ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India strengthens ties with ASEAN countries

ASEAN நாடுகளுடன் இந்தியா உறவுகளை பலப்படுத்துகிறது

By Wasantha Rupasinghe 
5 February 2018

கடந்த மாதம் இறுதியில், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, புது தில்லியின் புவிசார்-மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுபடுத்தவும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சீனச் செல்வாக்கை எதிர்கொள்ளவும் வகைசெய்யும் ஒரு தெளிவான முயற்சியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (Association of Southeast Asian Nations-ASEAN) அனைத்து 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் பேசினார்.

ஜனவரி 26 அன்று, இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, ஒரு நாள் முன்னதாக India-ASEAN நினைவு மாநாட்டில் கலந்துகொண்ட ASEAN தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக இருந்தனர். அப்போது, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புருனே, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து புது தில்லிக்கு வந்திருந்த ஒவ்வொரு ASEAN நாட்டின் தலைவருடனும் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பாகமாக ASEAN நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான மோடியின் முயற்சி அமெரிக்காவால் ஊக்கப்படுத்தப்படுகிறது.

ASEAN நாடுகளில் 27 செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்க கட்டுரையில், மோடி இவ்வாறு அறிவித்தார்: “நிலம் மற்றும் கடல் பகுதி சார்ந்த நமது அண்டை நாடுகளான தென்கிழக்கு ஆசியாவும், ASEAN நாடுகளும், கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கை (Act East Policy) செயல்படுத்தப்பட்ட பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக நமது கிழக்கு நோக்கிய கொள்கையின் உந்துவிசையாக இருந்து வருகின்றன.”

“பகிர்ந்து கொள்ள வேண்டிய பண்புகள் மற்றும் பொதுவான விதி,” என்ற தலைப்பில் நடைபெற்ற India-ASEAN உச்சி மாநாட்டில் உரையாற்றுகையில், மோடி, “பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் குறித்த விதிமுறைகள்-அடிப்படையிலான ஒழுங்கின் மூலமாக அடையக்கூடிய சமாதானம் மற்றும் செழிப்பு மீதான ASEAN இன் கருத்தை இந்தியா பகிர்ந்தது என்றும், மேலும், சர்வதேச சட்டத்தை, குறிப்பாக கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு (the United Nations on the Law of the Sea-UNCLOS) என்பதை மதிப்பது இதற்கு முக்கியமானதாகும்” என்றும் தெரிவித்தார்.

“ஒரு விதிமுறைகள்-அடிப்படையிலான ஒழுங்கு” பற்றிய குறிப்புகள், தென் சீனக் கடல் பிராந்திய பூசல்கள் மீதான வாஷிங்டனின் நிலைப்பாடுகளுடனும், மற்றும் 2016 இல் ஹேக் இல் மத்தியஸ்த்துக்கான நிரந்தர நீதிமன்றத்தில் அமெரிக்க தூண்டுதலினால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு சீனாவின் கடல்சார் உரிமை கோரல்களுக்கு எதிராக இருப்பதிலும் பிணைந்துள்ளன. (பார்க்கவும்: “ஹேக் நீதிமன்ற தீர்ப்பு: யுத்தத்தை நோக்கிய ஒரு ஆபத்தான அடி”)

உச்சி மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு “தில்லி பிரகடனம்”, “இப்பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை, கடல்வழி சுதந்திரம் மற்றும் வான்வழி போக்குவரத்து ஆகியவற்றை பரமரிப்பது மற்றும் மேம்படுத்துவது பற்றிய முக்கியத்துவத்தை” வலியுறுத்தியது. தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை நியாயப்படுத்த அமெரிக்கா “கடல்வழி சுதந்திரம்” மற்றும் “வான்வழி” போக்குவரத்து போன்ற சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது.

பல ASEAN உறுப்பு நாடுகள் பெய்ஜிங்குடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள போதிலும், அவற்றில் பல நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவுடனான பிராந்திய சச்சரவுகளையும் கொண்டுள்ளன. இந்நிலையில் மோடி அரசாங்கம், இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை விஸ்தரிக்கும் நோக்குடன் சீனா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்த உந்துதலளிக்கும் சூழ்நிலையை சுரண்டுவதற்கு தெளிவாக முயற்சித்து வருகிறது.

ASEAN தலைவர்கள் உடனான அவரது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் மோடி, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தார். மியான்மர் தலைவர் ஆங் சான் சூ கி, வியட்நாமிய பிரதம மந்திரி Nguyen Xuan Phuc மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற ஆகியோர் உடனான தனிப்பட்ட அவரது சந்திப்புகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு செய்தி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியில் அவர்கள் கொண்டிருக்கும் “திருப்தியை” குறிப்பிடுகிறது.

“தகவல் பரிமாற்றங்களில் ஒத்துழைப்பையும், தகவல் வழங்கலையும் அதிகரித்தல்” மற்றும் “செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் டெலிமெட்ரி நிலையத்தின் ஒரு ASEAN-India மையம்” ஆகியவை குறித்து வியட்நாம் பிரதமருடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சீனா, தென் சீனக் கடல் மற்றும் அந்தப் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கிய இந்திய செயற்கை கோள்களின் படங்களை ஹானோய் அணுகுவதற்கு இந்த செயற்கைக்கோள் மையம் வகை செய்யும்.

இந்த உச்சி மாநாட்டை மோடி, இந்திய அரசாங்கத்தால் “பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரம்” என்று அழைக்கப்படுவதற்கு ஆதரவாகவும் கூட பயன்படுத்தினார். “தில்லி பிரகடனம்”, ஒரு “உறுதிப்பாட்டிற்கும்” மற்றும் “எல்லை கடந்து பயங்கரவாதத்தை எதிர்ப்பது உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான பரந்த அணுகுமுறைக்கும்” மீண்டும் வலியுறுத்தல் செய்தது.

“எல்லை தாண்டிய பயங்கரவாத இயக்கம்” பற்றிய குறிப்பு பாகிஸ்தானுக்கு எதிராக குறி வைக்கப்பட்டது, அது ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்த்து போராடும் காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கிறது என தில்லி வலியுறுத்துகிறது. மோடி அரசாங்கம், பாகிஸ்தானுக்கும், சர்வதேச அளவில் இஸ்லாமாபாத்தின் பிரதான நட்பு நாடாக அதிகரித்தளவில் எழுச்சிபெற்றுவரும் சீனாவுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கும் நோக்கம் கொண்டிருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியா மற்றும் 10 உறுப்பு நாடுகள் இடையே பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டை உள்ளடக்கி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தமான “ASEAN-India சுதந்திர வர்த்தக பகுதியின் செயலூக்கம் மிக்க செயற்பாடு” என்பதன் மூலம் ASEAN-India பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு அழைப்பு விடுத்தது.

ASEAN-India வர்த்தகம் “25 ஆண்டுகளில் 25 மடங்காக வளர்ச்சி கண்டுள்ளது” என மோடி பெருமிதம் கொள்கிறார். இருப்பினும், இந்த பிராந்தியத்தில் சீனாவிற்கு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இதுவரை இந்தியா உள்ளது. 2017 இல், ASEAN நாடுகளுடனான சீனாவின் வர்த்தக மதிப்பு 514.8 பில்லியன் டாலராக இருந்ததுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வர்த்தக மதிப்பு மொத்தத்தில் 70 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்தது. அதே நேரத்தில், ASEAN நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 30 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், சீனாவின் ஏற்றுமதி மதிப்போ 279.1 பில்லியன் டாலராக இருந்தது.

இந்திய நிதிய உயரடுக்கின் கவலைக்கு குரல் கொடுக்கும், ஜனவரி 26 அன்று வெளியான Indian Express பத்திரிகை தலையங்கம் இவ்வாறு குறிப்பிட்டது: “ASEAN உடனான இந்திய உறவு, வாக்குறுதிக்கும் செயலாக்கத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றது…. இந்தியாவை பொறுத்தவரை, சீனாவுடன் போட்டியிடுவது என்பது பற்றிய கேள்வி அல்ல, அது உண்மையில் சாத்தியமே இல்லை என்பதுதான், ஏனெனில் சீனாவுக்கு புவியியல் ரீதியான அநுகூலம் இருப்பது தான். இந்தியாவின் சொந்த இலக்குகளை சந்திப்பதற்கான உண்மையான சவாலாகத்தான் இது உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது போல், வர்த்தகத்தில், 2020 க்குள் 200 பில்லியன் டாலர் இலக்கை நெருக்கமாக எட்டுவதற்கு எங்கும் வழியில்லை.

மேலும் தலையங்கம், “பல வருடங்களுக்கு முற்பட்ட செயல்திட்டமான மியான்மர் வழியாக தாய்லாந்துக்கு முத்தரப்பு நெடுஞ்சாலை அமைப்பது போன்ற ASEAN உடனான இணைப்புத் திட்டங்கள்” குறித்தும் குறை கூறுகிறது. “உச்சி மாநாட்டில் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட குறிக்கோள்களை எட்டுவதற்கு, அதிகாரத்துவ மற்றும் கொள்கை நிலைமாற்றத்தை சமாளிக்க பிரதமரிடமிருந்து (மோடி) ஒரு தீர்க்கமான உந்துதல் தேவைப்படும்” என்பதுடன் இது நிறைவடைகிறது.

சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ASEAN தலைவர்கள் உடனான மோடியின் சந்திப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் பதிலிறுத்தார். ஜனவரி 25 அன்று அவர், “இந்தியா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையேயான சாதாரண உறவுகளையும் ஒத்துழைப்பையும் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நேர்மறையான பங்களிப்பை உருவாக்க ஏனையோருடனும் இது வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் Global Times பத்திரிகையில் வெளியான, “இந்தியாவின் புவிசார் அரசியல் மோசடி சீனாவைத் தடுக்கிறது” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை இந்தியாவின் போலிப்பகட்டுகளை ஏளனம் செய்தன. ASEAN உடனான இந்திய வர்த்தகத்தை சீன வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் அதிலுள்ள ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி, இவ்வாறு தெரிவித்தது: “இந்திய உயரடுக்கின் சில உறுப்பினர்கள் புவிசார் அரசியல் கொந்தளிப்பில் ஈடுபடுவதை அனுபவிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பரந்த வலிமை மற்றும் இராஜதந்திர அனுபவத்தின் உண்மையை உண்மையிலேயே அவர்களால் அளவிட முடியாது. புவிசார் அரசியல் விளையாட்டில் அவர்கள் கற்றுக்குட்டிகளாக உள்ளனர்.”