ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Fourteen die in Mumbai fire

இந்தியா : மும்பை தீ விபத்தில் பதினான்கு பேர் பலி

By Rohantha De Silva
3 January 2018

கடந்த வார இறுதியில், இந்திய நிதி மையம், மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கிவந்த “1 Above” மது-உணவகத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கருகி சாம்பலாகியதில் குறைந்தபட்சம் 14 பேர் பலியானதோடு, மற்றுமொரு 21 பேர் படுகாயமடைந்தனர். பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் கொண்டுள்ள அலட்சியத்தை இந்த துயரமிக்க நிகழ்வு மேலும் எடுத்துக்காட்டுகிறது.

கமலா மில்ஸ் வளாகத்தில் ஒரு வணிக கட்டிடத்தில் டிசம்பர் 29 அன்று இரவு முற்பகுதியிலேயே தீ பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. இருப்பினும், தீயணைப்புத் துறைக்கு சுமார் 3 மணியளவில் தான் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், பல பெருவணிக அலுவலகங்களும், உயர்மட்ட வர்க்கத்தினரின் இரவு வாழ்விடங்களாக இருக்கும் உயர் தர விடுதிகள் (pubs) மற்றும் உணவகங்களும் இயங்குகின்றன.

குஷ்பூ மேதா பன்சாலி என்ற 29 வயதான இளம் பெண் அவரது பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இத்தீவிபத்தில் அவர் உட்பட 11 பெண்கள் பலியாகியுள்ளனர். தங்களது அத்தையை தீயிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் உணவகத்திற்குள் மீண்டும் நுழைந்த இரண்டு அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்திருந்தவர்களும் தீயில் சிக்கி இறந்து போயினர். அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் வெளியேறும் வழி எதையும் கண்டறிய முடியாமல் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி அறிக்கைகளின்படி, 1 Above உணவக மேல் தளத்தில் பற்றிய அந்த தீ அருகிலுள்ள Mojo Bistro உணவகத்திற்கும் பரவியுள்ளது. மூங்கில் மற்றும் எளிதில் தீப்பற்றும் பிற பொருள்களினாலும், இரண்டு உணவகங்களிலும் இருந்த தார்ப்பாய்கள் மற்றும் செயற்கை பூக்கள் போன்றவற்றினாலும் தீவிரமாக பரவிய தீ ஒட்டுமொத்த கட்டிடத்தையும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் மூழ்கடித்திருந்தது.       

அந்த கட்டிடத்தில் இயங்கிவந்த, மூன்று தேசிய செய்தி ஊடகங்கள் உட்பட பல ஊடக அலுவலகங்கள் இவ்விபத்தில் சேதமடைந்துள்ளன. மக்கள் வேலை செய்துகொண்டிருக்கும் பகல் நேரத்தில் இந்த தீவிபத்து நிகழ்ந்திருக்குமானால், இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.

சமீபத்திய மாதங்களில் இரண்டு உணவகங்களுக்கும் பாதுகாப்பு மீறல் அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் அவற்றை தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளனர்.

மும்பையை தலைநகரமாக கொண்ட மகாராஷ்ட்ர மாநிலத்தின், பாரதிய ஜனதாக கட்சி (BJP) முதலமைச்சர் தேவேந்திர பத்நவிஸ், இந்த சம்பவத்திற்கு பொறுப்பாளி யாரென்று கண்டறிய ஒரு விசாரணையை மேற்கொள்ளும்படி மும்பை நகராட்சி ஆணையர் அஜோய் மேதாவிற்கு உடனடியாக ஆணையிட்டுள்ளார்.

முந்தைய உத்தியோகபூர்வ விசாரணைகளின் முடிவுகளை பார்த்தால், இந்த விவகாரத்தில் ஒருசில பலிகடாக்களை குற்றம்சாட்டி சிக்கவைக்கும் அதேவேளையில் அரசியல் ரீதியாக பொறுப்பானவர்களை மூடி மறைத்து தப்பிக்கவிடுவதே இந்த விசாரணையின் நோக்கமாக இருக்கும். மேதா உடனடியாக ஐந்து பிரிஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation-BMC) அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததோடு, உதவி நகராட்சி ஆணையர் பிரசாந்த் சாப்கேலை இட மாற்றம் செய்தார்.

இந்த ஐந்து அதிகாரிகளும் உணவகங்களை தொடர்ந்து செயல்பட தவறாக அனுமதித்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று பத்நவிஸ் தெரிவித்தார். மேலும், “மேல்மாடி உணவகத்தின் உரிமையாளர்கள் – இயக்குநர்கள்,” “கடுமையான கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

1 Above உரிமையாளர்களான ஹிதேஷ் சங்வீ, ஜிகார் சங்வீ மற்றும் அபிஜித் மாங்கா ஆகியோர், “எங்களுடைய அனைத்து வளாகங்களும் நன்கு பரிசோதிக்கப்பட்டவை, மேலும் தேவையான அனைத்து அனுமதிகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்” என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், இலஞ்ச ஊழலுக்கு பேர்போன அதிகாரிகள் மூலமாக மோசடியான சான்றிதழ்களை பாதுகாப்பது ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லையே.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை, இந்த தீ விபத்து, “நகரின் வணிக மையங்களில் பின்பற்ற வேண்டிய தீ பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய கவலைகளை” எழுப்பியுள்ளதாகக் கூறுகிறது. உண்மையில், ஒரு பேராபத்தாக இத்தீவிபத்து நிகழவிருப்பது எதிர்பார்க்கப்பட்டதாகவேத் தோன்றுகிறது.

BMC அதிகாரிகள், மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக மூன்று சந்தர்ப்பங்களில் 1 Above உணவகம் மீதான வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். ஆகஸ்டில், இரண்டு உணவகங்களுக்கும் பொதுவானதொரு மாடியின் முன்பக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியை BMC இடித்துத் தள்ளியுள்ளது என்றும், மேலும் அக்டோபரில், மாநகராட்சி ஆலோசனைக் குழு மாடியின்முன்பக்கத்தை திடீர் சோதனை செய்து அங்கிருந்த அனைத்து மரச்சாமான்களையும் கைப்பற்றியுள்ளது என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதற்கு பின்னரும் கூட, உணவகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் கருத்துப்படி, இந்த உணவகங்கள் அவசரகால வெளியேற்ற வழிகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு, சரியான தீ பாதுகாப்பு உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியா முழுவதிலும் பொது இடங்களானாலும் நிகழும் இத்தகைய மீறல்கள் தற்செயலானவை அல்ல. இந்திய சந்தை-சார்பு சீர்திருத்தங்களின் கீழ், பாதுகாப்பு பற்றிய அனைத்து அக்கறைகளும் இலாபத்திற்கு முன்பாக கீழ்ப்படிய செய்யப்பட்டுள்ளன.

மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியில், இந்தியாவின் பிஜேபி பிரதம மந்திரி நரேந்திர மோடி இவ்வாறு டவீட் செய்தார்: “இந்த தீ விபத்தினால் மும்பை நகரமே கலங்கிபோனது. இந்த நேரம், நிகழ்ந்த துயரத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்.””

மும்பையில் மக்கள் நெருக்கடியினால் தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது எனவும், அங்கு மக்கள் தொகை “கட்டுப்பாடுகள்” இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி அரசாங்கத்தின் உண்மையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

இந்த குற்றம் கூறும் விளையாட்டு தொடரும் அதேவேளையில், மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி கவலை கொண்டுள்ள குடியிருப்பாளர்களை சமாதானப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியில் BMC, நகரம் முழுவதிலும் உள்ள “சட்டவிரோதமான கட்டமைப்புகளை” இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக NDTV அறிவித்தது.

தீ பேரழிவுகள் ஏற்படுவது என்பது இந்தியா முழுவதும் பொதுவானதே. சில வாரங்களுக்கு முன்பு, டிசம்பர் 18, 12 அன்று மும்பை, சகி நாகாவில் ஒரு தொழில்துறை பகுதியில் சிற்றுண்டிக் கடை ஒன்றில் வெடித்த தீயில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எரிந்து சாம்பலாயினர். தீயணைப்பு வீரர்கள் இறுதியாக நெருப்பு சுவாலையை கட்டுக்குள் கொண்டுவந்த போதும், கடைக்குள் இருந்த 21 பேரில் 9 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. இந்நிலையில், எரிவாயு உருளைகள் வெடித்து தகர்ந்து போன கட்டிடத்தின் சிறிய பகுதிக்குள் சிக்கியதால் எஞ்சியோர் இறந்துபோயினர். பாதிக்கப்பட்டவர்கள் ஏழைத் தொழிலாளர்களாக இருந்ததால், அந்த சம்பவம் சில ஊடகங்களின் கவனத்தை மட்டுமே ஈர்த்தது.

அத்தகைய அழிவுகளில் ஒன்றாக, தென்னிந்திய மாநிலம் கேரளாவில் ஏப்ரல் 2016 இல் மோசமான பேரழிவு ஒன்று நிகழ்ந்தது. ஒரு கோவிலில் சேமிப்புகிடங்கில் ஆயிரக்கணக்கான வானவேடிக்கைகள் ஒட்டுமொத்தமாக வெடித்ததில் தொண்ணூற்று எட்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 540 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிப்பினால் ஏற்பட்ட நடுக்கம் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் கூட உணரப்பட்டது. கோவில் கட்டிடங்கள் தரைமட்டமாகி, எல்லா இடங்களிலும் இறந்த உடல்கள் அப்படியே சிதறிக்கிடக்க அந்த இடமே ஒரு போர்க் களமாக காட்சியளித்தது என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த வார தீ விபத்திற்கு பின்னர், டிசம்பர் 30 அன்று Hindu பத்திரிகையில் வெளியான ஒரு தலையங்கம், தற்போதைய பேரழிவுகளை இந்திய அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், “1997 இல் 59 பேரை பலி கொண்ட புது தில்லி உபஹார் சினிமா தியேட்டர் தீ விபத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை” மேலும், “பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டது…… என்றாலும் பெரும்பாலும் அவை ஏட்டளவில் தான் உள்ளன. இந்தியர்களின் உயிர் மதிப்பு, மிக மலிவானதாக இருப்பது நமக்கு கவலையளிக்கக்கூடியதே” என்றும் அறிவித்தது.

மொத்தத்தில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. தற்போதைய பிஜேபி தலைமையிலான நிர்வாகமும் சரி, மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களும் சரி, மக்களின் வாழ்க்கைக்கு முன்பு தனியார் இலாபங்களை மட்டும் கணக்கில் கொண்டு, பாதுகாப்பு தரங்களை மேம்படுத்தவும், ஒரு பொருளாதார மற்றும் சமூக அமைப்பை பாதுகாக்கவும் தவறிவிட்டன. அந்நிய முதலீட்டை அதிகரிக்கச் செய்யும், மற்றும் வணிக இலாபத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு மட்டும் இந்த சூழ்நிலை வரையறுக்கப்படவில்லை. மும்பை துயரத்திற்கு ஒரு நாள் முன்பு, நியூ யோர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிர் இழந்தது கூட, பெருநிறுவன இலாபத்திற்கு முன்னால் மனித வாழ்வு தரம் தாழ்ந்து போகும் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும் என்பதை நிரூபணம் செய்கிறது.