ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron announces cuts to French social programs

மக்ரோன் பிரெஞ்சு சமூக திட்டங்களில் வெட்டுக்களை அறிவிக்கிறார்

By Francis Dubois
7 September 2017

ஆகஸ்ட் 31 அன்று அரசாங்கம் தொழில் விதிமுறைகளை அழிப்பதற்கான அதன் உத்தரவாணைகளை முன்வைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் "பிரெஞ்சு சமூக மாதிரியின்" எஞ்சியவற்றுடனும் அவர் முழுமையாக முறித்து கொள்வதையிட்டு தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை அறிவித்தார். சமூக நலன்புரித்திட்ட முறைகளை "நவீனப்படுத்துகிறோம்" என்ற சாக்குபோக்கின் கீழ், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம், 20 ஆம் நூற்றாண்டு போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சகல சமூக உரிமைகளையும் அழிக்க களம் அமைத்து வருகிறது.

இந்நடவடிக்கைகள் "சீரமைப்புகள்" என்பதாக முன்வைக்கப்பட்டன, ஆனால் உண்மையில் இவை முக்கிய சமூக காப்பீடுகள் மற்றும் உதவித்திட்டங்களை அவற்றின் நடப்பு வடிவில் இருந்து கரைத்துவிட நோக்கம் கொண்டுள்ளன. “இது வெறும் தொடக்கம் தான்,” என எட்வார்ட் பிலிப் தொழில் விதிமுறை உத்தரவாணைகளை வெளியிட்ட போது தெரிவித்திருந்தார்.

அதன் உத்தரவாணைகளுக்கு தொழிற்சங்கங்களது ஆதரவால் ஊக்குவிக்கப்பட்டு, அதேவேளையில் நாளாந்தம் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பாலும் நெருக்கப்பட்டு, இந்த அரசாங்கம் ஓய்வூதியங்கள் மீது கைவைப்பதற்கு முன்னதாக, வேலைவாய்ப்பின்மை காப்பீடு, தொழில்சார் பயிற்சிகள், வீட்டுவசதி மானியங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு என இவற்றை தாக்க விரும்புகிறது. இந்த பட்டியல் இவ்வளவுடன் முடிந்துவிடவில்லை; பிரெஞ்சு முதலாளிமார்களின் அமைப்பான மெடெஃப் (Medef) குறைந்தபட்ச கூலியை (SMIC) அது தகர்க்க விரும்புவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது. தொழில் விதிமுறைக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அதே அணுகுமுறையே இதிலும் நீடிக்கிறது: அதாவது, சிக்கன நடவடிக்கையை திணிக்க தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக செயல்படுவது.

தொழிலாளர்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது என்ற போலிக்காரணத்தை முன்வைத்து, அரசாங்கம் வேலைவாய்ப்பின்மைக்கான உதவிகளை இல்லாதொழித்து விட்டு, முதலாளிகளினது பங்களிப்பு இல்லாது, மக்களால் செலுத்தப்படும் பிரத்யேக வரியில் சிறிய உயர்வைக் கொண்டு அவற்றை பிரதியீடு செய்ய விரும்புகிறது. இறுதி இலக்கு, வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு உதவியை நீக்குவதும், முதலாளிமார்களுக்கு எந்தவொரு நிதியியல் கடமைப்பாடுகளில் இருந்து விலக்களிப்பதுமாகும்.

வேலைவாய்ப்பின்மை மீது "பெரிதும்" கண்டும் காணாது இருக்க அரசாங்கம் சூளுரைத்து வருகிறது. அவர்கள் வேலையை நிராகரித்தால் அவர்களின் உதவித்தொகைகளை இழப்பார்கள், மேலும் அதிகரித்தளவில் பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த சம்பள வேலைகளை அவர்கள் ஏற்க வேண்டியிருக்கும்.

சமூக உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் மற்றும் பரந்த பெருந்திரளான "உழைக்கும் ஏழை" வெகுஜனங்களை உருவாக்கும் நோக்கில், ஜேர்மனியில் ஹார்ட்ஸ் சட்டங்களைப் போல, இதுவும் ஒரு குறைவூதிய துறையை உருவாக்கும் ஒரு வழியாகும்.

Marianne இதழின் தகவல்படி, இந்த முன்மாதிரியானது “[மார்கரெட் தாட்சரின் கீழ் அமைக்கப்பட்ட] இங்கிலீஷ் முறை மற்றும் அதன் 'வேலை மையங்களை' நினைவூட்டுகிறது. அதில் சம்பள அளவு, கல்வித்தகுதி அல்லது வேலை செய்வதற்கான பிரதேசம் என வேலைவாய்ப்பற்றவர்களுக்கு என்ன பரிந்துரைக்கப்படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பிருக்காது, இல்லையென்றால் அவர் உதவித்தொகைகளை உடனடியாக இழக்கும் அபாயத்தில் வைக்கப்பட்டிருப்பார்.”

தொழில்சார் பயிற்சியும் அவ்விதமே கையாளப்படவிருக்கிறது. தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் இடையிலான இணைந்து நிதியளித்தலும் பிரதியீடு செய்யப்பட்டு, ஆதாரவளங்களை இலாபத்திற்கான ஊற்றுமூலமாக ஆக்குவதை இலக்காகக் கொண்டு அவை நேரடியாக அரசுக்கட்டுப்பாட்டில் கட்டாயம் வைக்கப்படும். Le Monde இன் தகவல்படி, ஒரு ஆணைக்குழு "தொழில்சார் பயிற்சி நிதியில் செய்யப்பட்ட முதலீடு திரும்பி வருவதை" உறுதிப்படுத்தும்.

வேலைவாய்ப்பற்றோரை திரும்ப வேலைகளுக்குள் கொண்டு வருகிறோம் என்ற பாசாங்குத்தனத்தின் கீழ், அரசாங்கம், கண்ணியமான வேலைகளுக்கான நிலையான விரிவார்ந்த பயிற்சிகளை நீக்கிவிட்டு, பல்வேறு தொழில்துறைகளில் நிலவும் பாதுகாப்பற்ற வேலைகள் மற்றும் முதலாளிமார்களின் உடனடி தேவைகளை சார்ந்திருப்பதிலிருந்து எடுக்கப்பட்ட, நிரந்தரமான "துணுக்கு" பயிற்சிகளைக் கொண்டு அதை பிரதியீடு செய்ய நோக்கம் கொண்டுள்ளது.

அதேபோல, அரசாங்கம் 2018 இன் தொடக்கத்திலிருந்து ஓய்வூதியங்களைக் குறித்து "மறுயோசனை" செய்யவிருப்பதாகவும் அறிவித்தது. “எளிமைப்படுத்துகிறோம்" மற்றும் "ஜனநாயகமயப்படுத்துகிறோம்" என்ற போலி வேஷத்தில், அரசாங்கம் 37 ஓய்வூதிய திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க உள்ளது, அவ்விதத்தில் பிரெஞ்சு மக்கள் அனைவருக்கும், “அவர்களின் பதவி மற்றும் தொழில்வாழ்க்கை காலம் எதையும் கருத்தில் கொள்ளாமல்" பேரம்பேசப்பட்டதன் அடிப்படையில் ஒரேமாதிரியான ஓய்வூதியம் இருக்கும்.

அரசாங்கம் என்ன கருதுகிறது என்பதை மீண்டும் பிரிட்டனின் முன்மாதிரியே எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரேயளவில் குறைந்த ஓய்வூதியம் கிடைக்கும், அதிக ஓய்வூதியம் வேண்டுவோர், முதலீட்டு நிதியங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களது தனியார் ஓய்வூதியங்களில் இணைந்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

மருத்துவக் காப்பீட்டு முறையும் இலக்கில் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், பொருளாதார மற்றும் நிதித்துறை அமைச்சர் ப்ரூனோ லு மேர் (Bruno Le Maire), பல தனியார்மயமாக்கல்களை அறிவித்தார், இவை சமூக சேவைகளை இலாப உந்துதலுக்கு அர்பணிக்கும், அத்துடன் மக்கட்தொகை மீது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில், தண்ணீர் வினியோகம் அல்லது பொதுத்துறை போக்குவரத்து போன்ற முக்கிய சமூக அல்லது தொழில்துறைகளைத் தகர்த்து, அவற்றின் நெறிமுறைகளைத் தளர்த்தும்.

அரசாங்கம் அதன் திட்டங்களை வரையறுக்க தொழில்நுட்பரீதியிலான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், அதன் கொள்கை தெளிவாக வெளிப்படுகிறது: அது பெரும் செல்வந்தர்களின் ஆதாயத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் சகல சமூக தேட்டங்களையும் அழிக்கும் ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி உள்ளது. இக்கொள்கையை செல்வந்தர்களுக்கான வரி (Impôt sur la Fortune - ISF) சீர்திருத்தம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இத்திட்டம் "செல்வந்தர்கள் மீதான வரியிலிருந்து வரும் வருவாயில் முக்கால் பாகம் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசு, குறிப்பாக செல்வந்தர்களிலேயே மிகப் பெரும் செல்வந்தர்களுக்கு ஆதாயமாக இருக்கும்", என்று Le Monde குறிப்பிட்டது.

மக்ரோனின் கொள்கை அடிப்படையிலேயே சட்டவிரோதமானதும், ஜனநாயக விரோதமானதும் ஆகும். பிரெஞ்சு மக்களில் அண்மித்து மூன்றில் இரண்டு பங்கினர் தொழில் விதிமுறைகளுக்கு (Labor Code) எதிராக உள்ளனர் என்ற உண்மைக்கு இடையிலும், அவர் மெடெஃப் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தொழில் வழிமுறைகளை அழிக்க திட்டமிட்டதுடன், அதை திணித்தார், இதற்கு நாடாளுமன்றத்தினூடாக செல்லாத உத்தரவாணைகளுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.

இந்த சமூக சீரழிவு கொள்கையை திணிக்க, நிதியியல் தன்னலக் குழு மக்களை நிரந்தரமாக மற்றும் பொதுவாக ஒடுக்குவதற்குத் திட்டமிட்டு வருகிறது. இதனால் தான் ஒரு புதிய "பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்காக", அதாவது அவசரகால நிலையின் முக்கிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பொதுவான சட்டமாக மாற்றுவதற்காக, செப்டம்பர் 25 இல் "இரண்டாவது அவசர நாடாளுமன்ற கூட்டம்", அரசாங்கத்தின் மற்றொரு முன்னுரிமையாக உள்ளது.

பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதும் மற்றும் மக்ரோனால் அவர் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் நீடிக்கப்பட்டதுமான அவசரகால நிலை, பிரதானமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டதாகும். அதன் நோக்கம் ஜூலை 2016 இல் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிய போது முழுமையாக எடுத்துக்காட்டப்பட்டது. நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்கு எதிரான இரத்தம் சிந்திய போராட்டங்கள் உட்பட நீண்டகால போராட்டங்களில் வெற்றி கொள்ளப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உரிமைகளும், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுமே அவசரகால நிலையின் பிரதான இலக்குகளாக உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களானது, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக மேற்கத்திய உளவுத்துறை முகமைகளால் அவற்றின் போர்களில் அணிதிரட்டப்பட்ட இஸ்லாமிய போராளிகளின் வலையமைப்பால் நடத்தப்பட்டுள்ளன என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பயங்கரவாதிகள் உளவுத்துறை சேவைகளின் பாதுகாப்புடன் பயணித்திருந்தனர், அவர்களை அவை முக்கிய வெளியுறவு கொள்கை கருவிகளாக பார்த்தன. ஏனைய விடயங்களோடு சேர்ந்து, மார்ச் 2016 புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்களை எங்கே பிடிக்கலாம் என்பதும் பெல்ஜிய அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதிய தன்னலக் குழுக்களின் நலன்களை ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்வதைப் போலவே, மக்ரோன் தொழிலாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கட்டளைகளை திணிக்க விரும்புகிறார். கோஷங்கள் ஒரேமாதிரி இருப்பது தற்செயலானதல்ல. "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்" என்று அங்கே ட்ரம்ப் பேசுகிறார், “பிரான்ஸ் திரும்பி வந்துள்ளது" அல்லது "பிரான்ஸை நாம் பலமானதாக ஆக்க வேண்டும்" என இங்கே மக்ரோன் அரசாங்கம் கூறுகிறது.