ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French media endorse plan for anti-worker Grand Coalition government in Germany

ஜேர்மனியில் தொழிலாளர் விரோத பெரும் கூட்டணி அரசாங்கத்திற்கான திட்டத்தை பிரெஞ்சு ஊடகங்கள் வழிமொழிகின்றன

By Alex Lantier
12 February 2018

ஜேர்மனியின் பழமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் இடையே ஒரு “பெரும் கூட்டணி”யை உருவாக்குவதற்கான பிப்ரவரி 7 கூட்டணி உடன்பாட்டை, பிரான்சின் ஊடகங்கள், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் அடுத்து ஜேர்மனியில் உருவாகவிருப்பதாக அவை நம்பும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணிக்கான முதல் படி என்று கூறி வழிமொழிந்திருக்கின்றன.

இது சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கை ஆகும். சென்ற வாரத்தின் உடன்பாட்டில் அடங்கியிருந்த கொள்கை இலக்குகள் -ஜேர்மனியை மீண்டும் இராணுவமயமாக்குவது, இராணுவச் செலவினத்தை இரட்டிப்பாக்குவது, புலம்பெயர் மக்கள் மீது அதி-வலது கொள்கைகளைத் திணிப்பது, அத்துடன் உளவு மற்றும் போலிஸ் முகமைகளை பாரிய அளவில் கட்டியெழுப்புவது- ஐரோப்பாவெங்கிலும் ஆளும் வர்க்கத்தால் பகிர்ந்து கொள்ளப்படுவதாக இருக்கின்றன. குறிப்பாக, அரக்கத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கும், இராணுவச் செலவினத்தில், குறிப்பாக அணு ஆயுதங்களுக்கான செலவினத்தின் பெரும் அதிகரிப்புகளுக்கும் நெருக்கி வருகின்ற மக்ரோனுக்கும் பேர்லினுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான அடிப்படையாக இதுவே அமைந்திருக்கிறது.

பெரும் கூட்டணி உடன்பாடு, CDU/CSU-பசுமைக் கட்சி-FDP (சுதந்திர ஜனநாயகக் கட்சி) கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு நடந்த முந்தைய முயற்சிகளைக் காட்டிலும் மேம்பட்டதாய் இருந்ததாக வெள்ளிக்கிழமையன்று மக்ரோன் தெரிவித்தார். “இந்தத் தற்காலிக உடன்பாட்டின் ஷரத்துகள் சென்ற ஆண்டில் நடந்த முந்தைய முயற்சிகளின் போது எழுப்பப்பட்டவற்றைக் காட்டிலும் ஐரோப்பிய திட்டப்பணிக்கு கூடுதல் அனுகூலமாய் இருக்கின்றன” என்று அவர் அறிவித்தார். ஆஸ்திரிய சான்சலரான செபஸ்டியான் குர்ஸை -அதிவலது ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி (FPO) உடனான ஒரு வலது-சாரி கூட்டணி அரசாங்கத்தின் தலைவர்- எலிசே அரண்மனைக்கு வரவேற்று அழைத்த சமயத்தில் அவர் இதனைக் கூறினார்.

பிரெஞ்சு செய்தித்தாள்களும் மற்றும் செய்தியிதழ்களும் யூரோமண்டல வங்கிப் பிணையெடுப்புகளின் விடயத்தில் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு நிலைப்பாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற கருத்துவேறுபாடுகள் குறித்து சுட்டிக்காட்டிய அதேவேளையில், இந்த கருத்துவேறுபாடுகளைக் கடந்து பேர்லினும் பாரிஸும் பொதுவான களத்தைக் காணும் என்று பெரும்பாலும் நம்பிக்கை வெளியிட்டன.

Euronews இந்த கூட்டணி உடன்பாட்டைப் பாராட்டியது, “ஐரோப்பிய ஒன்றியத்தில் பல சீர்திருத்தங்களுக்கு இது பாதை திறக்கிறது” என்றும் “பிரெஞ்சு ஜனாதிபதியுடனான ஒரு அரசியல் உறவு வலுப்படலுக்கான கட்டியம் கூறுகிறது” என்றும் அது கூறிக் கொண்டது. நீண்டகாலமாக சிக்கன நடவடிக்கைகளின் கட்சியாக இருந்து வருகின்ற சமூக ஜனநாயகக் கட்சி (SPD), “சிக்கன நடவடிக்கைகள் மென்மைப்படுவதையும் பொது முதலீடுகளில் கூடுதல் வெளிப்படைத் தன்மையையும்” மேற்பார்வை செய்யும் என்பதாக அது பிரமைகளை விதைத்தது. அதன்பின் Euronews, இவை “வர்த்தகப் போட்டித் திறனை” ஊக்குவிக்கும் என்று புரூசெல்ஸின் பேராசிரியர் மரியோ டெலா கூறியதை மேற்கோள்காட்டி இந்த மதிப்பீட்டுக்கு முரண்பட்டது.

பிற பத்திரிகைகள், பேர்லினும் பாரிஸும் இப்போது தமக்கிடையிலான மோதல்களைக் கடந்து ஒன்றுபட முடியும், ஒரு கூட்டான ஐரோப்பிய இராணுவ மற்றும் சமூகக் கொள்கையில் உடன்பட முடியும் என்பதாக, மிகவும் எச்சரிக்கையுடனான நம்பிக்கைகளை வெளிப்படுத்தின.

மக்ரோன் அரசாங்கத்துக்கு நெருக்கமான Le Point, பழைமைவாதிகள்-பசுமைக் கட்சி-FDP அரசாங்கம் ஒன்றின் ‘கொடுங்கனவு’ தவிர்க்கப்பட்டதில் குதூகலித்தது. “இந்த பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலும் இறுதியாக சமூக-ஜனநாயக SPD உடன் ஒரு அரசாங்க உடன்படிக்கை நிறைவுபெறுவதிலும் பாரிஸ் மிகவும் நிம்மதியடைந்தது” என அது மேலும் சேர்த்துக் கொண்டது. “இரண்டாவதாகக் கூறியது இமானுவல் மக்ரோனின் ஐரோப்பியக் கருத்தாக்கங்களுக்கு நெருக்கமானவையாகக் கருதப்படுகிறது. ஆயினும் நாம் நிமிர்ந்த பார்வை கொண்டிருக்க வேண்டும். ஜேர்மனியில் ‘அடிப்படைகள்’ ஒருபோதும் மாறுவதில்லை”.

தளர்ந்த நாணையக் கொள்கை, பொதுவான யூரோமண்டல வரவு-செலவு திட்டம் மற்றும் மக்ரோனால் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை SPD மேற்பார்வை செய்யும் என்பதான பிரான்சின் வங்கிகளது நம்பிக்கைகளில் Le Point அமிலம் ஊற்றியது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், யூரோமண்டல கடன் நெருக்கடியின் சமயத்தில், பாரிஸ் எவ்வாறு SPD இன் நிதி அமைச்சரான பியர் ஸ்ரைன்புறூக் உடன் மோதல் கண்டது என்பதை அது நினைவுகூர்ந்தது. அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி ஸ்ரைன்புறூக்கை ”big as*hole” என்று அழைத்ததோடு  ”திமிர்பிடித்த”வராக அவரைக் கருதினார் என்றும் Le Point எழுதியது.

Libération நாளிதழ், ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல் “ஒரு உயர்ந்த ஐரோப்பியர் என்பதற்கெல்லாம் வெகுதூரம் என்பதை யூரோ நெருக்கடியின் சமயத்தில் காட்டியிருந்தார், அப்போது அதன் உயிர்வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சீர்திருத்தங்களை மட்டுமே, கடைசி நிமிடத்தில் ஒப்புக்கொண்டார்” என்று புகார் தெரிவித்தது.

Libération தொடர்ந்து எழுதுகிறது, எவ்வாறாயினும், ஒரு பெரும் கூட்டணி அரசாங்கத்தின் மூலமாக “மக்ரோன் அவரது ஐரோப்பியக் கனவு நனவாகும் நம்பிக்கை கொள்ள முடியும். மக்ரோன் செப்டம்பர் 26 அன்று நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து மூன்று நாட்களின் பின்னர், சோர்போன் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா குறித்து பேசுகையில் பேர்லினின் திட்டநிரலில் செல்வாக்கு செலுத்த அவர் முயன்றதைக் கண்டு எல்லைமீறிச் செல்வதாக பல வருணனையாளர்கள் வாயை மூடிக்கொண்டு சிரித்தனர். ஆனால் உண்மையில் அவர் வெற்றி பெற்றார்... வருங்காலப் பெரும்பான்மை அதன் தோற்றத்திலேயே பிரான்சும் கரம்கோர்த்துச் செயல்பட தயாராய் இருப்பதாக கூறுகிறது.”

வலது-சாரி Le Figaro எழுதியது: “ஐரோப்பிய ஒன்றியத்தை மறுதொடக்கம் செய்வது குறித்த பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் முன்மொழிவுகளுக்கு பேர்லின் இறுதியாக பதிலிறுப்பு தரும் நிலைக்கு வரவிருக்கிறது”. ஆயினும் மேர்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) அதன் பவேரியக் கூட்டாளியான கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் (CSU) மக்ரோனின் திட்டங்களுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்ததாக அது மேலும் சேர்த்துக் கொண்டது. “அதேசமயத்தில் சான்சலரின் கூட்டாளிகள் இமானுவல் மக்ரோன் மீது ஒரு உண்மையான தோல்வியைக் கொண்டுவந்தனர்: 2019 மே ஐரோப்பியத் தேர்தல்களில் ‘நாடுகடந்த’ பட்டியல்களுக்கான திட்டம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரெஞ்சு ஜனாதிபதியின் மையமான ஒரு இலட்சியத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் -CDU/CSU இன் தூண்டுதலின் பேரில்- நிராகரித்தது.”

கோலிச குடியரசுக் கட்சிக்கும் (LR) மற்றும் அதன் தலைவரான லோரோன் வோக்கியேக்கும் நெருக்கமான Le Figaro, LRக்கும் அதன் வெளிப்பட்ட ஜேர்மன் கூட்டாளியான CDUக்கும் இடையிலான பிளவுகளை சுட்டிக்காட்டியது. வோக்கியே “பொருளாதாரப் பாதுகாப்புவாத”த்திற்கு அனுகூலமானவராக கூறிக் கொள்வதோடு நவ-பாசிச தேசிய முன்னணியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். பாதுகாப்புவாதம் குறித்த மேர்க்கெலின் விமர்சனங்கள் குறித்து தொலைக்காட்சியில் வோக்கியேயிடம் கேட்கப்பட்ட போது, “பிரான்ஸ் நமது ஐரோப்பிய முன்னுரிமைகள் மீது அக்கறை செலுத்துவதற்கான நேரமாகும் இது, அது அப்பாவித்தனமாக பிரான்ஸ்-ஜேர்மனி உறவு குறித்து மட்டும் அக்கறைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. ஐரோப்பாவில் ஜேர்மனி மட்டுமே ஒரே நாடு அல்ல” என்று பதிலளித்தார்.

பெரும் கூட்டணியின் வலது-சாரி திட்டநிரலுக்கு ஜேர்மன் தொழிலாளர்கள் மத்தியில் நிலவக் கூடிய ஆழமான சமூக எதிர்ப்பு -இது சமீபத்து உலோகத் தொழிலாளர்கள்’ வேலைநிறுத்தத்தில் உச்சம்கண்டது- குறித்து Le Monde சூசகம் செய்தது. பழமைவாதிகள்/சமூக-ஜனநாயக கூட்டணி உடன்பாட்டை, “தலைவர்கள் எல்லாவற்றையும் விட அச்சம் கொடுக்கக்கூடியதான புதிதாய் தேர்தல் நடத்துவது என்னும் ஒன்றைத் தவிர்க்கும் நோக்கத்துடனான ஒரு தற்காலிக சமரசம்” என்று அது அழைத்தது. கூட்டணி உடன்பாடானது “இப்போதைய ஒழுங்கு உயிர்வாழ்வதை உத்தரவாதம் செய்யும் முயற்சி என்பதான ஒரு மனத்தோற்றத்தையே முக்கியமாய் கொடுக்கிறது” என்று அது சேர்த்துக்கொண்டது.

பெரும் கூட்டணி உடன்பாடும் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு “தலைமை கொடுப்பதற்கான” பேர்லின்-பாரிஸ் அச்சும் ஐரோப்பாவை ஆட்சி செய்த பாசிச ஆட்சிகளுக்குப் பிந்தைய மிக வலது-சாரியான வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பது மட்டுமே சொல்லப்படாமல் விடப்பட்டிருக்கிறது. ஜேர்மனி மறு ஆயுதபாணியாகிக் கொண்டிருக்கிறது, சொந்த நாட்டில் ஒடுக்குமுறையை அதிகரிப்பதுடன் கரம்கோர்த்த ஒரு மூர்க்கமான இராணுவக் கொள்கைக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது, அத்துடன் பெரும் கூட்டணியானது மக்ரோனின் பிற்போக்குத்தனமான சமூகத் திட்டநிரல் விடயத்திலும் ஐரோப்பாவெங்கிலும் ஒரு இராணுவ-சிக்கன நடவடிக்கை கட்டளைகளை திணிப்பதிலும் மக்ரோனுடன் சேர்ந்து வேலைசெய்கிறது.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னரும் இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்ததற்குப் பின்னரும் தொழிலாள வர்க்கம் பெற்ற சமூக தேட்டங்கள் அத்தனையையும் கிழித்துவீச மக்ரோன் நோக்கம் கொண்டிருக்கிறார். SPDயுடன் சேர்ந்து வேலை செய்து அவர் கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் உத்தரவாணைகள், தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சட்டத்தை நிறுத்தி வைத்து விட்டு, ஒவ்வொரு வேலையிடமாக குறைந்தபட்சத்திற்கும் குறைவான ஊதியங்களை திணிப்பதற்கு அனுமதிக்கிறது. அத்துடன் பொதுச்வேவைத் துறை தொழிலாளர்களுக்கும் இரயில்வே தொழிலாளர்களுக்கும் வாழ்நாள் வேலை உத்தரவாதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இரயில்வேக்களை தனியார்மயமாக்குவதற்கும், வேலைவாய்ப்பின்மை காப்பீட்டில் அரக்கத்தனமான வெட்டுக்களை செய்வதற்கும் கூட அவர் திட்டமிடுகிறார். குறிப்பிடப்படாமல், ஓய்வூதியங்களிலும் ஆரோக்கியப் பராமரிப்பிலுமான ஆழமான வெட்டுக்கள் அவரது பதவிக்காலத்தின் பிற்காலத்திற்காய் அறிவிக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் -- மக்ரோனும் மேர்கெலும் பத்துபில்லியன் கணக்கான யூரோக்களை செல்வந்தர்களுக்கான வரி விலக்குகளிலும், இராணுவத்திலும், அணு ஆயுதங்களிலுமாய் மூழ்கடிக்கின்றனர்.

இந்தத் திட்டநிரல் ஆழமாய் மக்கள்விரோதமானதாகும். எப்படி பிரெஞ்சு மக்களில் 70 சதவீதம் பேர் தொழிற்சட்டத்தையும் மக்ரோனின் தொழிலாளர் உத்தரவாணைகளையும் எதிர்த்தார்களோ, அதைப் போலவே வெறுமனே 30 சதவீத ஜேர்மனியர்கள் மட்டுமே பெரும் கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

பேர்லின்-பாரிஸ் அச்சின் திட்டங்கள் குறித்து ஐரோப்பாவின் மக்கள் இருட்டில் வைக்கப்படுவதாலேயே அது முன்செல்ல முடிகிறது. பெரும் கூட்டணியின் பின்னால் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கின்ற ஜேர்மனியின் இடது கட்சியும், அத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் இறுதிச் சுற்றில் புறக்கணிப்பு அழைப்புவிட மறுத்து ஒரு மக்ரோன் வாக்களிப்புக்கான ஊடகப் பிரச்சாரத்தின் பின்னால் ஓசையின்றி சாய்ந்த ஜோன் லுக் மெலன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி ஆகியவையும் இதில் அரசியல் உடந்தையாக இருக்கின்றன.

பெரும் கூட்டணியை நிராகரிப்பதற்கும் புதிய தேர்தலுக்கு - இதைக் கண்டுதான் ஆளும் வர்க்கம் மிக அதிகமாக அஞ்சுகிறது என்பதை Le Monde ஒப்புக்கொள்கிறது- அழைப்பு விடுப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) விடுத்த அழைப்பின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜேர்மன் கட்சிகளுக்கு இடையிலான மற்றும் பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையிலான, பெரும் கூட்டணியின் கீழமைந்த இரகசிய உடன்பாடுகள் அத்தனையையும் வெளியிடுவதற்கு SGP கோரியிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு குரலையும் ஐரோப்பாவில் இராணுவவாத்தை நோக்கிய செலுத்தத்திற்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் தலையீடு செய்வதற்கான ஒரு வழியையும் அளிக்கும் நோக்குடையதாகும்.

இராணுவவாதத்தையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்கு எந்த தேசியப் பாதையும் இல்லை. ஜேர்மனிக்கு எதிராய் பிரெஞ்சு தேசிய நலன்களுக்காகப் பேசுவதாகக் கூறுகின்ற சக்திகள் அப்பட்டமான பேரினவாத மற்றும் தொழிலாளவர்க்க-விரோத சக்திகளாகும். பெரும் கூட்டணியை எதிர்க்கின்ற ஐரோப்பிய தொழிலாளர்கள் தமது போராட்டங்களை ஜேர்மனியில் இருக்கும் தமது வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்துவதும், SGP மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகர மற்றும் சர்வதேசியப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதும் மட்டுமே அவர்களுக்கு இருக்கின்ற முன்னோக்கிய வழி ஆகும்.