ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers must demand new elections in Germany!

தொழிலாளர்கள் ஜேர்மனியில் புதிய தேர்தல்களைக் கோர வேண்டும்!

Sozialistische Gleichheitspartei
10 January 2018

கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிகள் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே நிலைமைகளை ஆராய்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், பேர்லினில் உருவாகி வருகின்ற அரசியல் சூழ்ச்சி புதிய கட்டத்திற்கு நுழைந்து வருகிறது. ஆளும் வர்க்கம் மக்களின் முதுகுக்குப் பின்னால், ஹிட்லரின் மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜேர்மனியில் மிகவும் வலதுசாரி அரசாங்கத்தை நிறுவ செயல்பட்டு வருகிறது.

முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் வில்லி பிராண்ட் இல்லத்தில் உள்ள SPD தலைமையகத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் மட்டும் நடக்கவில்லை, ஆனால் பத்திரிகையாளர்கள் புகைப்படங்கள் எடுப்பதை தடுக்கும் வகையிலான கண்ணாடி ஜன்னல்களுக்குப் பின்னால் நடந்தது என்பது விவாதிக்கப்பட்டு வருகின்ற அரசாங்க வேலைத்திட்டம் எந்தளவுக்கு தொழிலாள வர்க்கம் விரோதமாக, இராணுவவாதமாக மற்றும் பிற்போக்குத்தனமாக உள்ளதென்பதை காட்டுகின்றது. . கூட்டரசு தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த 39 பேரும், விடயங்கள் பொதுமக்களுக்கு கசிவதைத் தடுக்க பேட்டிகள் தடைசெய்யப்படுவதிலும் உடன்படுகின்றனர்.

கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள், சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினருக்கு இடையிலான ஆரம்ப கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தவர்கள் விவாதங்களின் போக்கை பகிரங்கப்படுத்தி, பொது பேட்டிகளிலும், கலந்துரையாடல்களிலும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவற்றை குறித்து கருத்து வெளியிட்டதால், அவை நவம்பர் 19 இல் தோல்வி அடைந்தன என்ற உண்மையால், உத்தியோகபூர்வமாக இந்த இரகசியத்தன்மை நியாயப்படுத்தப்படுகிறது.

யதார்த்தத்தில், ஆளும் வர்க்கம் இதுபோன்ற இரகசிய நடவடிக்கைகளில் இறங்குவது ஏனென்றால் அவர்களின் இராணுவவாத கொள்கைகள், உள்நாட்டில் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் சமூக செலவின வெட்டுக்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதை இட்டு அது அஞ்சுகிறது. சமீபத்திய Insa ஆய்வு ஒன்றின்படி, அதற்கு பதிலளித்தவர்களில் வெறும் 30 சதவீதத்தினரே பாரிய-கூட்டணி தொடர்வதை ஆதரிப்பார்கள், அங்கே புதிய தேர்தல்களுக்கு கணிசமான மக்கள் ஆதரவு உள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) புதிய தேர்தல்களுக்கான அதன் அழைப்பைப் புதுப்பிக்கிறது. வலதுசாரி சதிகாரர்களின் ஒரு குழு, மக்களின் எந்தவொரு உத்தரவுமின்றி அதன் வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. புதிய தேர்தல் பிரச்சாரத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சியானது SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினர் உட்பட  முதலாளித்துவக் கட்சிகளின் நிஜமான நோக்கங்களை அம்பலப்படுத்தி, முதலாளித்துவம், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைக்க போராடும்.

கடந்த சில நாட்களில், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அந்த மூன்று கட்சிகளின் தலைவர்கள் ஒரு புதிய வகையான மகா கூட்டணி முந்தைய ஒன்றின் கொள்கைகளை அப்படியே தொடராது, அதன் போக்கு இன்னும் அதிக பிற்போக்குத்தனமாக இருக்குமென்பதை அப்பட்டமாக தெளிவுப்படுத்தி உள்ளனர். மூன்று விடயங்களில் ஒருமுனைப்பு உள்ளது: வெளிநாட்டு கொள்கை மற்றும் இராணுவக் கொள்கை, சிக்கன நடவடிக்கை மற்றும் நலன்புரி வெட்டுக்கள், இரண்டுக்கும் எதிராக எழும் எதிர்ப்பை நசுக்குவதற்காக பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்தை விரிவாக்குவது.

புதிய அரசாங்கத்தில் அவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று வரும் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல், ஒரு பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் வல்லரசு கொள்கைக்காக பிரச்சாரம் செய்து வருகிறார், இந்த வல்லரசு கொள்கையானது ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமல்ல, மாறாக அமெரிக்காவுக்கு எதிராகவும் நோக்கம் கொண்டதாகும்.

காப்ரியேல் கடந்த வாரம் Der Spiegel இல், “அசைவ பிரியர்கள் நிறைந்த ஓர் உலகில்" தங்களை "சைவப் பிரியர்களாக" காட்டிக் கொள்பவர்கள் என்று ஐரோப்பாவை ஒப்பிட்டதுடன், பாரிய மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போர் கொள்கைகளைக் கோரினார். ஜேர்மனியர்கள் இனியும் “உலகில் நமது நலன்களைச் செயலாக்குவதற்காக பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் அனைவருக்கும் மேலாக அமெரிக்கர்களை" சார்ந்திருக்க முடியாது என்றார்.

காப்ரியேல் எப்போதும் சுட்டிக்காட்டும் பிற்போக்கு அரசியல் தத்துவவியலாளர் ஹெர்பிரட் முன்ங்லெர் போலவே, ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தின் "மேலாதிக்க சக்தியாக" மற்றும் "எஜமானர்" ஆகும்போது மட்டும்தான், அதனால் மீண்டுமொருமுறை வல்லரசாக ஆக முடியும் என்று நம்புகிறார். இதுவரையில், அவரும் சரி SPD இன் மற்ற அரசியல்வாதிகளும் சரி ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவரீதியில் பலப்படுத்துவதற்கு வலியுறுத்தி வரும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் நெருக்கமான கூட்டுறவுக்கு அழுத்தமளித்து வந்துள்ளனர்.

இதே தொனியை SPD-ஆதரவு இராஜாங்க விவகார அதிகாரி மிக்கையில் ஸ்ரைய்னரும் Süddeutsche Zeitung இல் நியாயப்படுத்தினார். உலகின் மக்கள்தொகையில் வெறும் ஒரு சதவீதமாக உள்ள ஜேர்மானியர்களின் செல்வ வளம், வெளிநாடுகளுடனான வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது என்று குறிப்பிட்டு அவர் எழுதினார், “சமநிலையோடு நகரும் உலகளாவிய அபிவிருத்திகளை வடிவமைக்கும் ஒரு சக்தி வாய்ந்த, மதிப்பார்ந்த உலகப் பாத்திரமாக ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு தேவைப்படுகிறது.” “ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் இணைந்து செயல்படுவதற்குரிய பகுதிகளில்", ஸ்ரைய்னர் குறிப்பிட்டார், “முதலாவது பாதுகாப்பு: நெருக்கமான இராணுவ தொடர்புகள், பொலிஸ் கூட்டுறவு மற்றும் கூட்டு எல்லை பாதுகாப்பு… இரண்டாவது, வணிகம் மற்றும் நிதி… அடுத்து மூன்றாவது, வெளிநாட்டு கொள்கை.”

கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் (CSU) கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஒரு பிரிவும் அதிக "தேசிய இறையாண்மையை" வலியுறுத்துகின்ற நிலையில், ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் வலதுசாரி அரசாங்கங்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற நிலையில், ஐரோப்பிய பிரச்சினை மீது அங்கே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இவை இயல்பில் தந்திரோபாயம் சம்பந்தமானவையே. இதில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் ஜேர்மன் இராணுவம் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தின் பாரிய மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் குறித்த அடிப்படை கேள்வியில் உடன்படுகின்றனர்.

இதே இது முன்னாள் CDU நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள இன் சிக்கன கொள்கைகளைக் கடைபிடிப்பதிலும் பொருந்துகிறது, இக்கொள்கைகள் கிரீஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் மட்டுமல்ல, மாறாக ஜேர்மனியிலும் கூட ஒரு சமூக சீரழிவை உண்டாக்கி உள்ளன. ஜேர்மனியில் சமூக சமத்துவமின்மை 1913 க்குப் பின்னர் அதன் அதிகபட்ச மட்டத்தில் உள்ளது மற்றும் வறுமை மற்றும் வீடற்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற நிலையில், அனைத்து கட்சிகளும் சிக்கன நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளன. அதே நேரத்தில், அவை வரி வெட்டுக்களுக்கும் மற்றும் இராணுவ செலவினங்களைப் பாரியளவில் அதிகரிப்பதற்கும் திட்டமிட்டு வருகின்றன, இவற்றுக்கு சமூக செலவினங்களை இன்னும் வெட்டுவதன் மூலமாக மட்டுமே நிதியளிக்க முடியும்.

டொனால்ட் ட்ரம்ப் இன் "அமெரிக்கா முதலில்" கொள்கை மற்றும் சீனாவுடன் அதிகரித்து வரும் போட்டித்தன்மைக்கு விடையிறுக்கையில், மிகப்பெரும் பெருநிறுவனங்கள் பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் கூலி வெட்டுக்களின் ஒரு புதிய அலையைத் தொடங்கி உள்ளன. சீமென்ஸ், தைஸ்சென்குரூப் (ThyssenKrupp), பொம்பார்டியர் (Bombardier), ஏர் பேர்லின், ஓப்பெல் மற்றும் ஜேர்மன் வங்கி (Deutsche Bank) ஆகியவற்றில் ஏற்கனவே பத்தாயிரக் கணக்கான வேலைகள் வெட்டப்பட்டு வருகின்றன.

ஜேர்மனி எங்கிலும் தொழிலாளர்களின் போர்க்குண அலை அதிகரித்து வருவதற்கு மத்தியில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 3.9 மில்லியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர், உலோகத்துறை மற்றும் பொறியியல் தொழில்துறைகளில் இவ்வாரம் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இது பெப்ரவரி தொடக்கத்தில் இன்னும் பெரிய வேலைநிறுத்தமாக அபிவிருத்தி அடைவதற்கான அறிகுறிகள் உள்ளன.

தொழிலாள வர்க்க போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன —பரந்த மக்கள் இராணுவவாதத்தை நிராகரிக்கின்றனர்— என்ற காரணத்தினால் தான் CDU/CSU மற்றும் SPD இரண்டுமே உள்நாட்டடு அரசியலில் வலதை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பத்தைக் கோரி வருகின்றன. வன்முறையான வர்க்க மோதல்களை அனுமானித்து பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பாரியளவில் அபிவிருத்தி செய்ய விரும்பும் அவை, வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AFD) கோஷங்களை ஏற்று வருகின்றன, இக்கட்சி ஹிட்லரின் வீழ்ச்சியின் ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மீண்டும் நுழைந்துள்ளது.

“அடையாளம்,” (identity) “தலையாய கலாச்சாரம்" (Leitkultur) மற்றும் "தாய்நாடு" (Heimat) போன்ற வலதுசாரிகளுடன் அடையாளம் காணப்படும் கோஷங்கள் SPD இன் வேலைத்திட்டத்திற்குள் அவற்றின் வழியைக் காண வேண்டுமென சிக்மார் காப்ரியேல் கோரி வருகிறார். வைய்மர் குடியரசில் தேசிய சோசலிசத்தின் (நாஜிசம்) சித்தாந்த முன்னோடிகளின் வழியில், முன்னணி CSU அரசியல்வாதி அலெக்சாண்டர் டோபிரிண்ட் ஒரு "பழமைவாத புரட்சியை" கோரி வருகிறார். அவர் கட்சியின் சக உறுப்பினரும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பழமைவாத EPP தலைவருமான மன்பிரேட் வேபர்  சமீபத்திய CSU கூட்டத்தில் கூறுகையில், “2018 இல், அகதிகள் பிரச்சினைக்கான இறுதித்தீர்வே ஐரோப்பிய விடயங்களின் மையத்தில் இருக்கும்,” என்றார், இவ்வாறான வார்த்தை பிரயோகம் தெளிவாக  ஹிட்லரின் "யூத பிரச்சினைக்கான இறுதி தீர்வை" நினைவூட்டுகிறது.

நீண்டகாலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டதாக கருதப்படும் அரசியல் பாரம்பரியங்களுக்கு ஸ்தாபக கட்சிகள் மூச்சடைக்கும் வேகத்தில் திரும்பி வருகின்றன. இது இடது கட்சியின் தலைமைக்கும் பொருந்தும். அதன் நாடாளுமன்ற குழு தலைவர் டீட்மார் பார்ட்ஸ் வெளிப்படையாகவே காப்ரியலின் வல்லரசு அரசியலை ஆதரிக்கிறார், சாரா வாகென்கினெக்ட் மற்றும் ஒஸ்கார் லபொன்டைன் ஐ சுற்றி உள்ள பிரிவு நீண்டகாலமாகவே அகதிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறது மற்றும் எல்லைகளை மூடுமாறு அறிவுறுத்தி வருகிறது.

இந்த வலதுசாரி சூழ்ச்சிகளை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். புதிய தேர்தல்களில், அது முதலாளித்துவ கட்சிகளின் பிற்போக்குத்தனமான தந்திரங்களை அம்பலப்படுத்தவும், போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடவும் மற்றும் தற்போதைய சமூக ஒழுங்கமைப்பு தன்னை காண்கின்ற முட்டுச்சந்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு சோசலிச வழியை வழங்குவதற்கும் எல்லா வழிவகைகளையும் அணிதிரட்டும்.