ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France to sign basing deal with India, drawing Europe into drive to war in Asia

ஆசிய போர் உந்துதலுக்குள் ஐரோப்பாவையும் இழுக்கும் கடற்படைத்தள ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் பிரான்ஸ் கையெழுத்திட இருக்கிறது

By Athiyan Silva 
19 February 2018

கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கட்டாய இராணுவ சேவைக்கும், சிரியா மீது விமானத் தாக்குதல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதோடு, ஆசியாவிலான போர் உந்துதலில் ஐரோப்பாவின் பங்கை விரிவுபடுத்துவதற்கும் அவர் அழுத்தம் கொடுக்கிறார்.

பெய்ஜிங்கின் உயிர்நாடியாக உள்ள பாரசீக வளைகுடா எண்ணெய் மற்றும் ஐரோப்பா, ஆசியாவிற்கு இடையிலான உற்பத்தி பொருட்களின் வர்த்தகத்திற்கு முக்கிய வழித்தடமாக உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவிற்கு ஈடான சமநிலை சக்தியாக இந்தியாவை கட்டமைக்கும் முயற்சிகளை, ட்ரம்பின் கீழ் வாஷிங்டன் தீவிரப்படுத்தியுள்ளது.

பிரான்சும், இந்தியாவுடன் தனது இராணுவ உறவுகளை அதிகரிப்பதுடன், இந்திய பெருங்கடல் பகுதியில் அதன் பங்கை விஸ்தரிக்க சதித்திட்டம் தீட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ இயந்திரமாக மாற்ற பேர்லினுடன் பாரிஸ் இணைந்து செயலாற்றுவதையும், தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பிரான்ஸ் கொண்டிருக்கும் மூலோபாய உந்துதலையும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் வேட்கையின் அளவு மற்றும் மக்களுடைய முதுகிற்கு பின்னால் அவர்கள் தயாரிப்பு செய்துவரும் போர்களின் நோக்கம் ஆகியவற்றை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மக்ரோன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருக்கிறார். அங்கிருக்கும் போது, பிரெஞ்சு கடற்படை கப்பல்களின் பழுது நீக்கம் மற்றும் மீள்விநியோகத்திற்கு இந்திய துறைமுகங்களை அணுக அனுமதி வழங்கும் மற்றும் பிரான்சின் இந்திய பெருங்கடல் பகுதி இராணுவத் தளங்களை இந்திய கப்பல்கள் வழமையாக பயன்படுத்த உரிமையளிக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சின் காலனித்துவ சாம்ராஜ்யம் பல தசாப்தங்களுக்கு முன்னரே சரிந்துவிட்டது என்றாலும், மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்திய பெருங்கடல் இராணுவ தளங்களின் ஒரு பரந்த வலையமைப்பை அது தக்கவைத்துக் கொண்டுள்ளது. உண்மையில், சமீபத்தில் இந்த வலையமைப்பை பாரசீக வளைகுடாப் பகுதி வரை பிரான்ஸ் விஸ்தரித்துள்ளதை பயன்படுத்தி அமெரிக்க தலைமையிலான பல மத்திய கிழக்கு போர்களில் வாஷிங்டனுக்கு பாரிஸ் ஆதரவளித்துள்ளது.

ஆபிரிக்க முனையில் அமைந்துள்ள ஜிபூட்டி (Djibouti), மடகஸ்காருக்கு அருகிலுள்ள ரீயூனியன் தீவு, ஐக்கிய அரபு கூட்டாட்சிகள், மற்றும் மொசாம்பிக்கிற்கு தொலைவிலுள்ள மாயோட் (Mayotte) தீவு ஆகிய பகுதிகளிலும் பிரான்ஸ் இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. பிரான்சும் இந்தியாவும் ஷேசெல்சில் (Seychelles) ஒரு இராணுவ தளத்தை கட்டமைக்கவும் தயாரிப்பு செய்து வருகின்றன.

சீனாவின் மீது ஒரு பொருளாதார முற்றுகையை திணிப்பதற்கு, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளிலுள்ள தடை முனைகளை கைபற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டங்களில் தன்னை எப்பொழுதும் முற்றிலும் ஒருங்கிணைத்துக் கொள்ளும் வகையில் இந்தியா அபிவிருத்தி செய்துவருகிறது. இது, இந்திய பெருங்கடல் இராணுவத் தள வலையமைப்பின் ஒரு பாகமாகவே இருக்கிறது.

மலாக்கா ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் தற்போது வழமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன, மேலும் இந்திய பெருங்கடலில் சீனக் கப்பல் மற்றும் அதன் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவல்களை பென்டகனுடன் இந்திய இராணுவம் பரிமாறிக் கொள்கின்றது.

2016 இல் புது தில்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையே கையெழுத்தாகி கடந்த கோடையில் செயல்படுத்தப்பட்ட தளவாட பரிவர்த்தனை குறிப்பாணை ஒப்பந்தத்தின் (Logistics Exchange Memorandum of Agreement-LEMOA) கீழ், இந்திய மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஒன்று மற்றொன்றின் இராணுவத் தளங்களை வழமையாக அணுகக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்திய கப்பல்கள், டியாகோ கார்சியாவில் உள்ள பென்டகனின் முக்கிய இந்திய பெருங்கடல் இராணுவத் தளத்தில் தற்போது கூட நங்கூரமிட முடியும்.

மாலைதீவு, மடகாஸ்கர் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியா இராணுவ கண்காணிப்பு மையங்களை அமைத்துள்ளது என்பதுடன், இந்த மாத தொடக்கத்தில் பிரதம மந்திரி நரேந்திர மோடி ஓமனுக்கு விஜயம் செய்த போது, அந்நாட்டின் முக்கிய அரேபிய கடல் துறைமுகமான Duqm ஐ இந்திய கடற்படை கப்பல்களின் விநியோகத்திற்கு பயன்படுத்தும் உரிமையையும் இந்தியா பெற்றுள்ளது.

தென் சீனக் கடல் உட்பட, பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்தியாவும் அதன் கடற்படை பிரசன்னத்தை விஸ்தரித்துள்ளது. அந்த முடிவுக்கு, புதுடில்லி சிங்கப்பூருடன் தனது இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பை பாரியளவில் விரிவுபடுத்தி, அதன் கடற்படை கப்பல்களுக்கு சேவை செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது.

ஒருவருக்கொருவர் கண்காணிக்கவும், அச்சுறுத்திக் கொள்ளவும் இராணுவ அடிப்படையிலான போட்டி வலையமைப்பை அமைத்து போட்டியிடும் அணுவாயுதம் ஏந்திய சக்திகளுடன் இந்திய பெருங்கடல் எந்த நேரத்திலும் வெடித்து சிதறக்கூடிய வெடிமருந்து கிடங்கையே அதிகரித்தளவில் ஒத்திருக்கிறது.

இந்தியா, மத்திய கிழக்கு எண்ணெய் மீதான அதன் சார்பையும், அதன் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான நீர்வழி முக்கியத்துவத்தையும் வழங்கும் தற்காப்பு முறையாக கருதி, அதன் இந்திய பெருங்கடல் பிரசன்னத்தை விரிவுபடுத்துகிறது. ஆனால், அத்தகைய கூற்றுகள் தெளிவாக போலித்தனமாக உள்ளன.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஒரு நீலநிற கடற்படையை (blue water navy) கட்டமைப்பதற்கான ஒரு மோதல் திட்டத்தில் இறங்கியும், ஒரு அணுவாயுத முத்தொகுப்பை அதாவது தரை, ஆகாயம் மற்றும் நீருக்கடியில் இருந்து அணுவாயுதங்களை ஏவும் திறன் கொண்ட ஆயுதத் தொகுப்பை அபிவிருத்தி செய்தும், இந்தியா அதன் இராணுவ வலிமையை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் அதன் வளர்ந்துவரும் இராணுவ தகமையை சந்தைகள், வளங்கள் மற்றும் இலாபங்கள் ஆகியவற்றிற்கான பெரும் சக்திவாய்ந்த போராட்டத்தில், அதன் நீண்டகால பொருளாதார பலவீனம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகக் இதனைக் காண்கிறது.

சீனப் பொருளாதாரத்தை முடக்கவும், பெய்ஜிங்கை அதன் முழங்கால்களுக்கு கீழ் தள்ளி நசுக்கவும் நோக்கம் கொண்டு, மத்திய கிழக்கில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு அச்சுறுத்தும் வாஷிங்டனுடன் இணைந்து, இந்தியாவின் கடற்படை மற்றும் கடற்படை தள வலையமைப்பு செயலாற்ற புது தில்லியை அனுமதிக்கிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக சீனா, மத்திய கிழக்கில் இருந்து அதன் 60 சதவிகித எண்ணெயை பெற்று, அதில் 80 சதவிகிதத்தை இந்திய பெருங்கடல் பகுதி ஊடாக இடம்பெயர்த்துவதுடன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏனைய மூலப் பொருட்களையும் பெற்றுக் கொள்கிறது.

பெய்ஜிங்கின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (Beijing’s Asian Infrastructure Bank- AIIB) நிதியளிப்பில், யூரேசியா முழுவதும் நில மற்றும் நீர் வர்த்தக பாதைகளை நிர்மானிக்கும் அதன் ஒரே பாதை ஒரே இணைப்பு (One Belt One Road-OBOR) திட்டத்தை முன்னேற்றுவதன் மூலமாக பெய்ஜிங், மூலோபாய ரீதியாக அதை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலிறுத்துள்ளது.

சீனா, அதன் நட்பு நாடும் மற்றும் இந்தியாவின் நீண்டகால போட்டியாளருமான பாகிஸ்தானுடன், 2015 இல், 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Corridor-CPEC) அமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இது மேற்கு சீனாவை, அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் ஒரு மூலோபாய ரீதியாக அமைந்திருக்கும் பாகிஸ்தான் துறைமுகமான குவடார் உடன் இணைக்கிறது. CPEC திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது, மத்திய கிழக்கில் இருந்து எண்ணெயையும், எரிவாயுவையும் பாகிஸ்தானை ஒரு நிலவழி பாதையாக பயன்படுத்தி சீனாவுக்கு கொண்டு செல்வதற்கு அது உதவும், மேலும் அதனால் இந்திய பெருங்கடலில் அமெரிக்க-இந்திய கடற்படை முற்றுகையின் அச்சுறுத்தல் குறைக்கப்படும் என்பதோடு, சீனப் பொருட்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிக்கு கடல் வழியாக பயணிக்க வேண்டிய 16,000 கி.மீ. தூரமும் குறையும்.

ஜிபுட்டியில் போட்டி இராணுவத் தளம் அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை சீனாவும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அது, தெற்கு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுப்பது மற்றும் பங்களாதேஷில் சிட்டாகாங் துறைமுகத்தை வளர்ச்சியடையச் செய்வது உட்பட, இந்திய பெருங்கடல் முழுவதும் ஆழமான நீர் துறைமுகங்களை மேம்படுத்தி வருகிறது. மேலும், அதன் இராணுவத் தளங்களின் “கூப்பிடு தூரத்தில்” உருவாக்குவதற்கு இந்தியா உரிமை கோரியிருந்த ஒரு அபிவிருத்தித் திட்டமும் உட்பட, பெரும் முதலீடுகளை மாலத்தீவிலும் இது உருவாக்கியுள்ளது.

இந்த மாதத்தில், சீன ஆதரவு பெற்ற ஜனாதிபதி அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய இந்தியா மாலைதீவை முற்றுகையிடக் கூடும் எனத் தோன்றியபோது, மேற்பரப்பிற்கு அடியில் திரண்டுகொண்டிருக்கும் பெரும் வல்லரசுகளின் பதட்டங்கள் வெடிப்பதை காணக்கூடியதாக இருந்தது. அனைத்து நாடுகளும் ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலமாக, மாலைதீவு குறித்து எந்த நேரத்திலும் இறுதி முடிவை எடுக்கக் காத்திருக்கும் இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கைகளுக்கும் பெய்ஜிங் விடையிறுத்தது. சீன அரசுக்கு சொந்தமான Global Times பத்திரிகை இன்னும் கூடுதலாக சென்று, அதன் தலையங்கம் ஒன்றில், “மாலைதீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாது, ஆனால், இந்தியா கொள்கையை மீறி செல்லும் பட்சத்தில், பெய்ஜிங் வெறுமனே உட்கார்ந்திருக்கும் என்று அர்த்தமாகாது. இந்தியா ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அதன் துருப்புகளை மாலத்தீவுக்கு அனுப்புமானால், புது தில்லியை தடுத்து நிறுத்த சீனா நடவடிக்கை எடுக்கும்” என அறிவிக்கிறது.

இத்தகைய முரண்பாடுகள், இந்திய படைகளை பிரெஞ்சு தளங்களுக்குள் அனுமதிப்பதற்கான மக்ரோனின் முடிவினால் வெடிப்புறும் தாக்கங்களையும், பிரான்ஸ் ஒரு இந்திய பெருங்கடல் சக்தி என்ற பாரிசின் வலியுறுத்தல்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் ஒரு தொகை மூலோபாய போட்டிகளானாலும் சரி அல்லது தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகளானாலும் சரி, இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட அணுவாயுதம் ஏந்திய சக்திகளுக்கு இடையேயான ஒரு உலகளாவிய போருக்கான சாத்தியமாக விரிவடையலாம்.

இது மக்ரோன் உடன் கூடி வேலை செய்யவுள்ள, பேர்லினில் முன்மொழிப்பட்டுள்ள பழைமைவாத / சமூக ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கைகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான  Sozialistische Gleichheitspartei (சோசலிச சமத்துவக் கட்சி) இன் அழைப்பின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெரும் வல்லரசுகளின் இடைவிடாத போருக்கான உந்துதலுக்கு மத்தியில், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களை முன்னெடுப்பதற்கென தீட்டப்படும் யுத்தத் திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதை அறிய தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு.

கடந்த நவம்பரில், இந்தியாவுக்கான பிரான்சின் தூதர் அலெக்ஸாண்ட்ர் ஸீக்லெர், “இந்தியாவும் பிரான்சும் முக்கிய நிலைகளைக் கொண்டுள்ள இந்திய பெருங்கடலில், நாங்கள் எமது ஒத்துழைப்பை அதிகரித்துள்ளோம். மேலும், நாங்கள் இந்திய-பசிபிக்கில் ஒரு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் செயல்பாட்டிலும் இருக்கிறோம்” என்று பெருமையடித்துக் கொண்டார்.

இந்தச் சூழலில், சமீபத்திய ஆண்டுகளில் புது தில்லி பிரான்சின் உதவியுடன் அதன் விமானப்படை மற்றும் கடற்படையை கட்டியெழுப்பியுள்ளது. பிரான்ஸ், ஆறு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் சுமார் 8 பில்லியன் யூரோ மதிப்பில் 36 ரஃபால் (Rafale) போர் ஜெட் விமானங்களையும் இந்தியாவிற்கு விற்றுள்ளது, இவை அணுவாயுதங்களை ஏந்திச்சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும். மேலும், பிரான்ஸ், வருணா (கடற்படை), கருடா (விமானப்படை) மற்றும் சக்தி (தரைப்படை) போன்ற முப்படை இராணுவ பயிற்சிகளையும் இந்தியாவுடன் நடத்துகிறது.

இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளதுடன், இரு நாடுகளில் இருந்தும் உயர்தர பாதுகாப்பு அதிகாரிகள் ஆண்டுதோறும் சந்திக்கின்றனர்.

பிரான்ஸ், இந்தியாவின் 9 வது பெரிய முதலீட்டாளராக, இந்திய ஆயுதங்கள், விண்வெளி, அணுசக்தி, இரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறது. கிட்டத்தட்ட 750 பிரெஞ்சு நிறுவனங்கள், மற்றும் அரேவா, யூரோகாப்டர், டாஸோல்ட், தாலேஸ், அல்ஸ்டோம், சஃப்ரேன், ரெனோல்ட் மற்றும் சொலேர் டிரெக்ட் போன்ற நிறுவனங்கள் உள்ளடங்கலாக CAC-40 என்று அழைக்கப்படுகின்ற பிரெஞ்சு பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள முதல் 40 பெருநிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை சுரண்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.