவர் ஏற்கனவே வலதுசாரி அரசியல் மூலோபாயவாதியும் Maurras ஐ பாராட்டுபவருமான Patrick Buisson உடன் நட்புறவை அபிவிருத்தி செய்தி வந்தார் என்பதுடன், Buisson க்கான Légion d'Honneur விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மரீன் லு பென் உடனும் கைகுலுக்கினார்.

எவ்வாறிருப்பினும், வெளியேற்றுவதில் பிரான்ஸ் வகித்த பாத்திரத்தை மெலோன்சோன் மறுத்துரைப்பது அவரின் அரசியல் சீரழிவில் இன்னுமொரு கட்டத்தைக் குறித்து நிற்கிறது. பிரான்சில் ஏற்கனவே ஒரு நீண்ட மற்றும் பிற்போக்குத்தனமான வரலாறைக் கொண்டுள்ள ஒருவகைப்பட்ட "இடது" தேசியவாத வாய்சவடாலை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். மார்க்சிசத்தை நிராகரித்ததன் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிசத்திற்கும் பின்னர் PPF ஐ ஸ்தாபிப்பதற்கும் சென்ற Jacques Doriot, குறிப்பாக ஒரேயொரு இழிவார்ந்த எடுத்துக்காட்டாவார். அடிபணியா பிரான்ஸ் தலைவரிடம் இருந்து ஒரு தேசியவாத துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.