ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The working class and the capitalist economy

தொழிலாள வர்க்கமும் முதலாளித்துவ பொருளாதாரமும்

Nick Beams
5 February 2018

150 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளார்ந்த இயங்குமுறையை வெளிப்படுத்திக் காட்டிய கார்ல் மார்க்ஸின் தலைச்சிறந்த படைப்பான மூலதனம் பிரசுரிக்கப்பட்டதில் இருந்தே, முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் அவரது உழைப்பின் மதிப்பு தத்துவத்தை மறுத்தளிக்க முனைந்துள்ளனர்.

பணம் மற்றும் உற்பத்தி கருவிகளது தனிச்சொத்துடைமையில் இருந்தும், தொழில்துறை இலாபம், வாடகை மற்றும் நிதியியல் சந்தைகளின் பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் ஆதாயங்கள் என அதன் பல்வேறு வடிவங்கள் மூலமாகவும், முதலாளித்துவ வர்க்கத்திடம் குவியும் செல்வவளமானது, இறுதியில் முதலாளித்துவத்தின் அடிப்படை சமூக உறவாக விளங்கும் கூலி அமைப்புமுறை மூலமாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உறிஞ்சப்படும் உபரி மதிப்பிலிருந்தே கிடைக்கிறது என்பதை அத்தத்துவம் எடுத்துக்காட்டியது.

சமீபத்திய தசாப்தங்களில், மார்க்ஸை மறுத்துரைப்பதில் “புதிய பொருளாதாரத்தின்" வளர்ச்சி என்று எது அழைக்கப்பட்டதோ அதை தழுவிய வாதங்கள் நிரம்பி இருந்தன, இவற்றின்படி புதிய தொழில்நுட்பத்தினூடாக உருவாக்கப்பட்ட செல்வவளம், உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்பு வடிவம் எதுவுமின்றி, நிதியியல் சந்தைகளிலிருந்து சர்வசாதாரணமாக பணத்தை உருவாக்கும் தகமை உள்ளதாக பார்க்கப்படுகிறது.

உண்மையில் இத்தகைய நிகழ்வுபோக்கையே கூட தனது பகுப்பாய்வில் விவரித்திருந்த மார்க்ஸ், அதை "பண்டங்களின் வழிபாட்டுவாதம்" (fetishism of commodities) என்று குறிப்பிட்டார், இதில் முதலாளித்துவ பொருளாதாரத்திலிருந்து உருவாக்கப்பட்ட வடிவங்களின் தோற்றம் எவ்வாறு மறைக்கப்பட்டிருக்கும் என்பதையும், அதன் அடித்தளத்திலிருக்கும் புதிர்மிக்க சமூக உறவுகளையும் அவர் எடுத்துக்காட்டினார்.

இதுவரையில் பெரும்பாலும் நடந்துள்ளதைப் போல, மார்க்சின் தத்துவம் உயிரிழந்துவிட்டது, புதைந்து போய்விட்டது என்று ஆயிரமாயிரம் தடவை அறிவிக்கப்பட்டாலும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு அபிவிருத்தி மீண்டுமொருமுறை அதையே தான் நிரூபித்துள்ளது.

இரண்டாண்டுகளில் இல்லாதளவில் மிகப் பெரிய வீழ்ச்சியாக, டோவ் ஜோன்ஸ் குறியீட்டில் 666 புள்ளிகள் வீழ்ச்சியுடன் கடந்த வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட்டில் நடந்த திடீர் விற்றுத்தள்ளலும் அதுபோன்றவொரு சம்பவம் தான். இது டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் டோவ் 40 சதவீதம் உயர்ந்ததற்கு இடையே ஏற்பட்டது.

அமெரிக்காவின் பத்தாண்டு கால கருவூல பத்திரங்கள் நான்காண்டுகளில் ஒரு புதிய இலாப அளவாக 2.85 சதவீத உயர்வுடன், பத்திரச் சந்தைகளின் வட்டி விகிதங்கள் உயருமென்று எதிர்பார்க்கப்பட்டது. கருவூல பத்திர மதிப்பின் உயர்வானது, 2008 உலகளாவிய நிதியியில் நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளால் வகுத்தளிக்கப்பட்டதும், பங்கு விலைகளை சாதனையளவுக்கு உயரச் செய்ததுமான, நிதியியல் சந்தைக்குள் மலிவு பணம் உள்புகுத்தும் நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்ற அச்சங்களைத் தூண்டிவிட்டது.

2009 க்குப் பிந்தைய மிகப் பெரிய அதிகரிப்பாக, கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கூலிகள் 2.9 சதவீதம் உயர்ந்தன என்ற செய்திகளுக்கு விடையிறுப்பாக, பத்திர சந்தைகளின் உயர்வு இருந்தது.

கூலிகளின் உயர்வு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே. ஆனால், அது நிதியியல் சந்தைகளில் ஒரு மிகப் பெரிய விடையிறுப்பைத் தூண்டியது ஏனென்றால் தசாப்த கால கூலிகளின் குறைப்பு மற்றும் தொழிலாள வர்க்க வாழ்க்கை நிலைமைகளின் வீழ்ச்சிக்கு எதிராக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் திருப்பி பதிலளிக்க தொடங்கியுள்ள நிலையில், வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி குறித்த அச்சங்களினால் ஆகும்.

பத்திரங்களில் நீண்டகாலத்திற்கு காளையின் ஓட்டம் —அதாவது பத்திரங்களின் விலை உயர்வுகள் மற்றும் வட்டி விகிதங்களின் குறைப்பு (இவ்விரண்டும் எதிரெதிர் திசைகளில் நகரும்)— முடிவுக்கு வரவிருக்கிறது என்ற எச்சரிக்கைகள், பத்திரச் சந்தை வட்டி விகிதங்களின் வெள்ளிக்கிழமை அதிகரிப்புக்கு முன்னதாக வந்திருந்தன. சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய காளையின் ஓட்டமே கூட, அடித்தளத்தில் நிதியியல் சந்தைகள் மற்றும் வர்க்க போராட்டங்களுக்கு இடையிலான உறவுகளையும், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்காக உபரி மதிப்பு உறிஞ்சப்பட்டதன் மத்திய முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

1968 மற்றும் 1975 க்கு இடையே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சி தோல்வி அடையச் செய்யப்பட்டதற்குப் பின்னர், 1979-80 காலப்பகுதி, அமெரிக்காவில் தொடங்கி, உலகெங்கிலுமான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினது ஒரு எதிர் தாக்குதலின் தொடக்கத்தைக் குறித்தது.

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம், வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலமாக பணவீக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்புறுதியுடன், 1979 இல் பௌல் வோல்க்கரை பெடரல் ரிசர்வ் தலைவராக நியமித்தது. அவர் நியமனம் செய்யப்பட்ட காலப்பகுதி மிக முக்கியமானது ஏனென்றால் அது கார்ட்டர் நிர்வாகத்தை உலுக்கிய 1977-78 இன் தேசிய நிலக்கரி சுரங்க வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

வோல்க்கரின் பொருளாதார மற்றும் நிதிய திட்டநிரல், அடிப்படை வர்க்க பரிசீலனைகளால் உந்தப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய தசாப்தங்களில் தொழிலாள வர்க்க போர்குணத்தை மையத்தில் கொண்டிருந்த அமெரிக்க தொழில்துறையின் மிகப் பெரும்பாலான பகுதிகளை அழிப்பதற்கு இட்டுச் செல்லக்கூடிய நிதியியல் நிலைமைகளை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.

1930 களுக்குப் பிந்தைய மிகப் பெரிய பின்னடைவு புள்ளிக்கு இட்டுச் சென்ற அந்த நிதிய நடவடிக்கைகளுக்கும் கூடுதலானவை அதில் சம்பந்தப்பட்டிருந்தன. 1981 PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் முறிக்கப்பட்டதுடனும் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11,359 தொழிலாளர்கள் அனைவரையும் வேலையை விட்டு நீக்கியதுடனும் தொடங்கி, ரீகன் நிர்வாகத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவ அரசின் ஒரு தாக்குதல் மூலமாக, இந்த வர்க்க-போர் வேலைத்திட்டம் அமலாக்கப்பட்டது.

PATCO தொழிலாளர்களை ரீகன் வேலையிலிருந்து நீக்கி, கரும்புள்ளி குத்தியமை, வாகனத்துறை, எஃகுத்துறை, சுரங்கத்துறை, போக்குவரத்துத்துறை, மாமிசம் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பெருநிறுவன மற்றும் அரசின் வேலைநிறுத்தங்களை உடைக்கும் மற்றும் தொழிற்சங்கங்களில் சேர விடாமல் தடுக்கும் ஓர் அலைக்கு அறிகுறியாக இருந்தது, இது ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக நீடித்தது.

வோல்க்கர் பின்னர் அவரே குறிப்பிட்டதைப் போல, ரீகன் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் "பணவீக்க நிலைமையின் பேரலையைத் திருப்புவதில்" ஒரு "மிகப் பெரிய காரணியாக" இருந்தன. இங்கே வோல்க்கர், தொழிலாளர்களின் கூலிகள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க அவர்கள் நடத்திய போர்குணமிக்க போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்.

PATCO ஐ தொடர்ந்து ஆளும் வர்க்கத்தால் உலகளாவிய ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் பிரிட்டனில் தாட்சர் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட 1984-85 சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டது ஒரு மைய கூறுபாடாகும்.

இந்த தாக்குதல்கள் எல்லாம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் நேரடி கூட்டுறவு இல்லையென்றால் சாத்தியமாய் இருந்திருக்காது. அமெரிக்காவில், AFL-CIO தொழிற்சங்கம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை ஏமாற்றியது, அதேவேளையில் பிரிட்டனில் தொழிற்சங்க மகாசபை (TUC) சுரங்கத் தொழிலாளர்களை ஆதரிக்க மறுத்தது —இந்தவொரு வடிவம், தொழிலாளர்களின் தோல்வியை உறுதிப்படுத்தி வைக்கும் வகையில், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய போராட்டத்திலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்தது.

இத்தகைய தோல்விகளின் விளைவாக, ஒரு புதிய அரசியல் உறவு ஸ்தாபிக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் இனி எந்த விதத்திலும் தொழிலாள வர்க்கத்தின் ஆகக்குறைந்த நலன்களது பாதுகாவலர்களாக கூட செயல்படவில்லை, ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவனங்களின் "சர்வதேச போட்டித்தன்மையை" உறுதிப்படுத்துவதற்காக என்ற தேசியவாத பதாகையின் கீழ், மூலதனத்தின் கட்டளைகளை அமல்படுத்துபவர்களாக மாறின. அவை, மார்க்ஸ் தத்துவம் விவரித்ததைப் போல முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் அதன் நிதியியல் அமைப்புமுறையின் அடித்தளமான, தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பைச் சுரண்டுவதில் ஒரு மத்திய இயங்குமுறையாக மாறின.

தொழிற்சங்க எந்திரங்களால் அமலாக்கப்பட்ட வர்க்க போராட்டத்தின் ஒடுக்குமுறை, 1980 களில் தொடங்கி, 1990 களில் தீவிரமடைந்து, இந்த புதிய நூற்றாண்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிதியியல்மயமாக்கலின் வளர்ச்சியில் முக்கிய காரணியாக ஆனது.

2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், அது உலகின் பிரதான வங்கிகளது நிதி செயல்பாடுகளுக்கு முன்நிபந்தனையாக இருந்தது. நிதியியல் அமைப்புகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி, அவற்றிற்கு அரசுகளும் மத்திய வங்கிகளும் மானியமளித்தன, அவ்விதத்தில் உலகளாவிய முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் கரங்களுக்குள் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளம் மறுபகிர்வு செய்யப்பட்டது. உலக பொருளாதார சூறையாடலின் பிரதான இயங்குமுறையாக பங்கு சந்தைகள் மற்றும் பத்திர சந்தைகளது உயர்வு இருந்தது, அவை தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் மற்றும் சமூக நிலைமைகளில் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சியிலிருந்து ஊதிப்பெருத்தன.

ஒருவர் இந்த கேள்வியைத் தான் கேட்க வேண்டியுள்ளது: அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட்ட அலை அதிகரித்திருந்தால், பங்குச் சந்தைகள் சாதனையளவுக்கு உயர்ந்திருக்குமா, பில்லியன் பில்லியன்களாக, சில இடங்களில் தோற்றப்பாட்டளவில் இரவோடு இரவாக, குவித்துக் கொள்ளப்பட்டிருக்குமா?

எதிர்வரவிருக்கும் நாட்களில் நிதியியல் சந்தைகள் எந்த திசையில் நகர்ந்தாலும், வெள்ளிக்கிழமை சம்பவங்கள் முக்கிய பொருளாதார மற்றும் வர்க்க உறவுகள் மீது ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளன. இறுதி ஆய்வுகளில், சமூகத்தின் நிதியியல் கூடாரத்தில் திரட்டப்பட்ட பாரியளவிலான இந்த சொத்துக்கள், பாரியளவில் உறிஞ்சி எடுக்கப்பட்ட செயல்முறையின் விளைவாக, தொழிலாளர்களது உழைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த செல்வவளம் வெகு சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமல்ல மாறாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் விளைவாக, நிதியியல் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பதட்டம், கடந்த நான்கு தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட இயங்குமுறைகள் உடைந்து வருகின்றன என்ற அச்சத்திலிருந்து பெருக்கெடுக்கின்றன.

இது தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அடிப்படை அரசியல் சவால்களை எடுத்துக்காட்டுகிறது. கூலி உயர்வுகளுக்காகவும் மற்றும் எப்போதையும் விட அதிகமாக மிகக் கடுமையான சுரண்டும் நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தொழிலாளர்களது சர்வதேச அளவிலான அழுத்தம் மேலிருந்து மூர்க்கமான விடையிறுப்பைச் சந்திக்கும், ஏனென்றால் அது முதலாளித்துவ செல்வ வள திரட்சியின் அடித்தளத்தையே தாக்குகிறது.

தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு அங்கே முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களிடம் ஏதேனும் சமாதானமான "திருத்தம்செய்தல்" இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் தலைமை தாங்கும் இந்த ஒட்டுமொத்த இலாபகர அமைப்புமுறையும் தொடர்ச்சியான முரண்பாடுகளால் —அதாவது இந்த ஒட்டுமொத்த நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையும் பொறிந்து போவதற்கும், வர்த்தக மற்றும் செலாவணி மோதல்கள் தீவிரமடைவதற்கும், சர்வதே நாணய நிதிய முறையின் ஸ்திரப்பாடு மீது நம்பிக்கை பலவீனமடைந்து வருவதற்குமான சாத்தியக்கூறுகளால்— அதிர்ந்து கொண்டிருக்கிறது, இவற்றுடன் அதிகரித்து வரும் உலகப் போர் அச்சுறுத்தல் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் ஸ்திரமின்மையைக் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை.

தொழிற்சங்க சீர்திருத்தவாதம் முன்னர் அறிவித்த, “ஒரு நியாயமான வேலை நாளுக்கு ஒரு நியாயமான தினக்கூலி" என்ற நப்பாசை தூண்டும் குறிக்கோள்களின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துள்ள இந்த போராட்டத்தை நடத்த முடியாது. அதற்கு பதிலாக, மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல, “சுரண்டுபவர்களை கையகப்படுத்துவதன்" மீது அடித்தளமிட்ட ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக, இலாபகர அமைப்புமுறையைத் தூக்கியெறிவதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும்.