ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As US threatens North Korea, NATO chief warns of “more dangerous world”

வட கொரியாவை அமெரிக்கா அச்சுறுத்துகின்ற நிலையில், நேட்டோ தலைவர் “மிகுந்த அபாயகரமான உலகம்” குறித்து எச்சரிக்கிறார்

By Peter Symonds
11 September 2017

அமெரிக்கா ஆத்திரமூட்டும் வகையில் வட கொரியா உடனான அழுத்தங்களை உக்கிரப்படுத்துவதை தொடருகையில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், செப்டம்பர் 3 அன்று பியோங்யாங் அதன் ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதற்கு எதிராக கண்டனம் செய்வதில் தானும் இணைந்தார்.

ஸ்டோல்டென்பேர்க் நேற்று BBC இல் பேசுகையில், “நிச்சயமாக நேட்டோவையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய விடையிறுப்பைத் தேவையாகக் கொண்ட”, ஒரு “உலகளாவிய அச்சுறுத்தலாக” உருவெடுக்கும் வட கொரியாவின் “பொறுப்பற்ற நடத்தை” ஐ கண்டனம் செய்தார். அமெரிக்கா தாக்கப்பட்டிருக்குமானால் வட கொரியாவிற்கு எதிரான போரில் நேட்டோ உறுப்பினர்கள் சேர வேண்டியிருக்குமா என்பது பற்றிய ஊகத்தை அவர் வெளிப்படுத்தாவிட்டாலும், அதை அவ்வாறு இணைவதை நிராகரிக்கவில்லை.

வெள்ளியன்று Guardian இடம் ஸ்டோல்டென்பேர்க், அவரது 30 ஆண்டு பணி காலத்தில் எந்தவொரு நேரத்தையும் காட்டிலும் உலகம் “மிகவும் ஆபத்தான நிலையில்” இருப்பதாக கூறினார். “வட கொரியாவில் பேரழிவுகர ஆயுதங்கள்” அத்துடன் பயங்கரவாதம், மேலும் “இன்னும் பிடிவாதமான ரஷ்யா” என்பனவற்றை சுட்டிக்காட்டும் அவர், “இது மிகவும் எதிர்பாராதது என்பதோடு மிகவும் கடினமானது, ஏனென்றால் அதே நேரத்தில் நாம் பல சவால்களை கொண்டுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உள்ள நேட்டோ போர் குழுக்களுக்கு பயணம் செய்கையில் நேட்டோ தலைவர் எஸ்தோனியாவில் தங்கியிருந்த பிரிட்டிஷ் துருப்புகளை சந்தித்தார். ரஷ்யாவும் பெலாரஸும் இந்த வாரம் பெரிய அளவிலான இராணுவ பயிற்சிக்காக தயாரிக்கப்பட்டதால், “தற்காப்பு” அணிதிரளலில் துருப்புக்கள் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார். உண்மையில், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ வழியான வாஷிங்டனின் இராணுவ உந்துதல் ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கு எரியூட்டுகின்றது.

இதேபோல், ஒபாமா நிர்வாகத்தை பின்பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வட கொரியாவுடனான பதட்டங்களை பாரியளவில் அதிகரிக்க செய்துள்ளதோடு, கடந்த மாதம் அவர், “உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையிலான நெருப்பிலும் சீற்றத்திலும்” முற்றிலுமாக மூழ்கடிக்கப்படும் எனவும் எச்சரிக்கிறார். இதற்கு பதிலிறுப்பாக, அமெரிக்காவின் தாக்குதலைத் தடுப்பதற்கு முடிந்தவரை விரைவாக அணுஆயுத படைக்களம் ஒன்றை அபிவிருத்தி செய்வது மட்டும் தான் ஒரே வழி என்று பியோங்யாங் ஆட்சி முடிவு செய்துள்ளது.

நேற்று BBC க்கு கருத்து தெரிவிக்கையில், பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலர் மிக்கேல் ஃபால்லான், வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரில் இங்கிலாந்தும் ஈடுபடலாமென சமிக்ஞை செய்ததோடு, இந்நாடு லண்டனுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் கூறுகிறார். “லாஸ் ஏஞ்செல்ஸ் ஐ விட, வட கொரியா மற்றும் அதன் ஏவுகணைகளுக்கு லண்டன் நெருக்கமாக உள்ளது” என்பதால் “இது நம்மையும் ஈடுபடுத்துகிறது” என்றவர் கூறினார். வட கொரிய ஏவுகணைகள் பிரிட்டனை சென்று தாக்க முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், அவற்றின் வரம்பு “மிகவும் நீண்டு” கொண்டே இருந்ததெனத் தெரிவித்தார்.  

“இராஜதந்திர தீர்வு” ஒன்றைக் காண வலியுறுத்துகின்ற போதும், ஃபால்லான், “தற்போதைய தவறான கணிப்பு, சில விபத்துக்களால் தூண்டப்படும் எதிர்வினைகள் ஆகியவற்றின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவையாக இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை நாம் நிறுத்திவிட வேண்டும்” என்று வற்புறுத்துகிறார். “அமெரிக்கா தாக்கப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், நிச்சயமாக அதன் சுயபாதுகாப்புக்காக ஐ.நா.வின் பிற உறுப்பினர்களையும் இணையுமாறு கேட்பதற்கு அது உரிமை கொண்டுள்ளது” என்றும் தெரிவித்தார். 

ஆசியாவில் காணப்படும் பேரழிவுகர போர் அபாயம் ஐரோப்பாவில் ஆழ்ந்த அச்சங்களை தூண்டுவதோடு, வாஷிங்டன் உடனான பிளவுகளையும் அதிகரித்து வருகின்றது. ஞாயிறன்று Frankfurter Allgemeine Sonntagszeitung இல் பிரசுரமான ஒரு நேர்காணலில், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், 2015 இல் ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையை வடகொரியா உடனான பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளமாக கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். “ஐரோப்பாவும், குறிப்பாக ஜேர்மனியும் மிகுந்த செயலூக்கத்துடன் அதில் பங்கெடுக்க தயாராக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

வட கொரியாவுடன் ஈரான் வகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான மேர்க்கெலின் முன்மொழிவு வாஷிங்டனில் வரவேற்கப்படாது. ஈரான் உடனான உடன்பாட்டை பலமுறை ட்ரம்ப் கண்டனம் செய்துள்ளதோடு அதிலிருந்து வெளியேறுவதாக அச்சுறுத்தியுள்ளார், மேலும் வட கொரியா உடனான மோதல் நிலைப்பாட்டை முடிவுகட்டும் வகையிலானதொரு பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தையும் அவர் நிராகரித்துவிட்டார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று விவாதிக்கப்பட்ட ஒரு புதிய அமெரிக்க தீர்மானத்தை ஏற்க வேண்டுமென சீனா மற்றும் ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை வாஷிங்டன் அதிகரித்துள்ளது. இந்த தீர்மானம், வட கொரியாவிற்கான எண்ணெய் ஏற்றுமதி மீது ஒரு முழுமையான தடையாணையையும், அத்துடன் பொருளாதாரத் தடைகளை முறிக்கும் வகையிலான சந்தேகத்திற்குரிய கப்பல்களை தடுத்துநிறுத்தி சோதனையிடவும் ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு உரிமையை வழங்குவதானதொரு பகுதியளவிலான கடற்படை முற்றுகையையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பியோங்யாங்கில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை தோற்றுவிப்பதான ஒரு முழுமையான எண்ணெய் ஏற்றுமதி தடையை சீனாவும் ரஷ்யாவும் எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அவர்களது கொல்லைப்புறத்தில் ஒரு அமெரிக்க சார்பு ஆட்சியை ஸ்தாபிக்க வட கொரியாவில் உருவாகும் எந்தவொரு உடைவையும் சுரண்டக்கூடும் என்று பெய்ஜிங்கும் மாஸ்கோவும் அச்சமடைகின்றன.

கடந்த வியாழனன்று, அமெரிக்க ஜனாதிபதிகள் 25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் “பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” ஆனால் அதன் அணுசக்தி திட்டம் தொடர்ந்தே வந்துள்ளது என்று ட்ரம்ப் அறிவித்தார். “எனவே, இராணுவத்தின் வழியில் செல்வதை நான் விரும்பவில்லை, என்றாலும் நிச்சயமாக ஏதோவொன்று நடக்கக்கூடும்” என்பதாக அவர் எச்சரித்தார்.

“எங்களது இராணுவம் ஒருபோதும் இல்லாத வகையில் வலுவானதாக உள்ளது” என்று பெருமையடித்துக் கொண்டார். வட கொரியாவுக்கான மற்றொரு அச்சுறுத்தலாக, அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஒவ்வொரு நாளும் புதிய உபகரணங்கள் வெளியிடப்படுகின்றது, அவை புதிய மற்றும் அழகான உபகரணங்களாகும் என்பதோடு, இதுவரை உலகில் சிறந்தவையாகவும், உலகெங்கிலும் சிறந்தவையாகவும் உள்ளன. வட கொரியா மீது அதை நாங்கள் பயன்படுத்த நேரிடாது என்று நம்புகிறோம். ஒருவேளை வட கொரியா மீது நாங்கள் அதை பயன்படுத்தினால், அது வட கொரியாவிற்கு மிகுந்த வருத்தமிக்க நாளாக இருக்கும்.”

வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளின் கருத்துபடி, கடந்த வெள்ளியன்று NBC செய்தி, ட்ரம்ப் நிர்வாகம் “இணையவழி தாக்குதல்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகள் உட்பட, வட கொரியாவிற்கு எதிரான இராஜதந்திர மற்றும் இராணுவ நகர்வுகளின் தொகுப்பு ஒன்றை தயார் செய்துள்ளது” என்று தெரிவித்தது.

ட்ரம்ப் கூடவே, “பியோங்யாங் உடன் வர்த்தகம் செய்யும் சீன வங்கிகள் மீது இராஜதந்திர ரீதியாக அபாயகரமான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் தீவிரமாக ஆலோசித்து வந்தார் என்பதுடன், “சியோல் அவர்களிடம் கோரினாலன்றி தந்திரோபாய அணுவாயுதங்களை தென் கொரியாவிற்கு நகர்த்துவது இயலாது என்பதை ஒதுக்கிவிட முடியாது.” தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம், தென் கொரியாவில் அமெரிக்கா தந்திரோபாய அணுவாயுதங்களை இடம்பெறச் செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.

இத்தகைய நகர்வு, கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்றதாக்க முனைவதற்கான அமெரிக்க கோரிக்கைகளை மட்டும் முடிவுக்கு கொண்டு வராது, மாறாக விபத்து அல்லது தவறான முன்கணிப்பின் மூலமாக அணுஆயுத போர் அபாயத்தை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்யும்.

NBC ஐ பொறுத்தவரை, அணுஆயுதங்களைக் கொண்டு வட கொரியாவை தாக்குவது உட்பட, தேர்வுகளின் முழு வரம்பை வெள்ளை மாளிகை மீளாய்வு செய்துள்ளது. “அணுஆயுதங்களின் முதல் பயன்பாடு என்பது மிகுந்த ஆக்கிரோஷமானதாக இருக்கும், அத்துடன் உள்நாட்டிலும் அல்லது சர்வதேச நட்பு நாடுகளில் இருந்தும் ஆதரவற்ற நிலையையும் உருவாக்குமென மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று கட்டுரை தெரிவித்தது.

“நாங்கள் ஒருபோதும் செய்யாத அனைத்து வகையான பைத்தியகார விடயங்கள் பற்றியும் பேசுகிறோம்” என்று NBC க்கு ஒரு அதிகாரி தெரிவித்தார். “பின்னர் எதற்காக நீங்கள் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும்.” அத்தகைய உத்தரவாதங்களை எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வட கொரியா மீதானதொரு முதல் அணுஆயுத தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதென்பது அது தீவிர பரிசீலனையில் வைக்கப்பட்டிருப்பதையே குறிக்கிறது என்பதே உண்மை. “அனைத்து தேர்வுகளும் மேஜை மீது தயாராகவுள்ளன” என்ற வகையிலான வாஷிங்டனின் தாரக மந்திரம், வட கொரியா மீதான அமெரிக்க தாக்குதலில் எந்தவித தவிர்ப்பும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

வட கொரியாவை அமெரிக்கா முதலில் தாக்குமானால், பியோங்யாங்கிற்கு ஆதரவாக பெய்ஜிங் இருக்கும் என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளை சீனா எச்சரித்ததாகவும் NBC தெரிவித்தது. எவ்வாறாயினும், அமெரிக்காவை இலக்கு வைத்து வட கொரியா தாக்கினால், “எல்லாம் மாறும்” என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகளால் வட கொரியாவை ஒரு இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கு தூண்டுமானால், சீனா தன்னை ஓரம்கட்டி இருக்கவேண்டும் என்பதாகும்.

இந்த நிலைமை அமெரிக்க நிர்வாகத்தின் அசாதாரண பொறுப்பற்ற தன்மையை உயர்த்திக் காட்டுகின்றது. வட கொரியாவுடனான போருக்கு அது தயாராகும் நிலையில், உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கான முக்கிய தடையாக கருதப்படுகின்ற சீனாவுடனான மோதலாக அது விரைவாக உருவெடுக்கக்கூடும் என்பதை அமெரிக்க அரசாங்கம் முழுமையாக நன்கு அறிந்திருக்கிறது.