ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German parties move further to the right after AfD’s electoral success

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஜேர்மன் கட்சிகள் மேற்கொண்டும் வலதுக்கு நகர்கின்றன

By Johannes Stern
26 September 2017

ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் வளர்ச்சிக்கு சித்தாந்தரீதியிலும் அரசியல்ரீதியிலும் பொறுப்பான அதே கட்சிகள், அரசியல் சூழலை மேற்கொண்டும் வலதுக்கு நகர்த்துவதற்காக, ஞாயிறன்று நடந்த கூட்டாட்சி தேர்தல்களில் வலதுசாரி தீவிரவாதிகளின் வெற்றியைச் சாதகமாக்கி வருகின்றன. ஒரு மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுயுப்புவதையும் , சம்பளங்கள் மற்றும் சலுகை வெட்டுக்களையும் தொடங்குகின்ற, மற்றும் ஓர் பொலிஸ் அரசின் கட்டமைப்பை ஸ்தாபிக்கின்ற ஓர் அரசாங்கத்திற்கு அவை பாதை அமைத்து வருகின்றன.

அகதிகளை இன்னும் ஆக்ரோஷமாக ஒடுக்குமாறு, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) பெண் தலைவரும் ஜேர்மன் சான்சிலருமான அங்கேலா மேர்க்கெலுக்கு நீண்டகாலமாக அழைப்புவிடுத்து வரும் அக்கட்சியினுள் உள்ள சக்திகள் தாக்குதலின் முன்னணிக்கு வருகின்றன. “நமக்கு அவசரமாக CDU க்குள் கூடுதல் பரந்த வேலைத்திட்டம் அவசியப்படுகிறது,” என்று ஜேர்மன் நாடாளுமன்ற (Bundestag) அங்கத்தவரும் நிதித்துறை நிபுணருமான கிளவுஸ்-பீட்டர் வில்ஸ்ச் தெரிவித்தார். “நமது வலதுசாரி பிரிவினரை இணைக்கவேண்டியுள்ளது. மக்களின் கட்சியாக இருப்பதற்கான ஆதரவு மட்டத்தை நாம் மீண்டுமொருமுறை எட்டுவதற்கு அது மட்டுமே ஒரே வழி,” என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே அகதிகளின் அதிகபட்ச வரம்புக்கான கோரிக்கையை உயர்த்திய, CDU இன் சகோதர அமைப்பு பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), அதன் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச் சரிவுக்கு, பெரிதும் AfD இன் வேலைத்திட்டத்தை ஏற்றதன் மூலமாக விடையிறுத்தது. வலதிலிருந்து அதிகரித்த அழுத்தத்தின் கீழ் உள்ள CSU தலைவர் ஹோர்ஸ்ட் சீகோஃவர் கூறுகையில், CDU/CSU “அவற்றின் வலதுசாரி பக்கத்தை கவனத்தில் கொள்ளாததாலேயே" AfD க்கு வாக்குகள் அதிகரித்ததாக கூறினார். அக்கட்சி இப்போது இதை சரி செய்து, ஒரு "தெளிவான நிலைப்பாட்டை" ஏற்கவிருக்கிறது. போக்குவரத்துத்துறை அமைச்சர் Alexander Dobrindt, “எங்களின் வலதுசாரி பக்கத்தை மூடிவைக்க வேண்டியிருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்,” என்று கூறி ஒத்து ஊதினார்.

CDU/CSU மற்றும் நவ-தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) உடன் "ஜமைக்கா" ஆளும் கூட்டணி என்றழைக்கப்படுவதற்குள் நுழைய தயாராகி வரும் பசுமை கட்சியினர், அதே திசையில் முன்நகர்ந்து வருகின்றனர். சீகோஃபரின் அறிக்கை குறித்து வினவியபோது Deutschlandfunk க்கு பசுமை கட்சி அரசியல்வாதி போரீஸ் பால்மர் கூறுகையில், “CSU இன் நிலைப்பாட்டிலிருந்து, அவர் சரியாகவே உள்ளார். அவர்கள் விரைவிலேயே ஒரு மாநில தேர்தலைச் சந்திக்க உள்ளார்கள், அதில் AfD மீண்டும் 12 சதவீதம் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை,” என்றார்.

அவரது கட்சி CSU இன் ஒடுக்குமுறை அகதிகள் கொள்கையை ஆதரிக்க தயாராக உள்ளது என்பதில் Tübingen இன் அந்த பசுமை கட்சி நகர முதல்வர் எந்த சந்தேகமும் விட்டுவைக்கவில்லை. “அகதிகள் பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்போமென மக்கள் எங்களை நம்புகிறார்கள்,” என்று பால்மர் தெரிவித்தார். “அகதிகளுடன் சேர்ந்து பிரச்சினைகளை எங்களால் தீர்க்க முடியுமா என்பதில் தான் அவர்கள் நிச்சயமாக இல்லை. அதில் நாங்கள் கடுமையாக இருக்க வேண்டியுள்ளது. CSU வழங்கும் தீர்வுகளுடன் நாங்கள் அனேகமாக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கலாம். அது இல்லையென்றால், அங்கே அரசாங்கமே இருக்காது,” என்றார்.

“நாம் அனைவரையும் ஏற்க முடியாது" என்று தலைப்பிட்ட ஒரு நூலை சமீபத்தில் பிரசுரித்திருந்த பால்மர், அவரது இன்றியமையா அதிவலது அகதி கொள்கை கட்சிக்குள் பரந்த ஆதரவை பெற்றிருப்பதாக பெருமைபீற்றினார். அவர் கூறுகையில், “கட்சி அடித்தளத்திலிருந்தும், நகரசபை அரசியல்வாதிகளின் அடித்தளத்தில் இருந்தும், மில்லியன் கணக்கான அகதிகள் ஜேர்மனிக்கு வருகையில் எழும் பிரச்சினைகளை மக்கள் சிரமத்துடன் அனுபவித்து வரும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்,” இவ்விடயத்தில் அவரது தீவிர-வேலைத்திட்ட நிலைப்பாட்டிற்காக பெரும் ஆதரவுக்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

பசுமைக் கட்சியினரைப் போலவே, தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகளது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இடது கட்சியும், AfD வளர்ச்சியில் இன்றியமையாதரீதியில் இழிவார்ந்த பாத்திரம் வகித்து வருகின்றன. முன்னாள் கிழக்கு ஜேர்மனி மாநிலங்களில் அரசாங்கம் அமைத்துள்ள ஒரு கட்சியாக, இடது கட்சியானது, தொழிலாளர்களை AfD இன் கரங்களுக்குள் தள்ளிய சமூக சீரழிவை உருவாக்கியதில் முக்கிய பொறுப்பாகிறது. 1990 இல், கிழக்கு ஜேர்மனிக்குள் முதலாளித்துவத்தின் மறுஅறிமுகத்தை ஆதரித்த அக்கட்சி அப்போதிருந்து இடது வாய்சவடால்களின் மூடிமறைப்பின் கீழ் வலதுசாரி முதலாளித்துவ-சார்பு கொள்கைகளைப் பின்பற்றியுள்ளது. இது ஏற்படுத்திய அரசியல் விரக்தியை தான், இப்போது வலதுசாரி வனப்புரையாளர்கள் சாதகமாக்கி வருகிறார்கள்.

சமூக மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், இடது கட்சி முன்பினும் அதிகளவில் பகிரங்கமாக அதிவலதின் வேலைத்திட்டத்தை ஏற்று வருகிறது. கடந்த தொலைக்காட்சி விவாதத்தின் போது இடது கட்சி முன்னணி வேட்பாளர் சாரா வாகன்கினெக்ட் ஐ ஜேர்மனிக்கான மாற்றீடு இன் துணை தலைவர் அலெக்சாண்டர் கவுலாண்ட் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “திருமதி. வாகன்கினெக்ட் என்ன கூறினாரோ, அது சரியே,” என்று கவுலாண்ட் தெரிவித்தார். “மக்கள் தாம் இதுவரை உழைத்த அனைத்தையும் அகதிகள் கொள்கையின் காரணமாக இழந்து வருவதாக உணர்கிறார்கள், சிலவேளைகளில் இது கோபத்தை உண்டாக்குகிறது,” என்றார்.

இந்த கருத்துரை, அரசாங்கத்தின் அகதிகள் கொள்கையை வாகன்கினெக்ட் வலதிலிருந்து தாக்கிய பின்னர் வந்தது, அவர், “அகதிகள் பிரச்சினையின் ஆரம்ப கட்டத்தில் நாம் சில விடயங்களை மிகவும் சுலபமாக்கிவிட்டோம், அப்பிரச்சினைகள் குறித்து பேசாமல் விட்டுவிட்டோம்,” என்றவர் கூறியிருந்தார்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அதன் மிக மோசமான வாக்குகளைப் பெற்று தேர்தல் தோல்வியைத் தழுவிய சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தன்னை AfD க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சியாக அர்த்தமற்ற விதத்தில் முன்நிறுத்த முயன்றது. AfD “ஒரு வெறுப்புக்குரிய அமைப்பு", “ஜேர்மனியின் அவமானம்,” என்று SPD இன் தலைமை வேட்பாளர் மார்ட்டின் சூல்ஸ் தெரிவித்தார். பேர்லினில் SPD இன் இறுதிதேர்தல் கூட்டத்தில், அவர் குறிப்பிடுகையில், “நாங்கள் உங்கள் பாதையில் குறுக்காக நிற்கின்றோம்” என்றார்.

எவ்வாறிருப்பினும், அதிக பொலிசுக்கும், ஒரு மிகப்பெரிய இராணுவத்திற்கும், அகதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கும் இடைவிடாது அழைப்புவிடுத்த சூல்ஸ், தேர்தல் பிரச்சாரத்தின்போது வலதுசாரி தீவிரவாதிகளின் வேலைத்திட்ட நோக்குநிலையை கொண்டிருந்தார். சமூக ஜனநாயகக் கட்சி AfD க்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்ட முனையவில்லை, அதற்கு பதிலாக அதை மௌனமாக்கி ஒடுக்க முனைந்தது.

இந்த உள்ளடக்கத்தில் தான், ஜூலையில் ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி ஹம்பேர்க்கில் நடந்த சம்பவங்களுக்கு SPD இன் எதிர்வினையை ஓர் எச்சரிக்கையாக எடுக்க வேண்டியுள்ளது. முதலில், ஹம்பேர்க்கின் ஆளும் கட்சியாக அது அமைதியாக நடந்த அதிகளவு போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை பொலிஸ் ஒடுக்குமுறையை ஏவியது. பின்னர், அக்கட்சி AfD ஐ சுற்றி இருந்தவர்களுக்கு வெளிப்படையாக முறையிட்டு, இடதுக்கு எதிரான ஒரு வேட்டையை நடத்தியது.

சமூக ஜனநாயக கட்சி நீதித்துறை அமைச்சர் ஹைய்கோ மாஸ், தீவிர இடது குறித்த ஐரோப்பிய தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களஞ்சியத்தை உருவாக்க கோரியதுடன், “இடதுகளுக்கு எதிரான ராக்" (rock against the left) இசை நிகழ்ச்சிக்கும் அவர் ஆதரவை அறிவித்தார். SPD கட்சியின் அந்த நிர்வாகி சமூக வெட்டுக்கள் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான எல்லா இடதுசாரி எதிர்ப்பையும் குற்றகரமாக்குவதற்கு "பயங்கரவாதத்தை எதிர்க்கும்" கருத்துருவை முன்வைத்தார்.

பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வலதுசாரி தீவிரவாத பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி உடனான மோதலில் SPD இதே பாத்திரம் வகித்தது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei - SGP), அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), அகதிகளுக்கு எதிராக பார்பெரோவ்ஸ்கி கிளர்ந்தெழுந்ததையும் மற்றும் நாஜி குற்றங்களை அவர் குறைத்துக் காட்டியதையும் விமர்சித்தபோது, SPD பார்பெரோவ்ஸ்கியை ஆதரித்தது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் SPD தலைவர் சபின குன்ஸ்ட், அந்த வலதுசாரி பேராசிரியரை விமர்சிப்பவர்களைக் குற்ற வழக்கு கொண்டு அச்சுறுத்தும் ஓர் அறிக்கை வெளியிடும் அளவுக்குச் சென்றார்.

ஆரம்பத்திலிருந்தே பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத நிலைபாடுகளைப் பகிரங்கமாக விமர்சித்து அவற்றின் விளைவுகளைக் குறித்து எச்சரித்த ஒரே கட்சி ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும், AfD நாடாளுமன்றத்திற்குள் நுழைவதும் மற்றும் ஸ்தாபக கட்சிகள் அனைத்தும் கூடுதலாக வலதுக்குத் திரும்புவதும் இப்போதும் அக்கருத்துக்களை தெளிவாக்கி கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதே இப்போதைய அவசர பணியாகும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது மட்டுமே போர் மற்றும் பாசிச அபாயங்களை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி என்பதையே, ஜேர்மனியின் அனைத்து இடங்களிலும், மூன்றாம் குடியரசின் கொடூரமான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.