ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The logic of imperialist aggression:

Will US threats against North Korea yield a global catastrophe?

ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தின் தர்க்கம்: வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் ஓர் உலகளாவிய பேரழிவை விளைவிக்குமா?

Bill Van Auken
6 September 2017

வட கொரியாவுக்கு எதிராக டொனால் ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட ஆலோகசர்களின் ஒரு தொடர் முடிவில்லாத ஆத்திரமூட்டல்களும் பொறுப்பற்ற அச்சுறுத்தல்களும் பேரழிவுகரமான மனித உயிரிழப்புகளுடன் உலகம் ஓர் அணுஆயுத போர் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது என்ற அச்சங்களை உலகளவில் தூண்டிவிட்டுள்ளன.

“உலகம் இதுவரையில் பார்த்திராத ஆத்திரம் மற்றும் சீற்றத்தை" கட்டவிழ்த்து விட அமெரிக்க ஜனாதிபதியின் சூளுரையைத் தொடர்ந்து அவரது தேசிய பாதுகாப்பு செயலர் தளபதி எச். ஆர். மெக்மாஸ்டரின் எச்சரிக்கை வந்தது. அவர் வட கொரியா "அணுஆயுதத்தைக் கொண்டு அமெரிக்காவை அச்சுறுத்துவதை" நிறுத்துவதற்கு, வாஷிங்டன் —நூரெம்பேர்க் நாஜி போர் குற்ற வழக்குகளின்போது சட்டத்திலிருந்து தடைசெய்யப்பட்ட ஒரு கோட்பாடான— ஒரு "முன்கூட்டிய போரை" தொடுக்க தயாராக உள்ளதாக எச்சரித்தார். ட்ரம்பின் பாதுகாப்பு செயலர் "போர் வெறியர்" தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ் ஞாயிறன்று அறிவிக்கையில், “ஒரு நாட்டை, பெயரிட்டு கூறுவதானால் வட கொரியாவை, முற்றிலுமாக நிர்மூலமாக்க" பென்கடன் வசம் "பல வாய்ப்புகள்" இருப்பதாகவும், ட்ரம்ப்புக்கு "அவை ஒவ்வொன்றையும் குறித்து விவரிக்கப்பட்டிருப்பதாகவும்" அறிவித்தார்.

மிகச் சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே பாதுகாப்பு அவையில் திங்களன்று அறிவிக்கையில், வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுன் "போரை யாசித்துக் கொண்டிருக்கிறார்" என்றார். இது பியொங்யாங் உடன் "அமைதிப்படுத்தலை" முயற்சிக்குமாறு கோரும் தென் கொரிய அரசாங்கம் மீதான ட்ரம்பின் எரிச்சலூட்டலுடன், பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது என்ற தொடர்ச்சியான அறிவிப்புகளோடு சேர்ந்து வருகின்றன.

ஓர் அணுஆயுத மோதலைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான இத்தகைய ஒவ்வொரு அச்சுறுத்தல்களும் அதிகரித்து கொண்டே செல்கின்ற நிலையில், அதிகரித்தளவில் மிகவும் பலமாக முன்வரும் கேள்வி என்னவென்றால்: வாஷிங்டன் அதன் போர் வாய்வீச்சை நிரூபித்துக் காட்டுவதற்காகவே போருக்குள் இறங்குமா? இந்த அச்சுறுத்தல்கள் —வெறும் உளறல்கள் இல்லை தீர்மானகரமானவை என்பதை நிரூபிப்பதற்காக— இவை ஒரு சாத்தியமான அணுஆயுதப் போரை நோக்கிய போக்கில் ஓர் உந்துசக்தியாக மாறி உள்ளதா?

இது, ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகம், அரசு எந்திரத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஆளும் செல்வந்த குழுக்களுக்குள் ஒரு நம்பிக்கைக்குரிய ஷரத்தாக உள்ளது, சிரியாவுக்கு எதிரான அமெரிக்க போரில் ஒபாமா அவரின் "சிவப்பு கோட்டை" நிரூபித்துக் காட்ட தவறியதால் சூழப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அரங்கில் அதன் "நம்பகத்தன்மையை இழந்து" நிற்கிறது. இந்த "இழப்பை" மாற்றுவதற்காக, வாஷிங்டன் கொரிய தீபகற்பத்தின் மீது ஓர் அப்பட்டமான பித்துபிடித்த இராணுவ வாய்ப்பை ஒருவேளை தேர்ந்தெடுக்கலாம்.

அதாவது இது அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள் ஒரு நிஜமான மற்றும் இப்போதையை அபாயமாக உணரப்படுகிறது என்பதை செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் வர்த்தகம் தொடங்கிய போது பங்கு விலைகளில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சியிலும் மற்றும் அண்மித்து ஓராண்டில் தங்கத்தின் விலை அதன் உயர்ந்த மட்டங்களுக்கு உயர்ந்ததன் அடிப்படையிலும் தவறுக்கிடமின்றி வெளிப்பாட்டைக் கண்டது.

இந்த போர் அச்சுறுத்தலானது, வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசவாத பில்லியனரின் வீராவேச ஆத்திரமுட்டூம் ட்வீட் செய்திகளின் வெறும் நடவடிக்கை அல்ல. அங்கே போர் முனைவுக்கு எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பும் இல்லை. ஜனநாயகக் கட்சியின் முன்னணி பிரபலங்கள் அதற்கு எதிராக ஏதாவது பேசி உள்ளார்களா? கொரிய தீபகற்பத்தில் ஏற்படும் முற்று-முதலான போரின் விளைவுகளைக் கருதிப் பார்க்க ஏதேனும் பொது விசாரணைகள் கூட்டப்பட்டுள்ளதா?

போர் பிரச்சாரத்தின் சலாம் போடும் ஒரு கருவியாக பெருநிறுவன ஊடகங்களோ, அந்த மோதலில் எந்த பரந்த வரலாற்று அல்லது புவிஅரசியல் உள்ளடக்கமும் இல்லாததைப் போலவும், வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை வீச்சு அல்லது குண்டு பரிசோதனைக்கு முன்னர் நடந்த எதனோடும் சம்பந்தப்படுத்தாமலும் அதை கையாள்கின்றன.

65 ஆண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க போரில் சுமார் 3 மில்லியன் கொரியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பான்மையினர் வடக்கில் இருந்தவர்கள் என்பதையும், அப்போரில் அந்நாட்டின் ஒவ்வொரு நகரமும் அமெரிக்க குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளால் இடிபாடுகளாக சிதைக்கப்பட்டன என்பதையும் நினைவுகூருபவர்கள் இன்றும் வட கொரியாவில் இருக்கிறார்கள் என்பதை ஒருவர் ஊகிப்பது கடினம் இல்லை. அவர்களைப் பொறுத்த வரையில், “ஆத்திரம் மற்றும் சீற்றத்தைத்” துணைக்கு இழுப்பது வெறுமனே மிகைமிஞ்சிய வாய்சவடால் கிடையாது. அப்போதிருந்து, அமெரிக்கா வட கொரியாவின் எல்லைகள் மீது ஒரு பாரிய இராணுவ பிரசன்னத்தைத் தக்க வைத்துள்ளது, அதேவேளையில் அது அணுஆயுத குண்டுகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் கொண்டு வழமையாக அதை எச்சரித்து வருகிறது.

கடந்த கால் நூற்றாண்டில் ஒவ்வொரு அமெரிக்க ஆக்கிரமிப்பு போரைப் போலவே, வட கொரியா உடனான இப்போதைய இந்த இராணுவ மோதலின் ஆயத்தப்படுத்தலும் —வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன்னுக்கு முன்னர் நோரிகா, மிலோசெவிக், சதாம் உசேன் மற்றும் கடாபி போலவே— இவரும் "பைத்தியக்காரத்தனமாக" இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. “பாரிய பேரழிவுகர ஆயுதங்களால்" அல்லது பயங்கரவாதத்தால் அமெரிக்காவுக்கு ஏதோவித பயங்கர அச்சுறுத்தல் முன்நிறுத்தப்பட்டதாக, அல்லது அமெரிக்க வெடிகுண்டுகளால் மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய ஓர் உடனடி "மனித உரிமை" பேரிடர்கள் நிகழவிருப்பதாக, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் பிற இடங்களின் முந்தைய போர்களுக்கு ஒரு சாக்குபோக்கு கண்டுபிடிக்கப்பட்டது. வட கொரியாவின் அணுஆயுத பிரச்சினை இதிலிருந்து வித்தியாசமானதில்லை.

இஸ்ரேல், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட பிற நாடுகள் அணுஆயுதங்களைப் பெறுவதற்கும், சில விடயங்களில் அமெரிக்க உதவியுடனும் கூட அவற்றை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வட கொரியா அணுஆயுதங்களை வைத்திருப்பது மட்டும் அமெரிக்காவுக்கு ஏன் ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாக உள்ளது என்பது ஒருபோதும் விளக்கப்படவே இல்லை. வெளிப்படையாகவே அமெரிக்காவின் கூட்டாளிகளான இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையே ஓர் அணுஆயுத மோதலுக்கான அச்சுறுத்தல், வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கொரிய தீபகற்பம் மீதான எந்தவொரு அச்சுறுத்தலைக் காட்டிலும் பெரிதாக உள்ளது.

இந்த தீவிரமடைந்து வரும் போர் நெருக்கடி, "அமெரிக்காவின் உற்பத்தி" என்ற முத்திரையை தாங்கியுள்ளது. வாஷிங்டன் தொடுத்த முந்தைய ஆக்கிரமிப்பு போர்கள், வட கொரிய தலைமையின் நடவடிக்கையில் தாக்கத்தை கொண்டுள்ளன. வாஷிங்டனை சாந்தப்படுத்த தங்களின் ஆயுத திட்டங்களைக் கைவிட்ட ஈராக்கின் சதாம் ஹூசைனும் லிபியாவின் கடாபியும் இருவரும், அவர்களே கூட கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களது நாடுகள் மீது படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதைக் கண்டனர், அவர்களது தலைவிதியைப் பார்த்த பின்னர் வட கொரியா அதன் அணுஆயுத தகைமையை அபிவிருத்தி செய்து பேணுவதற்கு அது தீர்மானமாக இருப்பதில் "பைத்தியக்காரத்தனம்" எதுவும் கிடையாது. “பைத்தியக்காரத்தனம்" இல்லை என்றாலும், வட கொரிய தலைமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பித்துநிலையை பிழையாக கணக்கிடுகிறது, அமெரிக்கா அதன் நோக்கங்களை முன்னெடுக்க அணுஆயுத போருக்கு எதிரான முந்தைய கட்டுப்பாடுகளைக் களைய தயாராகி வருகிறது.

இந்த நோக்கங்கள் வறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியாவின் அரசாங்கம் பின்பற்றும் கொள்கைளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டவை அல்ல, மாறாக அதன் எல்லைகளில் உள்ள, அணுஆயுத சக்திகளான சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி திருப்பிவிடப்பட்டவை ஆகும், இவ்விரு நாடுகளையும் வாஷிங்டன் யூரேஷிய பெருநிலத்திலும் ஒட்டுமொத்த புவியின் மீதும் அதன் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கான அதன் முனைவுக்கு தலையாய தடைகளாக பார்க்கிறது. அது வட கொரியாவுக்கு எதிராக போரைக் கொண்டு அச்சுறுத்துகின்ற அதேவேளையில், வாஷிங்டன் தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக "கடல் போக்குவரத்து சுதந்திரம்" என்ற ஆத்திரமூட்டல்களை அதிகரித்து வருகிறது மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக பால்டிக் பகுதியில் ஓர் ஆத்திரமூட்டும் இராணுவ ஆயத்தப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது.

கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய போரானது, 65 ஆண்டுகளுக்கு முந்தைய போரில் நடந்ததைப் போலவே, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளிழுக்கும் அனைத்து சாத்தியக்கூறையும் கொண்டுள்ளதுடன், ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.

வட கொரியாவுக்கு எதிராக அணுஆயுதமற்ற போர் “சூழலின் நல்விடயமாக” இருந்தாலும், அதிலும் கூட நூறாயிரக் கணக்கான மக்கள் இல்லையென்றாலும் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள், அதேவேளையில் அணுஆயுத போர் பரிவர்த்தனையானது நூறு மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதை, மற்றும் பூமியில் உயிரினங்களது சாத்தியமான நிர்மூலமாக்கலை முகங்கொடுக்கிறது.

வட கொரியாவுக்கு எதிரான ஒரு "தாக்கும் திறனை தடுக்கும் போர்" (preventive war) என்றழைக்கப்படுவதானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான "நம்பிக்கையை" மீளமைப்பதற்கு பதிலாக, அமெரிக்கா உலகம் முழுவதும் ஒரு ஒதுக்கப்பட்ட நாடாக மாற்றிவிடலாம், மேலும் ஹிட்லரின் ஜேர்மனி நடத்திய குற்றங்களுக்குப் பின்னர் முன்னுதாரணமற்ற குற்றங்களுக்காக அது புறக்கணிக்கப்படலாம். இத்தகைய குற்றங்களில் உடந்தையாய் இருந்த அமெரிக்க அரசியல் தலைவர்கள், வெளிநாடுகளில் கைது உத்தரவாணைகளை முகங்கொடுத்து அந்த அச்சங்களினால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாதவர்களாக ஆகலாம்.

உண்மையில் இதுபோன்றவொரு போரிலிருந்து ஏற்படும் அரசியல், பொருளாதாரம் மற்றும் தார்மீக வீழ்ச்சி, முன்பில்லாத பரிமாணங்களில் ஓர் உள்நாட்டு நெருக்கடியைக் கட்டவிழ்த்து விட்டு, அமெரிக்காவின் இருப்பையே கேள்விக்குட்படுத்தக்கூடும்.

பகுப்பாய்வின் இறுதியில், தற்போதைய போர் அபாயமானது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் தோல்வியினது விளைவாகும். அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தின் நோய்பீடித்த இந்த நிலை டொனால்ட் ட்ரம்ப் எனும் அருவருக்கத்தக்க பிரமுகரில் அதன் ஆளுருவைக் கண்டுள்ளது என்றாலும், இது அமெரிக்க மற்றும் பூகோளமயப்பட்ட முதலாளித்துவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, மேலும் இது இரண்டு அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ அரசினது மற்றும் ஆளும் உயரடுக்கினது ஒவ்வொரு அமைப்பிலும் பரவியுள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய ஒரு கால் நூற்றாண்டாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய வீழ்ச்சியை முடிவில்லாமல் —ஆனால் வெற்றி பெறாமல்— ஆக்கிரமிப்பு போர்களைக் கொண்டு எதிர்கொள்ள முனைந்திருந்தது, இவை மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது, ஊனமாக்கியுள்ளது மற்றும் அவர்களை இடம்பெயர்த்துள்ளது.

வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களுடனும், முன்பினும் அதிகமாக விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மையுடனும் கைகோர்த்து செல்கிறது. ஆசியாவில் ஒரு பேரழிவுகரமான போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் இந்த பொறுப்பற்ற மற்றும் குற்றகரமான வெளிநாட்டு கொள்கை, ஹார்வி சூறாவளி போன்ற பேரழிவுகளுக்கு, மிகவும் குறைவான தயாரிப்புடன், விடையிறுப்பதில் ஆளும் வர்க்கத்தின் திராணியின்மை மற்றும் விருப்பமின்மையை எடுத்துக்காட்டுகிறது, அதேவேளையில் பரந்த சமூக செல்வங்களோ நிதியியல் தன்னலக்குழுக்களின் ஒரு சிறிய அடுக்கை செழிப்பாக்க பாய்ச்சப்படுகின்றன.

அணுஆயுத போர் முனைவை உருவாக்குகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களுக்கான புறநிலை அடித்தளங்களையும் அமைத்து வருகிறது. ஆனால், உலக போரை நோக்கிய முனைவின் அபிவிருத்தி அடைந்த நிலைக்கும், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் மத்தியில் இந்த அச்சுறுத்தல் குறித்த நனவுக்கும் இடையிலான இடைவெளி கடந்து வரப்பட வேண்டும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் நனவுபூர்வமாக மற்றும் சுயாதீனமாக தலையீடு செய்தால் மட்டுமே ஓர் உலகளாவிய பேரழிவைத் தடுக்க முடியும்.