ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German SGP election candidate speaks at student protest against deportations

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் வேட்பாளர், நாடுகடத்தல்களுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் உரையாற்றுகிறார்

By our reporters
4 September 2017

“ஒரு சோசலிச வேலைத்திட்டமே, நாடுகடத்தும் பைத்தியக்காரத்தனம் மற்றும் போரைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்,” இதை சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் வேட்பாளர் மரியான அரேன்ஸ் (Marianne Arens) கடந்த வாரம் ஒஃபன்பாக் (Offenbach) நகரில் நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் அறிவித்தார். மாணவர்கள், ஒஃபன்பாக் குடியிருப்போர் மற்றும் தொழிலாளர்கள் என சுமார் 500 பேர், ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடுகடத்துவதற்கு எதிராக போராடுவதற்கான அழைப்பை ஏற்று செவ்வாயன்று அப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


Offenbach நகர மன்றத்திற்கு வெளியே பேரணி

August-Bebel பள்ளியில் படிக்கும் டஜன் கணக்கான மாணவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்துவதற்கான உத்தரவுகள் வந்ததை அடுத்து, அவர்களுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்தனர்.

ஒஃபன்பாக் இன் எழுபது இளைஞர்கள் இப்போது நாடுகடத்துவதால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே கடுமையான அனுபவங்களினூடாக கடந்து வந்துள்ளனர், நெருங்கிய உறவினர்களையும் இழந்துள்ளனர். அந்நகருக்கு வருவதற்கு முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்பி வந்துள்ள அவர்கள் அனைவருமே, இப்போது உடனடி நாடுகடத்தலை முகங்கொடுக்கின்றனர்.

அந்த ஆர்ப்பாட்டம் ஒஃபன்பாக் நகர மன்றத்தை நோக்கி முன்னேறிய போது பலரும் அதில் அணிதிரண்டனர். “எவரும் சட்டவிரோதமானவர் கிடையாது - அனைவருக்கும் வசிக்கும் உரிமை உண்டு,” “எல்லைகளும் கிடையாது, தேசங்களும் கிடையாது - நாடுகடத்தலை நிறுத்துங்கள்!” என்பவை முக்கிய கோஷங்களாக இருந்தன. 


அப்போராட்டத்தின் ஒரு பிரிவு, Hibba Kauser (இடதிலிருந்து மூன்றாவது) அவரது சக மாணவர்களுடன்

நகர மன்றத்திற்கு முன்னால், பள்ளி செய்தி தொடர்பாளர் Hibba Kauser கூறுகையில், “மக்களை மரணத்திற்கு அனுப்புவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்றார். அப்பெண்மணியின் பெற்றோர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்ததால், வாழ்வின் முதல் ஆண்டை ஒரு அகதிகள் முகாமில் கழித்ததாக அவர் விவரித்தார். அக்காலகட்டத்தில் அவர்கள் கற்றிருந்த ஒற்றுமையுணர்வு, இப்போது அவர்களது சக மாணவர்களையும் நண்பர்களையும் பாதுகாக்க அவசியப்பட்டது. “இந்த மாணவர்கள் நமது நண்பர்கள், இவர்கள் நம்முடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள்.” மக்களை மரணம் ஏற்படக்கூடிய இடங்களுக்கு நாடுகடத்தும்போது ஒவ்வொருவருமே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Kauser இன் உரையை தொடர்ந்து இரண்டு அகதிகள் உரையாற்றினர், அவர்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு விரும்பி வெளியேறவில்லை என்பதை வலியுறுத்தினர். “அங்கே ஆப்கானிஸ்தானில் இன்றும் போர் நடக்கிறது, மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்,” என்று ஒருவர் குறிப்பிட்டார்.


Julia Endres

August-Bebel பள்ளியில் கடுமையாக பாதிக்கபட்ட ஆப்கான் மாணவர்களின் ஒரு சக மாணவியான Julia Endres, அந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுப்பதற்கு உதவினார். அவர் கூறினார், “நாம் எல்லோருமே மனிதர்கள் என்ற உண்மையை பலர் மறந்துவிட்டதாக தெரிகிறது. தோலின் நிறம், மதம் அல்லது பிறப்பில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்கள் மதிப்பிடுகிறார்கள். நாம் அதை அனுமதிக்க முடியாது.” அவர் முறையிடுகையில், உதவி மற்றும் பாதுகாப்பு மட்டும் கோரவில்லை, மாறாக போர் தொந்தரவு இல்லாமல், நல்லிணக்கம், ஒன்றிணைந்திருப்பது மற்றும் அனைவருக்கும் நல்வாழ்வையும் கோரினார்.

இன்னும் பல பங்களிப்புகளும் திட்டமிட்ட வெளியேற்றங்களின் அளவை தெளிவுபடுத்தியது. பிராங்க்பேர்ட்டில் உள்ள Philipp-Holzmann பள்ளி கட்டிடத்தில், பள்ளியின் மொத்தம் 250 மாணவர்களில் 27 பேர் உடனடியான நாடுகடத்தலை முகங்கொடுக்கிறார்கள். அப்பள்ளி போதகர் Hans-Christoph Stoodt கூறுகையில், நாடுகடத்தலால் அச்சுறுத்தப்பட்டிருப்பவர்களை உடனடியாக பாதுகாக்க எல்லா பள்ளிகளும் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

அந்த அணிவகுப்புக்கு வாழ்த்துக்கள் வழங்கிய பேச்சாளர்களில், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான ரூனா பிராட் (சமூக ஜனநாயக கட்சி, SPD), கிறிஸ்டியான புக்கோல்ஸ் (இடது கட்சி) மற்றும் ஜனீன் விஸ்ஸர் (இவரும் இடது கட்சி) ஆகியோரும் இருந்தனர். அவர்கள் மாணவர்களின் நடவடிக்கைக்காக அவர்களை பாராட்டியதுடன், இன்னும் "மனிதநேயத்திற்கு" பங்களிப்பளிப்புகள் செய்ய அழைப்புவிடுத்தனர், ஆனால் நாடுகடத்தலை மற்றும் போருக்கான உத்தியோகப்பூர்வ முனைவை அவர்களின் சொந்த கட்சிகளான SPD மற்றும் இடது கட்சிகளும் ஆதரித்தன என்ற உண்மையை அவர்கள் குறிப்பிடவில்லை.

சமூக ஜனநாயகக் கட்சியோ ஆளும் கூட்டாட்சி கூட்டணியின் பாகமாக உள்ளது, இடது கட்சியோ பல ஜேர்மன் மாநிலங்களில் (துரிங்கியா, பேர்லின், பிராண்டன்பேர்க்) ஆட்சியில் உள்ளது, இவை பழமைவாத-தலைமையிலான மாநிலங்களைப் போலவே அகதிகளைத் தீவிரமாக நாடுகடத்துகின்றன.


Marianne Arens

அதற்கடுத்து சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) மரியான அரேன்ஸ் உரையாற்றினார். மக்கள் ஆப்கானிஸ்தான் போரிலிருந்து தப்பியோடி வருகிறார்கள், அப்போரில் ஜேர்மனி செயலூக்கத்துடன் பாத்திரம் வகித்து வருகிறது: சுமார் ஓராயிரம் ஜேர்மன் சிப்பாய்கள் இப்போது அந்நாட்டில் உள்ளனர், அதேவேளையில் அமெரிக்க அரசாங்கம் அதன் துருப்புகளைப் பாரியளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றவர் வலியுறுத்தினார். “மக்கள் தப்பியோடி வர நிர்பந்தித்த அதே குற்றங்களை ஏகாதிபத்தியம் துல்லியமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது! பின்னர் அவர்களை மீண்டும் அதே நரகத்திற்குத் திருப்பி அனுப்புகிறது.”

அரேன்ஸ் உரையாற்றுகையில், “இடது கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும்" நாடுகடத்தலுக்கு பொறுப்பாகின்றன என்றார். இடது கட்சி பிரதமர் Bodo Ramelow தலைமை வகிக்கும் மாநிலமான துரிங்கியா, “நாடுகடத்தலை பொறுத்த வரையில், ஒப்பீட்டுரீதியில் சார்லாந்தை அடுத்து, பவேரியாவை விட அதிகமாக, இரண்டாவது இடத்தில் உள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமை கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் இடது கட்சி அனைத்து கட்சிகளும் பொறுப்பாகின்றன!” என்றவர் வலியுறுத்தினார்.

அரேன்ஸ் இன் கருத்துப்படி, இதற்கு காரணம் "அவர்கள் அனைவரும், ஜேர்மனி இராணுமயப்பட வேண்டும் மற்றும் மீண்டுமொருமுறை உலக வல்லரசு அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதில் உடன்படுகின்றனர். அவை அனைத்தும் ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவத்தின் கட்சிகளாக இருப்பதால், நாடுகடத்தலை அவை ஒழுங்கமைக்கின்றன. ஆனால் மக்கள் போரை விரும்பவில்லை,” என்றவர் தொடர்ந்தார். ஆகவே முதலாளித்துவ அரசியல்வாதிகளை நோக்கி திரும்புவது பிழையாக போகும். “நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும். அதுவொரு பலமான சக்தியாகும்” என்றார்.


அப்பேரணியில் பங்குபற்றியவர்களில் சிலர்

அகதிகளுடனான ஒற்றுமையுணர்வானது, இராணுவவாதம், முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான ஒரு கூட்டு போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அரேன்ஸ் நிறைவு செய்தார். இதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டமும், ஒரு புரட்சிகர கட்சியும் அவசியமாக உள்ளது. “இதுவே, நான்காம் அகிலத்துடன் இணைப்பு கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். இது நமது வலைத் தளமான உலக சோசலிச வலைத் தளத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.

அவரது பங்களிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் கரவொலி எழுப்பினர். அதில் பங்கெடுத்திருந்த பலரும் WSWS க்கு பேட்டி அளித்ததுடன், அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பது ஏன் என்பதையும் விளக்கினர்.


Ramin

அவர்களில் ஒருவரான ரமின், 2015 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து கால்நடையாக ஜேர்மனிக்கு வந்திருந்தார். “நாங்கள் 40 நாட்கள், எட்டு நாடுகள் வழியாக நடந்து வந்தோம், சில இடங்களில் நீந்தியும் வந்தோம்,” என்றார். “அது மிகவும் பயங்கரமாக, நிஜமாகவே சிரமமாக இருந்தது. அது சுலபமில்லை, வயதானவர்களால் அதை செய்ய முடியாது. நாங்கள் ஈரான் மற்றும் துருக்கியிலிருந்து வந்த 20 பேரின் ஒரு குழுவில் இருந்தோம், அதில் மூன்று பேர் இறந்து போனார்கள். ஒருவர் என் கரங்களிலேயே இறந்து போனார். அது மிகவும் கொடூரமானது,” என்றார்.

“நான் நிறைய நம்பிக்கைகளோடு ஜேர்மனிக்கு வந்தேன்,” என்று தொடர்ந்து கூறிய ரமின், “இப்போது நான் திரும்பி செல்ல வேண்டியிருக்கிறது. ஏன்? அங்கே ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான இடமே கிடையாது. இது எங்களை விட அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.” ஒஃபன்பாக் இல் உள்ள பல ஆப்கான் இளைஞர்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது என்றவர் தெரிவித்தார். “இது வேலை செய்வதற்கான மற்றும் படிப்பதற்கான எங்களின் எந்தவொரு விருப்பத்தையும் அழித்துவிடுகிறது. அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? அரசியல்வாதிகள் எங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள் -அது நிறுத்தப்பட வேண்டும்!” என்றார்.

ஆப்கானிஸ்தானில், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. “அரசியல்வாதிகளுக்கு இது நன்றாக தெரியும். அவர்கள் 16 ஆண்டுகளாக நேட்டோ சிப்பாய்களை அனுப்பி வருகிறார்கள். ஒரு பாதுகாப்பான இடமென்றால் அவர்கள் சிப்பாய்களை அங்கே அனுப்பக்கூடாது.” இடது கட்சி உட்பட எல்லா கட்சிகளுமே வெளியேற்றத்தை ஒழுங்கமைத்துள்ளமை குறித்து தெரியுமா என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர், “எனக்கு தெரியும். எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து தான் வேலை செய்கின்றன. அவர்கள் மக்களை போர் பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள், அது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்த தருணத்தில் கூட ஆப்கானிஸ்தானில் மக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். அதுவொரு நரகம்.” என்றார். 

ஒஃபன்பாக் Leibniz பள்ளியின் மாணவர்கள்

ஒஃபன்பாக் Leibniz பள்ளி மாணவர்களின் ஒரு குழு, “ஆப்கானிஸ்தானில் எதுவுமே பாதுகாப்பில்லை" மற்றும் "இங்கே ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறார்கள்" என்று எழுதிய குறிப்பு பலகைகளை ஏந்தி இருந்தது.

“பள்ளியில் எங்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன, அவ்விதத்தில் தான் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நாங்கள் அறிந்து கொண்டோம்,” என்று ஒரு குழுவைச் சேர்ந்த 13 வயது பெண் மாணவி ஒருவர் தெரிவித்தார். அவர் நண்பர் தெரிவிக்கையில், “மக்களை வெளியேற்றுவதை அடிப்படையில் நாங்கள் அநீதியாக கருதுவதால் தான், இங்கே வந்திருக்கிறோம். அவர்கள் பாதுகாப்பானதாக கருதி செல்லும் நாடும், உண்மையில் முற்றிலும் அபாயமானதே. அவர்களை சர்வசாதாரணமாக நாடுகடத்துவது நியாயமில்லை. அவர்கள் இங்கே பள்ளிக்குச் செல்கிறார்கள், நன்கு ஒருங்கிணைந்துள்ளார்கள்; அவர்கள் ஜேர்மனிக்கு ஒரு கௌரவம்!” என்றார்.

பிராங்க்பேர்ட்டின் Goethe பல்கலைக்கழக மாணவர் Melanie கூறுகையில், “நாடுகடத்தலை எதிர்க்க மாணவர்கள் முனைப்பு காட்டியுள்ளார்கள் என்பதாலேயே இங்கே நான் வந்துள்ளேன்,” என்றார். ஒரு இசை ஆசிரியரும் மற்றும் ஒரு மொழிப்பாட ஆசிரியர் இருவரும் இதேயே கூறியதுடன், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதையும் சேர்த்துக் கொண்டனர்.

இளம் தொழிலாளர்களும் அப்போராட்டத்தில் இணைந்தனர். Offenbach குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஒரு பெண் தொழிலாளி நாடுகடத்தல்களுக்கு எதிரான அந்த ஆர்ப்பாட்டத்தை சமூக பிரச்சினைகளுடன் இணைத்து கூறுகையில், ஒன்றிணைந்திருப்பதை அவர் மிகவும் ஆதரிப்பததுடன், "எங்களுக்கு சிறிய பராமரிப்பு மைய குழுக்களும் நிறைய பணியாளர்களும் அவசரமாக தேவைப்படுகிறார்கள்!” என்றார். தன் குழந்தையோடு அங்கே கடந்து சென்று கொண்டிருந்த Sonja என்பவர் கூறுகையில், “எல்லாவற்றிற்கும் முதலாக, அவர்கள் போர்களை நிறுத்தி விட்டு, பொருளாதாரத்தை அதிக சமத்துவமுள்ளதாக ஒழுங்கமைக்க வேண்டும். அத்துடன் இனி ஆயுத ஏற்றுமதியும் இருக்கக் கூடாது! இல்லையென்றால் மக்கள் அகதிகள் ஆகும்போது அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை,” என்றார்.


Edina

பொஸ்னியாவிலிருந்து வந்திருந்த ஒரு மொழி வல்லுனரும் மொழிபெயர்ப்பாளருமான Edina, அவர் மகன் மூலமாக அப்போராட்டம் குறித்து அறிந்து கொண்டார், அவர் மகன் பல ஆப்கான் குழந்தைகள் நாடுகடத்தலின் அச்சுறுத்தலில் உள்ள அதே பள்ளியில் படித்து வருபவராவார். “நானுமே ஓர் அகதி பின்புலத்தைக் கொண்டுள்ளேன்,” என்று Edina தெரிவித்தார். அவர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொஸ்னியா-ஹெர்ஸெகோவினாவிலிருந்து தப்பி வந்தவராவார். “நான் உடனே ஆர்ப்பாட்டத்தை நோக்கி சென்றேன், இது எனக்கு அந்த காலத்தை நினைவூட்டியது. 'இங்கிருந்து வெளியேறுங்கள்!' என்று கேள்விப்படும் போது எவ்வாறு இருக்குமென்பது துல்லியமாக எனக்குத் தெரியும், எங்கே செல்வதென்றே உங்களுக்குத் தெரியாது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்து வருகிறது என்பது நம் எல்லோருக்குமே தெரியும்,” என்றார்.