ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Informal EU summit steps up Middle East war threats, attacks on migrants

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரபூர்வமற்ற உச்சிமாநாடு மத்திய கிழக்கு போர் அச்சுறுத்தல்களை அதிகரிப்பதுடன், புலம்பெயர்வோரைத் தாக்குகிறது

By Alex Lantier
24 February 2018

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிதி வழங்கல் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான ஒரு அதிகாரபூர்வமற்ற, துறை சார்ந்த மாநாடாக தொடக்கத்தில் காட்டப்பட்டதில் பங்கெடுக்க, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று புரூசெல்ஸில் ஒன்றுகூடினர். ஆனால் அக்கூட்டத்தின் உள்ளடக்கம் மிகவும் வித்தியாசமாக இருந்ததுடன், மிக அதிகளவில் அச்சுறுத்தலாக இருந்தது. மிகப் பெரும் போர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தயாரிப்புக்களை விவாதிப்பதே அந்த மாநாட்டின் முக்கிய விடயமாக இருந்தது என்பதை ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர் டொனால்டு டுஸ்க்கின் அறிக்கை தெளிவுபடுத்தியது.

“சட்டவிரோத புலம்பெயர்வைத் தடுப்பதிலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கும், அத்துடன் Erasmus+ திட்டத்தின் மீதும் ஐரோப்பிய ஒன்றியம் அதிகளவில் செலவிடும் என்பதில் நாங்கள் உடன்பட்டோம்,” என்று டுஸ்க் அறிவித்தார். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச ஆய்வு திட்டத்தின் மீதான இந்த மேற்கோள், என்னவாக இருந்தாலும் மக்கள் ஆதரவைப் பெற்றிராத இராணுவவாத மற்றும் அகதிகள்-விரோத திட்டநிரலைக் கொண்ட ஒரு மாநாட்டுக்கு மக்கள் மத்தியில் ஒரு பொய் வேடத்தை வழங்கும் சமாளிப்பாக இருந்தது.

அது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இராணுவ தலையீடுகளையும் மற்றும் இத்தகைய போர்களில் இருந்து தப்பி பிழைத்து வரும் அகதிகள் ஐரோப்பாவை அடைவதை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் விவாதித்தன. இது ஐரோப்பிய ஒன்றிய திட்டநிரல் மேலாளுமை கொண்டிருந்த, இவ்வாரயிறுதி மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் வரையப்பட்ட திட்டங்கள்—அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தை, பேர்லின்-பாரீஸ் அச்சின் தலைமையில், அதிகரித்தளவில் வாஷிங்டனிடம் இருந்து சுதந்திரமான ஓர் இராணுவ சக்தியாக அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களை எடுத்துக் காட்டின.

சிரியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் ரஷ்ய மற்றும் சிரிய துருப்புகளைக் கொன்று, அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் முழுமையான போரின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில், டுஸ்க் மாஸ்கோ, தெஹ்ரான் மற்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத் தாக்கினார். அவர் கூறினார், “அசாத் ஆட்சி அப்பாவி மக்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி வருகிறது, அதனை ஆதரிக்கும் ரஷ்யா மற்றும் ஈரான், இவை நடப்பதற்கு அனுமதிக்கின்றன. இந்த வன்முறையை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்.”

இது, சிரியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்சில் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வர அழைப்பு விடுத்ததற்குப் பின்னரும், சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சிரியா மீது குண்டு வீச அழைப்பு விடுத்ததற்குப் பின்னரும் வந்தது.

வியாழனன்று, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) நடந்த விவாதத்தில் மக்ரோனின் அச்சுறுத்தல்களை எதிரொலித்தார். “இத்தருணத்தில் நாம் என்ன காண்கிறோமோ, சிரியாவில் இந்த கொடூரமான சம்பவங்கள், ஓர் ஆட்சியின் சண்டை பயங்கரவாதிகளுக்கு எதிரானதல்ல, மாறாக அதன் சொந்த மக்களுக்கு எதிரானது, குழந்தைகளைப் படுகொலை செய்வதும், மருத்துவமனைகளை அழிப்பதும், இவை அனைத்தும் மனிதயின படுகொலையாகும், இவை கண்டிக்கப்பட வேண்டும்,” என்றார். அப்பிராந்தியத்தில் மிகப் பெரும் சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கு இடையே, மேர்க்கெல் தொடர்ந்து கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் அசாத்தின் பிரதான ஆதாரவாளர்களான ரஷ்யா மற்றும் ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறாயினும், அம்மாநாடு புதனன்று மாலியில் கொல்லப்பட்ட இரண்டு பிரெஞ்சு அதிகாரிகளுக்காக ஒரு நிமிட மவுன அனுசரிப்பு மற்றும் அந்நாட்டில் பிரான்சின் நவகாலனித்துவ போருக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு மீதான ஒரு விவாதத்துடன் தொடங்கியது. அங்கே Emilien Mougin மற்றும் Timothé Dernoncourt கொல்லப்பட்டனர், கர்னல் François-Xavier Héon காயமடைந்தார், இவர்களது கவச வாகனம் நைஜர் எல்லையை ஒட்டியுள்ள காவோ க்கு அருகில் சாலையோர கண்ணிவெடியின் மீது ஏறியது. இதற்கு விடையிறுப்பாக, பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரென்ஸ் பார்லி வக்கிரமாக பெருமை பீற்றும் விதத்தில், 2014 இல் அங்கே போர் தொடங்கியதில் இருந்து பிரெஞ்சு செயல்பாடுகள் 450 பேரைக் கொன்றுள்ளதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நன்கொடையாளர்களும், பிரதானமாக பாரசீக வளைகுடா எண்ணெய் வள ஷேக் ஆட்சிகள், G5 சாஹெல் படைகளுக்கு 414 மில்லியன் யூரோ வழங்கி உள்ளன. புர்கினா பாசோ, சாட், மாலி, மொரித்தானியா மற்றும் நைஜர் ஆகிய முன்னாள் பிரெஞ்சு ஆபிரிக்க காலனிகளில் இருந்து சேர்க்கப்பட்ட துருப்புகளைக் கொண்ட இந்த படையைத் தான், பாரீஸ் அப்போரில் அதன் போர்கள பலி படைகளாகவும் மற்றும் அகதிகள் ஐரோப்பா வருவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்துகிறது.

தப்பி வரும் அகதிகளுக்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் உரிமையை மறுக்க, ஐரோப்பிய ஒன்றியம், லிபியாவில் சிறை முகாம்களைக் கட்டமைக்கவும் நிதியுதவி வழங்கி துருக்கிக்கு உதவி வருகிறது. பொதுமன்னிப்பு சபையின் சமீபத்திய அறிக்கை ஒன்று கண்டறிந்ததைப் போல, இந்த முகாம்களில், அகதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், பாலியல்ரீதியில் தாக்கப்படுகிறார்கள், மற்றும் அடிமைகளாகவும் கூட விற்கப்படுகிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நைஜீரிய ஜனாதிபதி மஹமதௌ இஸ்சௌஃபௌ அந்த நிதியுதவிகளுக்காக அதை பாராட்டியதுடன், அவர் அரசாங்கமும் அப்பிராந்தியம் எங்கிலும் உள்ள நாடுகளும் புலம்பெயர்வைத் தடுக்க முயலுமென சூளுரைத்தார். “சாஹெல் ஐரோப்பிய எல்லையோர நாடுகளில் ஒன்றாகும். சாஹெல் ஒருபோதும் சிதையாத ஒரு கவசமாக, ஒரு தடுப்பரணாக உள்ளது,” என்றார்.

அந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாடு, சைப்ரஸ் கடல்படுகையில் எரிவாயு எடுப்பது உட்பட சைப்ரஸ் க்கு துருக்கி உடன் அதிகரித்து வரும் எல்லையோர பதட்டங்கள் குறித்தும், மற்றும் பெப்ரவரி 12 இல் ஏகியன் கடல் தீவுக்குன்றை ஒட்டி கிரேக்க மற்றும் துருக்கிய வாகனங்கள் மோதிக் கொண்ட பின்னர் கிரீஸூடன் துருக்கிக்கு அதிகரித்து வரும் எல்லையோர பதட்டங்கள் குறித்தும் விவாதித்தது. கிரேக்கத்தில் Imia என்றும் துருக்கியில் Kardak என்றும் அறியப்படும் இந்த தீவுக்குன்று மீதான பிரச்சினைகள், 1996 இல் அவ்விரு நாடுகளையும் போருக்கு நெருக்கத்தில் இட்டுச் சென்றது. சைப்ராய்ட் ஜனாதிபதி Nicos Anastasiades மற்றும் கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் இன் அறிக்கைகளைக் கேட்ட புரூசெல்ஸ் மாநாடு, அப்பிரச்சினைகளில் குழப்பத்திற்கு இடமின்றி துருக்கிக்கு எதிராக சைப்ரஸ் மற்றும் கிரீஸ் பக்கம் நின்றது.

டுஸ்க் அறிவித்தார், “ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அனைவரின் சார்பாகவும், நான் சைப்ரஸ் மற்றும் கிரீஸ் உடன் எங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன், மேலும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு துருக்கியைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார். துருக்கி அதன் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அடுத்த மாதம் பல்கேரியாவில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் உடன் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பை இரத்து செய்யவும் அவர் அச்சுறுத்தினார்: “நாங்கள் துருக்கியுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளோம், மேலும் மார்ச் 26 இல் வார்னாவில் துருக்கியுடன் தலைவர்களது சந்திப்பை நடத்துவதற்கான நிலைமைகள் உள்ளதா என்பதை எங்களின் மார்ச் ஐரோப்பிய ஆணைக்குழுவில் மதிப்பீடு செய்வோம்,” என்றார்.

அந்த மாநாடு பிரிட்டன் வெளியேற்றம் குறித்தும் விவாதித்தது. பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் உறவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை தயாரித்து வருவதாக டுஸ்க் பட்டவர்த்தனமாக எச்சரித்தார். அவர் அறிவித்தார், “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு இடையிலான எதிர்கால உறவுகள் தொடர்பாக மார்ச் மாநாட்டில் நான் வழிகாட்டி வரைவைச் சமர்பிப்பேன். இங்கிலாந்து அதன் தொலைநோக்கு பார்வையுடன் எங்களுடனான எதிர்கால உறவுகளுக்கு தயாராக இருக்கிறதோ, இல்லையோ, அந்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதே எங்களின் உத்தேசம்,” என்றார்.

பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னர் ஏற்படக்கூடிய வரவுசெலவு திட்ட பற்றாக்குறையை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவு திட்ட பற்றாக்குறையில் பிரிட்டனின் பங்களிப்பு இழப்பை எவ்வாறு சமாளிப்பது என்பதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது என்று நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா உட்பட பல சிறிய நாடுகள் வலியுறுத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் விவசாயத்திற்கும் மற்றும் ஐரோப்பாவின் வறிய பகுதிகளுக்கும் மானியங்களைக் குறைக்குமாறு அவை கோரி வருகின்றன.

இந்த மாநாடு மீண்டுமொருமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. 1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டதில் இருந்தும், குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்தும், சிக்கன திட்டங்களை அமல்படுத்துவதில் அது வகித்து வந்துள்ள பாத்திரத்தின் காரணமாக, அது ஏற்கனவே பரந்தளவில் மக்களிடையே செல்வாக்கிழந்துள்ளது. இப்போதோ, பால்கன்கள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் பத்து மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக மாற்றி உள்ள ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர்களுக்குப் பின்னர், அது ஓர் இராணுவவாத படையரண் ஐரோப்பாவாக உருவெடுத்து வருகிறது, அதன் எல்லையோரங்களில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு சிரியா, ஈரான் அல்லது அணுஆயுதமேந்தி ரஷ்யாவுடன் கூட மிகப் பெரும் போர்களுக்குத் தயாரிப்பு செய்வதன் மூலமாக விடையிறுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் முதலாளித்துவ ஐரோப்பாவை ஒருங்கிணைத்து வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள், அனைத்திற்கும் மேலாக, பிரிட்டன் வெளியேறுவது என்றான பின் பொறிந்து போயுள்ளது, மேலும் தீவிரமடைந்து வரும் சர்வதேச முரண்பாடுகள் ஐரோப்பிய அதிகாரங்களை சின்னாபின்னமாக்கி வருகின்றன. அந்த மாநாட்டுக்கு முந்தைய மாலை, பிரிட்டன் உட்பட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அலட்சியப்படுத்தி, பெல்ஜியம் பிரதம மந்திரி சார்லெஸ் மைக்கெல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர்களுடன் ஒரு தனி கூட்டத்தை நடத்த முடிவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Château de Val-Duchesse இல், மைக்கெல் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா, பின்லாந்து, லுக்சம்பேர்க், போலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவேகியாவிலிருந்து தலைவர்களை அழைத்திருந்தார். ஒரு சில நாடுகளே பிரதிநிதித்துவம் செய்திருந்த நிலையில் இந்த மிகவும் வழமைக்கு மாறான அமைப்பில், ஒரு பெல்ஜிய அதிகாரி Express க்கு கூறுகையில், அரசு தலைவர்களால் "உண்மையிலேயே அவர்களின் மனதிலிருந்தை சுதந்திரமாக பேசவும் விவாதிக்கவும் முடிந்தது,” என்றார்.

சுழற்சி முறையிலான ஐரோப்பிய ஒன்றிய ஜனாதிபதி பதவி வகிக்கும் பல்கேரிய பிரதமர் Boyko Borisov பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில், Château de Val-Duchesse கூட்டம் "பிராந்திய தலைமை" கூட்டம் என்றார். “கிரீஸ் இல் இருந்து, மசடோனியா வரையில், சேர்பியாவில் இருந்து கொசோவோ, துருக்கி, ரஷ்யா வரையில், பிரன் வளைகுடா எல்லை பிரிவினை தொடர்பாக ஸ்லோவேனியா மற்றும் குரேஷியாவுக்கு இடையிலான பிரச்சினை வரையில் பலதரப்பட்ட விடயங்களைக்" குறித்தும், அவர்கள் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய மோதல்கள் குறித்தும் உரையாடியதாக அவர் தெரிவித்தார்.

எர்டோகன் உடனான வார்னா மாநாடு "பலமாக" இருக்குமென கூறிய அவர், அறிவித்தார்: “[ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட்] ஜூங்கர், டுஸ்க் மற்றும் எர்டோகனை இரவு உணவு விருந்துக்கு அழைப்பது மகிழ்ச்சியான ஒரு வேலையென யாரேனும் நினைத்தால், அவர் அனேகமாக அரசியலுக்கு ஒரு புதுநபராக இருக்கலாம் அல்லது ஏதும் அறியாதவராக இருக்கலாம். முற்றிலும் ஒரு சிக்கலான சந்திப்பான அது, முழுமையாக எதிர்பார்ப்புகள் மற்றும் பதட்டங்களால் நிறைந்திருந்தது… எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தின் மீதும் அல்லது அவற்றில் ஒரு சிலவற்றின் மீது எங்களால் உடன்பாடு காண முடியும் என்று கூட என்னால் கற்பனை செய்ய முடியவில்லை,” என்றார்.