ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Romanian prime minister resigns amid rising social tensions

அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு மத்தியில் ருமேனிய பிரதம மந்திரி இராஜினாமா செய்கிறார்

By Andrei Tudora and Tina Zamfir 
17 January 2018

ருமேனிய பிரதம மந்திரி மிகாய் ருடோஸே மற்றும் அவரது துணை மார்செல் சொலாகோ இருவரும் திங்களன்று, ஆளும் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் (Social Democratic Party-PSD) நிலவும் கன்னை மோதல்கள் மற்றும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு மத்தியில் அவர்களது இராஜினாமாவை அறிவித்தனர்.

ஜூன் 2017 இல் நடந்த ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது PSD தனது சொந்த அரசாங்கத்தையே வீழ்த்திய பின்னர், ஏழு மாதங்களுக்கு இடையில் இது அரசாங்கத்தின் தலைமையில் ஏற்பட்ட இரண்டாவது மாற்றமாகும். PSD இன் தலைமை, அரசாங்கத்தை கீழறுக்க வேலை செய்யும் “கீழ் நிலை” பிரிவுகளை குற்றம்சாட்டுகிறது.

ருமேனிய புலனாய்வு சேவை (Romanian Intelligence Service – SRI), தேசிய ஊழல் எதிர்ப்பு இயக்ககம் (National Anticorruption Directorate - DNA) மற்றும் புக்காரெஸ்டில் உள்ள CIA நிலையம் ஆகியவை நாட்டின் அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒத்துழைத்தமை குறித்து கடந்த வருடம் வெளிவந்த அறிக்கையின் பின்னணியினால் இது நடைபெற்றுள்ளது.

DNA மற்றும் “நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர” முயலும் இரகசிய சேவைகளின் பிரிவுகளை குற்றம்சாட்டி, “இணையான மற்றும் முறைகேடான அரசுக்கு” எதிராக PSD இன் தேசிய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

PSD தன்னை, பாதுகாப்பு சேவையின் எதிர்ப்பாளராகவும் ஜனநாயகத்தின் ஆதரவாளராகவும் முன்வைப்பது ஒரு இறுமாப்புமிக்க பொய்யாகும். முதலாளித்துவ மீட்சி குறித்த தொழிலாளர் எதிர்ப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு பொலிஸ் அரசு கட்டமைப்பை கட்டமைக்கும் கட்சியாக PSD உள்ளது.

முன்னாள் ஸ்ராலினிச ஆளும் கட்சியின் ஒரு பிரிவிலிருந்து உருவாகிய சமூக ஜனநாயகவாதிகள், ருமேனியாவில் ஒரு சமூக பேரழிவிற்கு தலைமை தாங்கினர், முதலாளித்துவ மீட்சியின் முக்கிய கட்சியாக, முதலாளித்துவ ஒழுங்கமைப்பு அச்சுறுத்தப்பட்ட முக்கிய தருணங்களில் அரசாங்கங்களை வழிநடத்தினர். அக்கட்சி, 1989 க்குப் பின்னர் முதன்முதலாக அரசாங்கத்தை அமைத்து, அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கவும், கொள்ளையடிப்பதற்கும் வழிவகுத்ததோடு, 1999 இல் சுரங்கத் தொழிலாளர்களின் அணிவகுப்பிற்கு பின்னரும், மேலும் 2012 இல் நடந்த சிக்கன எதிர்ப்பு வெகுஜன ஆர்ப்பாட்டங்களினால் எமில் போக் (Emil Boc) இன் பழமைவாத அரசாங்கம் கீழிறக்கப்பட்ட பின்னரும் மீண்டும் முதலாளித்துவத்தை உறுதிப்படுத்தியது.

இராணுவமும், இரகசிய சேவை அலுவலர்களும் உயர் அரசியல் அத்காரிகளுக்கு ஊக்கமளித்தமையும், PSD இன் ஆட்சிக்காலத்தில் கண்காணிப்பிலிருந்து தடுப்பு வழங்கப்பட்டமையும், நாடு நேட்டோவிற்கு மாற்றப்படுவதிலும், குற்றவியல் CIA கறுப்பு தளங்களின் திட்டத்திற்கு ஒத்துழைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன என்பது தற்போது வெளிப்படையாகவே அங்கீகரிக்கப்படுகிறது.

ரஷ்யாவை சுற்றி வளைக்க முனையும் நேட்டோ போர் உந்துதலும், மற்றும் நாட்டின் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலும் சமீபத்திய வருடங்களில் இந்த போக்குகளை அதிகரிக்கச் செய்துள்ளன. ஒரு உப்பிப்பெருத்த இராணுவ வரவு-செலவு திட்டம், ஆயுதங்களை நிரப்புதல் மற்றும் தொடர்ச்சியான இராணுவ பயிற்சிகள் ஆகியவை இந்த பிராந்தியத்தில் “ரஷ்ய செல்வாக்கை” எதிர்த்து போராடுவதில் இரகசிய சேவைகள் பங்கு அதிகரிப்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளன. அமெரிக்காவுக்கான ருமேனிய தூதர் மற்றும் SRI இன் முன்னாள் தலைவருமான ஜியோர்ஜ் மேயர், The Cipher Brief க்கு அளித்த பேட்டியில், நேட்டோவில் இரகசிய தகவல்களை வழங்கும் இரண்டாவது மிகப்பெரிய தகவல் வழங்குநராக ருமேனியா மாறியுள்ளதென சமீபத்தில் பெருமையடித்துக் கொண்டார்.

போர் தயாரிப்புகளும் மற்றும் பொலிஸ் அரசு சர்வாதிகாரத்திற்கான உந்துதலும் மிகவும் முன்னேறிய நிலையிலும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகமும் அவற்றை ஆதரித்த நிலையிலும் இந்த அபிவிருத்திகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையாக உள்ளது.

இருப்பினும், அதே நேரத்தில், ருமேனிய தொழிலாளர்கள் மத்தியில் தீவிரமயப்படலும் அதிகரித்து வருகிறது.

ஃபோர்ட் நிறுவனத்தில் வாகனத் தொழிலாளர்கள், நிர்வாகம், தொழிற் சங்கம் மற்றும் PSD அரசாங்கம் ஆகியவற்றிற்கு எதிரானதொரு போராட்டத்தில் பிணைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் மோசமான வகையில் இரண்டு வருட ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு முயற்சித்து வருகின்றது, அரசாங்கத்தின் வரி மாற்றம் இதற்கு உதவியது. ஜனவரி 1 அன்று நடைமுறைக்கு வந்த புதிய சட்டம், சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக காப்பீடு ஆகியவற்றிற்கான மொத்த செலவினத் தொகையையும் தொழிலாளர்கள் தான் தாங்கிக்கொள்ள வேண்டுமென அவர்களை வலியுறுத்துவதன் மூலமாக அவர்களின் முதுகிற்கு மொத்த வரிச்சுமையையும் மாற்றுகிறது. புதிய வரிச் சட்டம் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று ரீதியான மற்றும் கடும் போராட்டத்தினால் கண்ட வெற்றிகள் மீதான முன்னோடியில்லாத ஒரு தாக்குதலைத்தான் பிரதிபலிக்கிறது.

தொழிலாளர்களின் வருமான இழப்பை ஈடுகட்டும் வகையில் முதலாளிகள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று அரசாங்கம் அபத்தமாகக் கூறியுள்ளது. இருப்பினும் நிறுவனங்கள் இதை எப்படிப் பார்க்கும் என்பது தெளிவாகவுள்ளது: தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரிக்க அரசாங்கம் கூட சமிக்ஞை செய்துவிட்டதாகத் தான் கருதும். ஃபோர்ட் விடயத்தைப் போன்று, அப்பட்டமான குறைந்த தொழிலாளர் வருமானங்கள் அல்லது தற்காலிக போனஸ் வழங்குவது என்ற வகையில், மோசமான ஒப்பந்தங்களில் தொழிலாளர்களை கையெழுத்திடுமாறு மிரட்டுவதற்கு இதை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

நவம்பரில் PSD உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் நடத்திய அடையாள ஆர்ப்பாட்டங்களுடன், புதிய வரிச் சட்டங்களை எதிர்த்து சுகாதார பரிமரிப்பு மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அரசாங்கம் தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய மருந்துகளை திருப்பிவிட முயற்சிப்பதாக அதன் மீது குடும்ப மருத்துவர்களுக்கான தேசிய மருத்துவ சங்கத்தின் (National Society of Family Doctors) துணைத் தலைவர் சாண்ட்ரா அலெக்ஸியூ குற்றம்சாட்டுவதையும் சேர்த்து, தவறான நிர்வாகம் மற்றும் நிதி குறைபாடு ஆகியவை குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சுகாதார பராமரிப்புத் துறையை தனியார்மயமாக்க முயலும் கட்சிபேதமற்ற  நடவடிக்கையின் ஒரு பாகமாகவே இது உள்ளது.

உற்பத்தி மொராக்கோவில் உள்ள நிறுவன ஆலைக்கு முற்றிலும் மாற்றப்படும் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் உள்ள மியோவெனி இல் உள்ள டாசியா ரெனால்ட் ஆலைத் தொழிலாளர்கள், நவம்பரில் PSD இன் வரித் திட்டங்களுக்கு எதிராக ஒரு பாரியளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தனர்.

ருமேனியாவிலும், மற்றும் 1990 களில் முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் இப்பகுதி ஒரு மலிவு உழைப்பு தளமாக மாற்றப்பட்டதிலிருந்து கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான இரக்கமற்ற சுரண்டல் தொடர்ச்சியாக இருந்துவருகிறது. பெருநிறுவனங்கள், உயர்ந்தபட்ச இலாபங்களை பிழிந்தெடுக்கும் மற்றும் மேற்கு நாடுகளில் தொழிலாளர் செலவினங்களை குறைக்கும் அவர்களது முயற்சிகளில் அப்பிராந்திய தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை முக்கியமான ஒன்றாக கருதுகின்றன.

ஒரு ஊழல் நிறைந்த உள்ளூர் தன்னலக் குழுவின் உருவாக்கமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு விரிவாக்கத்துடனும் மற்றும் மோசமான தனியார்மயமாக்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மூலம் வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் நலன்புரி அரசுக்கான அழிவாக இருந்துவருவதுடனும் சேர்த்து நெருக்கமாக பிணைந்து இருந்தது.

2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர், தொழிலாளர்கள் மீதான ஐரோப்பிய ஒன்றிய கண்டம் அளவிலான தாக்குதல்களுக்கான ஒரு தளமாக ருமேனியா மீண்டும் இருந்தது. நாட்டின் சரிபாதி எண்ணிக்கையிலான மருத்துவமனைகளை ஒரே இரவில் மூடியது போன்ற கொடூரமான சமூக நடவடிக்கைகள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுவதை நாடு கண்டது. அதன் பின்னர், ஒரு உள்நோக்கம் கொண்ட பொருளாதார மீட்பும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிவிக்கப்பட்ட உயர்ந்தபட்ச பொருளாதார வளர்ச்சி விகிதமும் ஒருபுறம் இருந்தாலும், வருமானங்கள் முக்கியமாக உறைந்திருந்தன.

முதலாளித்துவ மீட்சி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம் குறித்த சமூக தாக்கத்தை முழுமையாக அளவிடுவது சாத்தியமற்றது. முதலாளித்துவம், மற்றும் ஒரு முற்போக்கான மற்றும் சமூகத் தலையீட்டின் ஐரோப்பிய ஒன்றிய வக்காலத்து வாங்குபவர்களின் புகழாரங்களின் குற்றச்சாட்டாக வளர்ந்துள்ள ஒரு சமூக நெருக்கடி பற்றிய அரசாங்க புள்ளிவிபரங்கள் வழக்கம் போல் பொய்யானவையாக உள்ளன.

சமீபத்திய யூரோஸ்டாட் புள்ளிவிபரங்கள் ருமேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக வறிய நாடு என்று காட்டுகின்றது, அதே சமயம் தேசிய புள்ளிவிபர நிறுவனம் (National Statistics Institute) இது மிகவும் சமத்துவமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. ஒரு சமூக பயன்பாடற்ற நிலம் மீது ஒருசில செல்வந்தர்களின் ஆதிக்கம் மட்டும் இருக்கின்ற ஒரு சூழலின் வெளிப்படையான பிரதிபலிப்பாக இது உள்ளது.

சரிபாதி மக்கள்தொகையினர், அடிப்படை மனித தேவையை கூட முறையாக அணுகமுடியாததை யூரோஸ்டாட் அறிக்கை காட்டுகின்றது. ஜனநாயக ஆய்வு மைய தொண்டு நிறுவனம் (Centre for the Study of Democracy NGO) அளித்த மற்றொரு அறிக்கை, 20 சதவிகிதத்திற்கும் மேலான ருமேனிய குடும்பங்கள் எரிசக்தி பற்றாக்குறையில் வாழ்கின்றனர், மின்சக்தியை விலைகொடுத்து வாங்கமுடியாமல் அல்லது மின்சக்தியை முறையாக அணுகமுடியாமல் உள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.    

வேலை தேடுவதை நிறுத்திக் கொண்டுள்ள அல்லது தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே வேலையின்மை புள்ளிவிபரங்கள் திரித்துக் கூறவில்லை, மதிப்பீட்டின்படி வெளிநாடுகளில் வேலை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள 4 மில்லியன் மக்களையும் சேர்த்துத்தான், அப்புள்ளிவிபரங்கள் தொடர்ந்து தவறாகவே உள்ளன.

குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான அரசாங்கங்களின் தேசிய அதிகாரசபை (The Governments National Authority for the Protection of Children’s Rights), 2017 இல் வெளிநாட்டில் பணிபுரிய சென்ற பெற்றோர்களால் கிட்டத்தட்ட 100,000 குழந்தைகள் நாட்டில் விட்டுச் செல்லப்பட்டு இருந்தனர் என்று தெரிவித்தது, குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவன அறிவிப்புடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை கால் மில்லியனுக்கு நெருக்கமானதாக இருக்கலாம். நாட்டினால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள், பொருளாதார இழப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக, பாதுகாப்பு விதிமுறைகள் அல்லது தவறான பயன்படுத்துதலில் இருந்து பாதுக்காப்பு என எதுவுமின்றி, ஆபத்தான நிலைமைகளில் தான் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ருமேனிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலையை ஒருசில மாதங்களுக்கான இடைவெளியில் நடந்த மூன்று விபத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அக்டோபர் 2017 இல், லுபேனி மற்றும் யூரிகனி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் நான்கு தொழிலாளர்கள் இறந்துவிட்ட நிலையில், இந்த இரண்டு சுரங்கங்களையும் மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் டிசம்பர் மாதம் லைவ்ஜேனி சுரங்கத்தில் நிகழ்ந்த ஒரு விபத்துக்குப் பின்னர் மற்றொரு சுரங்கத் தொழிலாளியும் தனது வாழ்க்கையை இழந்துள்ளார்.