ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: SEP holds first local election meeting in plantation area

இலங்கை: சோ.ச.க. பெருந்தோட்டப் பகுதியில் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் கூட்டத்தை நடத்தியது

By our correspondents 
19 January 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, மத்திய மலையக பிரதேசமான ஹட்டனில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கினிக்கத்தேனவில் இந்த வாரம் நடத்தியது. பெப்ரவரி 10 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் சோ.ச.க. போட்டியிடுகின்ற அம்பகமுவ பிரதேச சபைக்குள் கினிகத்தேனவும் அடங்கும்.

அம்பகமுவ பிரதேச சபைக்கு அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தலைமையில் 24 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. கொழும்பிற்கு கொலன்னாவை மற்றும் வடக்கில் ஊர்காவற்துறையிலும் சோ.ச.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜனவரி 13 கூட்டத்திற்கு முன்னதாக, சோ.ச.க. உறுப்பினர்கள் இப்பகுதியில் கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி, வலுவாக பிரச்சாரம் செய்திருந்தனர். பிரச்சாரகர்கள் சுமார் 4,500 துண்டு பிரசுரங்களை. பொலிபிட்டிய, லக்ஷபான, வட்டவல மற்றும் கினிகத்தேன பிரதேசங்களிலும் கென்வில்வேர்த், கரோலினா மற்றும் லொனாக் போன்ற தோட்டங்களிலும் விநியோகித்தனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க. உறுப்பினர் பாலித்த அத்தபத்து, ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் எதிராக ஒரு சர்வதேச சோசலிச முன்நோக்கு மற்றும் தலைமைத்துக்காக போராடுவதற்கான அவசியத்தை விளக்குவதற்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தை கட்சி பயன்படுத்திக்கொள்கின்றது என்று வலியுறுத்தினார். "2018 ஆம் ஆண்டு, சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சியடைவதை குறிக்கின்றது. தொழிலாள வர்க்க எழுச்சிக்கு மறுபக்கம் இந்த வருடம் கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆவது ஆண்டை குறிக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு சோசலிச மாற்றீடு மட்டுமே ஒரே வழி", என அத்தபத்து தெரிவித்தார்.

முதலாவது பேச்சாளர் தேவாராஜா, இலங்கையில் வளர்ந்துவரும் சமூக அமைதியின்மையானது உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலின் ஒரு பாகமே என்று விளக்கினார். மின்சாரம், துறைமுகம், தபால் மற்றும் ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

பெருந்தோட்டங்களில் நடந்த போராட்டங்களின் அனுபவங்களை தேவராஜா விளக்கினார். "2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், ஊதிய அதிகரிப்பு கோரியும் உற்பத்தி அதிகரிப்பை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர்.

"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் அவர்களை காட்டிக்கொடுத்தன. உண்மையில், அவை தொழிலாளர்கள் மீது கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் திட்டங்களை திணிக்கின்றன."

NUW, DWC மற்றும் ம.ம.மு. தலைவர்கள் அரசாங்க அமைச்சர்களாக உள்ளனர், மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சேர்ந்துள்ளது என தேவராஜா குறிப்பிட்டார். "சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய தலைமை தொழிலாளர்களுக்கு வேண்டும். அதற்காகவே நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்" என அவர் முடித்தார்:

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான உரையை ஆற்றினார். அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் போலி-இடது குழுக்களும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டங்கள் சம்பந்தப்பட்ட மைய அரசியல் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றன, எனக் கூறி உரையை தொடங்கினார்.

சுமார் 200,000 பேர் கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் பலம்வாய்ந்த வேலைநிறுத்தம் அல்லது தபால், துறைமுகங்கள், மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் பற்றி இந்த கட்சிகள் எதுவும் கூறுவதில்லை. இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கு பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

சிறிசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை சுரண்டிக்கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான முழக்கமாக தூக்கிப் பிடித்த ஊழலுக்கு எதிரான போலிப் போராட்டத்தைப் பற்றி தீவு பூராவும் தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசித் திரிகின்றார், என டயஸ் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி பற்றி 2015 பொதுத் தேர்தலில் அவர் கொடுத்த அதே போலி வாக்குறுதிகள் பொதியை விற்று, தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். இந்த இரு கட்சிகளும் கூட்டாக அரசாங்கத்தை நடத்துவதோடு, அனைத்து ஊழல்களுக்கும் போலி வாக்குறுதிகளுக்கும் சம பொறுப்பைக் கொண்டுள்ளன.

"ஒரு ஊழல் இல்லாத முதலாளித்துவ அமைப்புமுறையை" நடத்த முடியும் என்ற மோசடியான கூற்றுக்கு வாக்களிக்குமாறு மற்றொரு முதலாளித்துவக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கேட்கின்றது என டயஸ் சுட்டிக் காட்டினார். "அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களை நடத்த அனுமதித்தால் பணத்தை சேமித்து, மன்றங்களை இலாபமாக இயக்க முடியும் என்பதை நிரூபிப்போம் எனக் கூறுகின்றனர்” என அவர் மேலும் கூறினார்.

பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்களைப் போலவே தீவின் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போலி-இடது குழுக்களும் அதிகாரத்திற்கு வருவதற்கு தாம் உதவிய அரசாங்கத்திற்கு ஆதரவு தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கின்றன.

“இந்த தேர்தல் பிரச்சாரம் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் எரியும் ஜனநாயக மற்றும் சமூக பிரச்சினைகளில் இருந்து எந்தளவு தூர விலகி இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது,” என டயஸ் மேலும் கூறினார். “வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்களின் தோற்றுவாயான சீரழிந்து போன முதலாளித்துவ இலாப முறைமையை மாற்றீடு செய்யும் ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை கலந்துரையாடும் ஒரு களமாக இந்த தேர்தல் பிரச்சாரம் மாற்றப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே வலியுறுத்துகின்றது….

“அதன் அடிப்படை முரண்பாடுகள் காணமாக முதலாளித்துவம் உலக ரீதியில் பொறிந்து விழும் நிலையில் உள்ளது.  முந்தைய முதலாளித்துவ வீழ்ச்சி காலத்தில் உலக யுத்தங்களின் மிலேச்சத்தனமா அல்லது சோசலிசப் புரட்சியா என்ற கேள்வியே மனித குலத்தின் முன் தோன்றியது. இந்தக் கேள்விக்கு ஒரு புரட்சிக மார்சிய இயக்கத்தினால் மட்டுமே பதில அளிக்கவும் தொழிலாள வர்க்கத்தை தயார் செய்யவும் முடியும். இது முதலாம் உலகப் போருக்கு முடிவு கட்டிய 1917 அக்டோபர் புரட்சிக்கு பல கோடி வெகுஜனங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் அணி திரட்டி ஒரு சோசலிச வேலைத் திட்டத்தித்தின் அடிப்படையில் ரஷ்யத் தொழிலாளர்களை வழிநடத்திய லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் நிரூபிக்கப்பட்டது.

“எமது உலகக் கட்சி அந்த புரட்சிக பாம்பரியத்தை பிரதிநிதிதுவம் செய்கின்றது. இதனாலேயே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகின்றது. யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசுவதே ஆகும்…

“அனைத்துலக சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பற்காக ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்காக சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு நாம் பெருந்தோட்டங்களில் உள்ளவர்கள் உட்பட உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் அனைத்துப் பகுதியினுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.”

சோவியத் ஒன்றித்தில் பின்ன் தலை தூக்கிய ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால், உலக சோசலிசத்துக்காகப் போராடும் 1917 புரட்சியின் முன்நோக்கை காட்டிக்கொடுக்கப்பட்டதாக பேச்சாளர் விளக்கினார்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்காகா ஒரு புதிய பரம்பரை புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு 1938ல் நான்காம் அகிலத்தை ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்தார். “அந்தப் போராட்த்தின் தொடர்ச்சியை நாமே பிரதிநிதித்துவம் செய்கின்றோம்… இதனாலேயே சோசலிச சமத்துவக் கட்சி சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதன் ஊடாக இன்னொரு உலகப் போரை நிறுத்தும் இன்றியமையாத பிரச்சினையைச் சூழ தனது அரசியல் வேலைகள் அனைத்தையும் மையப்படுத்தியுள்ளது.”

கூட்டத்தின் பின்ன் 43 வயது வியாபாரியான அருணாச்சலம் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “உண்மையான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் பங்குபற்றியது இதுவே முதல் முறை. நான் பல்வேறு டசின் கணக்கான கட்சிகளை பார்த்துள்ளேன். அவை அனைத்தும் வாக்குறுதிகளை கொடுக்கின்றன. ஆனால் அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அநேகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது வாக்குறுதிகளுக்கு எதிரானதாகவே இருக்கின்றது.”

ஹட்டனில் இருந்து வந்த ஒரு தோட்டத் தொழிலாளி கூறியதாவது: “நான் இ.தொ.கா. மற்றும் NUW கூட்டத்தை தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் NUW தலைவர் பி. திகாம்பரமும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்திக்கொள்கின்றனர். அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை. இரு தொழிற்சங்கங்களும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மட்டுமே பேச்சாளர்கள் உலகப் போர் அச்சுறுத்தல் பற்றியும் இந்த நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினர்.”