ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Working-class opposition erupts in Iran: A harbinger for the world in 2018

ஈரானில் தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடிக்கிறது: 2018 இல் உலகம் எவ்வாறிருக்கப்போகின்றது என்பதற்கான ஒரு முன்னறிவிப்பு

Keith Jones
4 January 2018

நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டும் மூர்க்கமாக சுரண்டப்பட்டும் வந்த ஈரானிய தொழிலாள வர்க்கம், ஈரானிய முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியை உலுக்கி களத்தில் இறங்கியுள்ளது.

பத்தாயிரக் கணக்கானவர்கள், டிசம்பர் 28 இல் இருந்து, இஸ்லாமிய குடியரசின் ஒடுக்குமுறை எந்திரத்திற்கு அறைகூவல் விடுத்து, நாடெங்கிலுமான நகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் வீதிகளில் இறங்கி உள்ளனர். உணவு விலை உயர்வுகள், பாரிய வேலைவாய்ப்பின்மை, விரிந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்பட்டு வரும் சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் ஆளும் உயரடுக்கின் சார்பில் சீர்குலைக்கப்பட்டு  உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முற்றிலும் அலட்சியம் காட்டும் ஒரு போலி-ஜனநாயக அரசியல் அமைப்புமுறை ஆகியவற்றின் மீதான அவர்களது கோபத்திற்கு குரல் கொடுப்பதற்காக இதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தின் அளவும் தீவிரமும், அரசாங்கத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த எதேச்சதிகார அரசியல் அமைப்புமுறைக்கும் சவால் விடுத்து அது விரைவாக கோஷங்களைத் தழுவும் விதமும், ஈரானிய அதிகாரிகளையும், மேற்கத்திய பார்வையாளர்களையும் ஒருசேர அதிர்ச்சியூட்டி உள்ளன. ஆனால், இதற்கு முன்னரே பல மாதங்களாக அங்கே வேலை வெட்டுக்கள் மற்றும் ஆலைமூடல்கள் மற்றும் கூலிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படாததற்கு எதிராக தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டங்கள் வெடிப்பதற்கு சற்று முந்தைய நாட்களில், ஈரானின் உயர்மட்ட 1 மற்றும் 10 சதவீதத்தினருக்கும், வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையில் வாழும் பாரிய பெருந்திரளானவர்களுக்கும் இடையே எப்போதும் ஆழமடைந்து வருகின்ற பிளவு குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. அரசாங்கத்தின் சமீபத்திய சிக்கன கொள்கை வரவுசெலவு கணக்கு, மக்கள் அதிருப்தியின் இந்த வெடிப்புக்கு தூண்டுதலாக இருந்தது. இந்த வரவு-செலவு திட்டம் சாமானிய ஈரானியர்களுக்கான வருவாய் உதவிகளை மேற்கொண்டும் வெட்டும் என்பதோடு, எரிவாயு விலைகளை ஏறத்தாழ 50 சதவீதத்திற்கு உயர்த்துவதாகவும், வளர்ச்சி செலவினங்களைக் குறைப்பதாகவும் இருந்தது, அதேவேளையில் ஷியா மதகுருமார் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திரண்டிருக்கும் பெரும் தொகைகளை இன்னும் அதிகரிக்கும்.

நேற்று, தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு படைகளது அணிதிரள்வு, மக்கள் மீதான கைது நடவடிக்கைகள், மற்றும் குறைந்தபட்சம் 21 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான இரத்தந்தோய்ந்த மோதல்கள் நடந்து ஒரு சில நாட்களுக்குப் பின்னர், இஸ்லாமிய புரட்சிப் படையின் தலைவர் தளபதி மொஹம்மத் அலி ஜாஃபரி கிளர்ச்சி முடிந்துவிட்டதாக அறிவித்தார்: “ஆட்சி விரோத போராட்டங்கள் முடிந்துவிட்டன என்பதை இன்று எங்களால் அறிவிக்க முடியும்.”

இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள், தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான கலகம் தூண்டும் முனைவின் பாகமாக, வாஷிங்டனும் மற்றும் அதன் பிரதான பிராந்திய கூட்டாளிகளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவும் போராட்டங்களில் சூழ்ச்சிகள் செய்தன என்ற பொருத்தமற்ற வாதங்களைக் கொண்டு அவர்களின் மூர்க்கமான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.

தற்போதைய போராட்டங்கள் 2009 பசுமை கட்சி இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டங்களைப் போல அதே விதத்தில் உள்ளன என்ற வாதம், ஒரு பெரிய குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான ஓர் அடிப்படை மோசடியாக உள்ளது. 2009 ஈரானிய ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளுக்கு பசுமை இயக்கம் விடுத்த சவால், நீண்டகாலமாக தயாரிப்பு செய்யப்பட்டு வந்த ஓர் அரசியல் நடவடிக்கை, அது உக்ரேன், ஜோர்ஜியா, லெபனான் மற்றும் பிற இடங்களிலும் அமெரிக்கா முடுக்கி விட்ட "வண்ணப் புரட்சிகளின்" அதேபோன்ற வடிவத்தைத் தொடர்ந்தது. அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் விரைவாக சமரசத்தை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருந்த ஈரானிய உயரடுக்கின் அந்த கூறுபாடுகளை அதிகாரத்திற்கு கொண்டு வர நோக்கம் கொண்டிருந்தது. அது அதன் பெரும் ஆதரவை ஏறத்தாழ பிரத்யேகமாக மிகவும் தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளில் இருந்து பெற்றிருந்தது, இந்த அடுக்குகள் வெகுஜனவாத ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மதினிஜத் ஏழைகளுக்காக பணத்தை "வாரியிறைக்கிறார்" என்ற நவ-தாராளவாத கண்டனங்களின் அடிப்படையில் அணித்திரண்டிருந்தன.

ஈரானிய ஆட்சிக்கு முன்நிற்கும் இப்போதைய சவால் முற்றிலும் வித்தியாசமான தன்மையது. இது சிறிய தொழில்துறை நகரங்கள் மற்றும் மாவட்ட சிறுநகரங்கள் உள்ளடங்கலாக தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி உள்ளது; இது 40 சதவீதம் அல்லது அதற்கும் அதிகளவில் வேலை வாய்ப்பின்மையை முகங்கொடுக்கும் இளைஞர்களிடம் இருந்து அதன் மிகப்பெரும் ஆதரவைப் பெறுகிறது; இது சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பால் உந்தப்படுகிறது.

நடப்பு போராட்டங்களின் இந்த அலையின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், ஈரானில் வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் தொடங்கி உள்ளது, இது வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இன்னும் கட்டவிழும். நிச்சயமானது என்னவென்றால், களத்தின் நடுவில் தனது வேட்கையைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தை விரைவாகவோ அல்லது அத்துணை எளிதாகவோ மௌனமாக்கிவிட முடியாது.

ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி வெறுமனே ஈரானிய உயரடுக்கை மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலுமான அரசாங்கங்களின் கணக்கீடுகளை ஏற்கனவே நிலை தடுமாற செய்துள்ளது. ட்ரம்பின் முஸ்லீம்களுக்கு எதிரான பயணத் தடை ஈரானியர்களை இலக்கில் வைத்துள்ள நிலையில், அவர் தெஹ்ரானை பூதாகரமாக காட்டவும் மற்றும் அவ்விதத்தில் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளுக்கு சாக்குபோக்குகளைப் பெறுவதற்கும் அப்போராட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையில், பாசாங்குத்தனமாக மற்றும் அர்த்தமற்ற விதத்தில் அப்போராட்டங்களுக்கு தனது "ஆதரவை" கூறியிருந்தார். ஐரோப்பிய சக்திகளோ அதிகமாக எச்சரிக்கை அடைந்துள்ளன, எண்ணெய் சலுகைகள் மற்றும் மலிவு உழைப்பை ஈரானிய அரசாங்கம் வழங்க முன்வந்திருப்பதைக் கொண்டு இலாபமடையலாம் என்ற அவர்களின் திட்டங்களை இப்போராட்டங்கள் குறுக்காக வெட்டுகின்றன என்பதனால் மட்டுமல்ல. ஈரானிலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அதிகரித்து வரும் வர்க்க போராட்டத்தின் நிலைகுலைக்கும் தாக்கம் குறித்து அவை அஞ்சுகின்றன.

மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியலில் ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் மீள்வரவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, இதை வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்து பார்ப்பது அவசியமாகிறது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆதரவில் இருந்த ஷாவின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி வீசிய 1979 ஈரானிய புரட்சி, பாரியளவிலான, தொழிலாள வர்க்க தலைமையிலான, ஏகாதிபத்திய எதிர்ப்பிலான ஒரு சமூக வெடிப்பாக இருந்தது. அதிகரித்து வந்த அரசியல் வேலைநிறுத்தங்களின் ஓர் அலைதான் ஷா ஆட்சியின் முதுகெலும்பை முறித்தது. அதை தொடர்ந்து வந்த மாதங்களில், தொழிலாளர்கள் ஆலைகளைக் கைப்பற்றி, அவற்றை தொழிலாளர் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஆனால் ஈரானிய முதலாளித்துவத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து கிராமப்புற உழைப்பாளர்களுடனான கூட்டுடன் தொழிலாளர்களின் குடியரசை ஸ்தாபிக்க இருந்த ஒரு சமூக புரட்சி, பெயரளவில் சோசலிச அமைப்புகள் என்று கூறிக் கொண்டவைகளால், அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிச ரூடேஹ் கட்சியால் (Tudeh Party) தடுக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த ரூடேஹ் கட்சி மதச்சார்பின்மை மற்றும் புரட்சிகர சோசலிசத்தின் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டிருந்தது. ஆனால் பல தசாப்தங்களாக அது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கையாலாகாத தாராளவாத பிரிவை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தது, பின்னர் 1979 இல் அயெத்துல்லா கொமேனி தான் முதலாளித்துவத்தின் "முற்போக்கான" பிரிவிற்கும் மற்றும் ஒரு "தேசிய ஜனநாயக" (அதாவது முதலாளித்துவ) புரட்சியை முன்னெடுப்பதற்குமான அரசியல் தலைவர் என்ற அடித்தளத்தில், அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அதனை சுற்றிவந்து கொண்டிருந்தது.

இந்த முதிய ஷியா மதகுரு நீண்ட காலமாக அரசியலில் முக்கியத்துவமற்ற நபராக இருந்தவர் என்றாலும், ஸ்ராலினிசவாதிகள் உருவாக்கிய அரசியல் வெற்றிடத்தைச் சுரண்டியும், ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய பிரிவின் கோட்டையாக விளங்கிய நகரவியாபார தெருக்களில் மற்றும் ஷியா மதகுருமார்களுக்கு இடையே நீண்டகால தொடர்புகளை வைத்திருந்ததில் இருந்தும், இவரால் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே ஒரு பெருந்திரளானவர்களை ஈர்க்க முடிந்திருந்தது.

ஷா தூக்கியெறியப்பட்டதைப் பின்தொடர்ந்து, ஸ்ராலினிஸ்டுகளால் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் பலவீனமாக்கப்பட்டிருந்த நிலையில், கொமேனியால் மக்கள் இயக்கத்தை தந்திரமாக கையாளவும் திசை திருப்பவும், அதேவேளையில் அரசு எந்திரத்தை மீள ஒழுங்கமைக்கவும் முடிந்ததுடன், பின்னர் ரூடேஹ் கட்சி உட்பட அரசியல் இடது மீதான மூர்க்கமான ஒடுக்குமுறை மற்றும் சுயாதீனமான எல்லா தொழிலாளர் அமைப்புகளையும் அழித்தமை என இவற்றின் மூலமாக முதலாளித்துவ ஆட்சியை அவரால் மறுஸ்திரப்பாடு செய்ய முடிந்தது.

இந்த அபிவிருத்திகள் ஒரு பரந்த நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகவும் அதனுடன் ஒருங்கிணைந்ததாகவும் இருந்தன. இந்நிகழ்ச்சிப்போக்கில் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டுக்கொடுப்புகளின் காரணமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் உள்ளடங்கலாக காலனித்துவத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் இயக்கங்களில் அதிகரித்து வந்த நெருக்கடியினாலும், மற்றும் முதலாளித்துவ-ஜனநாயக வேலைத்திட்டங்களை அவற்றால் பூர்த்தி செய்ய முடியாததாலும்  அதிலிருந்து இஸ்லாமிய சக்திகளால் அரசியல் ரீதியில் இலாபமடைய முடிந்தது.

1989 இல் அவர் மரணம் அடைவதற்கு முன்னர், கொமேனி சர்வதேச நாணய நிதியத்தை நோக்கியும் மற்றும் "பெரிய சாத்தான்", அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கியும் திரும்பி, இஸ்லாமிய குடியரசை மேற்கொண்டும் வலதுநோக்கி திருப்புவதை மேற்பார்வையிட்டார். இது அதற்கு முந்தைய ஆண்டு இடதுசாரிகள் மீதான இன்னும் அதிக வெறித்தனமான தாக்குதலில் தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது, அதில் ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த மூன்று தசாப்தங்களின் போக்கில், “சீர்திருத்தவாதிகள்" என்றழைத்து கொள்பவர்கள் மற்றும் அஹ்மதினிஜத் போன்ற ஷியா வெகுஜனவாதிகள் உட்பட அரசியல் உயரடுக்கின் வெவ்வேறு கன்னைகள் ஈரானிய அரசாங்கத்திற்குத் தலைமை கொடுத்துள்ளன. இவை அனைத்துமே 1979 புரட்சியை அடுத்து உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளை அடுத்தடுத்து பறித்துக் கொண்டதுடன், தொழிலாள வர்க்கத்தைக் கடுமையாக ஒடுக்கின.

மேற்கத்திய பத்திரிகைகள் நீண்ட காலமாகவே ஈரானிய அரசியல் மற்றும் சமூக வாழ்வை இழிவுபடுத்த முனைந்து வந்துள்ளது. ஆனாலும் அதன் மையத்தில், ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் அனுபவம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் அனுபவங்களையே பிரதிபலிக்கிறது, உலகெங்கிலுமான தொழிலாளர்களும் பல தசாப்தங்களாக அவர்களது சமூக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதலை முகங்கொடுத்துள்ளனர் என்பதோடு, அரசியல்ரீதியில் முற்றிலும் உரிமை இழக்கச் செய்யப்பட்டுள்ளனர். 

2008 நெருக்கடிக்கு விடையிறுப்பாக, முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய விடையிறுப்பு இந்த வர்க்க போரைக் கடுமையாக தீவிரப்படுத்துவதாக இருந்துள்ளது. படுமோசமான வேலை நிலைமைகள், சிதைந்து வரும் பொதுச் சேவைகள், முன்னொருபோதும் இல்லாதளவில் சமூக சமத்துவமின்மை, அரசியல் வாழ்விலிருந்து விலக்கப்பட்டிருப்பது மற்றும் ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தல் என இதுவே உலகெங்கிலுமான பாரிய தொழிலாளர்களின் நிலைமையாக உள்ளது.

ஆனால் வர்க்க போராட்டங்களை நசுக்க கூடிய காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் ஒரு நாடு மாறி இன்னொரு நாட்டில், முதலாளித்துவ வர்க்கம் எவற்றைக் கொண்டு அதன் விவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளதோ, அதற்கும் மேலாக எவற்றைக் கொண்டு வர்க்க போராட்டங்களை நசுக்கி வந்துள்ளதோ, அந்த ஸ்தாபக இடது கட்சிகள் மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் உட்பட, கட்சிகளும், அமைப்புக்களும், அரசியல் இயங்குமுறைகளும் உடைந்து வருகின்றன.

ஈரான் சம்பவங்கள் மத்திய கிழக்கு எங்கிலும் அதிர்வலைகளை உண்டாக்கும், அங்கே தொழிலாள வர்க்கம் மதசார்பற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுடன் மட்டுமல்ல, மாறாக எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் துருக்கியில் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி உட்பட இஸ்லாமிய அரசியலின் பல்வேறு வடிவங்களுடனும், பல தசாப்த கால கடுமையான அனுபவங்களின் ஊடாக கடந்து வந்துள்ளது.

அப்பாவியைப் போல ட்ரம்ப் ஈரான் அநீதி குறித்து ட்வீட்டரில் எழுதுகின்ற வேளையில், அமெரிக்க தொழிலாளர்கள் ஈரானிய தொழிலாளர்களின் சூழ்நிலையிலிருந்து தங்களின் சூழல் எந்தளவுக்கு வித்தியாசப்பட்டிருப்பதாக கருதுவார்கள்? கடந்த மாதம் சமூக செலவினங்களைக் குறைத்த அதேவேளையில் முல்லாஹ்களுக்கு கூடுதலாக பணத்தை வாரி வழங்கிய ஒரு வரவு-செலவு திட்டத்தை ஈரானிய அரசாங்கம் முன்வைத்த அதேவேளையில்தான், அமெரிக்க காங்கிரஸ் கூடுதல் வரி குறைப்புக்கள் மூலமாக செல்வந்தர்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ட்ரில்லியன்களை வழங்கியது. இந்த வரி குறைப்புக்கள் இப்போது சமூக பாதுகாப்பு, மருத்துவ கவனிப்பு மற்றும் பிற முக்கிய சமூக உரிமைகள் மீதான ஒரு பாரிய தாக்குதல் மூலமாக ஈடுகட்டப்படவுள்ளன.

ஈரான் சம்பவங்கள், உலகெங்கிலும் தொழிலாள-வர்க்க போராட்டத்தின் பரந்த வெடிப்புக்கு ஒரு முன்னறிவிப்பாக உணரப்பட வேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் தேவைகள், அபிலாஷைகள் மற்றும் போராட்டத்தின் தர்க்கத்தைப் புரிந்து கொண்டு ஆயுதபாணியாகி போராடுவதை நோக்கி, இந்த இயக்கத்தை திருப்புவதே புரட்சிகர சோசலிஸ்டுகளின் பணியாகும். முதலாளித்துவம் சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமற்றது. உலகின் செல்வ வளங்களை உற்பத்தி செய்யும் வர்க்கமான உழைக்கும் மக்கள், சமூகத்தை சோசலிச மறுஒழுங்கமைப்பு செய்வதற்கும், போரை நாடும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கும், தொழிலாளர்களின் அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்க, நாட்டு எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து தங்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.