ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Turkey invades Syria to attack US-backed Kurdish forces

அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் படைகளைத் தாக்க, துருக்கி சிரியா மீது படையெடுக்கிறது

By Halil Celik and Alex Lantier
22 January 2018

ஞாயிறன்று, காலை 11 மணிக்கு, துருக்கிய டாங்கிகளும் தரைப்படைகளும் வடமேற்கு சிரியாவில் பெரும்பான்மை குர்திஷ் மக்களுடன் பல இனத்தவர் வாழும் பிராந்தியமான அஃப்ரின் (Afrin) மீது படையெடுத்தன. அமெரிக்க ஆதரவிலான சிரிய-குர்திஷ் ஜனநாயக ஒன்றிய கட்சி (Syrian-Kurdish Democratic Union Party - PYD) மற்றும் அஃப்ரினைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதன் போராளிகள் குழுவான மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (People’s Protection Units - YPG) ஆகியவற்றை துருக்கிய படைகள் இலக்கில் வைத்துள்ளன. அதேநேரத்தில், துருக்கிய டாங்கிகள் மற்றும் சிறப்புப் படைகளின் ஆதரவுடன், சிரியாவில் உள்ள அங்காராவின் பினாமி படையான சுதந்திர சிரிய இராணுவம் (Free Syrian Army - FSA) தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து அஃப்ரினைத் தாக்கியது.

துருக்கியின் இந்த ஆக்கிரமிப்பு ஒரு பொறுப்பற்ற விரிவாக்கம் என்பதோடு, இது மத்திய கிழக்கு எங்கிலும் சீறிக் கொண்டிருக்கும் மோதல்களை அதிகரித்து, பிரதான சக்திகளுக்கு இடையிலான போர் அபாயத்தைத் தீவிரப்படுத்தும். மாஸ்கோவின் மறைமுக ஆதரவுடன், துருக்கி, சிரியாவில் உள்ள அமெரிக்காவின் பிரதான பினாமி படையின் முதுகெலும்பாக விளங்கும் YPG, சிரிய ஜனநாயக படைகளின் (SDF) போராளிகள் குழுக்கள் ஆகியவற்றைத் தாக்கி வருகிறது. சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் மற்றும் ரஷ்ய மற்றும் துருக்கிய படைகளுக்கும் இடையே ஒரு மோதலையும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரையும், தூண்டிவிடக்கூடிய அபாயம் மிகவும் நிஜமான அபாயமாக உள்ளது.

 “Olive Branch” (சமாதானம்) என்று இரகசிய பெயரிடப்பட்ட இந்த தரைப்படை தாக்குதல், SDF க்கு தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்குவதற்காக அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்ட விமானத்தளம் மீதான தாக்குதல்கள் உட்பட அஃப்ரின் மீதான துருக்கிய விமானப்படை தாக்குதல்களுக்கு ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் வந்தது.

இது, அமெரிக்காவும் துருக்கியும் இரண்டும் அங்கத்துவம் வகிக்கும் நேட்டோ கூட்டணியின் ஒரு வரலாற்று முறிவைக் குறிக்கிறது. துருக்கிய படையெடுப்பு வெளிப்படையாக பேர்லினின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், இது பிரதான நேட்டோ சக்திகளுக்கு இடையே ஆழ்ந்த மற்றும் அதிகரித்து வரும் மோதல்களைப் பிரதிபலிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கையின் ஆரம்ப சில மணி நேரங்களில், துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் செய்தியாளர்களுக்குக் கூறுகையில் துருக்கிய-சிரிய எல்லையை ஒட்டி 30 கிலோமீட்டருக்கு "பாதுகாப்பு மண்டலத்தை" உருவாக்குவதே அதன் நோக்கம் என்றார். இந்நடவடிக்கை நான்கு கட்டங்களில் நடத்தப்படுமென கூறிய அவர், கூடுதல் விபரங்களை வழங்கவில்லை. ஆகஸ்ட் 2016 இல் இஸ்லாமிக் அரசு (ISIS) படைகளுடன் SDF சண்டையிட்ட பின்னர் இருந்து அது ஆக்கிரமித்துள்ள ஒரு பகுதியான கிழக்கின் மன்பிஜ் ஐ (Manbij) நோக்கி அந்நடவடிக்கை தொடரக்கூடும் என்று தெரிகிறது.

அந்த அபிவிருத்தியானது, சிரியாவில் குர்திஷ் தாக்குதலை முடக்கவும் மற்றும் அங்காரா எதை "துருக்கிய எல்லையை ஒட்டிய பயங்கரவாத பகுதி" என்று குறிப்பிடுகிறதோ அதை உடைக்கவும், துருக்கிய இராணுவத்தின் ஒரு படையெடுப்பான ஆப்ரேஷன் யூப்ரரேடஸ் கவசம் (Euphrates Shield) என்பதைத் தூண்டிவிட்டது.

துருக்கிய தாக்குதலைக் குறித்த ஆரம்ப பத்திரிகை செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தன. துருக்கிய அதிகாரிகளும் ஊடகங்களும் அந்நடவடிக்கையை ஒரு மிகப்பெரிய வெற்றியாக பாராட்டின. ஆனால் "கடுமையான மோதல்களுக்குப் பின்னர்" துருக்கிய மற்றும் FSA படைகளை முறியடித்தாக YPG அறிவித்தது.

குர்திஷ் சமூங்களின் கூட்டணி (Kurdish Communities Union – KCK) என்பது துருக்கியின் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியையும் (PKK) மற்றும் சிரியாவிலும் ஈரானிலும் உள்ள குர்திஷ் அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு குடையின் கீழ் செயல்படும் அமைப்பாகும், இது அந்நடவடிக்கையைக் கண்டித்ததுடன், "அதன் முழு பலத்துடன் அஃப்ரினுக்கு சார்பாக நிற்குமென" அறிவித்தது. ஓர் எழுத்துபூர்வ அறிக்கையில், அது "அஃப்ரின் தாக்குதலுக்கு துருக்கியை அனுமதித்ததற்காக" ரஷ்யா மற்றும் சிரியாவைக் குற்றஞ்சாட்டியது.

இந்த அத்துமீறலானது, தெற்கு துருக்கியின் குர்திஷ் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் உள்நாட்டு போரைத் தூண்டுவிட அச்சுறுத்துகிறது. புர்ஷா மொழியில் பேசிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், குர்திஷ்-சார்பு மக்கள் ஜனநாயக கூட்டணி (HDP) உட்பட துருக்கிக்குள் போருக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் நசுக்க சுளுரைத்தார். “HDP, KCK மற்றும் PKK இன் அழைப்பை ஏற்று வீதிகளில் இறங்குபவர்கள் யாராயினும், அவர்களை நமது பாதுகாப்பு படைகள் இறுக்கி அடக்கும் என்பதையும், அவர்கள் நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான ரெய்ஹன்லி (Reyhanlı) இல் மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடந்ததாக, அதில் ஒருவர் கொல்லப்பட்டு 32 அப்பாவி மக்கள் காயமடைந்ததாக நேற்று மாலை துருக்கிய ஊடகங்கள் அறிவித்தன.

துருக்கிக்குள் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (Justice and Development Party), எதிர்கட்சிகளான குடிரயசு மக்கள் கட்சி மற்றும் பாசிசவாத தேசிய இயக்க கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன், அரசியல் எதிர்ப்பு மீதான அதன் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்கு இந்த படையெடுப்பைப் பயன்படுத்தி வருகிறது. இந்த படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் நூற்றுக் கணக்கான மக்கள் பல துருக்கிய நகரங்களில் கைது செய்யப்பட்டனர். அஃப்ரின் படையெடுப்பை விமர்சித்ததற்காக, ஜனநாயக சமுதாய கட்சியின் (DTP) துணை தலைவர் லெய்லா குவென், HDP செய்தி தொடர்பாளர் அய்ஹன் பில்ஜென் மற்றும் HDPஇன் இணை துணை-தலைவர் நாடிர் யெல்ட்ரிம் ஆகியோர் மீது நீதித்துறை விசாரணைகள் தொடங்கியது.

மறைமுகமான ரஷ்ய ஆதரவு இருப்பதால் மட்டுமே துருக்கியால் இந்நடவடிக்கையைத் தொடங்க முடிந்திருக்கிறது. சிரியாவில், நேட்டோ ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களை எதிர்க்கும் ரஷ்ய தலையீட்டின் பாகமாக அஃப்ரினில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அதன் படைகளை மாஸ்கோ திரும்ப பெற்றதுடன், அப்பிராந்தியத்தின் வான்வழிகளில் துருக்கிய விமானங்கள் பறக்க அனுமதித்தது. அந்த படையெடுப்பை விமர்சித்த சிரிய மற்றும் ஈரானிய அரசாங்கங்களுடனான உறவுகளில் அது துருக்கிக்காக மத்தியஸ்தம் செய்தது.

வாஷிங்டன் YPG ஐ ஆயுதமயப்படுத்தி, சிரிய-துருக்கிய எல்லையில் கட்டுப்பாட்டை எடுக்க அதை பயன்படுத்தும் என்று கூறி, வாஷிங்டன் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை" எடுத்ததாக அறிவித்து ரஷ்ய அதிகாரிகள் அத்தாக்குதலுக்கு வாஷிங்டனை நேற்று குற்றஞ்சாட்டினர்.

“சிரிய நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பாகமாக உள்ள அஃப்ரின் நகரம் மீதான இந்த மோசமான துருக்கிய ஆக்கிரமிப்பை [சிரியா] கடுமையாக கண்டிக்கிறது" என்று கூறிய சிரிய வெளியுறவுத்துறை அமைச்சகம், “சிரிய இறையாண்மைக்கு எதிராக துருக்கியின் தொடர்ச்சியான எல்லைமீறல்களில் இந்த ஆக்கிரமிப்பு மிக சமீபத்தியதாகும்,” என்று வலியுறுத்தியது. துருக்கி முன்கூட்டியே இது குறித்து சிரியாவுக்கு தெரிவித்திருந்ததாக கூறிய துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுத் கவ்சோக்லு இன் வாதங்களை அது நிராகரித்ததுடன், அவை “துருக்கிய அரசாங்கம் தொடர்ந்து திறமையாக பேசும் பொய்கள்" என்று குறிப்பிட்டது.

 “இந்நடவடிக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுமென" அது நம்புவதாக சிரியாவின் பிரதான பிராந்திய கூட்டாளியான ஈரான் குறிப்பிட்டது.

பாரசீக வளைகுடா போர் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கலைக்கப்பட்டதற்கு பின்னர், இவ்விரண்டுமே 1991 இல் நடந்தன, வாஷிங்டன் தலைமையில் மத்திய கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்ட மனிதப் படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போரின் தசாப்த கால விளைவே, சிரியா மீதான துருக்கியின் இந்த படையெடுப்பாகும். சோவியத் இராணுவ அச்சுறுத்தல் அகன்றதுடன், வாஷிங்டன் அதன் சில அல்லது அனைத்து நேட்டோ கூட்டாளிகளின் உதவியோடு, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் அதனினும் அதிக இரத்தந்தோய்ந்த போர்களைத் தொடங்க சுதந்திரம் பெற்றது. ஆனால், குர்திஷ் பினாமிப் படைகளை அமெரிக்கா சார்ந்திருப்பதன் மீது அங்காராவின் சீற்றம் உட்பட அந்த போர்களால் தூண்டிவிடப்பட்டு அதிகரித்து வரும் சர்வதேச மோதல்கள் முற்றிலும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

துருக்கி சிரியாவில் உள்ள பிரதான அமெரிக்க பினாமிப் படைகளை அழிக்க நகர்ந்து வருகையில், நேட்டோவோ பொறிவின் விளிம்பில் உள்ளது மற்றும் வாஷிங்டன் அதிகரித்தளவில் தனிமைப்பட்டுள்ளது. அது மத்திய கிழக்கில் ஒரு பலமான எதிர்ப்பு கூட்டணியை முகங்கொடுப்பதுடன், இக்கூட்டணியோ வாஷிங்டனின் பெயரளவிலான ஐரோப்பிய கூட்டாளிகளிடையே ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா மற்றும் சீனா போன்ற அணுஆயுத சக்திகளுக்கு எதிராக முழுமையான போருக்கு தயாரிப்பு செய்வதை மையப்படுத்தி, வாஷிங்டன் ஓர் இராணுவ மூலோபாயத்தை அறிவித்து விடையிறுத்துள்ளது.

படையெடுப்பு குறித்து ஆரம்ப அமெரிக்க அறிக்கைகள் தெளிவின்றியும், அதனளவில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருந்தன. அமெரிக்க வெளியுறவுத்துறை ஆதார நபர்கள் குறிப்பிடுகையில் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் "அந்நாட்டின் வடக்கில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது" குறித்து அவரது ரஷ்ய மற்றும் துருக்கிய சமதரப்பினருடன் பேசி இருப்பதாக தெரிவித்தனர், ஆனால் எந்த விபரங்களும் வழங்கப்படவில்லை. பென்டகன் அதிகாரிகள் கூறுகையில் அவர்கள் "தீவிரப்பாட்டை தவிர்க்கவும் மற்றும் இஸ்லாமிய அரசைத் தோற்கடிக்கும் மிக முக்கிய வேலையில் ஒருமுனைப்படுவதிலும் அனைத்துக் கட்சிகளை ஊக்குவிப்பதாக" தெரிவித்தனர்.

உண்மையில் வெள்ளியன்று பென்டகன் ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது, அது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" போட்டியிடும் எதிர்விரோத வல்லரசுகளுக்கு எதிரான போர் தயாரிப்புகளின் அவசியத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. “பயங்கரவாதம் அல்ல—வல்லரசுப் போட்டிதான் இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மைக் கவனமாக உள்ளது” (“Great power competition—not terrorism—is now the primary focus of US national security”) என்று, அந்த ஆவணத்தை வெளியிடுகையில் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்தார், அந்த ஆவணம் ரஷ்யா மற்றும் சீனாவை உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்களாக வெளிப்படுத்துகிறது.

தெளிவாக துருக்கிய படையெடுப்பால் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இது "நீண்டகாலம் நீடிக்கக்கூடிய சிரிய உள்நாட்டு போரின் ஒரு புதிய, இரத்தந்தோய்ந்த கட்டத்தைத் தூண்டிவிடும்” என்றும், "மேலும் அமெரிக்காவையும் இலக்கில் வைக்கலாம்,” "சிரியாவில் இஸ்லாமிய அரசை எதிர்க்கும் நடவடிக்கையில் தவிர்க்கவியலாத நிர்பந்தங்களால் [அமெரிக்கா] துருக்கியுடன் ஒரு தொந்தரவுக்கு உட்பட்ட உறவை சமநிலைப்படுத்தியவாறு மூன்றாண்டுகளை செலவிட்டுள்ளது,” என்றும் வாஷிங்டன் சிந்தனை குழாமான அமெரிக்க முன்னேற்ற மையம் (Center for American Progress) எச்சரித்தது. “அந்நடவடிக்கைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முடிவடைந்துவிட்டதுடன், அந்த சமநிலைப்படுத்தும் நடவடிக்கை மீண்டுமொருமுறை அதன் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது,” என்று அந்த சிந்தனை குழாம் அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.

ஐரோப்பாவின் முன்னணி சக்தியான ஜேர்மனியின் கொள்கையில் உள்ள முரண்பாடு, பெரிதும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்க முடியாது. பேர்லின் இந்த படையெடுப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிகிறது. கடந்த புதனன்று, துருக்கிய பீரங்கிப்படைகள் YPG முகாம்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில் மற்றும் எர்டோகனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சிரியா மீது படையெடுக்க அச்சுறுத்திய நிலையில், துருக்கிய பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று நட்புரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்த இரண்டு நாள் பயணமாக பேர்லின் வந்தது. இந்த பேச்சுவார்த்தைகளில், ஜேர்மன் மற்றும் துருக்கிய அதிகாரிகள் குர்திஷ்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விவாதித்தனர்.

துருக்கியை நோக்கிய பேர்லினின் "புதிய திருப்பத்தை" ஜேர்மன் பத்திரிகைகள் விவாதித்திருந்த நிலையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் கூறுகையில், “துருக்கியின் நலனுக்காகவும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் நலனுக்காகவும்" பேர்லின் அங்காராவுடன் "சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். கூட்டாட்சி அரசு வழங்கறிஞர் அலுவலகம் PKK மீது 130 விசாரணைகளைத் தொடங்கி இருப்பதுடன், ஜேர்மனியில் PKK நடவடிக்கைகள் மீது ஒரு புதிய ஒடுக்குமுறையை பேர்லின் அறிவித்தது.

சிரியாவில் அமெரிக்க பினாமிகளைத் தாக்கிய பின்னரும் கூட, ஜேர்மன் இராணுவ ஆதரவை துருக்கி தொடர்ந்து பெறும் என்பதையும் பேர்லின் சமிக்ஞை செய்தது. அதன் ஜேர்மன் "லியோபார்ட்" (Leopard) டாங்கிகளை Rheinmetall நிறுவனம் மூலமாக நவீனப்படுத்துவதற்கான துருக்கியின் அவசர கோரிக்கைகளுக்கு நகர்ந்து கொடுத்ததன் மூலமாக அது அவ்வாறு எடுத்துக்காட்டியது. “கூட்டாட்சி அரசாங்கம் துருக்கியை நோக்கிய அதன் புதிய திருப்பத்தில் தன்னை நெகிழ்வுடன் காட்டிக் கொள்கிறது,” என்று Der Spiegel எழுதியது. “Der Spiegel இன் ஆதார நபர்களது கருத்துப்படி, பேர்லின் அங்காராவுடன் இப்போதும் பல மில்லியன் யூரோ ஆயுத உடன்படிக்கைகளைச் செய்து கொள்ள விரும்புகிறது.”

சிரியாவில் அமெரிக்க பினாமி படைகள் மீது துருக்கி குண்டுவீசுகின்ற போதும் கூட அதற்கு ஆதரவான ஜேர்மனின் இந்த அறிக்கைகள், நேட்டோ இராணுவ கூட்டணியைக் கிழித்துக் கொண்டிருக்கும் ஆழ்ந்த பதட்டங்களையும், பிரதான உலக சக்திகளுக்கு இடையிலான நேரடி மோதல் தீவிரமடைந்து வரும் அபாயத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.