ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Does the WSWS write about Leon Trotsky? Not according to Google

உலக சோசலி வலைத் தளம் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து எழுதியுள்ளதா? கூகுளைப் பொறுத்த வரையில் இல்லை

By Joseph Kishore
29 July 2017

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பிரசுரிக்கப்படுகிறது. பெப்ரவரி 1998 இல் WSWS தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த வலைத் தளம் அக்டோபர் புரட்சியின் தலைவர்களில் ஒருவரும் மற்றும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து ஆயிரக் கணக்கான கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பில் நூலின் ஆசிரியராவார். WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் ஏனைய முக்கிய அங்கத்தவர்களான ஆஸ்திரேலியாவின் நிக் பீம்ஸ் மற்றும் ஜேம்ஸ் கோகன், பிரிட்டனின் கிறிஸ் மார்ஸ்டன், ஜேர்மனியின் பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் உல்றிச் றிப்பேர்ட், கனடாவின் கீத் ஜோன்ஸ் மற்றும் இலங்கையின் வீஜே டயஸ் ஆகியோரும் பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ட்ரொட்ஸ்கிச வரலாறு மற்றும் அரசியலுக்காக நன்கறியப்பட்ட ஆளுமைகளாவர்.

இந்தாண்டு, ICFI, ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அது இந்தாண்டு முழுவதும், ரஷ்ய புரட்சியில் இந்த வாரம் என்ற தலைப்பில் காலவரிசைப்படி வரலாற்று சம்பவங்களைப் பிரசுரித்து, அதில் ஒவ்வொரு முறையும் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிட்டு காட்டியுள்ளது. இக்கட்டுரை தொடர் வாசகர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது. சான்றாக, பேஸ்புக் புள்ளிவிபரங்களின்படி, இந்த வரலாற்று காலவரிசை சம்பவங்களுக்கான மே 29 - ஜூன் 4 காணொளி 21,000 க்கும் அதிகமான முறை அணுகப்பட்டுள்ளதுடன், இது ஆயிரக் கணக்கான வாசகர்களை WSWS க்கு இட்டு வந்துள்ளது.

மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே, அப்புரட்சியின் வரலாறு மீது ICFI நடத்திய தொடர்ச்சியான இணையவழி சொற்பொழிவுகளில், லியோன் ட்ரொட்ஸ்கி வகித்த பாத்திரம் ஒருங்குவிப்பில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. இந்த சொற்பொழிவுகள் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் பெரும் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. பேஸ்புக் புள்ளிவிபரங்களின்படி, மார்ச் 13 அன்று டேவிட் நோர்த் வழங்கிய முதல் சொற்பொழிவு 6,300 முறை பார்க்கப்பட்டுள்ளது. ICFI இன் தொடர் சொற்பொழிவுகளுக்கு முன்னுரை வழங்கியிருந்த நோர்த்தின், மார்ச் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு காணொளி, 120,000 க்கும் அதிகமான முறைகள் பார்க்கப்பட்டுள்ளன.

நாம் இந்த புள்ளிவிபரங்களையும் —இன்னும் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய பலவற்றையும்— பெருமைப்பீற்றுவதற்காக மேற்கோளிடவில்லை, மாறாக, உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ICFI இன் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் மிகப் பரவலாக பின்தொடரப்பட்டு வருகின்றன என்பதை நிறுவிக் காட்டவே மேற்கோளிடுகிறோம். அரசியல் அறிவார்ந்த வாசகர்களுக்கு, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் என்பது ஒரே பொருளைக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறிருக்கையில், கூகுள் அதன் புதிய தணிக்கை அல்காரிதம்களை நடைமுறைப்படுத்திய பின்னர், ட்ரொட்ஸ்கி குறித்த தகவல்களைப் பயனர்கள் தேட முனைந்தாலும் கூட, அந்த தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தளம் காணாமல் போக தொடங்கியது.

ஜூலை மாதத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி" குறித்த கூகுள் தேடல் முடிவு… மே மாதம் கிடைத்த WSWS இன் 5,893 பக்கங்களில் இருந்து குறைந்து, மொத்தம் WSWS இன் பூஜ்ஜிய வலைப் பக்கங்களைக் கொண்டு வந்தது.

இக்கட்டுரையைத் தயார் செய்கையில், “லியோன் ட்ரொட்ஸ்கி யார்?” (Who is Leon Trotsky) என்று கூகுளில் தேடினோம். கூகுளின் குரோம் (Chrome browser) உலாவியைக் கொண்டு, முந்தைய தேடல்கள் எதுவும் இந்த தேடல் முடிவுகளைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, “incognito mode” ஐ பயன்படுத்தி இந்த ஆய்வைச் செய்தோம். இந்த வார்த்தை, மேற்கோள் குறியீடுகள் இல்லாமல் தேடப்பட்டது.

எல்லா விதமான வலதுசாரி கட்டுரைகளும் விபரங்களும் வருகின்றன. ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்படும், rbth.com (Russia Beyond the Headlines - தலைப்புகளைக் கடந்து ரஷ்யா) பிரசுரித்த, "லியோன் ட்ரொட்ஸ்கி: அவமதிப்பான ரஷ்ய புரட்சியாளரைக் குறித்த 6 உண்மைகள்" எனும் ஒரு கட்டுரை முதல் பக்கத்திலேயே உள்ளடங்கி உள்ளது.

மூன்றாம் பக்கத்தில், அங்கே லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து … ஏப்ரல் 2014 இல் ஆஸ்திரேலியா பண்ணையில் மீட்கப்பட்ட ஒரு பன்றிக்குட்டி (piglet) என்பதாக Edgar’s Mission Farm Sanctuary இன் ஒரு பதிவு உள்ளது, இது, “அவரை விட பத்து மடங்கு அளவில் மிகப் பெரும் துணிச்சலைக் கொண்டிருந்ததாக" நமக்கு கூறப்படுகிறது. (புரட்சியாளர்) “லியோன் ட்ரொட்ஸ்கியை முன்மாதிரியாக கொள்ளாதீர்கள்" என்று வாசகர்களுக்கு எச்சரிக்கையூட்டும், 2007 இல் Slate இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையும் மற்றும் வலதுசாரி Conservapedia இன் விபரங்களும் அங்கே உள்ளன.

நான்காம் பக்கத்தில், Quizlet இன் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்த குறிப்பு துணுக்குகளும், TVTropes.com இன் குறிப்புகளும், மற்றும் "நிரந்தர கன்னைவாதம் (factionalism) குறித்த அவர் மெய்யியலும், வித்தியாசமான புரட்சிகர இயங்கியலும்" தான் ட்ரொட்ஸ்கியின் தலைசிறந்த மரபியம் என்று நையாண்டி Uncyclopedia அதன் வாசகர்களுக்கு கூறும் பிற்போக்குத்தனமான மற்றும் அர்த்தமற்ற செய்திகளும் உள்ளன.

இன்னும் ஆழமாக சென்றால், ஆறாம் பக்கத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி GIF களை (இயங்கும் புகைப்படங்கள்)” கொண்ட பக்கங்களும் மற்றும் ஒரு முக்கியத்துவமற்ற தளமான, அலெக்சா தகவல்களின்படி, (உலகளாவிய தரவரிசை பட்டியலில் 40,677 இடத்தில் உள்ள WSWS உடன் ஒப்பிடுகையில்) தரவரிசையில் 1,078,957 இடத்தில் உள்ள லிசாவின் வரலாற்று அறை (Lisa’s History Room) என்பதிலிருந்து "Frida’s Red Hot Lover” எனும் ஒரு கட்டுரையும் காணக் கிடைக்கிறது. ஆறாம் பக்கத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவர் எழுதி, Prezi.com இல் பிரசுரித்த ட்ரொட்ஸ்கி குறித்த ஒரு கட்டுரையும் மற்றும் ஓர்வெல்லின் விலங்கு பண்ணை (Animal Farm) நூலும் உள்ளன.

பத்தாம் பக்கத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி" என்றழைக்கப்படும் ஒரு மதுக்கலவைக்கான (cocktail) தயாரிப்பு குறிப்புகளையும், “லியோன் ட்ரொட்ஸ்கி" என்ற பாடல் வரிகளைக் கொண்ட lyrics.com இன் ஒரு பக்கத்தையும் நாம் எதிர்கொள்கிறோம். பக்கம் 12 இல், “ட்ரொட்ஸ்கி ஒரு யூதர்" என்ற தலைப்பில் 2011 இல் Tablet இல் பிரசுரிக்கப்பட்ட, வரலாற்றாளர் Joshua Rubenstein இன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு மீதான பிற்போக்கு வரலாற்றாளர் ரிச்சார்ட் பைப்ஸின் ஒரு மீளாய்வு உள்ளது, இது, ரூபென்ஸ்டீன் "ரஷ்ய புரட்சியின் தீவிர வன்முறைகளை மறைத்துவிட்டார்" என்று குறைகூறுகிறது. அங்கே "லியோன் ட்ரொட்ஸ்கி, NKVD இன் ஏமாளி" என்ற சிஐஏ வலைத் தளத்திலிருந்தும் ஓர் ஆவணம் உள்ளது.

பக்கம் 13 இல் உள்ள ட்ரொட்ஸ்கியின் கட்டுரையான “ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துருக்கள்" மறுபிரசுரம் வரையில், அங்கே WSWS இன் எந்த பக்கமும் இல்லை. கூகுளில் தேடும் பெரும்பான்மையினர், இந்த குப்பைகளால் மிகைசுமையேறி, நிச்சயமாக இந்த இடத்திற்கு முன்னரே, தேடலை நிறுத்தி இருப்பார்கள்.

ஏப்ரலில், கூகுள் "போலி செய்திகளை" இலக்கில் வைத்து அதன் புதிய கொள்கைகளை அறிவித்த போது, “கிடைக்கும் மிகவும் நம்பகமான ஆதாரவளங்களில் இருந்து மக்களை உரிய தகவல்களை அணுக செய்வதும்" மற்றும் "மிகவும் அதிகாரபூர்வ பக்கங்களை மேலே கொண்டு வர உதவுவதுடன், தரங்குறைந்த விபரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதும்" அதன் நோக்கமென்று கூறியிருந்தது.

கூகுள்-மொழியில், “அதிகாரபூர்வ" என்பது "அதிகாரிகளுக்கு ஏற்புடைய" என்ற அர்த்தமாக உள்ளது. அந்த தேடுபொறியில் நமது சொந்த ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுவதைப் போல, “லியோன் ட்ரொட்ஸ்கி" என்று கூகுளில் தேடினால் அது பிற்போக்குத்தனமான, கம்யூனிஸ்ட்-விரோத, யூத-விரோத, அவமரியாதையான மற்றும் அர்த்தமற்ற பல பக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட "அதிகாரபூர்வ" தளமும் மற்றும் இணையத்தில் உள்ள வேறெதையும் விட பொருத்தமான கட்டுரைகளையும் கொண்ட ஒரு தளமான உலக சோசலிச வலைத் தளத்தை அதில் காணவே முடியவில்லை.

கூகுளின் புதிய "வழிகாட்டி நெறிமுறைகள்", WSWS ஐ இருட்டடிப்பு செய்ய மற்றும் தேடல் முடிவுகளில் பின்னுக்குத் தள்ள நோக்கம் கொண்டுள்ளது என்று தான் இந்த உண்மையை விளங்கப்படுத்த முடியும். இது எந்த உள்நோக்கமும் இன்றி வெறுமனே தொழில்நுட்ப பிழையின் விளைவு என்று அப்பாவிகள் வேண்டுமானால் நம்பட்டும்.

கூகுள் தணிக்கைக்கு எதிராக போராட இணையுங்கள். இதில் இணைந்து செயல்பட ICFI ஐ தொடர்பு கொள்ளுங்கள். பேச்சு சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிராக போராட எங்களுக்கு உதவுவதற்கு, WSWS க்கு நிதியுதவி செய்யுங்கள்.