ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After German elections, France’s Macron proposes European deal to Berlin

ஜேர்மன் தேர்தல்களின் பின்னர், பிரான்சின் மக்ரோன் ஐரோப்பிய ஒப்பந்த ஆலோசனையை பேர்லின் முன்வைக்கிறார்

By Alex Lantier
28 September 2017

செவ்வாயன்று மாலை, பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாரிஸில் சோர்போன் பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் பேசுகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரது ஆலோசனைகள் குறித்துப் பேசினார். அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பதட்டங்கள் பெருகி வருவதன் மத்தியில், ஐரோப்பிய இராணுவ சக்தியையும் உளவு முகமைகளையும் அதிகரிப்பதற்கு அழைப்பு விடுத்த அவர், அத்துடன் புதிய வங்கிப் பிணையெடுப்புகளுக்கும், உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள், மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோதக் கொள்கைகளுக்கு தயாரிப்புகளை செய்வதற்கும் அழைப்பு விடுத்தார்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மக்ரோன், சென்ற ஞாயிறன்று ஜேர்மன் பொதுத் தேர்தல்கள் முடிகின்ற வரையில், இந்த அதிமுக்கிய பிரச்சினைகள் குறித்த தனது முதல் உரையை தள்ளிப் போட்டு வந்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவுடனும் சீனாவுடனும் போட்டியிடுகின்றதான ஒரு இராணுவவாதக் கூட்டணியாக அபிவிருத்தி செய்வதற்கான மக்ரோனின் ஆலோசனைகள் ஜேர்மனியுடனான நெருக்கமான ஒத்துழைப்பையும் உடன்பாட்டையும் கோருகின்றன என்பதாகவே பரவலாய் புரிந்து கொள்ளப்படுகிறது.

நிகழ்வில், பிரெஞ்சு ஜனாதிபதியின் உரை ஞாயிறன்று வந்த ஜேர்மன் தேர்தல் முடிவின் காரணத்தால் மங்கிப் போயிருந்தது, மக்ரோனது திட்டங்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்கு குரோதமான கட்சிகளை இத்தேர்தல் வலுப்படுத்தியிருந்தது. இது தவிர, ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கும் (CDU) சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (SPD) இடையிலான வெளிச்செல்கின்ற பெரும் கூட்டணிக்கு கிடைத்த பின்னடைவானது மக்ரோனின் இலட்சியங்களுக்கு ஒரு பலத்த அடி கொடுத்துள்ளது என்பது தெளிவு. பெரும் கூட்டணிக்கு அடுத்த சாத்தியமான கூட்டணியாக இப்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் CDU-பசுமைக் கட்சி-சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) இடையிலான ஒரு கூட்டணி பிரெஞ்சு ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு இன்னும் அதிகமான குரோதம் கொண்டிருக்கும் என்றே பிரான்சின் வருணனையாளர்கள் அனுமானிக்கின்றனர்.

செவ்வாயன்று மக்ரோன் அவரது கருத்துக்களைத் தெரிவிக்கும் முன்பாக, FDP இன் தலைவரான கிறிஸ்டியான் லிண்ட்னர் மக்ரோனின் திட்டங்களை தாக்கியிருந்தார், “ஜேர்மன் பணத்தை யூரோ மண்டலத்தின் மற்ற உறுப்பு நாடுகளுக்கு கொண்டுசெல்வதற்கான ஒரு குழாய் பாதையை” உருவாக்க எவரொருவரையும் FDP அனுமதிக்காது என்று அவர் எச்சரித்தார். எவ்வாறாயினும், தகுந்த ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சிநிரல்கள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாட வெளிப்படையாக இருப்பதாக தெரிவித்தார்.

சோர்போனில், தேர்தலில் CDU முன்னிலை பெற்றதற்காக மேர்க்கெலுக்கு வாழ்த்துக் கூறிய மக்ரோன், ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்வதற்கும் சத்தமில்லாமல் அழுத்தமளித்தார்: “வெறுப்புமிக்க மற்றும் தேசியவாதக் குரல்களும் ஏராளமான பல வாக்குகள் பெற்றிருப்பதில் அவர் எவ்வளவு மனம் வருந்தியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அதற்காகப் பின்வாங்குவதோ அல்லது கோழையாவதோ அவரது எதிர்வினையாக இருக்காது என்பதும் எனக்குத் தெரியும்.” புதிய ஐரோப்பிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஒரு “தீர்மானகரமான மற்றும் உறுதியான பிரான்ஸ்-ஜேர்மன் உத்வேக”த்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“சீனா மற்றும் அமெரிக்காவுக்குப் போட்டியாக ஐரோப்பிய ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்கும், இன்றைய இளைஞர்களது ஒரு தலைமுறை நமது பிரச்சினைகளாலும் நமது சமநிலையின்மைகளாலும் வேலைவாய்ப்பற்ற நிலைக்கு சபிக்கப்பட்டு விடாத வகையில், பத்தாண்டுகளாக நாம் செய்யத் தவறியிருந்த வேலைகளை உருவாக்குவது என்பதை எவ்வாறு செய்வது” என்பதற்குமான ஒரு முக்கியமான விடயமாக தனது சொந்த தொழிலாளர் உத்தரவாணைகளையும் கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டநிரலையும் மக்ரோன் பாராட்டிக் கொண்டார். “நாங்கள் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம், எங்களது நாட்டை நாங்கள் உருமாற்றிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அதை நாங்கள் ஒரு ஐரோப்பிய இலட்சியத்துடனேயே செய்கிறோம். என்னிடம் சிகப்புக் கோடுகள் இல்லை, அரசியல் தொடுஎல்லைகள் மட்டுமே இருக்கின்றன.”

ஐரோப்பிய இராணுவம் மற்றும் உளவு சேவைகளின் ஒரு மிகப்பெரிய மற்றும் செலவுமிக்கதொரு கட்டியெழுப்பலுக்கு அவர் ஆலோசனைவைத்தார். “ஒரு பொதுவான தலையீட்டுப் படை, ஒரு பொதுவான பாதுகாப்பு நிதிஒதுக்கீடு, மற்றும் ஒரு பொதுவான செயல்பாட்டு சித்தாந்தம்” ஐரோப்பாவுக்கு தேவைப்படுவதாய் தெரிவித்த அவர் பொதுவான “ஐரோப்பிய உளவு அகாடமி” ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கும் அழைப்புவிடுத்தார். அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கோள்கின்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னேறிய ஆய்வுத் திட்டங்கள் முகமை (DARPA) போன்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை ஐரோப்பா கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “நமது எல்லைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதை” அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான தஞ்சம் மற்றும் புலம்பெயர்வுக் கொள்கையை உருவாக்குவதற்கும் அவர் ஆலோசனையளித்தார்.

இறுதியாக, யூரோமண்டலத்தின் அத்தனை உறுப்பு நாடுகளது வரிகளினாலும் நிதியாதாரமளிக்கப்படுகின்றதான ஒரு பொதுவான யூரோ மண்டல நிதிநிலை ஒதுக்கீடு (a common euro zone budget), என்ற நீண்டகாலமாய் ஜேர்மனியிடம் பிரான்ஸ் முன்வைத்து வரும் ஒரு சர்ச்சையான கோரிக்கையையும் மக்ரோன் முன்வைத்தார். ஜேர்மனியின் நலன்களுக்கு விரோதமான தொழிற்துறை திட்டங்கள், இராணுவத் திட்டங்கள், அல்லது மற்ற திட்டங்களின் நிதியாதாரங்களுக்கு ஜேர்மனி நிதியளிக்கும்படி கோருவதற்கு பிரான்ஸ், கிரீஸ் அல்லது மற்ற யூரோ மண்டல அரசுகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற அச்சத்தால் ஜேர்மனி இத்தகைய ஆலோசனைகளை நீண்டகாலமாய் எதிர்த்து வந்திருக்கிறது.

பிரான்சில் சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கு பிரான்சின் தலைவர் வாக்குறுதியளித்தார், “ஆனால் பொதுவான விதிகளும் கருவிகளும் எங்களுக்கு அவசியமாக இருக்கிறது.” நிதி நெருக்கடிகளின் சமயத்தில் மற்ற யூரோ மண்டல நாடுகளின் வங்கி அமைப்புகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் கடனளிப்பை துண்டிக்கப் போவதாய் அச்சுறுத்துவதன் மூலம் யூரோமண்டலத்தில் தனது மேலாதிக்கத்தைத் திணிப்பது என்ற ஜேர்மனி நீண்டகாலமாய் பின்பற்றி வருகின்ற கொள்கையை ஓசையில்லாமல் சுட்டிக்காட்டிய மக்ரோன், ”வளர்ச்சி” திட்டங்களுக்கான பிரான்சின் கோரிக்கைகள் மீது மறுவலியுறுத்தம் செய்தார்.

மக்ரோன் கூறினார், “நமக்கு கூடுதல் முதலீடுகளும், பொருளாதார அதிர்ச்சிகளின் மத்தியில் நமது பொருளாதாரங்களை ஸ்திரப்படுத்துவதற்கான கூடுதலான வழிகளும் அவசியமாயுள்ளன. ஏனென்றால் ஒரு அரசு அது இனியும் தன் நிதிக் கொள்கையை அமைத்துக் கொள்ளாவிடில் இதற்குமேல் அதனால் ஒரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாது. ஆகவே, இந்த அத்தனை காரணங்களுக்காகவும், நமக்கு, ஐரோப்பாவின் இருதயத்தானத்தில், யூரோ மண்டலத்தின் இருதயத்தானத்தில் ஒரு வலிமையான வரவு-செலவு திட்டம் அவசியமாய் இருக்கிறது.”

மக்ரோனின் உரையும் ஜேர்மன் தேர்தல் முடிவுகளும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ட்ரம்ப் தேர்வானதினால் வெள்ளை மாளிகையில் ஒரு பாசிச அமெரிக்க ஜனாதிபதி அமர்த்தப்பட்டு விட்டதன் பின்னர், மேர்கெல் தலைமையிலான ஒரு ஐரோப்பிய ஒன்றியம் தான் இனி “சுதந்திர உலகத்தின்” புதிய தலைமையாக இருக்கும் என்பதான கூற்றுக்கள் முழுக்க முழுக்க கண்கட்டு வித்தையாகும். ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகளுக்கு தேர்தல் வாக்குகள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், யூரோமண்டல நாடுகள் கொஞ்சமாவது உடன்படும் விடயங்கள் என்றால் அது இராணுவ செலவினத்தில் பாரிய அதிகரிப்புகள் செய்வதிலும், உளவு எந்திரத்தை விரிவுபடுத்துவதிலும், ஊதியங்களை வெட்டுவதற்கும் தொழிலாளர்களை விருப்பம் போல எடுக்கவும் நீக்கவும் முதலாளிகளை அனுமதிப்பதற்குமான ஒருதரப்பான உத்தரவாணைகளிலும் தான்.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால்நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு, பால்கன்கள், ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் ஏகாதிபத்தியப் போர் அதிகரித்துச் சென்றதன் பின்னர், அமெரிக்கா-ஐரோப்பா இடையிலான அட்லாண்டிக்-கடந்த கூட்டணி உருக்குலைந்திருக்கிறது. சென்ற ஆண்டில் ட்ரம்ப் தேர்வானதும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்ததும் -அமெரிக்காவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கூட்டணி ஒன்றை கட்டுவதற்கு முக்கியமான உள்முகத் தடையாக இருந்த ஒன்றை இது அகற்றி விட்டது- இந்த உருக்குலைவை துரிதப்படுத்தின. ஆனால், 2008 பொறிவு மற்றும் அதனைத் தொடர்ந்த கிரேக்க கடன் நெருக்கடிக்குப் பின்னர் மேற்பரப்புக்கு வந்திருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான வேர்கொண்ட முரண்பாடுகள் அப்படியே தான் இருக்கின்றன, மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

மக்ரோனின் உரைக்கு கிட்டிய ஆரம்ப எதிர்வினைகள் சாதகமற்றதாக இருந்தன. வெளியுறவுக் கொள்கைக்கான ஜேர்மன் சமூகம் (DGAP) எனும் சிந்தனைக் குழாமைச் சேர்ந்த Claire Demesmay கூறுகையில், மேர்க்கெல், இதில் ஒரு உடன்பாட்டை முற்றிலுமாய் நிராகரித்து விடவில்லை என்றாலும், அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்றார். அவர் மேலும் கூறினார், “மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடுதலான ஒற்றுமையை விரும்புகிறார், ஐரோப்பிய இறையாண்மையே அவரது இலட்சியமாக இருக்கிறது. ... ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தலையீட்டுப் படை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தஞ்சநிர்வாக அமைப்பு, மற்றும் யூரோமண்டலத்தின் ஒரு வரவு-செலவு திட்டத்தை கொண்டு அவர் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார். அவை அருமையான விடயங்கள், அங்கேலா மேர்க்கெல் குறிப்பான ஆர்வம் கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை உறுதிசெய்கின்ற வகையில் பிரான்ஸ் வலிமையாக இருப்பது அவருக்கு தேவைப்படுகிறது.”

பிரான்சின் Les Echos நாளிதழ் நேற்று தனது தலையங்கத்தில், ஒரு பொது யூரோமண்டல வரவு-செலவு திட்டத்திற்கான ஆலோசனை “அதன் இப்போதைய வடிவத்தில் ஜேர்மனியை ஒத்துக்கொள்ள வைப்பது சந்தேகமே...ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு, எல்லாவற்றுக்கும் மேல், அங்கேலா மேர்கெலின் முகாமில் இருப்பவர்களுக்கு இது பெரிதும் எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கிறது.”

அமெரிக்காவுக்கு எதிரான ஒரு கூட்டாளியாக ஜேர்மனிக்கு பிரான்ஸ் அவசியமாக இருக்கிறது என்பதால் பிரெஞ்சு வங்கிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சலுகைகள் அது காட்டியாக வேண்டியிருக்கும் என்று மக்ரோன் கணக்கிடலாம். “ஜேர்மன் தலைவர்கள்” மக்ரோன் என்ன “ஆலோசனை”யளிக்கிறார் என்பது குறித்து தெளிவாக இருப்பது அவசியம் என்று Les Echos குறிப்பிட்டது. பேர்லினில் தேர்தலுக்குப் பிந்தைய பேரம்பேசல்கள் நடைபெற்று வருவதன் மத்தியில், அடுத்து வரவிருக்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் கொள்கைகளை அல்லது அதன் தொகுப்புநிலையையோ கூட மாற்றுவதற்கு அவர் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடும்.

கடந்த கோடையில் ஜேர்மனியுடனான ஒரு பாதுகாப்புத்துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த அதேவேளையில், பாஸ்டில் தினத்திற்கு பாரிஸுக்கு விஜயம் செய்ய டிரம்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், புதிய பிரெஞ்சு ஜனாதிபதி, பிரான்சுக்கு தெரிவுகள் இருக்கின்றன என்பதையும், குறிப்பிட்ட நிலைமைகளில் சரியான விலை கிடைக்குமென்றால், அது அமெரிக்காவுக்காக தன் ஐரோப்பிய ”கூட்டாளி”யை புறந்தள்ள முடியும் என்பதையும் சந்தேகத்திற்கிடமற்ற சமிக்கையாக அனுப்பினார்.

எவ்வாறாயினும், சமூக வெட்டுக்களுக்கும் ஒரு நிரந்தரமான அவசரகாலநிலைக்கும் மக்ரோன் கொண்டுள்ள சளைக்காத உறுதிப்பாடு, அவர் எட்டுகின்ற எந்த ஒப்பந்தங்களுக்கும் விலை கொடுக்கப் போவது தொழிலாள வர்க்கம் தான் என்பதைத் தெளிவாக்குகிறது. அதேபோல பிரான்ஸ் தனது வங்கிகளுக்கு கூடுதலான நிதியளிப்புகளை பெறுவதற்கும் தனக்கு அனுகூலமான வர்த்தக முன்முயற்சிகளுக்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி காணுவதற்கான அதிகமான அறிகுறிகள் அங்கே இல்லை.

நிக்கோலோ சார்க்கோசி மற்றும் பிரான்சுவா ஹாலண்ட் போன்ற மக்ரோனுக்கு முன்னர் பதவியில் இருந்தவர்கள் அவர்களது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் முன்வைத்த அதே ஆலோசனைகளையே மக்ரோன் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை Le Point குறிப்பிட்டது: “அங்கேலா மேர்க்கெல் பணிவுடன் செவிமடுத்தார், பின் முற்றிலுமாக அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஐரோப்பாவை அவர்கள் விரும்பிய வழியில் மாற்றுவதற்கு அந்த இரண்டு ஜனாதிபதிகளாலும் இயலவில்லை.”

“மேர்கெல் SPD உடனான பழைய கூட்டணியை பராமரிக்கிறாரா ... அல்லது FDP உடன் கூட்டணி வைக்கிறாரா” என்பதைப் பொறுத்து பேர்லினின் கொள்கையில் ஏற்படக் கூடிய வித்தியாசங்களை பொருளாதார அறிஞரான டானியல் கோஹென், Nouvel Obs இன் ஒரு முன்னணித் தலையங்கத்தில் சுட்டிக்காட்டினார். அவர் குறிப்பிட்டார், “இம்மானுவல் மக்ரோனுக்கு மேர்க்கெல் மிகவும் நேர்மறையான சமிக்கைகளையே அனுப்பியிருக்கிறார்... ஆயினும் மேர்கெல் இரண்டு வகை கம்பிகளையுமே காய்ச்சிக் கொண்டிருக்கிறார்.” ஆழமான சிக்கன நடவடிக்கைகளையும் யூரோமண்டலத்தில் இருந்து கிரீசை வெளியேற்றுவதையும் ஆதரிப்பவரான ”அவரது நிதியமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள முன்வைக்கும் யோசனைகளையும் அவர் ஆதரிக்கிறார்.”

அநேகமாய் ஒரு “புதிய நிதி நெருக்கடி” வரக்கூடிய நிலை குறித்து எச்சரித்த கோஹென், இந்த வித்தியாசங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்ற சாத்தியத்தை கடுமையாகத் தாக்கினார், அது ஒரு புதிய பொறிவின் சமயத்தில் பிரான்சை பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடும் என்றார்: “அபாயம் என்னவென்றால், எப்போதும் போல, எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் செய்வது தான்: பிரான்சை மகிழ்ச்சிப்படுத்த ஒரு “சிறிய” வரவு-செலவு திட்டம், ஜேர்மனியர்களுக்கு மறுஉத்தரவாதம் அளிப்பதற்காக நிதி ஒழுக்கத்தை உத்தரவாதப்படுத்துகிற ஒரு ஐரோப்பிய நாணய நிதியம். இத்தகைய அலங்கார வேலை எனும் ஆடம்பரம் ஐரோப்பாவுக்கு இனியும் கட்டுபடியாகாததாகும்.”