ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The road forward for Sri Lankan workers after the betrayal of the CPC strike

பெற்றோலிய கூட்டுத்தாபன வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் இலங்கை தொழிலாளர்களுக்கு முன்னோக்கிய பாதை

By the Socialist Equality Party (Sri Lanka) 
12 August 2017

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன (CPC) தொழிலாளர்களின் சமீபத்திய "காலவரையற்ற வேலைநிறுத்தம்" தீவு முழுவதும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது. தொழிற்சங்கங்கள் 48 மணி நேரத்திற்கும் குறைவான காலத்துக்குள் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்டாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களில் ஒரு உச்ச கட்டத்தை இது குறித்தது.

சி.பி.சி. தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணியான பெட்ரோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு, ஜூலை 24 அன்று, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்து, அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை சீனாவிற்கு விற்பனை செய்ய வேண்டாம், நாட்டின் பிரதான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிப்பதை துரிதப்படுத்து, ஆகிய மூன்று கோரிக்கைகளுடன் வேலைநிறுத்தத்தை தொடக்கியது.

இந்த கோரிக்கைகள், சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆணையிட்டுள்ள கொள்கைகளுக்கு எதிரானவையாக இருந்தமையால், அரசாங்கம் உடனடியாக கடுமையான அத்தியாவசிய சேவை விதிகளை சுமத்தியதுடன், வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டது. அரசாங்க ஆதரவிலான குண்டர்களும் அணிதிரட்டப்பட்டிருந்தனர். இதனால் பல வேலைநிறுத்தக்காரர்கள் காயமடைந்தனர்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விரைவாக -"தற்காலிகமாக" என்ற பெயரில்- நிறுத்திவிட்டன. ஆனால் ஆகஸ்ட் 1 அன்று, தொழிற்சங்க தலைவர்கள் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்த பின்னர், இனிமேலும் தொழிற்சங்க நடவடிக்கை தேவையில்லை என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு, சீன மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடும் உடன்படிக்கையில் ஒரு விதியை உள்ளடக்கும் வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் அந்த வாக்குறுதியை எந்த நேரத்திலும் திருத்த முடியும்.

சிறிசேன பின்னர் திருகோணமலை எண்ணெய் குதங்கள் உட்பட ஏனைய வசதிகளும் வெளிநாட்டிற்கு விற்கப்படாது என தெரிவித்தாலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடம் விற்கப்பட மாட்டாது என்று கூறிவில்லை. சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சில புனரமைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.

இந்த தெளிவற்ற வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைக்கு வரும் என ஏற்றுக்கொள்ள முடியாது. சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஏனைய பிரிவு தொழிலாளர்களும் அணிதிரளும் புள்ளியாக இந்த வேலை நிறுத்தம் மாறும் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஏங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிற்சங்கங்களின் உதவியுடன், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அதன் எண்ணெய் குதங்கள் உட்பட தனியார்மயமாக்குதல் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் கூறிய ஒரே மாற்றம் என்பது, எதற்கும் பொறுப்புச் சொல்லாத வெற்று சரத்தாகியது.

சீன நிறுவனம் பொறுப்பேற்ற பின்னர், சி.பி.சி.யின் ஒரு அங்கமான பெட்ரோலியம் சேமிப்பு மையத்தில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகளை சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் பாதிக்கும் என்ற அச்சத்தில், தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

1980களில் இருந்து, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தனியாருக்கு சொந்தமான இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கதவைத் திறப்பதன் மூலமும் எண்ணெய் போக்குவரத்தை தனியார் இயக்குவதற்கு அனுமதிப்பதன் மூலமும், சி.பி.சி. ஏகபோகத்தை திட்டமிட்டு தாக்கின. ஸ்ரீலங்கா டெலிகொம், நாட்டின் துறைமுகங்கள் மற்றும் மின்சாரத் துறையின் பகுதி பகுதியான தனியார்மயமாக்கலை அடுத்து, தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளை வெட்டுவது ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்றன.

சி.பி.சி. வேலைநிறுத்தத்தின் காட்டிக் கொடுப்பு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவோ மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்கவோ முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகள் மீதான ஆழமான தாக்குதலின் அடிப்படைக் காரணம், பூகோள முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் நெருக்கடியே ஆகும். இதை சோசலிச வேலைத்திட்டத்திற்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்.

இத்தகைய முன்னோக்கிற்கு தொழிற்சங்கங்கள் கடும் விரோதமானவை. அவை முதலாளித்துவ கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதோடு முழுமையாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. அவை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது, தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக, பெருகிவரும் எதிர்ப்பை பிற்போக்கு தேசியவாத பாதையில், இந்திய மற்றும் சீனா நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதன் பக்கமும் திசை திருப்பி விடுவதற்கே ஆகும். சி.பி.சி. வசதிகளை உள்ளூர்வாசிகளுக்கோ வெளிநாட்டுகாரர்களுக்கோ, யாருக்கு விற்பனை செய்தாலும், தொழிலாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்வர்.

எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்து இலங்கை துறைமுக பொது தொழிலாளர் சங்கமும், சீன நிறுவனத்திற்கு ஹம்பந்தொட்ட துறைமுகத்தை குத்தகைக்கு கொடுப்பதற்கு எதிராக ஜூலை 28 அன்று கொழும்பு துறைமுக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிட்ட போதிலும், பின்னர், ஜனாதிபதி சிறிசேனவின் போலி வாக்குறுதியின் அடிப்படையில் அதை கைவிட்டது.

அனைத்து இலங்கை துறைமுக பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரசிறி மகாகமகே, ஒரு "தேசத்துரோக செயல்" என்று கண்டனம் செய்தவாறே இந்த குத்தகைக்கு எதிராக அணிசேர்ந்தார். இந்த சீன-விரோத வாய்வீச்சுக்கும் சி.பி.சி. தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், இது அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிராக போருக்கு தயார் செய்து வரும் நிலையில், அது கிளறிவிடும் பிறநாட்டவருக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களின் துரோகத்தை மட்டுமல்ல, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தின்போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளையும் எதிர்கொள்கின்றது.

அத்தியாவசிய சேவைகள் கட்டளையை பிரகடனப்படுத்தியதை நியாயப்படுத்துவதற்காக, பிரதமர் விக்கிரமசிங்க, அரசாங்கத்தை சீர்குலைக்கும் ஒரு முயற்சியாக சி.பி.சி. வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்ததுடன், அத்தகைய நடவடிக்கைகளை "தேசிய நெருக்கடி நிலைமையின்" போது அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பொருளாதாரம், கடனில் மூழ்கியுள்ளது. அது ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வருமான வீழ்ச்சியையும், அந்நிய செலாவனி நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. ஏனைய நாடுகளில் போலவே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளே நெருக்கடிக்கு விலைகொடுக்க வேண்டும்! என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் மந்திரமாக உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிரான மக்கள் விரோதத்தை சுரண்டிக்கொண்டே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. அது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், ஜனநாயக உரிமைகளை மீள ஸ்தாபிக்கவும் வாக்குறுதியளித்தது. ஆயினும், அதிக காலம் எடுக்கும் முன்னரே, “ஐக்கிய” அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீது பாயவும் தொடங்கியது.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, தொழிலாளர்கள் அடிப்படையில் வேறுபட்ட அரசியல் பாதையை எடுக்க வேண்டும். முதலில் இதன் அர்த்தம், தொழிற்சங்கங்களிலிருந்து அமைப்பு ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக முழுமையாக பிளவுபடுவதாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிலாள வர்க்கம் வாழும் அயல் பகுதிகளிலும், பெருந் தோட்டங்களிலும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. குழுவின் தலைவர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், முடிவுகள் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை குழுக்கள், அனைவரையும் ஒடுக்குகின்ற பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்ய, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழிலாளர் பிரிவுகளின் பக்கம் திரும்ப வேண்டும். அண்மைய காலத்தில் தபால் தொழிலாளர்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுமாக அனைவரும் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும், இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்ப்பு அமைப்புக்களால் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன.

அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் இலாப முறைபையையே நேரடியாக சவால் செய்வதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்களும் ஏழைகளும் தங்கள் வர்க்க நலன்களை பாதுகாக்க முடியும். சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அனைத்து பிரிவினரையும் ஐக்கியப்படுத்த சோ.ச.க. முற்சிக்கின்றது.

பிரதான கம்பனிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். மற்றும் பொருளாதாரம் ஒரு சில செல்வந்த கும்பலின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் சமூக தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஜே.வி.பி மற்றும் சிறு கட்சிகளுமாக அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் பிரிவுகளில் இருந்தும், குறிப்பாக நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற அவற்றின் போலி இடது ஆதரவாளர்களிடம் இருந்தும் அரசியல் ரீதியில் பிரிவது அவசியமாகும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திருப்பினால் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளுக்கான பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

இந்த போராட்டத்தில் அவர்களை வழிநடத்த தொழிலாளர்களுக்கு ஒரு சர்வதேச புரட்சிகரக் கட்சி அவசியம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் புத்திஜீவிகளையும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும், ஒரு பரந்த புரட்சிகரக் கட்சியாக அதைக் கட்டியெழுப்ப முன்வருமாறும் அழைப்பு விடுக்கின்றது.